நல்வினை செய்தோர்
சாண்எனக் காத்தவன், மெய்யினால் வென்றவன்,
தானம்இளை யாது தவினோன்,
தந்தைசொல்மறாதவன், முன்னவற் கானவன்
தாழ்பழி துடைத்த நெடியோன்,
வருபிதிர்க் குதவினோன், தெய்வமே துணையென்று
மைந்தன்மனை வியைவ தைத்தோர்,
மாறான தந்தையைத் தமையனைப் பிழைகண்டு
மாய்த்துலகில் மகிமை பெற்றோர்
கருதரிய சிபிஅரிச் சந்திரன், மாபலி,
கணிச்சியோன் சுமித்தி ரைசுதன்,
கருடன், பகீரத னுடன்சிறுத் தொண்டனொடு
கானவன், பிரக லாதன்,
அரியவல் விபீடணன் எனும்மகா புருடராம்
அத்தனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
தலைவனே!, அருமை தேவனே! அடைக்கலம் (என்ற புறாவைக்) காப்பாற்றியவன்,
உண்மையேபேசி வெற்றியுற்றவன், சோர்வின்றிக் கொடை கொடுத்தவன்! தந்தையின் மொழியைத் தட்டாதவன்,
தமையனுக்கு உற்ற துணையானவன், அன்னைக்கு உற்ற நிந்தையைப் போக்கிய
பெரியோன், தலைமுறையில் வந்த
தென்புலத்தார்க்கு நலம் புரிந்தோன். கடவுளைத் துணையாக நம்பி மகனை
வதைத்தவனும் மனைவியை வதைத்தவனும், நன்னெறிக்கு)
மாறுபட்ட தந்தையைக் கொன்றும், தமயனைக் கொன்றும் உலகிற்
புகழ்பெற்றோர், (ஆகிய இவர்கள் முறையே) நினைத்தற்கரிய
சிபிச் சக்கரவர்த்தியும், அரிச்சந்திரனும், மாபலியும்,
பரசுராமனும், சுமித்திரை மகனான
இலக்குவனும், கருடனும், பகீரதனும்,
சிறுத்தொண்டனும், வேடனும்,
பிரகலாதனும், அரிய வலிய
விபீடணனும், எனக் கூறும் பெருமக்கள் ஆகும்.
அடைக்கலம் என்ற புறாவைச் சிபி காப்பாற்றத்
தன்னையே எடையாக நிறுத்தினான். அரிச்சந்திரன் உண்மையைக்
கடைப்பிடிக்க மனைவியையும் மகனையுங்கூட விற்றான்; தானும்
தோட்டிக்கு விலையானான். மாபலி தன்னையேற்பவர் மாயையில் வல்ல
திருமாலென்றறிந்தும் பொருட்படுத்தாமல் வேண்டிய மூன்றடி மண்ணைக்
கொடுத்தான். பரசுராமன் தந்தை சொற்படி தாயைக் கொன்றான்.
இலக்குமணன் தமயனான இராமனொடு காட்டிற்குச் சென்றான். கருடன்
தன் தாயான வினதையின் அடிமைத் தன்மையை மாற்றத் தன் மாற்றாந்
தாயான கத்துருவை மக்களை (பாம்புகளை) வேண்டுமிடங்களுக்குக்
கொண்டு போய்க் காட்சிகளைக் காட்டினான். பகீரதன் தன் முன்னோரான
சகரர்கள் நிற்கதியடையத் கங்கையைப் பூவுலகிற் கொணர்ந்து சகரரின்
சாம்பற் குவியலிற் பாய்ச்சினான். சிறுத்தொண்டர் அடியார்கோலத்துடன்
வந்த சிவபிரான் அமுது செய்ய மைந்தனைக் கொன்று சமைத்தார்.
பிரகலாதன் தன் தந்தைக்குமாறாக நின்று நரசிங்க மூர்த்தியால் தன்
தந்தையையே கொல்வித்தான். வீடணன் தன் தமையனான இராவணனுக்கு
மாறாக நின்று இராமனைக்கொண்டு கொல்வித்தான்.
இவர்கள் நன்னெறியிலே சென்றதனால் தகாத செயல்களான இவற்றைச்
செய்தும் புகழ்பெற்றனர் என்று கூறுவர்.
உலகியலுக்கு மாறாயினும் நன்னெறியிலே செல்வதே நலந்தரும்.