அண்ணா என் உடைமைப் பொருள் (10): ஸ்வாமியின் பல்லை உடைத்த கதை!

ஆன்மிக கட்டுரைகள் கட்டுரைகள்

e0af8de0aea3e0aebe-e0ae8ee0aea9e0af8d-e0ae89e0ae9fe0af88e0aeaee0af88e0aeaae0af8d-e0aeaae0af8ae0aeb0e0af81e0aeb3e0af8d-10-2.jpg" style="display: block; margin: 1em auto">

anna
anna

அண்ணா என் உடைமைப் பொருள் – 10
ஸ்வாமியின் பல்லை உடைத்த கதை
– வேதா டி. ஸ்ரீதரன் –

அண்ணாவின் புத்தகங்கள் என்றாலே சாயி அன்பர்களுக்கு ‘ஸ்வாமி’ (ஆங்கிலத்தில் Baba Satya Sai) புத்தகம்தான் நினைவு வரும். ஆனாலும், தீராத விளையாட்டு சாயி புத்தகத்தை அண்ணா ரொம்ப முக்கியமாகக் கருதினார். காரணம், அதில் இடம்பெற்ற புகைப்படங்கள்.

இந்த நூல் கல்கியில் பல வருடங்களுக்கு முன்பு தொடராக வெளியானது. இந்தத் தொடரில் அண்ணா குறிப்பிட்டிருக்கும் சம்பவங்களுடன் தொடர்புடைய சில அரிய புகைப்படங்களுடன் இதை நூலாக வெளியிட வேண்டும் என்று அண்ணா விரும்பினார். இந்தப் புகைப்படங்களில், மரத்தின் மீது பால்ய சாயி அமர்ந்திருக்கும் படமும், ஸ்வாமி கையில் அமர்ந்திருக்கும் கிளியின் உடலுக்குள் ஸ்வாமியின் கண் தெரிவதும் அண்ணாவுக்கு மிகவும் பிடித்தவை.

முதன்முதலாக எடுக்கப்பட்ட புட்டபர்த்தி சாடிலைட் புகைப்படம் சாயி அன்பர்கள் மத்தியில் பிரபலம். அந்தப் புகைப்படத்தில் ஸ்வாமியின் உருவம் புட்டபர்த்தியைப் பார்த்தவாறு இருக்கும். அந்தப் புகைப்படத்தையும் இந்த நூலில் அச்சிட விரும்பினார் அண்ணா. இந்தப் புகைப்படங்களை ஆர்ட் பேப்பரில் எட்டுப் பக்கங்கள் அச்சிட்டு அந்த நூலில் இணைக்க வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டார்.

puttaparthi saibaba - 1

அச்சுத் தரம் என்பது இயந்திரங்களையும் அச்சுமுறையையும் மட்டுமே சார்ந்தது அல்ல. அவற்றுக்கு அப்பாற்பட்ட ஏராளமான அம்சங்கள் உண்டு. நிறைய நடைமுறைச் சிக்கல்களும் உண்டு. எனவே, புத்தகங்களைத் தரமாக அச்சிடுவது கொஞ்சம் கடினமான விஷயமே.

அச்சுத் தரம் குறித்த பயம் காரணமாகவே அண்ணா இந்தப் புத்தகத்தை வெளியிடத் தயங்கி வந்தார். எங்கள் மீது நம்பிக்கை பிறந்ததால் இந்தப் புத்தகத்தை வெளியிடலாம் என்று முடிவு செய்தார்.


புத்தகம் குறித்த அண்ணாவின் கண்ணோட்டம் பற்றி இந்த இடத்தில் சொல்ல வேண்டியது அவசியம்.

