அண்ணா என் உடைமைப் பொருள்(47): பெண்மை என்பதைக் காப்பாற்ற வேண்டும் (2)

ஆன்மிக கட்டுரைகள் கட்டுரைகள்

e0af8de0aea3e0aebe-e0ae8ee0aea9e0af8d-e0ae89e0ae9fe0af88e0aeaee0af88e0aeaae0af8d-e0aeaae0af8ae0aeb0e0af81e0aeb3e0af8d47.jpg" style="display: block; margin: 1em auto">

anna en udaimaiporul 2 - 5
anna en udaimaiporul 2 - 2

அண்ணா என் உடைமைப் பொருள் – 47
பெண்மை என்பதைக் காப்பாற்ற வேண்டும் – 2
– வேதா டி. ஸ்ரீதரன் –

அண்ணா என்னை ‘‘பெண்மை என்பதைக் காப்பாற்ற வேண்டும்’’ புத்தகம் வெளியிட அனுமதித்தாலும், அந்தப் புத்தகத்துக்குத் தமிழ்நாட்டில் நிறைய எதிர்ப்பு வரும் என்று நினைத்தார். குறிப்பாக, அவருக்கு வேண்டாத தொலைபேசி அழைப்புகள் வரும் என்று நினைத்தார்.

எனவே, அண்ணாவுக்கும் அந்தப் புத்தக வெளியீட்டுக்கும் சம்பந்தம் இல்லை, நானாகவே அதை வெளியிடுகிறேன் என்று வாசகர்களை நம்ப வைக்கும் விதத்தில் அந்த நூலுக்கு ஒரு நீண்ட முகவுரையை எழுதினேன்.


சில பத்திரிகைகளில் அந்தப் புத்தகத்துக்கு விமர்சனம் வெளியிட்டிருந்தார்கள். அந்த நாட்களில் மிகப் பிரபலமாக இருந்த ஒரு பத்திரிகையில், அந்தப் புத்தகத்தைக் குறிப்பிட்டு, ஆணாதிக்கமும் வர்ணாசிரம தர்மமும் மீண்டும் தலை தூக்க முயற்சிப்பதாக எழுதி இருந்தார்கள்.

ஆனால், அந்தப் பத்திரிகையில் வெளியான அவ்வளவு பெரிய கட்டுரைக்கு எந்த விதமான பின்விளைவும் இல்லை. அந்தப் பத்திரிகையின் வாசகர்களிடமிருந்து எனக்கு ஒரே ஒரு தொலைபேசி அழைப்பு கூட வரவில்லை. யாரும் கடிதம் போடவும் இல்லை. அந்தப் பத்திரிகையால் ஆணாதிக்கத்தின் கோர முகமாகச் சித்தரிக்கப்பட்ட பெரியவா அந்தப் புத்தகத்தில் பெண்ணடிமைத்தனத்தைப் பற்றி என்ன சொல்லி இருக்கிறார் என்பதைத் தெரிந்து கொள்ள அந்தப் பத்திரிகையின் வாசகர்களில் ஒருவர்கூட ஆர்வம் காட்டவில்லை.


பெண்மை புத்தகத்துக்கு அன்பர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால், என்னால் புத்தகத்தை விற்க முடியவில்லை. அப்போது சாரதா ப்ப்ளிகேஷன்ஸில் இருந்து நான் வெளியேறி விட்டிருந்தேன். எனது அலுவலகத்துக்கும் மூடுவிழா நடத்தியாகி விட்டது. இதனால், புத்தகப் பிரதிகளை வைப்பதற்கு இடம் இல்லாமல் திணறினேன்.

புத்தக விற்பனையில் சில அன்பர்கள் உதவி செய்தார்கள். இருந்தாலும், நிறைய பிரதிகள் தங்கி விட்டன. சில வருடங்களுக்குப் பின்னர், ஓர் அன்பர் தனது மகளின் திருமணத்தில் வழங்கப்பட்ட தாம்பூலப் பையில் வைத்துக் கொடுப்பதற்காக அனைத்துப் பிரதிகளையும் விலைக்கு வாங்கிக் கொண்டார்.

புத்தக விற்பனையில் உதவிய இரண்டு அன்பர்களை அவசியம் குறிப்பிட வேண்டும். ஒருவர் சென்னையைச் சேர்ந்தவர். இன்னொருவர் திருப்பூர்க்காரர். இருவரும் அவ்வப்போது சிற்சில பிரதிகள் வாங்கி, வீடு வீடாகச் சென்று இந்தப் புத்தகத்தைப் படிக்க வேண்டிய அவசியத்தை எடுத்துச் சொல்லி விற்பனை செய்தார்கள்.

இதற்குச் சில வருடங்கள் பின்னர் இருவரும் சத்கதி அடைந்து விட்டார்கள்.

எல்லா விஷயங்களுக்கும் காரணம் புரிந்து விடுவதில்லை. இவர்களது இள வயது மரணமும் அப்படியே.

அதேபோல, ஒருசில அன்பர்கள் எனது வீட்டைத் தேடி வந்து ஓரிரு பிரதிகள் வாங்கிச் சென்ற சம்பவங்கள் என்னை மிகவும் நெகிழச் செய்தன.

95 வயது முதியவர் ஒருவர் பெண்மை புத்தகத்தைப் படித்து விட்டு, ‘‘பெரியவாளின் இந்த உரையை வெளியிட்டதன் மூலம் நீ ஜன்ம சாபல்யம் அடைந்து விட்டாய்’’ என்று மிகவும் உணர்ச்சி பூர்வமாக எனக்குக் கடிதம் எழுதி இருந்தார். அதை இப்போது நினைத்தாலும் கண்கள் பனிக்கின்றன.


இதற்குப் பல வருடங்கள் பின்னர், ஓர் அன்பர் மீண்டும் பெண்மை புத்தகத்தை வெளியிடுமாறு கேட்டுக் கொண்டார். அவரே அனைத்துப் பிரதிகளையும் வாங்கி, காஞ்சி மடத்து அன்பர்களைப் பெரிய அளவில் தொடர்பு கொண்டு விற்பனை செய்ய இருப்பதாகத் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து அந்த நூலை மீண்டும் வெளியிட்டேன். அந்த அன்பர் நிறைய பிரதிகள் வாங்கிக் கொண்டார். எங்கள் பதிப்பகத்தின் மூலமும் தற்போது ஓரளவு பிரதிகள் விற்பனை ஆகின்றன. சுவாசினி பூஜை, நவராத்திரி, திருமணம், உபநயனம் முதலிய சந்தர்ப்பங்களில் பெண்மை புத்தகத்தை அன்பளிப்பாகக் கொடுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ஒருசில அன்பர்கள் அந்த நூலை ஆங்கிலத்தில் வெளியிடுமாறு வேண்டினார்கள்.

ஒரு பத்திரிகையில், தெய்வத்தின் குரலின் ஓர் அத்தியாயம் ஆங்கிலத்தில் வெளியாகி இருந்தது. அது குறித்து அண்ணாவுக்கு மிகுந்த வருத்தம். பெரியவா சொல்லி இருப்பதற்கும், அதன் ஆங்கில வடிவத்துக்கும் சம்பந்தமே இல்லை என்னும் விதத்தில் அந்த மொழிபெயர்ப்பு இருந்தது என்று என்னிடம் அண்ணா சொல்லி இருக்கிறார்.

anna alias ra ganapathy9 - 3

மேலும், அண்ணா சித்தி அடைந்து விட்டார். அவரிடம் வாசித்துக் காட்டி, அவரது சம்மதத்தைப் பெறவும் வழி இல்லை. இந்தக் காரணங்களால் நான் பெண்மை புத்தகத்தை ஆங்கிலத்தில் வெளியிட விரும்பவில்லை.

இந்நிலையில், மணிக்கொடி பத்திரிகை நிறுவனர் ‘‘சிட்டி’’யின் மைந்தர் ஶ்ரீ. விஸ்வேஸ்வரனை ஒருமுறை சந்திக்க வேண்டி வந்தது. சிறு வயதில் இருந்தே உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. தனது தங்கை குடும்பத்தினருடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார். பிரபல மொழிபெயர்ப்பாளரான அவர், ஏராளமான நூல்களைத் தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு மொழி பெயர்த்துள்ளார். அவருக்கு மரியாதை நிமித்தமாக, ‘‘பெண்மை என்பதைக் காப்பாற்ற வேண்டும்’’ புத்தகப் பிரதி ஒன்றை அளித்தேன்.

சில மாதங்களுக்குப் பிறகு அவரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. ‘‘ஶ்ரீதர் சார், பெரியவா புஸ்தகம் ட்ரான்ஸ்லேஷனுக்காகக் குடுத்தீங்களே, என்னால அதைப் பண்ணவே முடியல. அடுத்தடுத்து நிறைய வேலை வந்துடுத்து. இப்போ என் தங்கை ஹாஸ்பிடல்ல இருக்கா. அவளுக்குக் கேன்சர். நான் தான் கூட இருக்கேன். என்ன பண்றதுன்னே புரியலே. அவளுக்காகப் பெரியவா கிட்ட பிரார்த்தனை பண்ணிண்டே இருந்தேன். நீங்க குடுத்த புஸ்தகம் ஞாபகம் வந்தது. அதை ட்ரான்ஸ்லேட் பண்ண ஆரம்பிச்சேன், தங்கைக்கு மிரகுலஸா க்யூர் ஆறது. டாக்டர்களாலயே நம்ப முடியல’’ என்று கூறினார்.

‘‘நான் அந்தப் புத்தகத்தை உங்களுக்கு அன்பளிப்பாகத் தான் கொடுத்தேன் – மொழிபெயர்ப்புக்காக அல்ல’’ என்று அப்போது அவரிடம் சொல்ல எனக்கு மனம் வரவில்லை. எப்படிச் சொல்ல முடியும்?

பெண்மை புத்தகம் தான் விஸ்வேஸ்வரனின் கடைசி மொழிபெயர்ப்பு என்று நினைக்கிறேன். மொழி பெயர்ப்பு முடிந்த சில மாதங்களிலேயே, அவர், நிறைய உறவினர்கள் மத்தியில், அனைவருடனும் சந்தோஷமாகப் பேசிக் கொண்டிருந்து விட்டு, நிம்மதியாகக் கண் மூடி விட்டார். கொடுத்து வைத்தவர்.

இப்போது எனது பாடு தான் திண்டாட்டமாகி விட்டது. காரணம், அவரது மொழிபெயர்ப்பு மிகவும் கடினமான உரைநடையில் இருந்தது. பெரியவா உரையை மொழிபெயர்க்கிறோம் என்ற பய பக்தியுடன் அவர் மொழிபெயர்த்திருந்தார் கருத்துப் பிசகு வந்து விடவே கூடாது என்கிற அக்கறையில் அவர் மொழிபெயர்த்ததால், அந்த மொழிநடை மிகவும் கடினமான ஒன்றாக அமைந்து விட்டது.

அதை வெளியிட எனக்கு மனம் வரவில்லை, வெளியிடாமல் இருக்கவும் முடியவில்லை.

Divine plan or divine plot – who knows? But divine, anyway.

அந்த நூலின் மொழி நடையைச் சரி செய்வதில் ஆறு பேருடைய உதவியை நாடினேன். அனைவருமே முழு மனதுடன் உதவி செய்தார்கள். அவர்கள் போட்டுக் கொடுத்த திருத்தங்களை ஒருங்கிணைத்துப் புத்தக வேலையை நிறைவு செய்தேன்.

அந்த நூலில், பெரியவா குறிப்பிட்டுள்ள ஒருசில முக்கியக் கருத்துகளை விளக்கும் விதத்தில் சில பெட்டிச் செய்திகளையும் கொடுத்திருக்கிறேன். இவை, நம்மைச் சுற்றி நடக்கும் பல்வேறு சம்பவங்கள், புள்ளி விவரங்கள் ஆகியவற்றின் தொகுப்புகள். ஆண்-பெண் சமத்துவம் என்ற பெயரில் யார் யாரோ ஏதேதோ முழங்கி வந்தாலும், பெண்கள் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்படுவது அதிகரித்துக் கொண்டே இருக்கிறது என்பதையும், குறிப்பாக, பெண்கள் மீதான வன்முறை கூடிக் கொண்டே இருக்கிறது என்பதையும் இந்தப் பெட்டிச் செய்திகள் மூலம் அறியலாம்.

பெரியவா சொல்லி இருப்பது தர்மம் என்பதற்கான விளக்கம் என்றால், இந்தப் பெட்டிச் செய்திகள், தர்மத்துக்கு எதிர் வழியில் பயணிக்கும் சமுதாயத்தின் நிலையை விளக்குகின்றன என்று சொல்லலாம்.


டேவிட் எல்கின்ட் என்ற மனோதத்துவ நிபுணரின் கருத்துகளைப் படிக்க வாய்ப்புக் கிடைத்தது. தற்காலத்தில் – குறிப்பாக, அமெரிக்காவில் – வளரும் பிள்ளைகளின் மனநிலையை அந்த நூல் தத்ரூபமாகப் படம் பிடித்துக் காட்டுகிறது. அமெரிக்காவில் குடும்பம் என்கிற அமைப்பு அடியோடு ஆட்டம் கண்டுவிட்டது. அதனுடைய பாதிப்பை அந்நாட்டுக் குழந்தைகளிடம் நன்றாகவே பார்க்க முடிகிறது.

anna alias ra ganapathy6 - 4

கூடவே, இந்த நூல் இன்னோர் உண்மையையும் சுட்டிக் காட்டுகிறது. பெண் விடுதலை, ஆண்-பெண் சமத்துவம், ஓரினச் சேர்க்கைக்கு அங்கீகாரம் முதலிய கோஷங்கள் எழுவதற்கு முன்பு அந்த நாட்டில் பெண்கள் குடும்பப் பாங்காக இருந்ததையும், பெண்கள் கண்ணியமாக நடத்தப்பட்டதையும் சுட்டிக் காட்டும் நூலாசிரியர், இந்த இயக்கங்களே அமெரிக்காவின் சீர்கேட்டுக்குக் காரணம் என்பதை விளக்குகிறார்.

பெண்மை புத்தகத்தில் பெரியவா சொல்லி இருக்கும் உபதேசங்களை நடைமுறை உதாரணங்களுடன் விளக்குவது போலவே இருக்கிறது அந்த நூல்.

இதைத் தொடர்ந்து, அமெரிக்காவில் உருவாகி வளர்ந்த பெண் விடுதலை இயக்கங்களைப் பற்றிக் கொஞ்சம் தெரிந்து கொள்ள முயற்சி செய்தேன். வார்த்தைகளில் வர்ணிக்க முடியாத எத்தனையோ மனோ வக்கிரங்களைப் புரிந்து கொள்ள முடிந்தது.

ஈசுவரா என்று அலறத் தான் தோன்றுகிறது.

சமுதாயத்தின் நிலையைக் கூர்ந்து கவனிக்கும் போது பெரியவாளின் உபதேசங்கள் நன்றாகவே புரிகின்றன.


ஓர் ஆய்வுக் கட்டுரைக்காக, கம்யூனிசம் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டி வந்தது.

கம்யூனிசம் என்ற பெயரில் சில நாடுகளில் சர்வாதிகாரிகள் லட்சக்கணக்கான மக்களைக் கொன்று குவித்தது பற்றி ஏற்கெனவே ஓரளவு படித்திருக்கிறேன். அதேபோல, கம்யூனிசம் எவ்வாறு அந்தந்த நாட்டுப் பொருளாதாரங்களை அடியோடு நாசம் செய்தது என்பது குறித்தும் ஓரளவு அறிவேன். ஆனால், என் மனதில் ஒரு முக்கியமான கேள்வி எழுந்தது.

சீனாவில், ஜனநாயகம் வேண்டும் என்று கோரி, நூற்றுக்கணக்கான மாணவர்கள் தியான்மென் சதுக்கத்தில் அறப் போராட்டம் நடத்தினார்கள்.

அந்நாட்டு அரசாங்கத்துக்கு அந்தப் போராட்டத்தில் உடன்பாடு இல்லை. அந்நாட்டு ஆட்சியாளர்கள் சர்வாதிகாரிகள், அவர்களால் ஜனநாயகத்தை ஆதரிக்க முடியாது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது

அந்த மாணவர்களைக் கலைந்து போகச் செய்வதற்கு எத்தனையோ வழிகள் உள்ளன. ஆனால், அந்த ஆட்சியாளர்கள், அந்த மாணவர்கள் மீது ராணுவ டாங்கிகளை ஏற்றி நசுக்கிக் கொன்றார்கள். தப்பித்து ஓட முயன்றவர்களையும் விரட்டிப் பிடித்துக் கொலை செய்தார்கள்.

வார்த்தைகளில் வர்ணிக்கவே முடியாத படு பயங்கரம்!!

ஒருசில விதிவிலக்குகள் நீங்கலாக, எல்லா கம்யூனிச நாடுகளிலும் இத்தகைய கோரமான வன்முறைகள் சகஜமாகவே இருந்திருக்கின்றன, இருந்து வருகின்றன.

எல்லா கம்யூனிச நாடுகளிலுமே ஒரே மாதிரி இத்தகைய வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன என்பதை அறியும் போது, இயல்பாகவே, இத்தகைய கொடூரமான படுகொலைகளுக்குக் காரணமான ஏதோ ஒன்று அந்த சித்தாந்தத்துக்கு உள்ளேயே இருக்கிறது என்று தான் நினைக்கத் தோன்றுகிறது.

அது என்ன என்பதைத் தெரிந்து கொள்ள விரும்பினேன். கம்யூனிசம் பற்றி நான் தெரிந்து கொண்ட விஷயங்கள், பெரிவாளின் உபதேசங்களை எனக்குத் தெளிவாகப் புரிய வைத்தன.

இந்தக் கருத்துகளை அடுத்த பதிவில் விளக்குகிறேன்.

அண்ணா என் உடைமைப் பொருள்(47): பெண்மை என்பதைக் காப்பாற்ற வேண்டும் (2) முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply