நல்ல குழந்தைகள் பிறக்க “வாரணம் ஆயிரம்!’

செய்திகள்

“அருமாமறை உணராதென’ என்ற வில்லிபாரதப் பாடலுடன் நிகழ்ச்சியைச் சுசித்ரா அருமையாகத் துவக்கினார். திருமாலின் பத்து அவதாரங்களில் மக்களால் அதிகம் பேசப்படுவது ராமாவதாரமும், கிருஷ்ணாவதாரமும் என்றார். ராமாவதாரம் சத்தியத்தைக் காக்கும் தர்மத்தின் வாழ்க்கை குணநலன்களை அடிப்படையாகக் கொண்டதென்றால், கிருஷ்ணாவதாரம் அதற்கு மாறான இயல்புகளைக் கொண்டது. ராமபிரானின் ரவி குலத்தவர்கள் அதிகமாகப் பேச மாட்டார்களாம், பேச்சு அதிகமானால் சிறிதளவு பொய்யும் கலந்து விடுமோ என்ற அச்சமாம். கிருஷ்ணாவதாரத்தில் பொய்கள் சொல்லப்பட்டாலும், அவை தர்மத்தைக் காக்கும் சிந்தனைகளை அடித்தளமாகக் கொண்டவையே.

கிருஷ்ணரின் லீலைகள் கேட்கக்கேட்கத் தெவிட்டாதவை. கண்ணனை நினைத்தாலே மனம் ஆனந்தப் பரவசப்படும். இதை நிரூபிப்பதுபோல, சுசித்ரா, எல்லோர் செவிகளிலும் இன்பத்தேனாக, “தவ கதாம்ருதம் கிருஷ்ணா பாடலைப் பாடி நெகிழச் செய்தார்.

கோதை என்ற ஆண்டாள் பிறந்த ஊரான, 108 திவ்ய தேசங்களில் ஒன்றான, திருவில்லிபுத்தூரின் சிறப்பைக் “கோதை பிறந்த ஊர், கோவிந்தன் வாழும் ஊர், நீதிக்குத் தலை வணங்கி, தர்மத்தைக் காக்கும் ஊர்’ என்ற இனிமையான பாடலில் வர்ணித்தார்.

விஷ்ணு சித்தர் என்ற பெயருடைய ஆண்டாளின் தந்தையும், ஸ்ரீமந் நாராயணனுக்கு மங்களாசாசனம் செய்வித்தவருமான பெரியாழ்வார், பெருமாளுக்காக நந்தவனம் அமைத்து, துளசி மலர்களை வளர்த்ததை விவரித்த சுசித்ரா, மலர்களிலேயே உயர்ந்தது துளசி மலர்தான் என்பதற்கான காரணத்தைப் பின்வருமாறு குறிப்பிட்டார். துளசி மலரை செடியிலிருந்து பறித்த பிறகும், மலரைத் தவிர அதன் காம்பும், அந்தச் செடியின் வேர் பதிந்துள்ள மண்ணும்கூட நல்ல வாசனை தரும். தன்னிடம் உள்ள மணத்தை, தன்னுடன் தொடர்பு கொண்ட எல்லாவற்றிற்கும் பரப்புகிற உயர்ந்த குணநலன் கொண்டது. இதை எல்லோரும் ரசித்துப் பாராட்டினார்கள்.

ஆண்டாள் 98வது நளவருடம், ஆடிப்பூரம், செவ்வாய்க்கிழமை நன்னாளன்று அவதரித்ததை உருக்கமாகப் பாடிக் காட்டினார். சிறுவயதில் ஆண்டாள் தந்தையிடம் மீண்டும் மீண்டும் கோகுலக் கிருஷ்ணனின் லீலைகளைப் பற்றியே கேட்டுக் கேட்டு வளர்ந்தார். கண்ணனின் குழந்தைப் பருவத்தில், காலில் தங்கச் சலங்கையோடு, அவர் தவழ்ந்து வரும் அழகான காட்சியை “சலசலவென’ பாடலில் தத்ரூபமாக்கினார்.

வெண்ணெய் திருடிய மாயக்கண்ணனையும், யசோதைக்கும், கண்ணனுக்குமான உரையாடல்களையும் “பொல்லாத கோபி மாரம்மா’ என்ற பாடல் மூலம், கண்ணனின் அற்புத லீலைகளை ஒவ்வொன்றாக விளக்கி, கண்ணன் கட்டுண்டது போலவே, கூடியிருந்தோரையும் தன் இசைத்திறமையால், வயப்படுத்தி, சுசித்ரா கட்டிப் போட்டார்.

ஆண்டாள் தினமும் தன் தந்தை அளிக்கும் மாலையைப் பெருமாளுக்குச் சாற்றுவதற்கு முன்பாகவே தான் அணிந்து மகிழ்ந்ததையும், இந்த உண்மை தெரிய வந்ததும், பெரியாழ்வாரின் கனவில் வந்து, கண்ணன் “கோதை சூடிக் கொடுத்த மாலையே தனக்கு போதுமானது’ என்று கூறியதையும் அழகாக வர்ணித்தார்.

காத்யாயனி விரதம் அனுஷ்டித்தால் கண்ணனை அடையலாம் என்று, மாதங்களில் சிறந்த மார்கழியில், மதி நிறைந்த நன்னாளான சுக்ல பக்ஷத்தில் பாவை நோன்பிருந்து, திருவில்லிபுத்தூரையே கோகுலமாக, அங்கிருந்த சிறுமியரை கோபியர்களாக, வில்லிபுத்தூர் வடபத்திரர் கோயிலைக் கண்ணன் மாளிகையாக, புஷ்கரணி தீர்த்தத்தை யமுனையாக, பாவித்து, “மார்கழித்திங்கள்’ என்று திருப்பாவையைத் தொடங்கிய நிகழ்ச்சிகளை அனுபவித்துச் சொல்லி, சுசித்ரா கேட்போரையும் ரசிக்கச் செய்தார். நெய்யுண்ணோம், பாலுண்ணோம், மை மலர் இடோம் என ஆண்டாள் திருப்பாவையில் சொல்லியது, இவற்றை உண்ணாமல், அணியாமல், அவற்றைப் பார்த்த மாத்திரத்திலேயே கண்ணனின் இனிய நினைவுகள் மனதில் வரவேண்டுமென்பதே பொருள் என்று சிறப்பாகச் சொன்னார்.

சொற்பொழிவின் முத்தாய்ப்பாக, ஆண்டாள் அருளிச்செய்த நாச்சியார் திருமொழியில் இடம் பெறும் “வாரணம் ஆயிரம்’ பகுதியின் பதினோரு பாடல்களையும் தினமும் மனமுருகிப் பாராயணம் செய்தால், நற்பண்புகளுடன் கூடிய நல்ல குழந்தைகள் பிறப்பது நிச்சயம் என்ற அரிய செய்தியையும் குறிப்பிட்டார். ஆண்டாள் கண்ணனின் கைத்தலம் பற்றிய காட்சியை விளக்கி “ரங்கேசம் பஜரே’ என்று பாடி ஹரிகதையை முடித்தார்.

பிரபல ஹரிகதா இசைக்கலைஞரான கமலா மூர்த்தியின் பேத்தியான சுசித்ரா, இந்தக் கலையில் சிறுவயது முதலே தன் பாட்டியிடம் பயிற்சி பெற்று வருபவர். எல்லோரையும் வசீகரிக்கும் இனிமையான குரலும், தெளிவாக கதை சொல்லும் பாணியும், எல்லோரையும் உருகச் செய்யும் இசைத்தேர்ச்சியும் பெற்றவரான இவர், இந்த இளம் வயதிலேயே இன்னிசை சொற்பொழிவு ஆற்றுவதில் முத்திரை பதித்துள்ளது பெருமைக்குரிய விஷயம். இவருடைய திறமையைக் காணும்போது, மேன்மேலும் பாராட்டுக்களும், புகழ் மாலைகளும் வந்து சேர்ந்து, இவருக்கு வளமான எதிர்காலம் அமையும் என்பது உறுதி.

24888" target="_blank">https://www.dinamani.com/edition/story.aspx?artid=324888

Leave a Reply