தமிழ்நாட்டு திவ்யதேசங்கள்

1. தமிழ்நாடு

எங்கும் அந்தர்யாமியாகத் திகழும் ஸ்ரீமந் நாராயணனின் அர்ச்சாவதாரத் திருக்கோலத்தை நாம் தரிசிக்க ஏதுவாக, இந்த மண்ணுலகிலே நம் பெரியோர்களால் ஏற்படுத்தி வைக்கப்பட்ட திவ்விய தேசத் தலங்களின் தரிசனம் இங்கே̷ 0;

தமிழகத்தில்தான் ஆலயங்கள் அதிகம். அதிலும், ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற திவ்யதேச ஆலயங்கள் தமிழ்நாட்டில் அதிகம். 108 திவ்ய தேசங்களில் முதல் திவ்ய தேசமாக வருவது, திருவரங்கம். ஆழ்வார்கள் அனைவராலும் பாடப்பெற்ற கோவில் இது. பெரிய கோவில், கோவில் என்று வைணவர்களால் போற்றி வணங்கப் படும் கோவில் இது. வைணவத்தின் தலைமைப் பீடம் என்று போற்றப்படும் இந்தக் கோவிலை முதலாவதாக வைத்துத்தான் அந்தக் காலத்தில் திவ்யதேச யாத்திரையைத் தொடங்கியிருக்கிறார்கள். ஆனால், போக்குவரத்து, மற்றும் தங்கும் வசதிகள் அதிகரித்து விட்ட இந்த நாளில், அன்பர்கள் குடும்பத்தோடு சென்று இந்த ஆலயங்களை தரிசிக்க வசதியாக, மண்டல வாரியாகப் பிரித்து, இந்த ஆலயங்களை வரிசைப் படுத்தித் தந்துள்ளோம்.

தமிழகத்தில் முதலில் சென்னையில் இருந்து இந்த ஆலய தரிசனத்தைத் தொடங்கலாம். சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஆலயங்களை தரிசித்துவிட்டு, அருகில் உள்ள காஞ்சிபுரத்தை மையமாக வைத்து பெரும்பான்மையான ஆலயங்களை தரிசிக்கலாம். சென்னை மற்றும் காஞ்சியில் தங்கும் வசதி உண்டு.

அடுத்து, திருச்சி. முதலாவதாக ஸ்ரீரங்கம் மற்றும் சுற்றியுள்ள திவ்யதேசங்கள். பிறகு, தஞ்சாவூர் மண்டலம். இதில் கும்பகோணத்துக் கோவில்கள் நிறைய இடம்பெறும். அடுத்து, அருகில் உள்ள மயிலாடுதுறை, சீர்காழி, நாகப்பட்டினம் முதலான பகுதிகளில் உள்ள திவ்ய தேசம்.

திருக்கோவிலூர் திருத்தலம், சென்னையில் இருந்து திருச்சி செல்லும் வழியில், விழுப்புரத்தில் இருந்து சுமார் நாற்பது கி.மீ. தொலைவு என்பதால், அதை மட்டும் தனியாக தரிசித்துக் கொள்ளலாம். தஞ்சை, கும்பகோணம் பகுதிக்குச் சென்று தரிசித்து விட்டு பிறகு தனியாக வருவது உசிதம் அல்ல.

நாகூர், மயிலாடுதுறை பகுதியை முடித்து விட்டு, மதுரை செல்லும் வழியில் திருமயம் திவ்ய தேசத்தை தரிசித்து விட்டு, அப்படியே திருக்கோஷ்டியூர் திருத்தலத்துக்குச் சென்று மகான் ஸ்ரீ ராமானுஜர் அஷ்டாட்சர மந்திரம் உபதேசம் பெற்று உபதேசம் செய்த தலத்தை தரிசித்து விட்டு, மதுரைக்குச் செல்லலாம்.

மதுரை பகுதியை தரிசித்து முடித்து, திருநெல்வேலி பகுதியில் உள்ள நவதிருப்பதி, நாங்குநேரி, திருக்குறுங்குடி ஆகிய தலங்களுக்குச் சென்றுவிட்டு, அங்கிருந்து நாகர்கோவில் சென்று, திருவெண்பரிசாரம் மற்றும் திருவட்டாறு திவ்ய தேசங்களை தரிசித்து விட்டு பிறகு கேரளத்துக்குச் செல்லலாம்…

Leave a Reply