e0af8de0aea3e0aebe-e0ae8ee0aea9e0af8d-e0ae89e0ae9fe0af88e0aeaee0af88e0aeaae0af8d-e0aeaae0af8ae0aeb0e0af81e0aeb3e0af8d-36.jpg" style="display: block; margin: 1em auto">
அண்ணா என் உடைமைப் பொருள் – 36
தலைக்கு மேல் இருப்பது யார்?
– வேதா டி.ஸ்ரீதரன் –
வாழ்க்கையில் எத்தனையோ நிகழ்வுகள்.
சில நிகழ்வுகள் வேடிக்கையாக… சில நிகழ்வுகள் வேதனையாக… சில நிகழ்வுகள் வினோதமாக…
சில நிகழ்வுகளுக்கு அர்த்தம் புரிகிறது. சில இடங்களில் புரிந்த மாதிரி இருக்கிறது வேறு சில சந்தர்ப்பங்களில் புரியாமலேயே போய் விடுகிறது.
சிற்சில விதிவிலக்கான சூழ்நிலைகள் வேடிக்கை, வேதனை, வினோதம், புரிந்தது, புரிந்த மாதிரி இருப்பது, புரியாதது – என்கிற அனைத்தும் சேர்ந்த கலந்தாங்கட்டியாக அமைவதும் உண்டு.
இத்தகைய கலந்தாங்கட்டி அனுபவம் ஒன்று –
கோலிவுட் வட்டாரத்திலும் அரசியலிலும் பிரபலமாக அறியப்பட்டிருந்த ஓர் அனாமதேயத்தைச் சந்திக்க நேர்ந்தது.
அனாமதேயம் என்று நான் சொன்னாலும், அவருக்குப் பெயர் உண்டு. அவர் ரமேஷ் என்று அறியப்பட்டிருந்தார்.
ரமேஷ் பிறவி ஊமை. பெரிய குடும்பம். வறிய குடும்பம். அம்மா இல்லை.
ரமேஷின் அப்பா தன்னால் இயன்ற வகையில் ஏதேதோ வழிகளில் இதர பிள்ளைகளைக் கரையேற்றி விட்டார். ரமேஷை என்ன பண்ணுவது என்று தெரியவில்லை.
இந்நிலையில் ஒரு சமயம் அவர்கள் ஊருக்கு அருகே பெரியவா யாத்திரை போய்க் கொண்டிருந்தார். ரமேஷைக் கூட்டிக் கொண்டு தரிசனத்துக்குச் சென்ற அந்த மனிதர், ரமேஷைப் பெரியவா காலடியில் கிடத்தி, ‘‘இவனைக் கரையேற்ற வழி தெரியவில்லை. என் காலத்துக்குப் பின்னர் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் நிர்க்கதி ஆகிவிடுவானோ என்று பயமாக இருக்கிறது. இவனுக்கு ஏதாவது நல்லது நடக்க ஆசீர்வாதம் பண்ணுங்கள்’’ என்று பிரார்த்தித்தார்.
‘‘பையனை என்னிடமே விட்டு விடு. நான் பார்த்துக் கொள்கிறேன்’’ என்று அபயம் தந்தாராம், பெரியவா.
ரமேஷ் பெரியவாளிடமே வந்து விட்டான். அவன் சாப்பிட்டானா என்பதை மட்டும் மடத்துப் பணியாளர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்வாராம், பெரியவா. மற்றபடி, மடத்தில் அவனுக்கும் யாருக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.
சுமார் ஆறு மாதங்கள் கழிந்தன. ஒருநாள் ரமேஷைத் தன் அருகே அழைத்த பெரியவா, அவனிடம், ‘‘உனக்கு வாக்குப் பலிதம் இருக்கிறது. ஜோசியம் சொல்வது மாதிரி யாருக்காவது நல்ல வார்த்தைகள் சொல்லிப் பிழைத்துக் கொள். இரண்டு மூன்று நாட்களுக்கு மேல் எந்த ஊரிலும் தங்காதே. பணத்துக்கு ஆசைப்படாதே. குறைந்த பட்சத் தேவைகளுக்குப் பணம் கிடைத்தால் போதும். திருமணம் செய்து கொள்ளாதே’’ என்று சொல்லி ஆசீர்வதித்து அனுப்பி விட்டார்.
இது எவ்வளவு தூரம் உண்மை என்று எனக்குத் தெரியாது. எனினும், இது தான் கோலிவுட் மனிதர்கள் மத்தியில் ரமேஷ் பற்றிச் சொல்லப்படும் கதை.
ரமேஷ் திடீர் திடீரென எங்காவது வருவார். யார் வீட்டிலாவது தங்குவார். நாலைந்து பேருக்கு ஏதாவது ஜோசியம் சொல்லுவார். அள்ளி அள்ளிப் பணம் கொடுத்தாலும், அதை வாங்க மறுத்து விட்டு, ஏதோ சில நூறு ரூபாய்களை மட்டும் எடுத்துக் கொண்டு இடத்தைக் காலி செய்து விடுவார்.
கோடம்பாக்கம் பிரபலங்கள் அனைவருமே ரமேஷ் வருகைக்காகத் தவம் கிடப்பதுண்டு என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ராஜாஜியின் மனம் கவர்ந்த ‘‘வொர்கஹாலிக் பையன்’’ உட்பட அரசியல் பிரபலங்களும் அப்படியே.
எனக்கு முதல் பையன் பிறந்த சில நாட்களுக்குப் பின்னர் ஒருநாள் சினிமா பிரபலம் ஒருவர் இல்லத்துக்கு ரமேஷ் வந்திருந்தார். எனது நண்பர் ஒருவர் அவரைப் பார்ப்பதற்காகச் சென்று கொண்டிருந்தார். என்னையும் அழைத்தார்.
எனக்கு விருப்பம் இல்லை. நண்பரோ என்னை மிகவும் கட்டாயப்படுத்தி அழைத்தார். பெரியவா சம்பந்தம் உள்ள மனிதரைப் பார்த்தால் நான் சந்தோஷப்படுவேன் என்பது அவர் கருத்து.
எனக்கு ஜோசியம் கேட்கும் ஆர்வம் இல்லை. வெறுமனே பார்ப்பதற்காக மட்டும் தானே போகிறோம், பரவாயில்லை என்பதால் அவருடன் கிளம்பினேன்.
ரமேஷ் ஒரு சராசரி மனிதர், படிப்பறிவு இல்லாதவர் என்பது அவரைப் பார்த்த மாத்திரத்திலேயே புரிந்தது.
என் நெற்றியில் இருந்த ஶ்ரீசூர்ணத்தைப் பார்த்த ரமேஷ், என்னிடம், பூணூல் உண்டா என்று சைகை மூலம் கேட்டார். ஆம் என்றேன். வடகலையா, தென்கலையா என்பது அடுத்த கேள்வி. பதில் சொன்னேன்.
தலைக்கு மேலே உட்கார்ந்திருப்பது யார் என்று கேட்டார்.
எனக்குப் புரியவில்லை.
என்னை அழைத்துச் சென்ற நண்பர், இவர் ரா. கணபதி அண்ணாவுடன் இருப்பவர். அண்ணா தான் பெரியவா பற்றி நிறைய எழுதி இருக்கிறார். தெய்வத்தின் குரலைத் தொகுத்திருக்கிறார் என்று என்னை அறிமுகம் செய்து வைத்தார்.
நாற்காலியில் இருந்து எழுந்த ரமேஷ், கை கூப்பி என்னை வணங்கினார். என்னை வணங்கினாரா, என் தலைக்கு மேலே யாரோ இருப்பதாகச் சொன்னாரே, அவரை வணங்கினாரா, இல்லை, பெரியவா பெயரைக் கேட்டதால் எழுந்த உணர்வெழுச்சியா என்பது எனக்குத் தெரியாது.
‘‘என்னிடம் என்ன கேட்பதற்காக வந்திருக்கிறீர்கள்?’’ என்று கேட்டார்.
‘‘எதுவும் கேட்கப் பிரியம் இல்லை. சும்மா வந்தேன்’’ என்று சொன்னேன்.
ஏதாவது கேட்குமாறு வற்புறுத்தினார். நீண்ட வற்புறுத்தலுக்குப் பின்னர், நான், ‘‘என் மகன் எதிர்காலம் பற்றி ஏதாவது சொல்லுங்கள்’’ என்று கேட்டேன்.
‘‘பையன் ரொம்ப நல்லா இருப்பான். ஃபாரின் போயிடுவான்’’ என்று சொன்ன ரமேஷ், ‘‘உங்கள் நிலை தான் கஷ்டமாக இருக்கிறது. உங்களைப் பற்றிக் கேளுங்கள்’’ என்றார். ‘‘எனக்கு எதுவும் வேண்டாம். நான் அண்ணாவுடன் இருக்கிறேன். அவர் பார்த்துக் கொள்வார். அது போதும்’’ என்றேன்.
‘‘ஆனாலும் நானே சொல்கிறேன். கொஞ்ச நாளில் ஒரு நண்பர் அல்லது சொந்தக்காரர் உங்களுடன் சேர்ந்து பார்ட்னர்ஷிப் மாதிரி ஒரு வியாபாரம் பண்ணலாம் என்று வருவார். அவருடன் சேர வேண்டாம் என்று எல்லாரும் எச்சரிப்பார்கள். ஆனால் தைரியமாக சேர்ந்து பண்ணுங்கள்’’ என்றார்.
ஏதோ சொன்னார், கேட்டுக் கொண்டேன். பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. நான் பணம் கொடுத்த போது ரமேஷ் அதை வாங்க மறுத்து விட்டார். அதன் காரணமாகவும், அவருக்குப் பெரியவா சம்பந்தம் உண்டு என்பதாலும் அவர் மீது மிகுந்த மரியாதை ஏற்பட்டது.
ரமேஷ் சொன்னது போல விரைவிலேயே நடந்தது. எனக்குத் தெரிந்த ஒருவர். நெருங்கிய நண்பர் அல்ல, என்றாலும், நன்கு அறிமுகமானவரே. உறவினர் அல்ல, அதேநேரத்தில், ஒரே கோத்திரத்தைச் சேர்ந்தவர். என்னிடம் வியாபார ரீதியான தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள விரும்பினார்.
(அந்த நண்பருடன் ஏற்பட்ட வியாபாரத் தொடர்பால் சென்னையில் இரண்டு சிறு வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தையே மொத்தமாக ஏறக்கட்ட வேண்டி வந்தது என்பது எனக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை.)
இந்த வியாபாரத் தொடர்பால் எனக்கென்று பிரத்தியேக அலுவலகமும், அதைத்தொடர்ந்து ஏற்படுகிற பராமரிப்புச் செலவுகளும் வந்து சேர்ந்தன. சாரதா பப்ளிகேஷன்ஸில் பிரச்சினை மிகப் பெரிதாவதற்கு இதுவே முக்கியக் காரணம்.
ரமேஷ் சொன்னதால் நான் அவருடன் வியாபார சம்பந்தம் வைத்துக் கொண்டேன் என்று சொன்னால் அது பொய். எனக்கு அவருடன் வியாபாரம் செய்வதால் சில உடனடி நன்மைகள் இருந்தன. அதனால் நான் மனம் விரும்பியே அவருடன் வியாபாரம் மேற்கொண்டேன்.
ரமேஷ் சொன்னதால் ஏற்பட்ட மனோதைரியமும் இதற்கு ஒரு துணைக் காரணம்.
குதிரை குப்புறத் தள்ளி, குழியும் பறித்ததாம் என்று சொல்வார்கள். அத்தகைய நிலையும் வந்து சேர்ந்தது.
Expert caretaker-ன் அனுக்கிரகமும் கூடவே இருந்தது.
என் தலை தப்பியது.
கொடுக்கல் வாங்கலில் ஏடாகூடமாக மாட்டிக் கொண்டேன் என்பது தான் ஒட்டுமொத்தப் பிரச்சினை. இதில் இருந்து வெளிவர வேண்டுமானால், சம்பந்தப்பட்ட நபர் எனக்கு உரிய பணத்தைத் தர வேண்டும். அவரோ பெரிய கடனாளியாக இருக்கிறார்.
எனது நண்பர் ஒருவரது முயற்சியின் பேரில் சம்பந்தப்பட்ட நபரின் வீட்டை என் பெயரில் எழுதிக் கொடுப்பதாக முடிவானது. இதன் மூலம் எனக்குப் பாதிப் பணமாவது கிடைக்க வழியுண்டு.
பத்திரப் பதிவுக்குச் சுமார் இருபத்தைந்தாயிரம் ரூபாய் உடனடித் தேவை.
இந்தத் தகவல் எனக்குக் கிடைத்த போது காலை சுமார் ஏழு மணி இருக்கும். அப்போது நான் அண்ணாவுடன் இருந்தேன். அன்று மதியத்துக்குள் அந்தப் பத்திரப் பதிவுக்கு நான் தயாராக வேண்டிய நிர்ப்பந்தம்.
அண்ணாவிடம் மொத்த விவகாரத்தையும் பற்றி ஏற்கெனவே சொல்லி இருக்கிறேன். அதுவரை அண்ணா எதையும் கண்டு கொள்ளவில்லை. ஆனால், அன்றைய தினம் மோகனராமனுக்கு ஃபோன் பண்ணி, வங்கியில் இருந்து பத்தாயிரம் ரூபாய் எடுத்துக் கொண்டு வருமாறு கூறினார். வந்த பணத்தை என்னிடம் அப்படியே கொடுத்தார்.
பணம் கிடைத்த மகிழ்ச்சி எனக்கு ஏற்படவில்லை. காரணம், மீதிப் பணத்துக்கு என்னிடம் எந்த வழியும் இல்லை. மொத்தப் பணமும் இல்லாவிட்டால் பத்திரம் போட முடியாது. அதுவரை மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வீணாகி விடும். எனக்கு வர வேண்டிய பாக்கித் தொகைக்கு வேறு உத்தரவாதம் எதுவும் இல்லை. அண்ணா தந்தது போக என்னிடம் ஆயிரம் ரூபாய் மட்டுமே இருந்தது.
பணத்தை எடுத்துக் கொண்டு அலுவலகம் வந்தேன். அங்கே எனக்காகப் பதின்மூன்றாயிரம் ரூபாய் மதிப்புள்ள பத்திரத் தாள்கள் காத்துக் கொண்டிருந்தன.
மிதமிஞ்சிய டென்ஷன் காரணமாக அன்று மதியம் நாங்கள் யாரும் சாப்பிடவே இல்லை. மொத்த வேலைகளும் முடிந்து வீடு திரும்பும் வழியில் அனைவரும் ஓர் ஓட்டலில் சாப்பிட்டோம். பில் பணம் கொடுத்த பின்னர் கையில் இருந்த மீதிப் பணத்தை எண்ணிப் பார்த்தேன். சுமார் இருபது ரூபாய் இருந்தது.
அடடா! சும்மா சொல்லக் கூடாது, (mis)guidance-ன் அளவு சரியாகவே இருந்தது.
இந்தப் பகுதியை நான் டைப் பண்ண ஆரம்பித்த கொஞ்ச நேரத்தில், ஒரு பெரியவர், வாட்ஸ்அப்பில் சீக்கிய பஜனைப் பாடல் ஒன்றை அனுப்பி இருந்தார். ‘‘என் சத்குருவே, என் மீது கருணை காட்டுங்கள். நான் உங்கள் வாசலை வந்தடைந்து விட்டேன்.’’ என்பது அந்தப் பாடலின் முதல் வரி. (மேரே ஸத்குரு ஜீ, துஸீ மேஹர் கரோ, மைன் தர் தேரே தே ஆயி ஹுயி யா.)
பாடலை மீண்டும் மீண்டும் கேட்டேன். மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. வாசலைத் தேடிப் போகும் அளவு எனக்கு சுய முயற்சி தேவைப்படவில்லை என்பதும் புரிந்தது.
அண்ணா என் உடைமைப் பொருள் (36): தலைக்கு மேல் இருப்பது யார்?! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.