தர்மபுரிக்கு வருக!

செய்திகள்

அதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக “தகடூர்’ என்னும் தர்மபுரி நகரில் அமைந்துள்ள, “கோட்டைக் கோயில்கள்’ என்று அழைக்கப்படும் அருள்மிகு மல்லிகார்சுனர் சிவன் கோயிலும், அதன் அருகில் உள்ள அருள்மிகு பரவாசுதேவ சுவாமி திருக்கோயிலும்! இவ்விரு ஆலயங்களின் சிறப்புகளைப் பற்றித் தெரிந்து கொள்வோம். அதற்கு முன் சைவ-வைணவ ஒற்றுமையின் அவசியத்தை உணர்வோம்.

ஒன்றுபட்டாலுண்டு வாழ்வு:

ஆதியில் “லிங்க வடிவமே’ பரம்பொருளின் அடையாளமாக, அனைவராலும் பூஜிக்கப்பட்டதாக காழ்ப்புணர்ச்சியற்ற ஆய்வாளர்கள் கருதுகின்றனர். முதலில் ஆறு, குளம், மற்றும் கடலோரங்களில் மணல் வடிவில் (பாணம்) குவிக்கப்பட்டு- எல்லாம் வல்ல இறைவனின் வடிவமாக, எல்லா உபாசகர்களுமே அந்தப் பிம்பத்தை பூஜித்து வந்தனராம். வழிபாடு நிறைவடைந்தவுடன் அந்தப் பிம்பங்களை நீரில் கரைத்துவிடுவார்களாம். பின்னரே நிலையான கோயில்கள் உருவாக்கப்பட வேண்டுமென்ற சிந்தனை எழுந்ததாம். அக்கோயில்களிலும், பரம்பொருளின் அடையாளமாகத்தான் லிங்க வடிவங்கள் அமைக்கப்பட்டன.

ஆனால் அந்த லிங்கம், “மும்மூர்த்திகளின் வடிவம்’ என்ற கருத்துடன் பூஜிக்கப்பட்டது. இதனை உறுதிப்படுத்தும் விதத்தில் லிங்கத்தை சுற்றி வடக்கு நோக்கி திருமாலின் உருவம், தெற்கு நோக்கி தஷிணாமூர்த்தியாகிய சிவ வடிவம், மேற்கு நோக்கி பராசக்தியான துர்க்கை வடிவம், பிரம்ம தேவனின் உருவம் ஆகியன அமைக்கப்பட்டன. “ஒரே பரமாத்மா சக்தியாகவும், சிவமாகவும், நான்முகனாகவும், திருமாலாகவும் உள்ளது. உள்ளே உருவமற்ற பரமாத்மா, உபாசனைக்காக அருவுருவ நிலை தாங்கி நிற்கின்றது’ என்பதே அந்நாள் கோயில்களின் அடிப்படைத் தத்துவம்.

சாதக நிலையில் ஒவ்வொரு பக்தனின் மனமும் ஒவ்வொரு தெய்வத்தின் பெயரிலும் உருவத்திலும் ஈர்ப்படையும்.

அந்தப் பக்தி வளர, வளர, “நம் தெய்வம்போல் பிறிதொன்று உண்டோ?’ என்று தோன்றும். அடுத்த நிலையில், “நமது இஷ்ட தெய்வமே பிற தெய்வங்களாகவும் உள்ளன’ என்ற பேருணர்வு ஏற்படும்! அதற்கும் அடுத்த நிலையில், “பரமாத்மாவுக்கு உருவமும் இல்லை, பெயரும் இல்லை, அது அருவுருவமும் அல்ல’ என்பதனை சாதகன் உணரும்போது அவன் ஜீவன் முக்தனாகிறான்.

இந்த ஜீவன் முக்த நிலையிலும், “கடவுளின் பெயரும், வடிவமும் ஞானத்தினும் மேலானது’ எனக் கருதுகின்ற மெய்யன்பர்கள், இறுதி வரை பக்தி நெறியிலேயே நிற்க விழைவார்கள்.

இந்தப் பக்தி நெறி பரவ ஆரம்பித்தபோது தனித்தனியே எல்லாத் தெய்வங்களுக்கும் பிரத்யேக ஆலயங்கள் எழுப்பினார்கள். அந்நாள் வரை முப்பெரும் தெய்வங்களின் பிரதி பிம்பமாகக் கருதப்பட்ட லிங்க வடிவம், சிவ மூர்த்தமாகவே ஆனது. அந்த நிலையிலும் சிவலிங்கத்தின் பாண (தலைப்) பகுதி “சிவ’ வடிவாகவும், “ஆவுடையார்’ என்ற பகுதி (பாணத்தை தாங்கும் பகுதி) திருமால் வடிவாகவும், இவ்விரண்டையும் தாங்கும் பீடமே பிரம்ம தேவனாகவும் கூறப்பட்டது.

பரம்பொருளின் ஆலயம், பரமேஸ்வரனின் ஆலயம் ஆனது. இதன் முன்னரே “ஸ்வயம் வியக்த தலங்கள்’ உள்ளிட்ட தனிப் பெரும் விஷ்ணு ஆலயங்களும் ரிஷிகளால் ஆராதிக்கப்படுமளவு உன்னத நிலையில் இருந்தன என்பதும் பேருண்மை. ஆனால் சைவ- வைணவ பேதங்களுக்கான அஸ்திவாரங்கள், வேதாந்த காலத்திற்கும் – புராண காலத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் இடப்பட்டிருக்கலாம் என்பது ஆய்வாளர்கள் கருத்து.

ஆயினும் ஒற்றுமைத் தத்துவமே நமது மதத்தின் அடிப்படை. இதை உணர்ந்து கொள்பவர்கள், மதப்பூசலில் ஈடுபடாது -மகோன்னத நிலையில் இருப்பார்கள்.

இன்று இந்து மதம், பல சவால்களை எதிர் கொண்டு வருகிறது. இவற்றில் வெற்றி காண, சமயப் பிரிவுகளிடையே ஒற்றுமை தேவை. “அவரவர் தெய்வம் அவரவர்க்கு’ என்று போவதுகூடத் தவறில்லை. மற்ற தெய்வங்களைப் பழிக்கக் கூடாது.

இப்படியோர் ஒற்றுமை தோன்றினால் இந்து மதம் வலிமை பெறும். இந்த ஒற்றுமைத் தத்துவமே தர்ம நெறிகள் அனைத்திற்கும் அடிப்படை. அப்படிப்பட்ட தர்ம நெறியாகிய சைவ-வைணவ ஒற்றுமை என்னும் தலையாய அறத்தினை உரத்துச் சொல்வதாலேயே “தர்மபுரி’ என்ற பெயர் இத்திருத்தலத்துக்கு ஏற்பட்டதோ என வியக்கத் தோன்றுகிறது.

சிவன் ஆலயம்:

இனி தர்மபுரி, சிவாலயத்தைப் பற்றி முதலில் காண்போம். கோட்டைக் கோயில் வீற்றிருக்கும் மூலவர் சுயம்பு லிங்கமாக, “அருள்மிகு மல்லிகார் சுனேஸ்வரர்’ என்ற திருநாமத்துடன் தரிசனம் தருகின்றார். அம்மன், காமாட்சியம்மன்! இப்பெருமானை யோக நரசிம்மர், ஸ்ரீராமர், ஹயக்ரீவர், கிருஷ்ணன் என திருமாலின் நான்கு அவதாரங்களும் வழிபட்டுள்ளனர். மேலும் துர்வாச முனிவராலும் பஞ்ச பாண்டவர்களாலும் வழிபடப்பெற்ற மூர்த்தி என்ற பெருமையும் மல்லிகார்சுனருக்கு உண்டு.

இத்தலத்தை சுந்தரமூர்த்தி சுவாமிகள் தனது தேவாரப் பதிகத்தில் திருநாட்டுத் தொகையில் வைப்புத் தலமாகப் போற்றிப் பாடியுள்ளார். விநாயகர், முருகப் பெருமான், நான்கு திருக்கரங்களுடன் மகிஷாசூரனைக் கொல்லும் தோற்றத்தில் ராஜ துர்காம்பிகை, காலச் சக்கரத்துடன் காலபைரவர், நவக்கிரகங்கள் ஆகியோரும் இவ்வாலயத்தில் அருள் புரிகிறார்கள்.

இருப்பினும் இத்திருக்கோயிலின் பெருமை முழுவதும் அன்னை “தகடூர் கல்யாண காமாட்சி’ அம்பிகையை சார்ந்தே அமைந்துள்ளது என்பது ஒரு சிறப்புச் செய்தியாகும். மாங்காட்டில் தவக்கோலத்திலும், காஞ்சியில் யோக கோலத்திலும் காட்சியளிக்கும் அன்னை, தர்மபுரியில் கல்யாண காமாட்சியாக அருள்பாலிக்கிறாள். வழிபாட்டிலும் இந்த அம்பிகைக்கே முதலிடம். ஒüவைக்கு நெல்லிக்கனி தந்து சரித்திரத்தில் சாகாவரம் பெற்ற அதியமான் நெடுமான் அஞ்சி வழிபட்ட அம்பிகை ஆலயங்களில் முதன்மையானது இத்திருக்கோயில்.

இந்த அம்மன் ஆலய அமைப்பே வித்தியாசமானது! புதுமையானது! ஆம், அம்பிகை சந்நிதியை அடைய சபரி மலையில் உள்ளது போலவே 18 திருப்படிகளைக் கடந்துதான் செல்ல வேண்டும்.

பசி, நீர் வேட்டல், பயம், வெகுளி, உவகை, வேண்டல், நினைப்பு, உறக்கம், நரை, நோய்படுதல், மரணம், பிறப்பு, மதம், இன்பம், அதிசயம், வியர்த்தல், தேகம், கையறவு எனும் 18 குணங்களாக இந்தப்படிகளை உருவகம் செய்துள்ளனர் பெரியோர்கள். இவற்றை கடந்து சென்று, காமாட்சியை தரிசிக்கலாம். சபரிமலையில் உள்ள 18ம் திருப்படி, ஆண்களால் பூஜிக்கப்படுகிறது. தர்மபுரி காமாட்சி சந்நிதியின் முகப்பிலுள்ள 18ம் திருப்படியை பெண்கள் மட்டுமே பூஜிக்கிறார்கள்.

பிரதோஷ காலத்தில் உமையோடு கூடிய பிரதோஷ மூர்த்தி மூன்றாம் சுற்று வரும்போது, சிவசக்தி ஐக்கியநிலையை உணர்த்தும் விதமாக இந்தப் பதினெட்டு படிக்கருகில் அன்னையை நோக்கி “பிரதோஷ நாயகர்’ காட்சி தரும் அழகை நேரில் அனுபவித்து அறியலாம். இந்த அம்பிகையின் திருமேனி திருக்கோயிலை வலம் வரும்போது திருப்பாதம் தாங்கி வருபவர்களும், குடையை எடுத்து வருபவர்களும் முற்றிலும் பெண்களே! தினசரி பக்தர்கள் திருப்படி பதினெட்டுக்கும் குடம், குடமாக நீர் சொரிந்து- மலரிட்டு வழிபட்டுப் பலனடைகிறார்கள்.

தாய்மையின் பெருமையை உணர்த்தும் இத்தாய்க்கோயிலில் வீற்றிருக்கும் அன்னை காமாட்சியை திருமண வரம் வேண்டியும், புத்திர பாக்கியம் வேண்டியும் திருப்படி பூஜை செய்து வழிபட்டால் பலன் நிச்சயம் உண்டு. தீப ஒளி தரும் விளக்கிற்கு “காமாட்சி விளக்கு’ என்ற பெயர் உள்ளதை அனைவரும் அறிவோம். அதுபோன்று நமது வாழ்க்கையில் ஏற்படும் துன்பம் எனும் இருள் நீக்கி இன்பம் எனும் ஒளியை அன்னை காமாட்சி நல்குகிறாள் என்பதை இத்தலத்து இறைவியை வழிபடும்போது நாம் உணரலாம். இவ்வாலயத்தில் செய்யப்படும் பிரத்யேக ஹோமங்கள், பூஜைகள் பற்றிய விவரங்கள் அறிய தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி : 94430}84116 (செல்வ முத்துக்குமார சுவாமி).

பெருமாள் ஆலயம்:

ஆழ்வார்களால் மங்களா சாஸனம் செய்யப்பட்ட நூற்றெட்டு திவ்விய தேசங்களில், நூற்றியாறு மட்டுமே இவ்வுலகில் கண்டு வழிபடக் கிடைக்கும். இங்கு திருப்பாற்கடலும், ஸ்ரீவைகுண்டமும் இல்லாத குறையை நீக்கவே பகவான் சில தலங்களில் ஸ்ரீவைகுண்டத்தில் சேவை சாதிப்பது போலவே ஸ்ரீபரமபத நாதனாக அருள்பாலிக்கின்றான். அத்தலங்களில் உள்ள எம்பெருமானை தரிசிப்பதால் ஸ்ரீவைகுண்ட தரிசனம் பெற்ற பயனையே பெறலாம்!

அவ்வண்ணமே இத்தர்மபுரி திருத்தலத்தில் உள்ள திருமால் ஆலயத்தில், ஸ்ரீபரவாசுதேவ பெருமாள் அமர்ந்த கோலத்தில், தாயார் வரமகாலட்சுமியுடன் காட்சி தரும் அழகைக் காணலாம்.

இந்தப் பெருமாளை பிரம்மதேவர் பிரதிஷ்டை செய்ததாக ஒரு ஐதீகம் உண்டு. இப்பாரினில் ஒரு பரமபத நாதனாக காட்சியளிக்கும் இம்பெருமானின் அழகை இன்றைக்கெல்லாம் பார்த்துக் கொண்டே இருக்கலாம். பெருமாள், தாயார், சர்ப்பாசனம், தாமரை மலர், பெரிய திருவடி (கருடாழ்வார்), சிறிய திருவடி (ஆஞ்சநேயர்), சிம்மாசன பீடம் ஆகிய அனைத்தும் ஒரு கல்லில் உருவாக்கப்பட்டவை. ஒரு வைணவ ஆலயத்திற்கு உண்டான அனைத்து சந்நிதிகளும் இங்கு அமையப் பெற்றுள்ளன.

இவ்வாலயத்தில் வைகுண்ட ஏகாதசி-சொர்க்க வாசல் சேவை உட்பட அனைத்து முக்கியத் திருவிழாக்களும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. திருமாலின் இந்த பரவாசுதேவன் திருக்கோலத்தைக் காணப் பெறுபவர்கள், மிகுந்த பாக்கியசாலிகளே! ஆலயத்தைப் பற்றியும், விசேஷ நாட்களில் நடைபெறும் தகவல்களையும் அறிய விரும்புபவர்கள், ஆலயத் திருக்கோயில் அர்ச்சகர் விஜயராகவபட்டாச்சார் அவர்களை கைப்பேசி}9952268345 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இக்கோட்டைத் திருக்கோயில்கள், தர்மபுரி நகரின் மையப்பகுதியில், தர்மபுரி-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில், தர்மபுரி நகரப் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 1/2 கி.மீ. தூரத்தில் உள்ளன. தர்மபுரி தொடர் வண்டி நிலையத்திலிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையின்கீழ் சிறப்பாக இயங்கி வருகிறது. தர்மபுரிக்கு வருக! தவப் பயன் பெறுக!

Leave a Reply