ஹனுமத் ஜயந்தி ஸ்பெஷல்: சுந்தர காண்டம் பெயர் வந்தது எப்படி?

கட்டுரைகள்

காவியத்தை இயற்றிய கவியோ வேடனாக இருந்து ரிஷியாக மாற்றம் பெற்றவர். ஆற்றங்கரையோரத்தில் அன்பினால் கட்டுண்ட புறாக்கள், அம்பினால் தைக்கப்பட்டு வீழ்ந்ததைக் கண்டு மனக் கலக்கம் மிகக் கொண்டவர். அதன் வெளிப்பாடு, சோகம் ததும்பும் சுலோகமானது. அதுவே உலகில் பிறந்த முதல் சுலோகம். அதுவும் சோக மயமான சுலோகம். அந்த சோக கீதம் இசைத்த கவியே உலகின் ஆதிகவி. கலைமகள் அவர் நாவில் நர்த்தனம் புரிந்தாள். நாரதர் காவியக் கருவைக் காட்டினார்.

கவியின் நாவிலிருந்து கவி ஊற்றுப் பெருக்கெடுத்தது. காவியத்தின் நாயகன் கதிரவ குலத் தோன்றலான ராமபிரான். கவி புனைந்த சுலோகங்களோ, பண்ணொடு இசைத்துப் பாடுதற்கேற்றவை. பாடப் புகுந்த சிறார்களோ, பச்சை மலையொத்த படிவத்து அடல் ராமனின் புதல்வர்கள். உருவம் அழகு. குரலோ இனிமை. கவியோ செவிக்கு அமுதம். பால் மணம் மாறாப் பாலகர் இருவரும் பாடும் அழகோ பார்ப்போரைச் சுண்டி இழுத்தது. அங்கே நடந்து கொண்டிருந்தது, ஆதிகவி வால்மீகியின் ராமாயண அரங்கேற்றம்தான்.

சகோதரர் புடைசூழ சபைத் தலைவராக வீற்றிருந்தார், சக்கரவர்த்தித் திருமகன். அண்ணலின் அடிக்கீழ் அமைதியே வடிவாக அஞ்சனை மைந்தன். அவையில் எங்கும் ‘ஆஹா’காரம் தவிர வேறு பேச்சேதும் இல்லை. வீணை நரம்பினை விரல்கள் மீட்டிட, அந்த மெல்லிய இசைக்கு ஏற்ப நாயகன் புகழ்பாடும் காவியத்தைப் பாடத் தொடங்கினர் சிறார்கள் இருவரும்.

குற்றம் காண இயலாத அந்தக் காவியத்தில் எல்லோரும் லயித்திருக்க, ஒருவர் மனம் மட்டும் சஞ்சலத்திலும் அச்சத்திலும் ஆழ்ந்திருந்தது. வேறு யார்? அந்தக் காவியம் இயற்றிய கவியேதான்! யார் என்ன குற்றம் சொல்வார்களோ? இந்த அரங்கேற்றம் நல்லபடியாக நடக்க வேண்டுமே என்று எத்தனை நாட்களாகக் காத்திருந்தார் அந்தக் கவி. பதற்றம் இல்லாமலா இருக்கும்! பாடலைக் கேட்பவர் பரவசத்தில் ஆழ்ந்துவிடுவர். அது நிச்சயம். பாராட்டல் மட்டும்தானே பாமரர்க்குத் தெரியும். ஆயின் பண்டிதர் எவரேனும் பாய்ந்தெழுந்தால்….? கவியின் கதி என்னாவது?

கவி கலங்கியதற்குக் காரணமும் இருந்தது. அண்ணலின் அடிக்கீழ் அமர்ந்திருந்தாரே அந்த அஞ்சனை மைந்தன்… அவர்தான் இந்தக் கவிக்கு அச்சத்தைத் தந்துகொண்டிருந்தார். அவர் மகா பண்டிதராயிற்றே! பண்டிதர் என்றால் வெறும் பாண்டித்யம் கொண்டவரா? நவவியாகரண பண்டிதரன்றோ? ஞானமும் சீலமும் வித்யையும் ஒருங்கே நிறைந்த அவர் முகப் போக்கை, ஒவ்வொரு கணமும் ‘திகில்’ உள்ளத்தோடு கண்காணித்துக் கொண்டிருந்தார் கவி வால்மீகி.

ஆயிற்று… பால காண்டம், அயோத்யா காண்டம், ஆரண்ய காண்டம், கிஷ்கிந்தா காண்டம்… காவியத்தின் பெரும்பகுதி எந்தத் தடைகளும் குறைகளும் இல்லாமல் சென்று கொண்டிருந்ததில் காவியம் இயற்றிய கவிக்கு அதுவரை ஆனந்தம்தான்! ஆனால் அச்சரேகைகளும் அப்போதுதான் அவர் முகத்தில் படரத் தொடங்கியது.

