ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூரம்!

கட்டுரைகள்

வால்மீகி முனிவர் ஸ்ரீமத் ராமாயணத்திலே “”உயர்ந்த வேதமே ராமாயணமாகவும் அவ்வேதம் காட்டுகின்ற பரம்பொருள் ஸ்ரீராமனாகவும் அவதரித்தனர்” என்கிறார். அவ்வகையில் பூமிப்பிராட்டியானவள் ஸ்ரீ ஆண்டாளாக அவதரித்தது போல, உபநிடதங்கள் எல்லாம் திருப்பாவையாக அவளால் சொல்லப்பட்டது. அதை இவ்வாறு குறிப்பிடுகிறார் வைணவ ஆசாரியர் சுவாமி பெரியவாச்சான் பிள்ளை… “பிராட்டி ஆண்டாளானாப் போல உபநிஸத்து தமிழானபடி’ என்கிறார் அவர். ஸ்ரீஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவையின் பெருமை அத்தகையது. “”திருப்பாவையில் உள்ள முப்பது பாடல்களையும் தினமும் பாடுகிறவர்கள் திருமாலின் அருளால் நீங்காத செல்வத்தைப் பெற்று இன்பமடைவார்கள்” என்று ஸ்ரீஆண்டாளே திருப்பாவையின் முடிவில் குறிப்பிடுகிறாள்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் கோயில் கொண்டுள்ள ஸ்ரீஆண்டாள், அழகான புன்முறுவலோடு காட்சியளிக்கிறாள். சாயக் கொண்டை, மூன்று வளைவுகளோடு கூடிய திருமேனி, கையிலே அழகிய கிளி என்று அழகிய மணவாளனான ஸ்ரீரங்கமன்னாருடன் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு சேவை சாதிக்கும் ஆண்டாளின் அழகைக் காணக் கண் கோடி வேண்டும். ஸ்ரீவில்லிபுத்தூரில் ஸ்ரீஆண்டாளுக்காக ஸ்ரீரங்கநாதன், ரங்கமன்னாராக ராஜகோபாலனாக கண்ணனாக எழுந்தருளியுள்ளார். ஸ்ரீவைகானஸ ஆகம விதியின்படி ராஜகோபாலனுக்கு வலதுபுறம் ஸ்ரீ ஆண்டாள் எழுந்தருளியுள்ளதால் மஹாலட்சுமியின் அவதாரமான ஸ்ரீருக்மணி பிராட்டியின் அம்சமும் உடையவளாகிறாள். ஆக, கருணையே வடிவமான மஹாலட்சுமியின் அம்சத்துடனும், புராணத்தின்படி பொறுமையே வடிவமான பூமிப் பிராட்டியின் அம்சத்துடனும், தன்னையே கோபிகையாக ராதையாக எண்ணி பக்தி செய்ததால் அன்பே வடிவமான, நீளாதேவியான ராதையின் அம்சத்துடனும் ஸ்ரீஆண்டாள் இவ்வூரில் எழுந்தருளியுள்ளது மிகவும் சிறப்பானது.

ஸ்ரீஆண்டாள் சூடிக் களைந்த மாலையை புரட்டாசி பிரம்மோற்ஸவத்தின்போது திருப்பதிப் பெருமாளும், சித்ரா பௌர்ணமியன்று மதுரையில் வைகையாற்றில் இறங்குவதற்கு முன்பு ஸ்ரீகள்ளழகரும், தினமும் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஸ்ரீவடபத்ரசயனரும் அணிந்து அழகு கொள்கிறார்கள் என்பது ஆண்டாளின் மற்றொரு பெருமை.

ஸ்ரீஆண்டாளின் அவதார உற்ஸவமான ஆடிப்பூரப் பெருவிழா ஸ்ரீவில்லிபுத்தூரில் பக்தர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இவ்வாண்டும் கடந்த 25ஆம் தேதி (ஆடி மாதம் 9ஆம் தேதி) கொடியேற்றம் தொடங்கியது. 02.08.2011ஆம் தேதி வரை மிகவும் சிறப்பாகத் திருவிழா நடக்கிறது. குறிப்பாக ஐந்தாம் திருநாள் காலை ஸ்ரீபெரியாழ்வார் மங்களாஸôசனமும், இரவு ஐந்து மணிக்கு கருட சேவையும், ஏழாம் திருநாளன்று மாலை ஸ்ரீஆண்டாளின் திருமடியிலே ஸ்ரீரங்கமன்னார் சயனித்திருக்கும் திருக்கோலமும், ஒன்பதாம் நாள் ஸ்ரீ ஆண்டாளின் பிறந்த தினமான ஆடிப்பூரத்திலே ஸ்ரீஆண்டாளும் ரங்கமன்னாரும் திருத்தேரில் பவனி வரும் உற்ஸவமும் மிகவும் சிறப்பானவை.

பக்தர்கள் இந்த ஆடிப் பெருவிழாவிலே ஸ்ரீஆண்டாள் – ரங்கமன்னார் திவ்ய தம்பதியை தரிசனம் செய்தல் மேன்மைக்கு வழிவகுக்கும். நல்லன நடந்தேறும். “திருஆடிப்பூரத்து ஜகத்துதித்தாள் வாழியே’ என வாழ்த்தி ஆண்டாளம்மையை வணங்குவோம்.

கட்டுரை: வெள்ளிமணி

Leave a Reply