அறப்பளீஸ்வர சதகம்: அழகு சேர்ப்பது..!

கட்டுரைகள் செய்திகள்
arapaliswarar - Dhinasari Tamil

ஒன்றற்கொன்று அழகு

வாழ்மனை தனக்கழகு குலமங்கை; குலமங்கை
வாழ்வினுக் கழகு சிறுவர்;
வளர்சிறுவ ருக்கழகு கல்வி;கல் விக்கழகு
மாநிலம் துதிசெய் குணமாம்;
சூழ்குண மதற்கழகு பேரறிவு; பேரறிவு
தோன்றிடில் அதற்க ழகுதான்
தூயதவம், மேன்மை, உபகாரம், விரதம், பொறுமை
சொல்லரிய பெரியோர் களைத்
தாழ்தல், பணி விடைபுரிதல், சீலம், நேசம், கருணை
சாற்றுமிவை அழகென் பர்காண்
சௌரி, மல ரோன், அமரர், முனிவர், முச்சுடரெலாம்
சரணம்எமை ரட்சி யெனவே.

ஆழ்கடல் உதித்துவரு விடம்உண்ட கண்டனே!
அண்ணல்எம தருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!

விளக்கம்:
திருமாலும் பிரமனும் வானவரும் முனிவரும் (மதி யிரவி அங்கி யெனும்)
முச்சுடரும் ஆகிய எல்லோரும் சரணம் அடைக்கலம் எங்களை ஆதரி என்று வேண்ட, ஆழமான கடலில் தோன்றி வந்த நஞ்சம் உண்ட (நீல)
கண்டனே!, தலைவனாகிய எமது தேவனே!,
வாழும் இல்லத்திற்கு அழகு நற்குடிப்பிறந்த மங்கையாவாள், குலமங்கையின் வாழ்விற்கு அழகு செய்வோர் நன்மக்கள், வளரும் சிறுவர்களுக்கு அழகு செய்வது கல்வி, கல்விக்கு அழகாவது பெரிய உலகம் புகழும் நற்பண்பாகும், பொருந்திய அந்த
நற்பண்புக்கு அழகுசெய்வது பெருமை மிக்க அறிவு, பேரறிவு உண்டானால் அதற்கு அழகு செய்பவை, நல்ல தவமும், பெருந்தன்மையும், (பிறருக்கு) உதவியும், நோன்பும், பொறையும், புகழ்தற்கரிய பெரியோர்களை வணங்குதலும், (அவர்கட்குத்) தொண்டுசெய்தலும்,
சைவப்பற்றும், அருளும் (என) கூறப்பட்ட இவை அழகாகும் என்பார்கள் (அறிஞர்கள்.)

இங்குக் கூறப்பட்டவை ஒன்றுக்கொன்று அழகு செய்வன.

Leave a Reply