‘இதி கிஷ்கிந்தா காண்டஸ் ஸமாப்த:’ –  என்று காவியத்தின் நான்காவது காண்டத்தைப் பாடிமுடித்த திருப்தியில் அந்தச் சிறார்கள் சற்றே ஆசுவாசப் படுத்திக் கொண்டனர்.

அடுத்த காண்டத்தைக் கேட்கும் ஆவலில் சபையில் எங்கும் நிசப்தம் நிலவியது. சிறார்கள் இருவரும் பாடத் தொடங்கினர்.

‘அத ஹனுமத் காண்ட: ஆரப்யதே’ என்று தலைப்புச் சொல் அந்தக் குழந்தைகளின் திருவாக்கிலிருந்து வெளிவந்த அந்த நொடிப்பொழுது…. ஒரு பேரிரைச்சல் பேரிடி முழக்கமாக சபையோரை அதிரச் செய்தது.

‘‘கவியே நிறுத்தும். சிறார்கள் பாடுவதை நிறுத்தச் சொல்லும். தலைப்பைத் திருத்தும். இல்லையேல் உம்மைக் கடலில் வீசி எறிந்துவிடுவேன்…’’

வானைப் பிளந்த இந்தச் சொற்கள் வால்மீகியைப் பார்த்து வந்த சொல்லம்புதான். வீசியவர் யார்? வீரத்தின் விளைநிலம், வாயுமைந்தன் அனுமன். அடிபட்ட அரவம் போல் அனுமன் அதரத்திலிருந்து வந்த அந்தச் சொல்லால் அவையோர் ஆச்சரியம் அடைந்தனர். எல்லாம் அறிந்த எம்பிரானோ அமைதி காத்தார். இப்படி நடக்கும் என எதிர்பார்த்திருந்த கவியோ கலக்கத்தைக் காட்டிக் கொள்ளாமல் கண்களால் ஏறெடுத்துப் பார்த்தார்.

பின்னர் அனுமனைப் பார்த்துக் கேட்டார்….

‘‘ஓ மகா பண்டிதரே! அஞ்சனையின் புதல்வரே… என்ன குற்றம் கண்டீர்? பாடலை நிறுத்தச் சொல்வதற்கான காரணம்தான் யாதோ? சொல் குற்றம் கண்டீரோ?’’

‘‘இல்லை இல்லை… கலைவாணியின் கருணையால் அவள் உம் நாவில் திருநடம் புரிகிறாள். அப்படி இருக்கையில் உம்மிடம் சொற்குற்றத்தை எப்படிக் காணமுடியும்…?’’

‘‘எனில், பொருட் குற்றம் கண்டீரோ?’’

‘‘ஆம். முக்திக்கு வித்தாகும் மிகப் புனிதமான ராம சரிதத்தில், பாமரக் குரங்கின் பெயரைச் சூட்டுதல் பொருத்தமற்றதே! புனிதக் காவியத்தில், ஒரு காண்டத்தின் தலைப்பாகவே ஒரு குரங்கின் பெயரைச் சூட்டுதல் பெருங்குற்றமே! அதுவும் பொறுத்துக் கொள்ள முடியாத பெருங்குற்றமே!’’

‘‘ஏன்? ராம சகோதரர்களின் பால லீலையைச் சொல்வது, பால காண்டம். அயோத்யாவின் சரிதத்தை அடக்கியது, அயோத்யா காண்டம். கானகத்தில் வாசம் செய்து, அண்ணல் அடியெடுத்து நடந்த ஆரண்யம் தொடர்பான சம்பவங்களைச் சொல்வது, ஆரண்ய காண்டம். கிஷ்கிந்தை வந்தது முதல் நடந்தவற்றைச் சொல்வது கிஷ்கிந்தா காண்டம். அப்படிப் பார்க்கும்போது, ஹனுமன் தொடர்பான வீரதீரங்களைச் சொல்வது ஹனுமத் காண்டம் என்றுதானே வைக்க முடியும். இங்கே ஹனுமனது சரிதம் முக்கியம் என்பதால் ஹனுமத் காண்டம் என்று பெயர் சூட்டியதில் என்ன தவறு இருக்கமுடியும்? இதில் ஏன் உமக்கு ஆட்சேபணை?’’

‘‘தாசானுதாசனாக, ராமபிரானின் திருப்பெயர் முழங்கும் விரதம் பூண்ட இந்த அடிமையின் பெயரை, புனித ராம சரிதத்தில் வைப்பது எவ்விதத்திலும் தகாது. உடனே அதை நீக்கி, வேறு பெயரைச் சூட்டுங்கள். இல்லையேல் நடப்பதே வேறு….’’

மலைபோல் எழுந்த மாருதியின் மனதை அறிந்தவர்கள் என்பதால், சபையோர் அச்சத்தின் பிடியில் அமைதி காத்தனர். அனுமனின் வீரதீரங்களை முழங்கும் அந்த காண்டத்துக்கு அனுமன் பெயரைச் சூட்டுதலே பொருத்தம் என்பதை எல்லோருமே அறிவர். அதுதான் நியாயம் என்பதும் அவர்கள் கண்ணோட்டம். ஆனால் ஆஞ்சனேயனின் முன் வாயைத் திறப்பதாவது…?

கவியின் கண்கள் கருணையே வடிவான ராமபிரானின் கண்களைச் சந்தித்து கெஞ்சின. இந்தத் தலைப்பையே வைப்பதற்கு ஆஞ்சனேயனிடம் சொல்லுமாறு வேண்டின. கவிஞனுக்கும் ஒரு சுதந்திரம் இருக்கிறதே. அவ்வளவு லேசில் தலைப்பை மாற்றுவதற்கு கவி சம்மதிப்பாரா என்ன?

ராமனுக்கோ தர்மசங்கடமானது. ஆதிகவியை சமாளிப்பதா, அல்லது தன் முரட்டு பக்தனை சமாளிப்பதா? தன்னால் இயலாமல் போனதால் அந்த தர்மாத்மா வசிஷ்டர் முதலான ரிஷிகளிடம் தன் பார்வையை ஓட்டினார். அவர்களோ, ஒன்றும் சொல்வதற்கு இயலாதவர்களாய் ஒதுங்கிப் போனார்கள்.

இப்படியே அந்தக் கவி பிடிவாதம் செய்தால் என்ன நடக்கும்? கவியையும், பண்ணொடு பாடல் இசைக்கும் சிறார்கள் இருவரையும் அப்படியே தூக்கிக் கடலிலே வீசிவிடுவாரோ அந்த  அனுமன்…? அவை அச்சத்தின் பிடியில் ஆழ்ந்தது.

காலம் கடந்து கொண்டிருந்தது. யாருமே ஒரு முடிவுக்கும் வரக்காணோம். அந்த நிலையில் கவியின் உள்ளத்தில் ஒன்று நினைவுக்கு வந்தது.

கவிக்கு பிரம்ம தேவர் ஒரு முறை வரம் ஒன்று கொடுத்திருந்தார். ‘ரஹஸ்யஞ்ச ப்ரகாஸஞ்ச’  என்ற வரம் அது. அதாவது, ரஹஸ்யமானதும் வெளிப்படையாக உம் கண்ணிலே புலப்படும் என்பது அந்த வரம். அனுமனின் பெயரையே அந்த காண்டத்துக்கு சூட்டவேண்டும்; ஆனால் அனுமனின் கோபத்தையும் வளர்க்கக் கூடாது…. என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தபோதுதான் அவருக்கு இந்த வரம் நினைவுக்கு வந்தது. உடனே அவர் உள்ளத்தில் ஒரு பெயர் தோன்றியது.

‘‘அனுமனே! உம் இஷ்டப்படி நான் முன்பு வைத்த பெயரை நீக்கிவிட்டு, அந்த காண்டத்துக்கு சுந்தர காண்டம் என்று பெயரிட்டால் உமக்கு ஒன்றும் ஆட்சேபணை இல்லையே!’’ என்று வினவினார்.

‘‘நீர் முன்பு வைத்த அந்தப் பெயரைத் தவிர வேறெந்தப் பெயரிட்டாலும் நான் எதிர்க்க மாட்டேன்’’ என்றார் அஞ்சனை மைந்தன்.

அவையும் ஆமோதித்தது. அப்படியே சுந்தர காண்டம் தொடர்ந்தது. காண்டத்தின் கதை நிறையும் தறுவாயில், ‘‘இதி சுந்தரகாண்டஸ் ஸமாப்த: அத யுத்த காண்ட ஆரப்யதே’’ என்று பாலகர்கள் இருவரும் பாடப் புகுந்தனர்.

அவையோருக்கு சுந்தர காண்டத்தைக் கேட்டு முடித்ததும் அப்போதுதான் ஒன்று தோன்றியது.

