தினசரி ஒரு வேத வாக்கியம்: 82. நம் ஊர் நலமாக இருக்கட்டும்!

ஆன்மிக கட்டுரைகள் கட்டுரைகள்

daily one veda vakyam 2 5
daily one veda vakyam 2 5

82. நம் ஊர் நலமாக இருக்கட்டும்!

தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா

தமிழில்: ராஜி ரகுநாதன்  

விஸ்வம் புஷ்டம் க்ராமே அஸ்மின் அநாதுரம்” – யஜுர்வேதம்.

இந்த கிராமத்தில் உயிர்களெல்லாம் நோயின்றி மகிழ்ச்சியாகவும் செழிப்பாகவும் வாழட்டும்!” 

நாம் கடவுளை வழிபடும் போது பிரார்த்திக்கும் விருப்பங்கள் நம் நன்மைக்காக மட்டும் இன்றி நம்மைச் சுற்றியுள்ள பிரபஞ்சமும் நலம் பெற வேண்டும் என்ற விண்ணப்பத்தோடு இருக்க வேண்டும்.

நாம், நம் வீடு, இந்த ஊர், அதற்கு பிறகு நம் தேசம், இந்தப் பிரபஞ்சம்… இவ்வாறு விரிவாக நம் எண்ணம் வளருகிறது. 

நம்மைச் சுற்றிலும் வேதனை இருந்தால் நாம் மகிழ்ச்சியாக வாழ முடியாது. நம் ஊரில் நாமும் ஒரு பகுதியே. பரஸ்பரம் பாதிக்கப்படக் கூடிய இயல்பு கொண்டவர்கள். ஊர் நன்றாக இருந்தால்தான் நாம் நலமாக இருக்க முடியும். இந்தவிதமான சமுதாய நல கண்ணோட்டத்தை வேதக் கலாச்சாரம் முக்கியமாக குறிப்பிடுகிறது.

‘விஸ்வம்’ என்றால் அசையும், அசையா பொருட்களைக் கொண்ட பிரபஞ்சம். ‘கிராமே அஸ்மின்’ என்பதற்கு நம் அனுபவத்தில், நம்மைச் சுற்றி இருக்கும் இடத்தில் தென்படும் உலகம் என்று பொருள்.

ஊரில் அனைத்தும் சிறப்பாக விளங்க வேண்டும். அதில் மனிதர்கள் மட்டுமே அல்ல. ஜீவ கோடி அனைத்தும்… வயல், கால்நடை, நீர்நிலை, காற்று… அனைத்தும் நம்மோடு சேர்ந்து வாழ்பவையே! எல்லாம் சேர்ந்துதான் ஊர். இதெல்லாம் சேர்ந்துதான் நாம். இவையெல்லாம் செழிப்பாக நோய் நொடியின்றி மகிழ்ச்சியாக இருந்தால் நாமும் நன்றாக இருப்போம். ஊரின் செழுமையே நமக்கும் செழுமை.

அதற்காக இயற்கை சக்திகளை அடக்கி ஆளும் இறைவனின் அருளை வேண்டி, அந்த லட்சியத்தை நோக்கி நம் பங்கு கடமையை உள்ளத் தூய்மையோடு ஆற்ற வேண்டும் என்பதே வேத மாதாவின் போதனை.

மற்றுமொரு விஷயம் என்னவென்றால் அடுத்தவரின் முகத்தில் வேதனை தென்படும்போது தம் மனமும் வருந்தும் உயர்ந்த பண்பாடு கொண்டவர்கள், எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள்.

ஊர் பற்றி எரியும் பொழுது, தான் மட்டும் பத்திரமாக கேளிக்கையில் ஈடுபடும்  அரசாளுபவர்களை வேதமாதா இடித்துரைக்கிறாள். சமூக நலனே ஒவ்வொருவரின் கடமையும். 

பிறரை வருத்தி சம்பாதிக்கும் செல்வம், செழிப்பையோ சந்தோஷத்தையோ அளிக்காது. பிறருடைய மகிழ்ச்சியில் தானும் பங்கு கொண்டு வாழும் வாழ்க்கையே சமுதாய நிர்மாணத்திற்கான அடையாளம்.

‘புஷ்டி’ என்பது பலவிதம். வேத நூல்களில் பல வித புஷ்டிகள் பற்றி கூறியுள்ளார்கள். க்ருஹ புஷ்டி, தன புஷ்டி, தர்ம புஷ்டி, ஆரோக்கிய புஷ்டி,  வாக் புஷ்டி… இவ்வாறு ஐஸ்வர்யங்களையும் செழிப்பை ‘புஷ்டி’ என்ற சொல்லால் குறிப்பிட்டார்கள். நாம் வசிக்கும் ஊரில் அனைவரும் புஷ்டியாக விளங்கவேண்டும். சிலர் மட்டும் செல்வத்தில் திளைப்பதை வேதம் விரும்பவில்லை.

சங்கல்பத்திலும் எண்ணத்திலும் இது போன்ற உயர்ந்த லட்சியங்களை ஏற்படுத்திக் கொண்டு அனைவரும் வாழ்வார்களானால் அதைவிட உயர்ந்த நிலை வேறென்ன வேண்டும்! இத்தகைய உயர்ந்த சிந்தனை மக்களிடம் மட்டும் இருந்தால் போதாது. ஆளுபவர்களிடமும் இருக்க வேண்டும். அரசாளும் பொறுப்பு என்பது மக்களைக் கொள்ளையடித்து அவர்களின் கஷ்டத்தின் மேல் மாளிகை கட்டி வாழும் வாய்ப்பாகக் கருதுவோரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் இந்த கொடிய காலத்தில், இது போன்ற உயர்ந்த சிந்தனைகள் அளிக்கும் விழிப்புணர்வு மிகவும் தேவை.

இந்த வாக்கியத்தை நாம் லட்சியமாக கடைபிடித்தால்… அரசாளுவோர் அரசின் நோக்கமாக ஏற்று முக்கிய திட்டமாக வகுத்துக் கொண்டால்… சமுதாய நலனுக்கு குறைவிருக்காது.

இதுபோன்ற வேத சிந்தனை நம்மில் நிறைந்தால் நலமான சமுதாயம் நிலைபெற்றுத் தீரும்! 

தினசரி ஒரு வேத வாக்கியம்: 82. நம் ஊர் நலமாக இருக்கட்டும்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply