படையப்பா படத்தில் வரும் “என் ஒருத்துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்க காசு கொடுத்தது தமிழல்லவா?” என்ற வரிக்கு ஆதாரமான நிகழ்வு நடந்த சிவத்தலம் எது தெரியுமா…
வாங்க பார்ப்போம்…
புகழ்த்துணை நாயனார், சொர்ணபுரீஸ்வரருக்கு அரிசிலாற்றிலிருந்து நீரைக் கொண்டுவந்து இறைவனுக்கு அபிஷேகம் செய்து சிவாகம முறைப்படி தினந்தோறும் பூஜைகள் செய்து வந்தார்.
அவருடைய முதுமை பருவத்தில் ஊரில் பஞ்சம் வந்ததால் வறுமையில் வாடினார். அப்படியும் அவர் தன் கடமையிலிருந்து தவரவில்லை. பசியால் வாடி உயிரிழக்க நேர்ந்தாலும் ஆலயப்பணியை துறக்கும் எண்ணம் அவர் மனதில் எழவில்லை. ஒரு நாள் அரிசிலாற்றிற்குச் சென்று குடத்தில் நீரை நிரப்பிக் கொண்டு இறைவன் சந்நிதிக்கு வந்தார்.
பசி மயக்கத்தில் கால்கள் தள்ளாட, கைகள் நடுங்க குடத்தைத் தூக்கி அபிஷேகம் செய்யச் சென்றார். குடம் தவறி இறைவனின் திருமுடி மீது விழுந்தது. சிவலிங்கத்தின் மீது விழுந்த குடத்தால் சிவபெருமானின் தலையிலேயே அடிபட்டு விட்டதாக எண்ணி புகழ்த்துணை நாயனார் மூர்ச்சித்து விழுந்தார். (கால் இடறி விழுந்தபோது குடம் இறைவன் திருமுடியில் விழுந்ததால் சிவலிங்கத்தின் முடிபகுதி உடைந்த கோலத்தில் காட்சியளிக்கிறது.)
மூர்ச்சித்து விழுந்த அவர் கனவில் இறைவன் தோன்றி, “இனி இந்த படியில் தினமும் ஒரு தங்ககாசு வைத்தருள்வோம். அதனைக் கொண்டு தொண்டை தொடர்க” என கூறி மறைந்தார் ஈசன்…
விழித்தெழுந்த புகழ்த்துணை நாயனார் சுவாமிக்கு அருகிலுள்ள பீடத்தில் பொற்காசு இருக்கக் கண்டார். அதே இடத்தில் தினமும் அவருக்கு ஒரு பொற்காசு கிடைத்தது. அதைக் கொண்டு வறுமையை விரட்டி, இறைவனுக்கு மேலும் சிறந்த தொண்டு செய்து இறுதியில் இறைவன் திருவடியில் ஐக்கியமானார். இதனால் இறைவனுக்கு “படிக்காசு அளித்த நாதர்” என்ற பெயர் ஏற்பட்டது.
அதன்படி பலகாலங்கள் தொண்டு செய்து புகழ் துணை நாயனார் இறைவன் திருவடி அடைந்த தலம்.
- கோச்செங்கட்சோழன் திருப்பணி செய்த திருத்தலம்.
- பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 129வது திருத்தலம்…
- சுவாமிமலை தலம், இங்கிருந்து 10 கி.மீ., தூரத்தில் இருக்கிறது.
- மூலவர்: சொர்ணபுரீசுவரர், படிக்காசு அளித்த நாதர்
- அம்பாள்: அழகாம்பிகை, சௌந்தர நாயகி
- ஸ்தல விருட்சம்:வில்வம்
- தீர்த்தம்: அரிசிலாறு, அமிர்தபுஷ்கரிணி..
இருப்பிடம்: அழகாபுத்தூர்,தஞ்சாவூர் மாவட்டம். பழைய பெயர் அரிசிற்கரைப்புத்தூர்,செருவிலிபுத்தூர்..: கும்பகோணத்தில்
இருந்து திருவாரூர் செல்லும் வழியில் 6 கி.மீ., தூரத்தில் உள்ளது…
- புகழ் மச்சேந்திரன் புகழ்