தெய்வத்தின் தோளில் கிளி என்றால், அது மீனாட்சி அம்மைக்கும் ஆண்டாளுக்கும் உரிய அழகுள்ள அம்சமாக பக்தர்கள் போற்றுகின்றனர். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் தினமும் பசுமையான ஓலைகள், இலைகளால் கிளிகள் செய்யப் பட்டு, ஆண்டாளுக்கு அலங்காரத்தில் சேர்க்கப் படுகிறது.
ஆனால், நிஜமான ஒரு கிளி அம்பிகையின் அர்ச்சாவதார திருமேனியில் அதே போல் வந்தமர்ந்தால்…?! இப்படி ஒரு தரிசனம் கிடைத்திருக்கிறது, சிவகாசி அருகே உள்ள மீனாட்சி அம்மன் கோயிலில்!
சிவகாசி அருகே உள்ளது திருத்தங்கல். இங்குள்ள நின்றநாராயண பெருமாள் திருக்கோயில் மிகவும் புகழ்பெற்றது. இங்குள்ள இன்னொரு கோயில், கருநெல்லிநாதர் சமேத மீனாட்சி அம்மன் திருக்கோயில்.
இங்கே கோயிலின் உள்ளே சந்நிதியில் மீனாட்சி அம்மனின் மூலவர் திருமேனியில், நேற்று மாலை 6 மணி அளவில், கிளியைக் கண்ட பக்தர்கள் மெய்சிலிர்த்துப் போனார்கள்.
மீனாட்சி அம்மன் விக்ரகத்தின் தோளில் நீண்ட நேரம் ஒரு கிளி வந்து அமர்ந்தது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அம்மன் தோளில் கிளி அமர்ந்திருப்பது போல் இங்கு உயிருள்ள ஒரு கிளியே அமர்ந்ததால் பக்தர்கள் பரவசமடைந்தனர்.