‘‘ஏன் கவியே, இந்த காண்டம் முழுவதும் அனுமனின் வீரம்தானே வருகிறது. எங்குமே ‘சுந்தர’ என்ற சொல்லுக்குரிய ‘அழகு’ தெரியவேயில்லையே. பின் எப்படி இதற்கு சுந்தர காண்டம் என்பது பொருத்தமாக அமையும்…’’ – இப்படிக் கேள்வி எழுப்பினர் அவையோர்.

கவிக்கு இப்போது தாம் அறிந்த உண்மையைச் சொல்ல வேண்டிய கட்டாயம் வந்தது. கவி அஞ்சனை மைந்தன் பக்கலில் அஞ்சியவாறே சொல்லத் தொடங்கினார். ஆனாலும் அவருக்கு ‘வேறு எந்தப் பெயர் வேண்டுமானாலும் சூட்டுங்கள், ஏற்கிறேன்’ என்று மொழிந்த ஆஞ்சனேயரின் வாக்கில் நம்பிக்கை இருந்தது. கவி சொல்லத் தொடங்கினார்…

‘‘இந்த காண்டத்தில் ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை, அஞ்சனை மைந்தனின் சரிதம் வருவதால் அவருடைய பெயர் சூட்டுவதே பொருத்தம். அதுதான் கவி தர்மம். நியாயமும்கூட! இது அடியேனுக்குத் தெரியும். ஆகவே, அஞ்சனாதேவி ஆஞ்சனேயருக்கு இட்டு அழைத்த செல்லப் பெயரையே இந்த காண்டத்துக்குச் சூட்டினேன்.’’ – சொல்லிவிட்டு அமர்ந்த கவியைப் பார்த்து புருவம் நெறித்தார் அனுமன்.

அனுமனுக்கு சுந்தரன் என்ற பெயர் ஒன்று உண்டு என்பதை சபையோர் எவரும் அறிந்திருக்கவில்லை. ஏன், அனுமனுக்கும் கூடத்தான் தெரியாது. சரி, கவி ஏதோ வீம்புக்குச் சொல்கிறார் போலும் என்றே சபையோர் எண்ணினர். அனுமனும் அப்படியே எண்ணினார். அந்த ஐயத்துடனேயே அன்றைய பொழுது கழிந்தது.
மாலை நேரமானதும், கவியிடம் சென்ற அனுமன், தன் ஐயத்தைக் கேட்டார். கவி வால்மீகியோ, ‘‘அதை அஞ்சனை மலையில் உள்ள உம் அன்னை அஞ்சனாதேவியிடம் சென்று கேட்டுவிட்டு வாரும்’’ என்றார்.

கவியால் தான் ஏமாற்றப்பட்டோமோ என்ற ஏக்கத்தோடும், தனக்கு இப்படியும் ஒரு பெயர் உண்டோ என்ற ஊக்கத்தோடும் ஒரே தாவலில் அஞ்சனை மலைக்குச் சென்றார். அங்கே தன் தாயின் திருவடி வணங்கி எழ, அன்னை அழைத்தாள்… ‘‘வா சுந்தரா, எப்படி இருக்கிறாய்?’’

அனுமனுக்குத் தூக்கிவாரிப் போட்டது. தனக்கு இப்படியும் ஒரு செல்லப் பெயர் உண்டோ? சரி போகட்டும், அன்னையிடம் உரையாடிக் கொண்டிருப்பதைவிட, அண்ணலின் திருநாமம் கேட்கும் பாக்கியம் அன்றோ இப்போது மிக முக்கியம். மீண்டும் ஒரே தாவலில் அயோத்யாபுரியின் அஸ்வமேத மண்டபத்துக்கு வந்தார் அனுமன். அங்கே கவி வால்மீகியைப் பார்த்து, நடந்தவற்றைச் சொல்லி, தன் தோல்வியை ஏற்றுக்கொண்டு, தன்னை மன்னிக்கும்படி வேண்டிக் கொண்டார்.

இதனால்தான் சுந்தரகாண்டத்தின் பலச்ருதி இப்படி அமைந்திருக்கின்றது….

ஸுந்தரே ஸுந்தரஸ்யாஸ்ய ஸுந்தரம் கர்ம கத்யதே |
படநாத்சிரவணாச்சாபி ஸர்வ ஸௌபாக்யபாக் பவேத் ||

சுந்தர காண்டத்தில் சுந்தரன் என்ற அனுமனின் அழகுக் கைங்கர்யம் கூறப்படுவதால், சுந்தர காண்டத்தைப் படித்தாலும் கேட்டாலும் சகல சௌபாக்கியங்களும் உண்டாகும் என்று எழுதிவைத்தார் ஆதி கவி வால்மீகி.

கட்டுரை: செங்கோட்டை ஸ்ரீராம்

Leave a Reply