அண்ணா என் உடைமைப் பொருள் (38): பர்த்தி நாதனும் காஞ்சி நாதனும்!

ஆன்மிக கட்டுரைகள் கட்டுரைகள்

e0af8de0aea3e0aebe-e0ae8ee0aea9e0af8d-e0ae89e0ae9fe0af88e0aeaee0af88e0aeaae0af8d-e0aeaae0af8ae0aeb0e0af81e0aeb3e0af8d-38.jpg" style="display: block; margin: 1em auto">

anna en udaimaiporul 2 - 6
anna en udaimaiporul 2 - 2

அண்ணா என் உடைமைப் பொருள் – 38
– வேதா டி.ஸ்ரீதரன் –

பர்த்தி நாதனும் காஞ்சி நாதனும்!

அண்ணாவுக்கு ஸ்வாமி ‘‘அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே’’ தான். அவரது வாழ்வில் ஸ்வாமியின் லீலைகள் ஏராளம்.

இள வயதில் அண்ணா பார்வைக் கோளாறுக்காகக் கண்ணாடி அணிந்திருந்தார். ஒருமுறை கண்ணாடி காணாமல் போய் விட்டது. அதன் பிறகு அண்ணாவுக்குக் கண்ணாடி தேவைப்படவில்லை. (கடைசி காலத்தில் கண் சர்ஜரிக்குப் பின்னர் இரண்டு வருடங்கள் மட்டும் கண்ணாடி அணிந்திருந்தார்.)

கண்ணாடியை ஒளித்து விளையாடியது ஸ்வாமியே என்று அண்ணா சொல்லி இருக்கிறார்.

ஸ்வாமி புத்தகம் எழுதுவதற்கு உதவும் விதத்தில் திடீரென சில புத்தகங்கள் அண்ணாவின் அறைக்குள் வந்து சேர்ந்தன. அவை ஜெர்மானிய மொழியில் எழுதப்பட்டவை. அண்ணாவுக்கு அந்த பாஷை தெரியாது. ஆனால், ஸ்வாமியின் அனுக்கிரகத்தால் அவர் அந்த நூல்களை வாசித்துப் பொருள் புரிந்து கொண்டு குறிப்புகளும் எடுத்துக் கொண்டார். அண்ணாவின் தேவை முடிந்ததும் அவை மாயமாய் மறைந்து விட்டன.

anna alias ra ganapathy4 1 - 3

அண்ணா ஸ்வாமியின் லீலைகள் பற்றி என்னிடம் நிறையவே சொல்லி இருக்கிறார். சொல்லாததும் ஏராளம் என்பது புரிகிறது. எனினும், அவை அனைத்திலும் என்னை ரொம்பவும் கவர்ந்தது பர்த்தி செல்ல காசு கொடுத்த லீலை தான்.

ஒருமுறை சில அன்பர்கள் ஒரு வேன் அமர்த்திக் கொண்டு பரத்தி போய் வரலாம் என்று திட்டமிடுகிறார்கள். தலைக்கு அறுநூறு ரூபாய் செலவாகும் என்று கணக்கிடுகிறார்கள். அண்ணாவையும் அழைக்கிறார்கள். அண்ணாவுக்கும் பர்த்தி போய் வர ஆசை தான். ஆனால், கல்கி வேலையை விட்டு நின்று விட்டார். வருமானம் இல்லை. சேமிப்பும் குறைவாகவே இருந்தது. அறுநூறு ரூபாய் செலவு செய்ய தயக்கமாக இருந்தது.

எனவே, அவர் வீட்டில் இருக்கும் ஸ்வாமி படத்தைப் பார்த்து, ‘‘ஸ்வாமி, என் கிட்ட காசு இல்லை. நீங்க காசு கொடுத்தா பர்த்தி வரேன்’’ என்று சிரித்துக் கொண்டே சொல்லி விட்டார்.

மறுநாள் காலை அண்ணா விபூதி டப்பாவில் கை விட்டு விபூதி எடுக்கும் போது விபூதிக்குள் ஏதோ தட்டுப்பட்டது. என்னவென்று பார்த்தால், இருபத்தைந்து பைசா நாணயம்.

‘‘நீங்க காசு கொடுத்தா வரேன்’’ என்று தானே அண்ணா சொன்னார். ஸ்வாமி இப்போது காசு கொடுத்து விட்டார். பர்த்தி கிளம்ப வேண்டியது தானே!

சற்று நேரத்தில் அண்ணா வீட்டுக்கு வந்த ஓர் அன்பர், தங்கள் குடும்பம் காரில் புட்டபர்த்தி செல்வதாகவும், அண்ணாவும் அவர்களுடன் வர வேண்டும் என்றும் சொல்லி, அவரைப் பர்த்தி அழைத்துச் சென்றார்.

காசு கொடுத்தவர் காரும் கொடுத்தனுப்பி விட்டார்.


ஆஸ்திகர்கள் மத்தியில் ஸ்வாமியைப் பற்றிப் பிரபலமான சம்பவம் ஒன்று உண்டு:

ஒருமுறை ஸ்வாமி, மூன்று பெரியவர்களையும் தரிசிக்கப் போனார். விஜயேந்திரர் முன்னே சென்றதும் கையைச் சுழற்றினார், மாலை வந்தது. அவருக்கு அணிவித்தார். அதேபோல ஜயேந்திரருக்கும் அணிவித்தார். இறுதியாக, பெரியவா முன்னால் நின்று கையைச் சுழற்றினார். மாலை வரவில்லை. பெரியவா அவரிடம், இதுபோல சித்து வேலைகளில் ஈடுபடக் கூடாது என்று கண்டித்து அனுப்பினார். – இதுவே அந்தச் சம்பவம்.

இது நிறைய தடவை என் காதுகளில் விழுந்திருக்கிறது. அண்ணாவிடம் ஒருமுறை இதுபற்றிக் கேட்டேன்.

ஸ்வாமி இம்மூவரில் ஒருவரைக் கூட நேரில் பார்த்ததில்லை என்றும், இதுபோன்ற சம்பவம் யாரோ ஒருவருடைய கற்பனையாக மட்டுமே இருக்க முடியும் என்றும் அண்ணா தெரிவித்தார்.

அதேநேரத்தில், ஸ்வாமியின் இறுதிக் காலத்தில் ஜயேந்திரர் அவரை நேரில் சந்திக்க இருந்ததாகவும், ஏனோ அந்தச் சந்திப்பு ரத்தாகி விட்டதாகவும் அண்ணா தெரிவித்தார்.


ஸ்வாமியைப் பற்றி யார் யாரோ ஏதேதோ பேசினாலும், ஸ்வாமி அன்பு மலையாகவே இருந்தாலும், ஒருவகையில் பார்த்தால், அன்பர்களுக்கு அவர் கையில் பிரம்புடன் காட்சி தரும் சட்டாம்பிள்ளையாகவே காட்சி தருவார். அவ்வளவு கண்டிப்பு.

ஆசிரமத்து இளநீர்க் கடையில் கூட ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனி வரிசை இருப்பதை அண்ணா அழகிய உதாரணமாகக் குறிப்பிடுவார். ஸ்வாமி என்றாலே ஒழுக்கம் தான் என்று அண்ணா அடிக்கடி சொன்னதுண்டு எனினும், அவர் பெரியவாளைப் போல சாஸ்திரீய வழிகளைப் பெரிதும் வலியுறுத்தியதில்லை.

‘‘பெரிதும்’’ தானே தவிர, வலியுறுத்தவே இல்லை என்று சொல்ல முடியாது.

அண்ணா ஆசாரங்களைக் கடைப்பிடிப்பது குறித்து ஸ்வாமி ரொம்பப் பாராட்டிப் பேசி இருக்கிறார். ‘‘ஸ்வாமிக்கு இதெல்லாம் தேவையில்லை, ஆனால், பெரியவாளுடன் சம்பந்தம் இருப்பதால் அண்ணா இப்படித்தான் இருக்க வேண்டும்’’ என்று அதற்கான காரணமும் சொல்லி இருக்கிறார்.


ஒருமுறை ஓர் அன்பர், பெரியவாளிடம், ‘‘சாய்பாபா எப்பப் பார்த்தாலும் பக்தர்கள் கனவுல போய் காட்சி தர்றாரே! இது சரியா?’’ என்று கேட்டாராம்.

அதற்குப் பெரியவா, ‘‘அவர் அவதாரம். அவதாரம்னா கீழே இறங்கி வர்றது. அதனால அவர் பக்தர்கள் மட்டத்துக்கு இறங்கி்ப் போய் காட்சி தரத் தான் செய்வார்’’ என்று குறிப்பிட்டாராம்.

anna alias ra ganapathy7 - 4

இந்தச் சம்பவத்தை அண்ணா எழுத விரும்பினார். ஆனாலும், எழுதுவதை ஒத்திப்போட்டுக் கொண்டே வந்தார். அதற்கான காரணத்தை என்னால் யூகிக்க முடிகிறது. அந்தக் காரணம் தற்போது பெரிய விஷயமாகத் தெரியவில்லை. எனவே, இதை வெளியிடலாம் என்று தீர்மானித்தேன்.

வெளியிடலாம் என்பது கூட அல்ல, வெளியிட்டே தீர வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. எனவேதான் எழுதி இருக்கிறேன்.


ஸ்வாமி பற்றி அண்ணா வாழ்வில் மிக முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டியது என ஒரு சம்பவத்தை அவசியம் குறிப்பிட வேண்டும்

ஒருமுறை ஒரு பத்திரிகையில் ஸ்வாமி பற்றி அண்ணா ஒரு தொடர் எழுதலாம் என்று முடிவானது. எழுத ஆரம்பிக்கும் முன்பு ஸ்வாமியை தரிசனம் செய்து அனுமதி வாங்க விரும்பிய அண்ணா. அதற்காக புட்டபர்த்தி சென்றார்.

வழக்கமாக, நேரே அண்ணா அமர்ந்திருக்கும் இடத்துக்கு வந்து தலையைத் தட்டி ‘‘Go’’ சொல்லும் ஸ்வாமி, இப்போது அண்ணா இருந்த இடத்தைத் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. அண்ணா மூன்று நாட்கள் தங்கி இருந்தார். ஸ்வாமி அவரைக் கண்டு கொள்ளவே இல்லை.

anna alias ra ganapathy5 - 5

எழுதுவது என்று ஏற்கெனவே ஒத்துக் கொண்டு அந்தப் பத்திரிகையில் அறிவிப்பும் போட்டு விட்டார்கள். எனவே, ஸ்வாமியிடம் அனுமதி வாங்காமலேயே அண்ணா தொடரை எழுத ஆரம்பித்து விட்டார். மிக விரைவாக எழுதி, மொத்தக் கட்டுரைகளையும் ஒருசேர அனுப்பி வைத்து விட்டார்.

அதன்பிறகு ஆரம்பித்தது வில்லங்கம்.

அண்ணா எழுதியதற்கும் பத்திரிகையில் வெளியானதற்கும் சம்பந்தமே இல்லை. அண்ணா ஏதோ எழுதிக் கொடுத்திருந்தார். அத்துடன் தனது சொந்தச் சரக்கைச் சேர்க்கிறேன் பேர்வழி என்ற பெயரில் அந்தப் பத்திரிகை ஆசிரியர் நிறைய தவறான தகவல்களைச் சேர்த்து அதையே பத்திரிகையில் வெளியிட்டார். (பத்திரிகையும் பிரபலமானது, ஆசிரியரும் அப்படியே.)

அண்ணாவுக்கு இது மிகுந்த வேதனையாக இருந்தது. ஸ்வாமி பற்றித் தப்பும் தவறுமாக என் பெயரிலேயே வெளியாகிறதே என்று வேதனை ஏற்பட்டது.

பத்திரிகை ஆசிரியரிடம் போய்க் கேட்க வேண்டும், அவர் ஒத்துக் கொள்ளவில்லை என்றால் தகராறு பண்ணி, தொடரை நிறுத்த வேண்டும். இதுபோன்ற செய்கைகளில் அண்ணாவுக்கு என்றுமே உடன்பாடு இல்லை.

ஸ்வாமிக்குப் பெரிய அபசாரம் பண்ணி விட்டோம் என்ற உறுத்தல் அவருக்கு ஏற்பட்டது. எனவே, மன ஆறுதலுக்காக பர்த்தி சென்றார்.

தரிசனத்தின் போது வழக்கம் போல அவரை நோக்கி விறுவிறுவென வந்த ஸ்வாமி, தலையைத் தட்டி ‘‘Go’’ சொன்னார். இன்டர்வியூ சமயத்தில் அண்ணா அவரிடம் தனது வேதனையைத் தெரிவித்தார்.

அதற்கு ஸ்வாமி, ‘‘இதோ பார், நீ சரியாகத் தானே எழுதிக் கொடுத்தாய். அவர்கள் தானே தவறாக வெளியிடுகிறார்கள். அதைப் பற்றி நீ ஏன் கவலைப்படுகிறாய்?’’ என்று கேட்டாராம்.

அண்ணா, ‘‘உங்களைப் பற்றித் தப்பும் தவறுமாக செய்தி வெளியாவதற்கு நான் காரணமாக இருந்து விட்டேன்’’ என்று சொன்னாராம்.

உடனே, ஸ்வாமி, ‘‘ஸ்வாமி பற்றி எந்த மாதிரி செய்தி வந்தாலும் ஸ்வாமிக்கு அது பொருட்டே இல்லை. நீயும் அதுபற்றிக் கண்டு கொள்ள வேண்டாம்’’ என்று சொன்னாராம்.

ஸ்வாமியைப் பற்றி எழுத விரும்பிய போது அவர் அண்ணாவைப் புறக்கணித்தது, ஸ்வாமியின் பெயர் கெடும் விதத்தில் வெளியாகி வரும் தொடரைப் பற்றி அண்ணா தெரிவித்த போது அதை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளாதது – இது தான் ஸ்வாமி என்று அண்ணா சொல்லுவார்.

அண்ணா என் உடைமைப் பொருள் (38): பர்த்தி நாதனும் காஞ்சி நாதனும்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply