கல்யாணப் பாட்டி

செய்திகள்

ஆளை அடிக்கும் வெளுப்பு நிறம். “அவ வெத்தலை போட்டு முழுங்கினா, சாறு இறங்கறது தெரியும்” என்று என் அத்தை கோமதி பீற்றிக் கொள்ள, அந்த வருடம் தில்லியிலிருந்து லீவுக்கு சென்னைக்கு வந்த பொழுது, பாட்டியின் தொண்டையை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே இருந்தோம்.

பாட்டி எங்குச் சென்றாலும் “என்ன பூரணி மாமி, சௌக்கியமா?” என்கிற குரல் ஒலித்துக் கொண்டே இருக்கும். பாட்டியும் சளைக்காமல் ஒவ்வொரு வரிடமும் குசலம் விசாரித்து “பையன் என்ன செய்யறான்?” “பெண்ணுக்கு கல்யாணம் ஆச்சா?” என்று பல விஷயங்களைக் கறப்பாள்.

பாட்டிக்கு மொத்தம் ஆறு பிள்ளைகள், இரண்டு பெண்கள். எல்லோருக்கும் திருமணமாகி இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் ஒவ்வொரு குடும்பமாக சிதறி இருந்தாலும், வருடம் ஒருமுறை மொத்த கூட்டமும் சென்னையில்  பாட்டி வீட்டில் கூடுவோம்.

மொத்தம் இருபது பேரன் பேத்திகள். எங்களுக்கே சற்றுச் குழப்பமாக இருந்தாலும், பாட்டிக்கு எல்லோருடைய பிறந்த தேதி, நட்சத்திரம், கோத்திரம், பிறந்த பொழுது இருந்த எடை என்று சகலமும் ஞாபகம் வைத்திருப்பாள்.

தாத்தா ஒரு அப்பிராணி. எதைக் கேட்டாலும் “உங்க பாட்டியைக்கேள். இது அவள் சாம்ராஜ்யம்” என்று கூறிவிட்டு செய்தித்தாளில் தலையை நுழைத்துக் கொள்வார்.

பாட்டியின் புகழின் அடிப்படை என்ன என்று சிறு வயதில் அறியவில்லைதான், ஆனால் பிறகு அதன் காரணம் அறிந்து ஆச்சரியமடைந்தோம்.

பாட்டியின் எத்தனையோ கடமைகளில் தலையாய கடமை திருமணங்கள் நிச்சயித்து விடுவதுதான் என்று சற்று விவரம் தெரியும் வயதிலேயே தெரிந்து கொண்டோ ம்.

அந்தக் கடமையை சரியாக நிறைவேற்றவே எல்லாத் திருமணங்களுக்கும் அலுக்காமல் செல்வாள். பாட்டி முன்னே நடக்க, வாண்டுகள் எல்லாம் பாட்டியைப் பின் தொடர்ந்து செல்வோம்.

எங்களுக்கு பாட்டியுடன் செல்வதென்றால் அல்வா சாப்பிட்ட மாதிரி! “நேரமாகிறது’, “படி & படி’ போன்ற விரட்டல்கள் கிடையாது. எதைத் தின்றாலும், எவ்வளவு தின்றாலும் ஒன்றுமே கூறமாட்டாள். எங்களுக்குப் பிடித்த வேலைகளை மட்டுமே தந்து செய்யச் சொல்வாள்.

அது என்ன வேலை என்று கேட்கிறீர்களா? அதில்தான் பாட்டியின் சூட்சுமமே இருக்கிறது.

பாட்டியின் கையில் எப்பொழுதும் ஒரு டைரி இருக்கும். அதில் தன் “கோழி கிறுக்கல்’ கையெழுத்தில் எதையோ எழுதி வைத்திருப்பாள். ஏதாவது “கோயில் குளம்’ என்று போனால் நிறைய மாமிகள் பாட்டியிடம் “க்யூ’ கட்டி வந்து பேசுவார்கள். அவர்கள் கூறியது எல்லாம் அந்த டைரியில் அரங்கேறும்.

எங்களுக்கு விவரம் புரியும் வயது வரும் பொழுது பாட்டியின் “தீர்க்க தரிசன’ பார்வையின் நோக்கம் புரிந்தது!

சென்னை நகரிலும், சுற்று வட்டாரத்திலும் எங்குத் திருமணம் நடந்தாலும் தாத்தா பெயருக்கு ஒரு பத்திரிகை வந்து விடும். “நீயே போய்க்கேள்’ என்று தாத்தா ஒதுங்க, பிள்ளைகள் பெண்கள், மாப்பிள்ளைகள், மருமகள்கள் தப்பிக்க, நண்டு சிண்டுகளான எங்களது “சத்திர பிரயாணம்’ துவங்கும்.

நாங்கள் வீட்டில் நச்சரித்து பாவாடை, சட்டை, குஞ்சலம், பூ, ஜடை, ராக்கொடி என்று அமர்க்களமாகக் கிளம்புவோம்.

வீட்டில் வேலை செய்ய வேண்டும் என்றால் “மூட்டுவலி’ “முதுகுவலி’ “கண்ணே சரியாகத் தெரியறதில்லை’ என்று வசனங்கள் மொழியும் எங்கள் பாட்டியை சத்திரத்தில் பார்க்க “கண்கோடி’ வேண்டும்.

சத்திரத்திற்கு அருகில் போகும் பொழுதே “விலுக் விலுக்’கென்று ஒரு நடை நடப்பாள் பாட்டி. ஆயிரம் “வாட்’ பல்பிற்கு நிகராக முகம் கொள்ளா சிரிப்பும், ஒவ்வொருவரிடமும் குசலம் விசாரித்து தலை அசைக்கையில் வைரத்தோடும், எட்டுக்கல் பேசரியும் “டால்’ அடிக்கும் அழகே அழகுதான்!

பையனோ, பெண்ணோ (திருமண வயது!) எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் பாட்டியின் கழுகுப் பார்வையில் தப்பமுடியாது. முதலில் “ஏண்டி ரமா, அது கிச்சூ பிள்ளை சுதாகர் தானே?’ என்று அருகில் இருப்பவரிடம் கேட்டு உறுதி செய்து கொள்வாள்.

பிறகு எங்களில் யாராவது மூன்று பேரை அந்த “கிச்சூபிள்ளை’யை நோட்டம் விட அனுப்புவாள். தான் போய் அந்த கிச்சூவின் மனைவியிடம் பேசி சகல விஷயங்களையும் “கலெக்ட்’ செய்து, தன் டைரியில் எழுதி விடுவாள் பாட்டி.

நாங்கள் வீட்டிற்கு வந்தபிறகு ஒரு வட்டமேஜை மாநாடு நடத்தப்படும். ஒரு போர்க்கால நடவடிக்கை அடிப்படையில் கிச்சூபிள்ளை, கிச்சூவின் மனைவி, கிச்சூ இவர்கள் மூவரின் குணாதிசயங்கள் அலசப்பட்டு பாட்டியின் ஒரு முகத்தீர்மானம் நிறைவேற்றப்படும்.

“ராம்கி கொஞ்சம் “விந்தி விந்தி’ நடக்கிறான் பாட்டி” என்று என் சித்தப்பா பெண் லலிதா கூறுவாள். “ஐயோ அது “டைட் ஜீன்ஸ்!’ அமெரிக்காவிலிருந்து வரவா இப்படிதான் நடப்பா” என்று பாலாஜி கூறுவான்.

“கண் கொஞ்சம் ஒன்றரை கண் மாதிரி இருக்கு.”

“ஆமா கல்யாணப் பெண் பங்கஜத்திற்கு பல் எடுப்புதானே?”

“ஏதோ குழறி குழறி ழ… ழன்னு பேசறான்.”

“லண்டன்ல இருக்கறவா அப்படிதான் பல்லு தேய்க்காத மாதிரி பேசுவா” என்று பாட்டி அடித்துக் கூறிவிடுவாள்.

ஒருமுறை என் அம்மா “இதென்ன கண்றாவி? சின்னக் குழந்தைகள இப்படி மத்தவாளைப் பற்றி பேசவைக்கிறது சரியா?” அப்பாவிடம் கேட்க, அப்பா சர்வ ஜாக்கிரதையாக தாத்தாவிடம் மட்டும் கூறினார்.

தாத்தா அதைவிட ஜாக்கிரதையாக “எல்லாம் நம்ம குழந்தைகளுக்கு நல்லதுதாண்டா. மனுஷாளை நன்னா அலசி ஆராய்ந்து பழகக் கற்றுக் கொள்வார்கள்” என்று மறுபடியும் பேப்பருக்குள் தன்னை மறைத்துக் கொண்டார்.

இப்படியாக பாட்டி நடத்திவைத்த கல்யாணங்கள் ஏராளம். ஒன்று கூட சோடை போனதில்லை. அதோடு தன் குழந்தைகளுக்கும் முடித்துவிட்டு, பேரன் பேத்திகளுக்கும் நடத்திவைக்க ஆரம்பித்தாள்.

வெகுசீக்கிரத்தில் ஆண்டவனிடமிருந்து அழைப்பு வர முதலில் பாட்டியும், பின்னோடு தாத்தாவும் போய் இறைவனடி சேர்ந்துவிட்டார்கள். ஒரு சகாப்தம் முடிந்துபோன மாதிரி குடும்பத்தில் ஒரு வெறுமை.

சில வருடங்களுக்கு முன் என் பெண்ணுக்கு திருமண சம்பந்தம் பார்க்கும் பொழுதுதான் பாட்டியைப் போல் உள்ளவர்களின் சேவை சமூகத்திற்கு எத்தனை தேவை என்று தெரிந்தது!

“என் பெண்ணுக்கு திருமண சம்பந்தம் பார்க்கணும்னு இருக்கோம். யாராவது தெரிந்தால் சொல்லுங்களேன்” என்றால், “அதான் “திருமண ப்யூரோ’ இருக்கே. அங்கே போய் ரிஜிஸ்டர் பண்ணிக்கோங்கோ. நான் யாருக்கும் எதுவும் சொல்றதில்லை” என்கிற பதில் வருகிறது.

“இல்லை, தெரிஞ்ச சம்பந்தமாக இருந்தால்…”

“அதெல்லாம் இந்தக் காலத்துல யாரை நம்பறது? இப்படிதான் போன வருஷம் நான் சொன்ன ஒரு இடத்தில், கல்யாணப் பெண்ணே கல்யாணத்தை நிறுத்திட்டா. இனிமே யாருக்கும் எந்த சம்பந்தமும் சொல்லக் கூடாதுன்னு வெச்சிட்டேன்” என்று உறவினர் ஒருவர் மனக்கஷ்டத்துடன் கூறினார்.

இப்படிப்பட்ட ஒரு நோக்கு இன்று நம்மிடையே வளர்ந்து விட்டது.

என் கண்கள் பாட்டியை நினைத்து பனிக்கின்றன.

என் அம்மா மெதுவாகக் கூறுகிறாள். “பாட்டி இருந்தா, உன் பெண்ணுக்கு இந்நேரத்திற்கு கல்யாணமாகி குழந்தை பிறந்திருக்கும்!”

பாட்டி இதைக் கேட்டால் எத்தனை சந்தோஷப்படுவாள்!

(எங்கள் பாட்டியைப் பற்றிய புனை கதை இது… இந்தக் காலத்தில் இதுபோன்ற பாட்டிகள் குடும்பத்தில் இல்லாததால், கல்யாணத் தரகு கம்ப்யூட்டரிலும் இண்டர்நெட்டிலும் வந்துவிட்டது எவ்வளவு உண்மை!){jcomments on}

– காந்தலக்ஷ்மி சந்திரமௌலி

Leave a Reply