
தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
ஸ்ரீமஹா சரஸ்வத்யை நம: !
மாக மாதம் சுக்லபட்சம் பஞ்சமி திதி ஸ்ரீபஞ்சமியாக வழிபடப்படுகிறது. தை மாதம் 23ம் தேதி வரும் இதனையே வசந்த பஞ்சமி என்கிறோம். இது வசந்த காலத்தின் முதல் நாள்.
இதன் சிறப்பு மிக அற்புதமாக பல நூல்களில் விவரிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீபஞ்சமி தினத்தை அனைவரும் சரஸ்வதி தேவியை வழிபடுவதற்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இது ஞான பஞ்சமி. சாதாரணமாகவே பஞ்சமி திதி மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இது ஞான திதி. சிறப்பாக மாக மாதத்தில் வரும் சுக்லபட்ச பஞ்சமியின் முக்கியத்துவம் பல புராணங்களிலும் ஆகமங்களிலும் விளக்கப்பட்டுள்ளது. பிரம்மாண்ட புராணம், தேவி பாகவதம், பிரம்ம வைவர்த்த புராணத்தில் இதன் வைபவம் குறித்த பல அம்சங்கள் விவரிக்கப்பட்டுள்ளன.
இன்றைய தினம் மகா சரஸ்வதி தேவி விராட் புருஷனின் சங்கல்பத்தால் அவருடைய நாவிலிருந்து உற்பத்தியானாள். விராட் புருஷன் என்றால் பிரபஞ்சரூப பரமேஸ்வரன். பரமேஸ்வரனின் ‘ஜிஹ்வா’ (நாக்கு) என்றால் அவனுடைய வாக்கு சக்தி என்று பொருள். புராணக் கதைகளை இவ்வாறு புரிந்து கொள்ளவேண்டும். பிரபஞ்சத்தை இயக்கும் பரமேஸ்வரனின் ஞான சொரூபமே சரஸ்வதி.
ஞானம் மூன்று விதமாகப் பயனளிக்கும். முதலில் தெளிவாகப் புரிய வேண்டும். அடுத்தது பிறருக்கு விளக்கிக் கூறவேண்டும். மூன்றாவது அதனைப் பயன்படுத்த வேண்டும். ஞானம் புரிந்தால் அது போதனையாகும். அதுவே புத்தி சக்தி. ஒரு விஷயத்தைத் தெளிவாக அறிந்து கொள்ளும் புலன் புத்தி. “புத்திர் போத லக்ஷணா” என்பர்.
இரண்டாவது, புத்தியால் புரிந்து கொண்டதை பிறரிடம் வெளிப்படுத்தத் தெரியவேண்டும். ‘வ்யக்தம்’ செய்வதை ‘வாக்கு’ என்றனர். அதோடுகூட பெற்ற ஞானத்தை வாழ்வில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அப்போதுதான் அனுபவத்தில் பலனளிக்கும்.
ஞான சக்தியை நாம் சரஸ்வதியாக வழிபடுகிறோம். சரஸ்வதி என்ற சொல்லுக்கு பிரவகிப்பது என்று பொருள். ஒளியோ ஜலமோ ஒரே இடத்தில் நிற்காது. அது பரவும். அது ஓடும். அது பிரவகிக்கும். அதைப்போல் ஞானமும் வியாபிக்க வேண்டும். விரிவடைய வேண்டும்.
அது மட்டுமல்ல! நம் உடலில் ஒவ்வொரு அணுவிலும் பிரவகிக்கும் சக்தி எது என்று கேட்டால் பிராண சக்தியாகிய சரஸ்வதியே! அதனால் சரஸ்வதி என்றால் ஞானசக்தி மட்டுமல்ல… பிராண சக்தியும் கூட! அப்படிப்பட்ட சரஸ்வதி தேவி இன்று ‘ஆவர்பாவம்’ செய்தாள் என்று தேவி பாகவதம் கூறுகிறது. இன்று குழந்தைகள் முதல் பெரியவர் வரை சரஸ்வதி தேவியை பூஜை செய்து வணங்க வேண்டும்.
செய்ய வேண்டிய வழிமுறைகள்:-
பிரம்ம முகூர்த்தத்தில் துயிலெழுந்து, மங்களகரமாக ஸ்நானம் செய்து, அதன்பின் சரஸ்வதி தேவியை புத்தக வடிவிலோ பிரதிமை வடிவிலோ வழிபட வேண்டும். அட்சர ரூபிணியான சரஸ்வதியை புத்தகத்தில் வழிபடுவதை இன்றைய பிள்ளைகளுக்கு மிகவும் முக்கியமாக கற்றுத்தர வேண்டிய அவசியம் உள்ளது.
பெரியவர்களுக்கும் சரஸ்வதி தேவியின் வழிபாடு தேவைதான். பெரியவர்களுக்கு மனசாந்தி தேவை என்றாலும் உலகில் எதாவது பணியைச் சாதிக்க வேண்டும் என்றாலும் ஞானம் தேவை. சரஸ்வதியின் கிருபை எல்லா நேரங்களிலும் நமக்கு வேண்டும்.

“யா ப்ரஹ்மாச்யுத சங்கர ப்ரப்ருதிபிர் தேவை ஸ்ஸதா பூஜிதா !
ஸா மாப்பாது சரஸ்வதீ பகவதீ நிஸ்சேஷ ஜாட்யாபஹா !!
(யாகுந்தேந்து என்று தொடங்கும் அகஸ்த்ய முனிவர் அருளிய ஸ்லோகம்)
சரஸ்வதி தேவியை தேவர்களும் வழிபடுகின்றனர். பிரம்மா இந்திரன் விஷ்ணு ருத்ரன் போன்ற கடவுளர்களும் சரஸ்வதியைப் போற்றி வழிபடுகின்றனர். “என்னிடமிருக்கும் அஞ்ஞானத்தை விரட்டி எப்போதும் என்னை ரட்சி!” என்பது இந்த ஸ்லோகத்தின் பொருள் ஏனென்றால் அவர்கள் சிருஷ்டி ஸ்திதி லயம் ஆகிய பணிகளை செய்வதற்கு அது தொடர்பான ஞானமும் அதை பயன்படுத்தும் அறிவும் சரஸ்வதியின் அருளாலேயே கிடைக்கின்றன.
சரஸ்வதி தேவியின் ஞானத்தையும் வைபவத்தையும் விளக்கும் புராணங்கள் இன்று சரஸ்வதி தேவியை வழிபட வேண்டிய முறைகளை எடுத்துரைக்கின்றன.
கலசத்திலோ பிரதிமையிலோ புத்தகத்திலோ ஆவாகனம் செய்து ஷோடசோபசார முறையில் வழிபட்டு வெள்ளை நிற மலர்களால் அர்ச்சிப்பது சிறப்பாகக் கூறப்பட்டுள்ளது. ஏனென்றால் அவள் “சர்வ சுக்லா சரஸ்வதி”. ஸ்வச்சமாக நிர்மலமாக ஞான வடிவில் ஒளிவீசுபவள்!
இவள் அருளால் உலகியல் கலைகளோடு பரமமான பிரம்ம வித்யை கூட கிடைக்கிறது. வித்யைகளின் அதி தேவதையான சரஸ்வதியின் கிருபையையும், ‘பராபர வித்யா’ ரூபிணியாக விளங்கும் தேவியின் அருளையும் இன்று நாம் பெற வேண்டும்.
வெள்ளைச் சந்தனம், வெண்ணிற மலர்கள், வெள்ளை வஸ்திரம், வெண் சங்கு இவற்றால் வழிபட வேண்டும். மாணவர்கள் இன்று சரஸ்வதி நாமங்களையும் சுலோகங்களையும் படித்து அனுஷ்டானம் செய்வது சிறப்பான பலன் அளிக்கும். பெற்றோர் இன்று தம் பிள்ளைகளைக் கொண்டு சரஸ்வதி பூஜை செய்விக்க வேண்டும். இன்று நிவேதனம் செய்யும் பிரசாதத்தை மாணவர்கள் ஏற்று நியமமாக சரஸ்வதி மந்திரம், நாமம், சகஸ்ரநாமம் படித்து வணங்க வேண்டும்.

பாரத தேசமே சரஸ்வதி தேசம்! பாரதி என்றால் சரஸ்வதி. பாரதி என்றால் ஞான ஸ்வரூபிணி! போஷிப்பவள் என்ற பொருளும் உண்டு. ஸகல ஜகத்தினையும் போஷிப்பது ஞானமே அல்லவா!
மனிதனில் கூட அவரவர் அறிவு அவரவரை வளர்த்துக் காக்கிறது. இந்த அறிவும் சரஸ்வதி தேவியின் அருளே! கலைகள் அனைத்தும் அவளருளால் பிரகாசிப்பவையே! சரஸ்வதி கடாக்ஷம் என்பது மிக முக்கியமான அம்சம்.
மந்திரம் பலனளிக்க வேண்டுமானாலும் கடவுள் அனுகிரகம் பெற வேண்டுமானாலும் அதற்குத் தொடர்பான மந்திர அக்ஷரங்கள் தெரிய வேண்டும். அது குறித்த ஞானம் வேண்டும். அதுவும் சரஸ்வதியின் அருளால் கிடைக்கப் பெறுவதே! சரஸ்வதியின் அருள் இருந்தால் எல்லா தேவதைகளின் அருளும் கிடைத்துவிடும்.
வேத விஞ்ஞானம் அனைத்தும் ஒரு சரஸ்ஸாகவும் அந்தச் ஸரஸ்ஸில் இருந்து உற்பத்தியாகும் தேவி சரஸ்வதியாகவும் கூறப்படுகிறது. வேத விஞ்ஞான ரூபிணியான சரஸ்வதியின் கிருபை பாரத தேசத்தின் கீர்த்தியை ஒளி பொருந்தியதாகச் செய்யட்டும்!
ஓம் சாந்தி!