தென்காசி கோயில் கும்பாபிஷேகம் நடத்த இடைக்காலத் தடை!

ஆன்மிக கட்டுரைகள் செய்திகள்


682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">

தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு இடைக்கால தடை விதித்து, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது. தென்காசியைச் சேர்ந்த நம்பிராஜன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். புனரமைப்பு பணிகள் முழுமையாக நிறைவடையும் வரை கும்பாபிஷேகம் நடத்த இடைக்கால தடை விதித்து, நீதிபதிகள் நிஷாபானு, ஸ்ரீமதி அமர்வு உத்தரவு பிறப்பித்தது.

தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு தடை விதித்துள்ள நீதிமன்றம், புனரமைப்புப் பணிகளை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வழக்கறிஞர் கமிஷனர் மற்றும் ஐ.ஐ.டி., நிபுணர் ஆகியோர் அடங்கிய குழு அமைத்து உத்தரவிட்டுள்ளது.

தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் 650 ஆண்டுகள் பழைமையானது. மாமன்னர் பராக்கிரம பாண்டியரால் கட்டப்பட்டது. இங்கே பெருமான் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். வடக்கே காசியில் உள்ள ஆலயம் அன்னியர்களால் தாக்குதலுக்கு உள்ளாகி சிதிலமடைந்த போது, தெற்கே சிவாலயம் எழுப்பும்படி மன்னருக்கு சிவ பெருமானே கனவில் வந்து சொன்னதால், பராக்கிரம பாண்டியன் இந்தக் கோயிலைக் கட்டியதாக வரலாறு கூறுகிறது. எனவே இது வடக்கே உள்ள காசி தலத்துக்கு இணையான பெருமை வாய்ந்தது. இத்தகைய சிறப்புமிக்க இத்தலத்தில் சுமார் 18 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் ஏப்.7ம் தேதி காலை 9 மணிக்கு மேல் காசி விஸ்வநாத சுவாமி கோபுரங்கள், விமான கோபுரங்கள், மூலஸ்தன பிரதான மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்க திட்டமிட்டு, பணிகள் இன்று காலை தொடங்கின.

இந்தக் கோயிலில் ஒரு சிறப்பு வாய்ந்த கல்வெட்டு உண்டு. அது மன்னர் பராக்கிரம பாண்டியரே அமைத்தது. அதில், இந்தக் கோயிலில் பிற்காலத்தில் கால வெள்ளத்தில் சிதிலமுற்று ஏதேனும் ஒரு கல் விழுந்தாலும், அதை மீண்டும் எடுத்து வைத்து சரி செய்து கோயிலை பராமரிப்பவரின் பாதங்களில் இப்போதே நான் விழுந்து வணங்குகிறேன் என்று எதிர்கால நிகழ்வைக் கருத்தில் கொண்டு மன்னர் கல்வெட்டில் பாடல் இயற்றி வைத்துள்ளார்.

அத்தகைய பெருமை வாய்ந்த திருக்கோயிலில், மராமத்துப் பணிகள் முறையாக மேற்கொள்ளாமல் கும்பாபிஷேகத்துக்கு நாள் குறித்து ஏற்பாடுகள் நடப்பதாக இந்து இயக்கங்கள் புகார் தெரிவித்து வந்தன. மேலும், கும்பாபிஷேகத்தை ஒட்டி கோயிலில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும் நிதி முறைகேடு பெருமளவில் நடந்துள்ளதாகவும் கூறி நடவடிக்கை எடுக்குமாறு இந்து இயக்கங்கள் கோரிக்கை விடுத்து வந்தன.

இந்நிலையில் தென்காசியைச் சேர்ந்த நம்பிராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் ஏப்.7ல் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. நிபுணர் குழு பரிந்துரைப்படி புனரமைப்பு பணி நடைபெறவில்லை. செயல் அலுவலர் தன்னிச்சையாக பணியை மேற்கொள்கிறார். கோவில் வளாகத்திலிருந்து அனுமதியின்றி தோண்டி அள்ளிய மணலை தனியாருக்கு விற்பனை செய்துள்ளனர். இதிலிருந்து கிடைக்க வேண்டிய வருமானத்தை கோயில் கணக்கில் வரவு வைக்கவில்லை. மணல் அள்ளியதால் கோவில் சுவர்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராஜகோபுரத்தில் மழைநீர் கசிவை சரி செய்யவில்லை. வண்ணம் மட்டுமே பூசப்பட்டுள்ளது. எலக்ட்ரிக் வேலை முழுமையடையவில்லை. சுவாமிகள் புறப்பாடு வாகனங்களை சீரமைக்கவில்லை. தேர் திருப்பணி துவங்கவில்லை. அன்னதானக்கூடம் சேதமடைந்து கீழே விழும் நிலையில் உள்ளது.

புனரமைப்பு பணி முழுமையடையும் வரை கும்பாபிஷேகம் நடத்த இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். புனரமைப்பு பணியை ஆய்வு செய்ய வழக்கறிஞர் கமிஷனரை நியமித்து உத்தரவிட வேண்டும் என்று, கோரியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு விசாரித்தது. அப்போது அறநிலையத் துறை தரப்பு,’புனரமைப்பு பணி 100 சதவீதம் முடிந்து விட்டது,’ என தெரிவித்தது.

இந்நிலையில், இந்த வழக்கை இன்றைய தினம் நீதிபதிகள் ஒத்திவைத்திருந்தனர். இன்றுதான் காலையில் கணபதி பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்குவதாக இருந்தது குறிப்பிடத் தக்கது. எனினும் இன்று காலை திட்டமிட்டபடி, கணபதி பூஜையுடன் நிகழ்ச்சிகள் தொடங்கின.

இதனிடையே இந்த வழக்கில் இன்று நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘புனரமைப்பு பணிகள் முழுமையாக நிறைவடையும் வரை தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகம் நடத்த தடை விதிக்கப்படுகிறது. வழக்கறிஞர் கமிஷனர் மற்றும் ஐ.ஐ.டி.,நிபுணர் ஆகியோர் அடங்கிய குழு ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்,’ என தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இந்தத் தீர்ப்பை வரவேற்றும் வருத்தம் தெரிவித்தும் தென்காசிப் பகுதியில் பொதுமக்கள் கருத்துகள் தெரிவித்து வருகின்றனர். காரணம், திருநெல்வேலி, சங்கரன்கோயில் ஆகிய தலங்களில் இதுபோன்று அறைகுறையாக திருப்பணிகளைச் செய்துவிட்டு, பொதுமக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி கும்பாபிஷேகங்களைச் செய்தது அறநிலையத்துறை. இதில் பல்வேறு முறைகேடுகள் இருந்ததாக குற்றம் சாட்டினர்.

இந்நிலையில், பக்தர் ஒருவர் தெரிவித்த கருத்து…

போராடி பெற்ற தீர்ப்புக்கு வாழ்த்துகள். பலருக்கு இது வருத்தம் தரும் தீர்ப்பாக இருக்கலாம், ஆனால் சரியான தீர்ப்பு. தற்போது வழக்கறிஞர் கமிஷனர் மற்றும் ஐஐடி குழுவினர் ஆய்வுக்குப் பின்னர் தான் குடமுழுக்கு என்று கூறுவது ஆறுதல்.

செய்யும் திருப்பணிகளுக்கான பரிகாரம் தான் குடமுழுக்கு , திருப்பணிகள் நடைபெறாமல் கும்பாபிஷேகம் செய்வது, அதற்கு திருப்பணி செலவை விட அதிகச் செலவைக் கூட்டுவது போன்றவற்றை கட்டுப்படுத்தும் முதல் படி இதாக இருக்க வேண்டும். நியாயமாக பக்தர்கள் கொண்டாட வேண்டும் இதனை.

நெல்லையில் இவர்கள் எந்தத் திருப்பணிகளையும் (இன்று வரையிலும்) செய்யாமல் ஆறு மாதத்தில் வெள்ளையடித்து செய்த கும்பாபிஷேகத்தின் கெடு பலன்களை கோவிலும் ஊரும் அனுபவித்து வருவதை நினைவு கூற விரும்புகிறேன். எல்லாம் சிவன் செயல் – என்று குறிப்பிட்டார்.



Leave a Reply