அறப்பளீஸ்வர சதகம்: தத்துவத் கிரயம்!

ஆன்மிக கட்டுரைகள் கட்டுரைகள்
arapaliswarar - Dhinasari Tamil

முப்பொருள் (தத்துவத் திரயம்)

பூதமோ ரைந்துடன், புலனைந்தும், ஞானம்
பொருந்துமிந் திரிய மைந்தும்,
பொருவில்கன் மேந்திரியம் ஐந்தும், மனம் ஆதியாம்
புகலரிய கரணம் நான்கும்,
ஓதினோர் இவை ஆன்ம தத்துவம் எனச் சொல்வர்;
உயர்கால நியதி கலையோ
டோங்கிவரு வித்தை, ராகம், புருடன் மாயை யென்
றுரைசெய்யும் ஓரே ழுமே
தீதில்வித் யாதத்வம் என்றிடுவர்; இவையலால்
திகழ்சுத்த வித்தை ஈசன்,
சீர்கொள்சா தாக்கியம், சத்தி, சிவம் ஐந்துமே
சிவதத்வம் என்ற றைகுவார்;
ஆதிவட நீழலிற் சனகாதி யார்க்கருள் செய்
அண்ணலே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே.

முற்காலத்தில் கல் ஆலமரத்தின் நிழலில் சனகர் முதலானோர்க்கு அருள்புரிந்த பெரியோனே!, அருமை‌தேவனே!,
ஓர் ஐம்பூதங்களும், உடன்
(அவற்றுடன்) ஐம்புலன்களும், ஞானம் பொருந்தும் ஞான இந்திரியங்கள் ஐந்தும், உவமையில்லாத கன்ம இந்திரியங்கள் ஐந்தும், மனம் முதலிய சொல்லற்கரிய
கரணங்கள் நான்கும், இவற்றை ஆன்ம தத்துவம் என்று கற்றறிந்தோர் கூறுவர்,
உயர்வாகிய காலம், நியதி, கலைகளோடு கூறப்படும் ஏழினையும் குற்றமற்ற வித்தியாதத்துவம் எனக் கூறுவர், இவையல்லாமல், திகழ்சுத்த வித்தை, ஈசன், விளங்கும்சுத்தவித்தை, ஈசன், சிறப்புடைய சாதாக்கியம் சத்தி, சிவம் (ஆகிய)‌ஐந்தினையும் சிவ தத்துவம் என்று கூறுவர்.

பூதம் ஐந்து : மண், நீர், அனல், வளி, வான்.
புலன்ஐந்து : சுவை , ஒளி, ஊறு, ஒசை, நாற்றம். ஞான இந்திரியம் ஐந்து :
மெய், வாய், கண், மூக்கு, செவி. கன்ம இந்திரியம் ஐந்து : வாக்கு, பாதம்,
பாணி, பாயுரு, உபத்தம்.
கரணம் நான்கு: மனம், புத்தி, சித்தம், அகங்காரம்.
வடம் – ஆலமரம்.
சனகாதியர் – சனகர், சனந்தகர், சனத்குமாரர், சஹ்யஜாதர்.
ஞான இந்திரியம் : அறிவுப்பொறி. கன்மஇந்திரியம்: தொழிற்பொறி
ஆன்மதத்துவம் உயிருடன் சேர்ந்தவை : இருபத்துநான்கு தத்துவங்கள்.
வித்தியா தத்துவம் : கவலையுடன் சேர்ந்தவை ஏழு தத்துவங்கள்
சிவதத்துவம் : இறையுடன் சார்ந்தவை : ஐந்துதத்துவங்கள்,
ஆக முப்பத்தாறு.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply