அண்ணா என் உடைமைப் பொருள் (30): காற்றினிலே வரும் கீதம்!

ஆன்மிக கட்டுரைகள் கட்டுரைகள்

e0af8de0aea3e0aebe-e0ae8ee0aea9e0af8d-e0ae89e0ae9fe0af88e0aeaee0af88e0aeaae0af8d-e0aeaae0af8ae0aeb0e0af81e0aeb3e0af8d-30.jpg" style="display: block; margin: 1em auto">

anna
anna

அண்ணா என் உடைமைப் பொருள் (30)
காற்றினிலே வரும் கீதம்
– வேதா டி. ஸ்ரீதரன் –

அண்ணா சிறுகதை எழுத முயற்சி செய்ததைப் பற்றிக் கேலியாகக் குறிப்பிட்டிருந்தேன்.

கதை என்பதைப் புனைவு, கற்பனைச் சம்பவம் என்ற பொருளிலேயே நாம் பயன்படுத்தி வருகிறோம். அதே அர்த்தத்தில் தான் நானும் எழுதி இருந்தேன். எனினும், கதா என்ற சொல்லுக்கு ‘‘சொல்லப்பட்டது, மொழியப்பட்டது’’ என்று தான் பொருள். கதை சொல்வது என்பது நம் தேசத்தின் கல்விப் பாரம்பரியத்தில் ஒரு முக்கிய அம்சம். நமது கல்விமுறையே வாய்மொழிப் பாரம்பரியம் தான்.

மேற்கத்திய நாட்டு மனிதர்களின் ஒழுங்குப்பாட்டை – குறிப்பாக, போக்குவரத்து விஷயங்களில் அவர்கள் விதிமீறாமல் செயல்படுவதை – மிகவும் வியப்புடன் பார்த்திருக்கிறேன்.

வியப்புக்கு உண்மைக் காரணம் அவர்களது கட்டுப்பாடு அல்ல. இத்தகைய கட்டுப்பாட்டுணர்வை தேசத்தின் கடைக்கோடி மனிதன் வரை அனைவருக்கும் ஏற்படுத்த முடிந்தது எவ்வாறு சாத்தியமானது என்பதே என் வியப்புக்குக் காரணம். குடிமகன்கள் அனைவரையும் பயிற்றுவிப்பது என்பது நடைமுறையில் சாத்தியமாகிற காரியமா? நமது நாட்டில் ஏன் அதைச் செய்ய முடியவில்லை என்ற ஆதங்கமும் உண்டு.
உண்மையில், மக்களைப் பயிற்றுவிப்பதில் ஒரு மகோன்னதமான சாதனையைச் செய்திருந்த தேசம் இந்தியா தான் என்பது இப்போது புரிகிறது. இங்கே அதை சாத்தியப்படுத்திய கருவி தான் கதைகள்.

புராணம், இதிகாசம் என்பவை கட்டுக் கதைகள் என்று தான் நம்முடைய தற்காலத்திய கல்விமுறை நம்மை நம்ப வைத்திருக்கிறது. உண்மையில், புராணம், இதிகாசம் ஆகிய இரண்டு சொற்களுக்குமே வரலாறு என்பது தான் பொருள். கடலின் மீது வானரங்கள் பாலம் கட்டினார்கள் என்பதும், பத்துத் தலை ராவணனை ராமன் பாணம் வீசிக் கொன்றான் என்பதும் தற்கால வரலாற்று ஆசிரியர்களின் மூளைக்கு ஒத்து வராத விஷயங்களாக இருக்கலாம். ஆனால், காலங்காலமாக, இந்தியர்களின் மனம் இவற்றை நம்பியே வந்திருக்கிறது.
புராண இதிகாசங்கள் மட்டுமல்ல, மகான்களின் சரிதமும் கதைப் பாரம்பரியத்தில் அடங்கும்.

கடைக்கோடி மனிதன் வரை போக்குவரத்து ஒழுங்கைச் சொல்லிக் கொடுப்பதே பெரிய சாதனை என்று தோன்றுகிறதே, இங்கே கடைக்கோடிக் குடும்பத்துக்கும் வைத்திய முறை தெரிந்திருந்ததே! இந்தியாவில் நாட்டு வைத்தியமே பாட்டி வைத்தியம் தானே! அது எப்படி சாத்தியமானது? கடைக்கோடி கிராமத்தின் ஊர் நாட்டாமைக்கு நீதி சாஸ்திர அறிவு இருந்ததே, அவருக்குக் கட்டுப்படும் சமுதாய ஒழுக்கம் அனைவரிடமும் இருந்ததே, இவையெல்லாம் எவ்வாறு சாத்தியமானது?
இதுபோன்ற விஷயங்களை நடைமுறையில் கொண்டு வந்தவை நமது பாரம்பரியக் கதைகளே.

முன்பெல்லாம், இத்தகைய கதைப் பாரம்பரியத்தில் பௌராணிகர்களும் தாத்தா பாட்டிகளும் முக்கியப் பங்கு வகித்தார்கள். கூத்தும், இதர கலைகளும் செய்தது இதே பணியைத் தான். காந்தர்வக் கலை என்பது உபவேதங்களில் ஒன்று என்பதைப் பெரியவா சுட்டிக் காட்டி இருக்கிறார். வேதங்களுக்கு இணையான அந்தஸ்து கலைகளுக்கும் உண்டு என்பதாலேயே பக்தி மையங்களான ஆலயங்கள் கலை வளர்க்கும் இடங்களாகவும் இருந்தன.

தற்காலத்தில் கதை என்பது பத்திரிகைகளின், எழுத்தாளர்களின் பணியாகி விட்டது. அண்ணாவும் இத்தகைய கதை நூல்களைத் தந்திருக்கிறார்.

குறிப்பாக, நவராத்திரி நாயகி இத்தகையதே. அது தேவி சரிதம்.
அண்ணாவின் காமாக்ஷி கடாக்ஷி, அகத்தியர் உள்ளிட்ட வேறு சில நூல்களிலும் புராணம் அதிகம் உண்டு.

ஆனால், அவற்றை விட அதி முக்கியமானவை என்று நான் கருதுவது காற்றினிலே வரும் கீதம், காமகோடி ராமகோடி ஆகிய இரண்டு நூல்களையும் தான். இரண்டும் சமீப கால வரலாற்றைப் பற்றியவை. காற்றினிலே வரும் கீதம் என்பது மீரா சரிதம்.

காமகோடி ராமகோடி என்பது போதேந்திராளைப் பற்றியது.
இள வயது முதல், கிரிதாரி கண்ணன் ஒருவனுக்காக மட்டுமே உடலையும் மனதையும் வைத்திருந்த மீராவை ஒரு மனிதப்பிறவிக்கு மனைவியாக்கிய கொடுமை கூடப் பரவாயில்லை, கைப்பிடித்த கணவனுக்கும் கூட இந்த உடலும் மனமும் உரிமைப் பொருள் ஆக முடியாது, கண்ணன் ஒருவனுக்கே அந்தப் பாத்தியதை உண்டு என்று வாழ்ந்த அந்தத் துறவிப் பெண்ணின் மீது களங்கம் சுமத்தப்பட்டதையும், அவளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதையும் வாசிக்கும் போது குமுறிக் குமுறி அழுதிருக்கிறேன்.

தேசத்து ராஜாவான அவளது மணாளன் அவளைச் செத்துப் போகச் சொல்லி உத்தரவிட்டான். அவளும் மகிழ்ச்சியாகவே மரணிக்கத் தயாராக இருந்தாள். ஆனால், அவளது கிரிதாரி கிருஷ்ணன் அவளைச் சாக விடவில்லை! அந்த அப்பாவி பட்ட வேதனையில் அந்தப் பரந்தாமனுக்கு அப்படி என்ன ஆனந்தமோ!
வாசிக்கவே வேதனையாக இருக்கும் இத்தகைய வாழ்க்கையை அவளால் எப்படி வாழ முடிந்தது – அதுவும், கண்ணன் நினைப்பில் அதி ஆனந்தமாகவே வாழ முடிந்தது – என்பது கற்பனைக்கெட்டாத அதிசயம் என்றால், அந்தக் கொடூரங்களை அண்ணாவால் எப்படி எழுத முடிந்தது என்பதும் அதிசயமாகவே இருக்கிறது.


காற்றினிலே வரும் கீதம் நூலில் அண்ணா சில மீரா பஜன்களைத் தமிழில் மொழிபெயர்த்துத் தந்திருக்கிறார். அவை அனைத்தும் ஒரிஜினல் பாடல்களின் அதே ராகத்தில் அமைந்தவை. மொழிபெயர்ப்பு முடிந்த பின்னர் தான் இந்த விஷயம் அண்ணாவுக்கே தெரிய வந்ததாம். மைத்ரீம் பஜத பாடலும் அப்படியே! இந்தப் பாடல்களை அவர் உள்ளெழுச்சியின் மூலம் மட்டுமே மொழிபெயர்த்ததாக என்னிடம் தெரிவித்தார்.


மீரா சரிதமும் அவ்வாறு உள்ளெழுச்சியின் தூண்டுதலால் எழுதப்பட்டது என்பதையும் அந்த நூலுக்கான முகவுரையில் தெரிவித்திருக்கிறார். இந்த நூலைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் எனக்கு மகா பெரியவாள் விருந்து புத்தகம் நினைவுக்கு வரும். தியாகையரின் காஞ்சி விஜயம் குறித்துப் பெரியவா சொன்ன யூகத்தைப் பற்றி அண்ணா அதில் எழுதி இருக்கிறார். வந்திருப்பார், பார்த்திருப்பார், கேட்டிருப்பார் என்று பெரியவா சொன்ன அனைத்தையும் வந்தார், பார்த்தார், கேட்டார் என்றே அண்ணா புரிந்து கொண்டாராம். பெரியவா நேரில் பார்த்ததையே விவரித்ததாக அண்ணா அந்த நூலில் எழுதி இருக்கிறார்.

காற்றினிலே வரும் கீதமும் அதுபோலவே, அண்ணா நேரில் பார்த்ததையே எழுதி இருக்கிறார் என்றே என் மனம் நம்புகிறது. எனது இந்த நம்பிக்கைக்கு நிறையக் காரணங்கள் உண்டு. மற்றவர்கள் மீரா பற்றித் தந்திருக்கும் பல தகவல்கள் அண்ணா நூலில் இல்லை என்பதும் ஒரு காரணம். மீராவின் காலம், அவளது கணவன் பெயர் முதலான பல அம்சங்கள் அண்ணாவால் மாற்றப்பட்டுள்ளன என்பதும் ஒரு காரணம்.

மீரா சரிதத்தை நாடக வடிவில் எழுதிய ஜேம்ஸ் ஹெச். கஸின்ஸ் என்ற ஐரிஷ் கவிஞனைப் பற்றி அந்த நூலின் முகவுரையில் அண்ணா குறிப்பிட்டுள்ளார். அந்தக் கவிஞரும் இதேபோல உள்ளெழுச்சியால் தூண்டப்பட்டு மீரா சரிதம் எழுதியவர் தான்.
அண்ணா எழுத்தில் ஆங்காங்கே ஆங்கிலக் கவிதை வரிகள் அலையடிக்கும். சில இடங்களில் கவிஞரின் பெயரைக் குறிப்பிடாமல் கவிதை வரிகளை மட்டும் மேற்கோள் காட்டி இருப்பார்.

அண்ணா, தனக்குள்ளே தானாகவே உதித்த கருத்துகளைப் பற்றி்ச சொல்லும் போது அலெக்சான்டர் போப், ஜான் ட்ரைடன் முதலானோரின் வரிகளைக் குறிப்பிட்டிருக்கிறார். இந்த வரிசையில், அகத்தியர் புத்தகத்தில், ஜேம்ஸ் ஹெச். கஸின்ஸ்-ன் கவிதைகளில் ஒன்றான Inspiration and Expression என்ற கவிதைக்குத் தன் அனுபவத்தின் மூலம் விளக்கம் தந்து எழுதியுள்ளார். ஏனோ, அங்கேயும் கவிஞனின் பெயரை அவர் குறிப்பிடவில்லை. கவிதைக்கு உரிமையாளன் கவிஞன் அல்ல, வார்த்தைகள் மட்டுமே அவனுக்குச் சொந்தம் என்பதை விளக்குவதே அந்தக் கவிதை.

காற்றினிலே வரும் கீதம் புத்தகத்துக்கும் அது பொருந்தும்.
அண்ணாவின் நூல்கள் என்றாலே பெரும்பாலோருக்கு தெய்வத்தின் குரல் புத்தகங்கள் தான் நினைவுக்கு வரும். எனக்கென்னவோ காற்றினிலே வரும் கீதம், காமகோடி ராமகோடி ஆகிய இரண்டும் தான் நினைவுக்கு வரும்.

அண்ணா என் உடைமைப் பொருள் (30): காற்றினிலே வரும் கீதம்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply