75.பேச்சு ஒரு வரம்!
தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
“மதுமதீம் வாசம் வதது சாந்திவாம்” – அதர்வணவேதம்
“இனிமையாக, அமைதி நிலவும்படி பேசுவாயாக!”
பேச்சு எப்படியிருக்க வேண்டும் என்பது பற்றி நம் வேதம், புராணம், இதிகாசம் அனைத்தும் விளக்கிய விஷயங்கள் விஸ்தாரமாக உள்ளன.
இறைவன் கொடுத்த பேசும் ஆற்றலை அழகாக பயன்படுத்திக் கொள்ளும்படி எச்சரிக்கிறது சனாதன மதம். பேச்சு ஒரு வரம். நாம் பேசுவதை பஞ்சபூதங்களும் அவற்றின் அதிபதியான பரமேஸ்வரனும் கேட்டுக் கொண்டிருப்பார்கள். இந்தப் புரிதலோடு நாம் ஜாக்கிரதையாக பேச வேண்டும் என்று வேதமாதா போதிக்கிறாள்.
நம் உள்ளத்தின் பண்பாட்டையும் அறிவையும் நம் பேச்சு பிரதிபலிக்கிறது. சாதாரணமாக நிறைய பேர் எரிச்சலோடு சிடுசிடுவென்று பேசுவார்கள். பேச்சுக்குப் பேச்சு அமங்கலச் சொற்களை வீசுவார்கள். கணநேர கோபாவேசம் எப்படிப்பட்ட வார்த்தைகளை வேண்டுமானாலும் வீசிவிடும். அவற்றின் தாக்கம் சுற்றுச்சூழலில் கொந்தளிப்பை ஏற்படுத்தி அமைதியிழக்கச் செய்கிறது.
அதனால்தான் மென்மையாக நன்மை பயக்கும் விதமாக அமைதியாக பேசவேண்டும். சிலர் சும்மாவே சிடுசிடுப்பார்கள். வாய் துடுக்கு அதிகம் இருக்கும். சிலரால் ஒவ்வொரு சொல்லுக்கும் துணையாக ஒரு அமங்கலச் சொல்லோ, சாபங்களோ, நிந்தைகளோ, ஆபாச பேச்சுக்களோ இல்லாமல் பேசவே முடியாது. இப்படிப்பட்ட பேச்சுக்கள் அவர்களின் உள்ளத்தை மாசுபடுத்தும். உலகியல் செயல்களுக்கும் ஆன்மிக சாதனைக்கும் கூட தேவதைகளின் உதவி கிடைக்காமல் செய்து விடும். இது போன்ற பேச்சுகளை கட்டாயம் தவிர்க்கவேண்டும்.
தேவதைகள் தூய்மையாக, மிருதுவாக பேசினால்தான் மகிழ்வார்கள். இயற்கையும் மகிழ்ச்சி அடையும். இதனை நாமும் கவனிக்கலாம். ஒரு வீட்டில் பெற்றோர் கடினமாக ஆத்திரப்பட்டு பேசினால், மொழி புரியாத பச்சைக் குழந்தை உடனே சகிக்காமல் அழும். அந்தப் பேச்சின் கடினம் குழந்தையை உத்தேசித்து கூறப்படவில்லையானாலும் சுற்றுச்சூழலில் கொந்தளிப்பு ஏற்படுத்தியதால் கள்ளம் கபடமற்ற அந்த குழந்தை,
குழப்பமடைகிறது. அதேபோல் தேவதைகளும் இயற்கையும் கூட துன்பம் அடைகின்றன. அவற்றின் மனதை வருத்தியவருக்கு நலன் விளையாது.
பிரியமாகப் பேசினால்தான் எந்த ஒரு உயிரும் மகிழும். அதனால்தான், “இனிமையாக அன்பாகப் பேசு! பேச்சிற்குக் கூட தரித்திரமா, சொல்!” என்று சுபாஷிதம் எச்சரிக்கிறது.
“ப்ரிய வாக்ய ப்ரதானேன சர்வே துஷ்யந்தி ஜந்தவ”: தஸ்மாத் ததேவ வக்தவ்யம் வசனே கா தரித்ரதா” என்று கேட்கிறது சுபாஷிதம். ‘சர்வே ஜந்தவ:” – அனைத்து உயிர்களும் என்ற சொல் உள்ளது. நாம் உதிர்க்கும் சொல் ஒவ்வொரு உயிரின் மீதும் தாக்கம் ஏற்படுத்தும் என்பது இதன் பொருள்.
நமக்கு இலவசமாக பேசும் ஆற்றல் கிடைத்துள்ளது என்று எண்ணி எதை வேண்டுமானாலும் பேசி விடுகிறோம். அப்படியின்றி, பேசக்கூடிய அபூர்வ சக்தி பல ஜென்ம புண்ணியத்தால் கிடைத்தது என்று அறிந்தால், இந்த அரிதான வரத்தை, ஒரு தவமாக சிரத்தையோடு பயன்படுத்தி பிறவியை மேம்படுத்திக் கொள்ள முடியும்.
தினசரி ஒரு வேத வாக்கியம்: 75. பேச்சு ஒரு வரம்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.