கல்கி பத்திரிகையின் சதாசிவம்-எம்எஸ் தம்பதியினர் ராஜாஜியின் மீது மிகுந்த அன்பும் மரியாதையும் கொண்டவர்கள் என்பதை அனைவரும் அறிவோம். கல்கி பத்திரிகை, ராஜாஜியின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்தது. எனவே, அண்ணா கல்கியில் வேலை பார்த்த நாட்களில் ராஜாஜியை அடிக்கடி சந்தித்துப் பேசி இருக்கிறார். அவர் மீது அண்ணாவுக்கு மிகுந்த மரியாதை உண்டு. (ராஜாஜியைப் பெரிய மகான் என்று அண்ணா என்னிடம் நாலைந்து தடவை சொல்லி இருக்கிறார். இதுகுறித்த தகவல்களைப் பின்னர் எழுதுகிறேன்.)

பத்திரிகைகளுக்கு வழவழ பேப்பரில் அட்டை போடுவதும், லேஅவுட், புகைப்படம் முதலியவற்றில் விசேஷ கவனம் செலுத்துவதும் வீண் வேலை என்று ராஜாஜி சொல்வாராம். சொல்ல வரும் விஷயத்தை வாசகர்களுக்குப் புரியும் விதத்திலும் பிழையில்லாமலும் சொல்ல வேண்டும் என்பதில் மட்டுமே முழு கவனமும் இருக்க வேண்டும் என்பது அவர் கருத்து.

rajaji - 2

ராஜாஜியின் இந்த அபிப்பிராயம் அண்ணாவுக்கு மிகவும் பிடித்திருந்தது. எனவே, தான் எழுதியுள்ள விஷயங்கள் பிழையில்லாமல் அச்சிடப்பட வேண்டும் என்பதில் மட்டுமே அண்ணா அதிக கவனம் செலுத்துவார். அட்டைப்படம், லேஅவுட் முதலியவை புத்தகத்தின் தவிர்க்க முடியாத அம்சங்கள். இருந்தாலும், அண்ணா இவற்றைப் பற்றி அதிகம் அலட்டிக் கொள்வதில்லை.

அதேநேரத்தில், அட்டைப்படம், புகைப்படங்கள் முதலியவை புத்தகத்தில் உள்ள விஷயங்களின் தொடர்புடையவையாக இருக்க வேண்டும் என்பதில் அண்ணா மிகவும் கவனமாக இருப்பார். அவற்றைத் தேர்ந்தெடுப்பதில் மிகுந்த அக்கறையும் காட்டுவார். தனது எதிர்பார்ப்புக்கு ஏற்ற புகைப்படங்கள் கிடைக்கவில்லையெனில் ஓவியர்கள் மூலம் படம் வரையச் சொல்வதும் உண்டு. ஆனால், புகைப்படங்கள், அட்டைப்படம் முதலியவை ரொம்ப அழகாகவும் அலங்காரமாகவும் இருக்க வேண்டும் என்றெல்லாம் அவர் எதிர்பார்த்தது இல்லை. அச்சுத் தரம் குறித்து அதிகம் கவலைப்பட்டதும் இல்லை.

இந்த விஷயத்தில் தீராத விளையாட்டு சாயி ஒரு விதிவிலக்கு. இதில் புகைப்படங்கள் ரொம்ப அழகாக அச்சிடப்பட வேண்டும் என்று அண்ணா மிகவும் ஆசைப்பட்டார். எங்கள் மீது ஏற்பட்ட நம்பிக்கை காரணமாகவே அண்ணா இந்தப் புத்தகத்தை வெளியிட முன்வந்தார்.


தீராத விளையாட்டு சாயி புத்தகம் விஷயமாகப் பேசுவதற்காக நான், திவ்ய வித்யா ட்ரஸ்டைச் சேர்ந்த ஶ்ரீ யஷோத், ஶ்ரீ கண்ணன் (இருவருமே அண்ணாவுக்கு ஒண்ணு விட்ட தம்பிகள்), ஓவியர் மணியன் செல்வம் ஆகிய நால்வரும் அண்ணா அழைப்பின் பேரில் அவரைத் தண்டையார்பேட்டையில் சந்தித்தோம்.

அப்போது, அந்த நூலின் புகைப்படங்களை சாயி அன்பர்கள் ரொம்பவே போற்றுவார்கள் என்று அண்ணா கூறினார். அந்தப் புத்தகத்தை அச்சிடுவதற்கு ரொம்ப வருஷம் தயங்கியதையும், ஶ்ரீசக்ரா மீது ஏற்பட்டுள்ள நம்பிக்கை காரணமாக மட்டுமே அதை வெளியிடத் தீர்மானித்ததாகவும் தெரிவித்தார். ‘‘சாயி டிவோடீஸ் அத்தனை பேரும் உன்னைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவார்கள். அதனால் நன்றாக ப்ரின்ட் பண்ணித் தா’’ என்று திரும்பத் திரும்ப என்னிடம் கூறினார்.

இங்கே இன்னொரு முக்கிய விஷயத்தையும் குறிப்பிட வேண்டும்.

அத்தனை புகைப்படங்களையும் உரிய சைஸ் காகிதத்தில் ஒட்டுவதுதான் முதல் கட்ட வேலை. இந்த வேலையைச் செய்வதற்கு ஓவியர் தேவை இல்லை. அதிலும், மணியம் செல்வனைப் போன்ற ரொம்பத் திறமையான ஓவியர் இந்த வேலையைச் செய்ய வேண்டிய அவசியம் இல்லவே இல்லை. இந்த வேலையை ஶ்ரீசக்ராவில் நாங்களே செய்து விட முடியும். இந்தப் புகைப்படங்கள் ரொம்ப நல்ல விதத்தில் அச்சிடப்பட வேண்டும் என்ற அக்கறை காரணமாகவே அவரிடம் அண்ணா இந்தப் பணியை ஒப்படைத்தார். மணியம் செல்வன் மீது அண்ணாவுக்கு ரொம்ப பிரியம் உண்டு என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

புகைப்படப் பகுதியின் பக்க வடிவமைப்பு நன்றாக இருக்க வேண்டும் என மணியன் செல்வத்திடம் அண்ணா ரொம்ப வலியுறுத்தினார்.

Ra Ganapathy1 - 3

நாங்களும் ரொம்ப சிரத்தையுடன் புத்தக வேலைகளைக் கவனித்தோம். இருந்தாலும், புத்தகம் அச்சிடும் போது ஒரு பெரிய தவறு ஏற்பட்டு விட்டது. ‘‘ப்ரின்டிங் முடிந்தாகி விட்டது என்றால் ஒண்ணு ஃபாரம். இல்லேன்னா ஜெல்லி’’ என்று நான் அடிக்கடி சொல்வதுண்டு. ‘‘அச்சிடப்பட்ட காகிதத்தை அப்படியே புத்தகத்தில் பயன்படுத்தியாக வேண்டும். அவ்வாறு பயன்படுத்த முடியாமல் போனால், அதில் எந்த மாற்றமும் செய்து மீண்டும் பயன்படுத்த முடியாது. தூக்கிக் குப்பையில் போடுவது தான் ஒரே வழி’’ என்பது இதன் பொருள்.

தீராத விளையாட்டு சாயி புத்தகத்தின் புகைப்படங்களை அச்சிடும் போது ஏற்பட்ட தவறும் இத்தகையதே. ஒரு புகைப்படத்தில் ஸ்வாமியின் உதட்டுப் பகுதியில் ஒரு சிறிய கறை படிந்து விட்டது. மூன்று கலர்கள் அச்சாகி விட்ட பின்னர் தான் இந்தக் குறைபாடு தெரிய வந்தது. அந்தப் படத்தைப் பார்த்தால், ஸ்வாமியின் பல் உடைந்து வாயில் ரத்தம் வழிவது போல இருக்கும்.

இப்போது நாங்கள் என்ன செய்வது? அச்சான காகிதம் முழுவதையும் கழித்துக் கட்ட வேண்டும் அல்லது இந்தக் குறைபாட்டுடன் புத்தக வேலைகளை முடிக்க வேண்டும். இந்த இரண்டைத் தவிர எங்களுக்கு வேறு வழி கிடையாது. பெருத்த நஷ்டத்தைத் தாங்கும் நிலையில் நாங்கள் இல்லை. எனவே, அந்தக் குறையுடன் புத்தக வேலைகளை முடித்தோம்.

எங்கள் மீது எவ்வளவு நம்பிக்கையுடன் அண்ணா இந்தப் புத்தகத்தைக் கொடுத்தார். அது பொய்யாகி விட்டதே என்று நாங்கள் ரொம்பவே வருந்தினோம்.

புத்தக வேலை முடிந்ததும் சில பிரதிகளை எடுத்துக் கொண்டு அண்ணாவிடம் சென்றேன். புத்தகத்தைக் கையில் வாங்கியதுமே அண்ணா புகைப்படப் பகுதியைத் தான் பார்வையிட்டார். நான் அதில் இருந்த குறைபாட்டை அண்ணாவிடம் காட்டினேன். எனது வருத்தத்தைத் தெரிவித்தேன். ஆனால், அண்ணாவுக்கு அது குறையாகவே தெரியவில்லை. அவர் அதைப் பொருட்படுத்தவும் இல்லை. மாறாக, குழந்தை ஸ்வாமி மரத்தின் மீது அமர்ந்திருக்கும் படத்தை அண்ணா பார்த்துக் கொண்டே இருந்தார். அதைக் கையால் தடவியவாறே என்னிடம், ‘‘ரொம்ப நன்னா வந்திருக்குப்பா. டிவோடீஸ் உன்னைத் தலை மேல வச்சுக் கொண்டாடுவா. எல்லாப் பெருமையும் ஶ்ரீசக்ராவுக்குத் தான்’’ என்று பாராட்டினார். இதற்குப் பின்னரும் பல்வேறு சந்தர்ப்பங்களில் அந்த பால சாயி புகைப்படத்தைக் குறிப்பிட்டு அண்ணா எங்களைப் பாராட்டியதுண்டு.

இந்தக் குறைபாட்டில் வியப்புக்குரிய இன்னொரு செய்தியும் உண்டு.

அந்த அச்சுக் குறைபாடு எவ்வாறு ஏற்பட்டது என்பது பற்றி நாங்கள் ஆராய்ந்து பார்த்தோம். ஃபிலிம் எடுக்கும் போது அல்லது ப்ளேட் போடும் போது ஏற்படும் தவறு காரணமாக மட்டுமே ப்ரின்டிங்கில் இத்தகைய குறைபாடு வர முடியும். ப்ளேட் போடும் போது தவறு ஏற்படவில்லை என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. ஃபிலிமில் கோளாறு இல்லை என்பதையும் கவனித்தோம். (அடுத்த தடவை இந்தப் புத்தகம் அச்சிடும் போது அந்த ஃபிலிம்களையே பயன்படுத்தினோம்.)

அப்படியானால், தவறு எங்கே ஏற்பட்டது? அந்த சாயிநாதனுக்கே வெளிச்சம்.

நாங்கள் ரொம்பவும் பெருமைப்பட்டு விடக் கூடாது என்பதற்காக ஸ்வாமி எங்கள் தலையில் தட்டினாரோ, என்னவோ! ஆனால், இந்தத் தவறே எனக்கு ரொம்பப் பெருமையாக அமைந்து விட்டது.

ஆம், ஸ்வாமியின் பல்லை உடைத்த பெருமை யாருக்குக் கிடைக்கும்?

அண்ணா என் உடைமைப் பொருள் (10): ஸ்வாமியின் பல்லை உடைத்த கதை! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply