திருவண்ணாமலையில் ஆருத்ரா தரிசனம்!

செய்திகள்
thiruvannamalai arudhra darshan - 1

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு சிவகாம சுந்தரி அம்பிகை சமேத நடராஜப் பெருமான் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்குக் காட்சியளித்தார்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கொரோனா கால ஊரடங்கு உத்தரவால் தீபத் திருவிழா கடுமையான கட்டுப்பாடுகளுடன் நடத்தப்பட்டது. மேலும், கோயில் மாட வீதிகளில் சுவாமி வீதியுலா ரத்து செய்யப்பட்டு ஐந்தாம் பிராகாரத்தில் பக்தர்கள் இல்லாமல் சுவாமி வீதியுலா மட்டும் நடத்தப்பட்டது.

தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், மாட வீதிகளில் சுவாமி வீதியுலா நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அண்ணாமலையார் கோயிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு ஆயிரங்கால் மண்டபத்தில் சிவகாம சுந்தரி அம்பாள் சமேத நடராஜப்பெருமான் நேற்று இரவு எழுந்தருளினார்.

இன்று அதிகாலை சிவகாம சுந்தரி அம்பிகை சமேத நடராஜப் பெருமானுக்குச் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. அப்போது, 2,668 அடி உயர அண்ணாமலை மீது ஏற்றப்பட்ட மகா தீப கொப்பரையில் இருந்து சேகரிக்கப்பட்ட தீப மை நடராஜப் பெருமானுக்குச் சாற்றப்பட்டது.

ஆயிரங்கால் மண்டபத்தின் முன்பாகச் சிறப்பு அலங்காரத்தில் நடராஜப் பெருமான் எழுந்தருளியபோது பக்தர்கள் ‘அரோகரா’ கோஷத்துடன் பெருமானை வழிபட்டனர். பின்னர் திருமஞ்சன கோபுரம் வழியாகப் புறப்பட்டு மாட வீதிகளில் வீதியுலா வந்த நடராஜப்பெருமானை பக்தர்கள் தரிசித்தனர். மாணிக்கவாசகர் மாட வீதியுலாவும் நடைபெற்றது.

முன்னதாக, நெய் காணிக்கை செலுத்திய பக்தர்கள் அதற்கான ரசீதுகளை காண்பித்து, கோவில் நிர்வாக அலுவலகத்தில் தீப மை பெற்றுக்கொள்ளலாம் என்று கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

  • செய்தி: எஸ்.ஆர்.வீ. பாலாஜி, திருவண்ணாமலை

Leave a Reply