தினசரி ஒரு வேத வாக்கியம்: 76. ஒன்றே தெய்வம்!

ஆன்மிக கட்டுரைகள் கட்டுரைகள்

daily one veda vakyam 2 5
daily one veda vakyam 2 5

76. ஒன்றே தெய்வம்!

தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்  

“ஏகோ தேவ: சர்வபூதேஷு கூட:” – கோபாலோத்தர தாபின்ய உபநிஷத்.
“ஒரே கடவுள் அனைத்து உயிர்களிலும் மறைந்திருக்கிறான்”

அனைத்து உயிர்களிடமும் மறைவாக இருப்பது ஒரே கடவுள் என்பதுபாரதிய சித்தாந்தம். தெய்வம் என்ற சொல்லுக்கு ஒளி வடிவினர் என்ற பொருள் உண்டு. எது மூலமோ அது ரகசியமாக இருக்கும். ஸ்தூலப் பார்வைக்கு தென்படாது. மரம் கண்ணுக்குத் தென்படும். வேர் தென்படாது. கட்டடத்தைப் பார்க்கலாம். அஸ்திவாரத்தை பார்க்க முடியாது. கட்டட நிர்மாணம் பற்றி அறியாத முட்டாள் அஸ்திவாரமே இல்லை என்ற வாதித்தாலும் ‘இருந்தால் காட்டுங்கள்’ என்று கோபித்தாலும் காட்ட இயலாது.

அதேபோல் மின்சாரத்தைக் கூட கண்ணால் பார்க்க முடியாது. மின்விசிறி போன்றவற்றின் மூலம் அதன் இருப்பை அறியலாம். உலகிற்கு தொடர்புடைய அம்சத்திலேயே  இத்தனை தென்படாதவை உள்ளன. அவற்றைத் தகுந்த விஞ்ஞான சோதனைகள் மூலம் அடையாளம் காணமுடியும்.

பஞ்சபூதங்களுக்கும் அவற்றோடு கூடிய ஸ்தாவர ஜங்கமங்களுக்கும் கூட ஒரே சைதன்யமே ஆதாரம். உலகில் வேறுபாடுகள் இருந்தாலும் அதன் சைதன்யத்தில் மட்டும் ஏகத்துவமே உள்ளது. ஒரே மின்சக்தி, மின்விசிறியில் காற்றாக, மின்விளக்கில் ஒளியாக, வேறொரு கருவியில் ஒலியாக வெளிப்படுவது போல ஒரே சைதன்யம் பல்வேறு இடங்களில் வெவ்வேறுவிதமாக வெளிப்படுகிறது.

vishnu
vishnu

கடவுள் ஒருவரே! ஆனால் அவருடைய சக்திகள் அனேகமாக இயற்கையில் வியாபித்து உள்ளன. அவையனைத்திலும் அந்தர்யாமியாக ஒரே கடவுள் உள்ளார். ‘ஏக’ என்ற சொல்லே பாரதிய சம்பிரதாயங்களுக்கும் தத்துவம் ஞானம் யோகம் போன்ற வழிமுறைகளுக்கும் சமன்வயத்தை காட்டுகிறது. யார் எவ்வழியை கடைபிடித்தாலும் அனைவரும் ‘ஏக’ தெய்வ உபாசகர்களே!

பாரத தேசத்தில் படிப்பறிவு இல்லாதவன் கூட கடவுள் எங்கே இருக்கிறார் என்று கேட்டால் எங்கும் நிறைந்துள்ளார் என்று உடனே பதில் அளிப்பான். அத்தனை தூரம் வேதாந்த உண்மை பாரதிய ஜாதியின் நரம்புகளில் ஜீரணமாகி உள்ளது.

மய சர்வமிதம் ப்ரோதம் சூத்ரே மணிகணா இவ” – மணி மாலையில் உள்ள நூலினைப் போல சகலத்திற்கும் நானே ஆதாரம் என்பது ஸ்ரீகிருஷ்ண வசனம்.

மிகப் பெரும் சக்தி எப்போதும் மறைந்தே இருக்கும். சூட்சுமமாகவே விளங்கும். பூமியைவிட நீர் சூட்சுமம். அதைவிட அக்னி சூட்சுமம்.  அவ்விதம் கிரமப்படி வாயு, ஆகாயம், பிராணன் ஒன்றைவிட மற்றொன்று சூட்சுமம். எல்லாவற்றையும்விட சூட்சுமத்தில் எல்லாம் சூட்சுமம் தெய்வம். அதனையே ஆத்மா என்கிறோம். இது தேச கால எல்லைக்குள் அடங்கியிருப்பதாக பார்த்தால் அது தனி மனித சுபாவம். அந்த எல்லையைத் தாண்டி தரிசித்தால் அது பாரமார்த்திக தரிசனம். 

கங்கை நதியில் பானையால் நீர் முகந்தால் ஒரு பானை நீர் என்போம்.  அதுவே ஜீவ பாவனை. அந்த நீரையே கங்காஜலம் என்றும் கூறலாம். அதாவது உடல்களில் பிரகாசிக்கும் தெய்வ பாவனை.  இவ்வாறு தரிசிப்பது சரியானது.

பாரதிய வேதாந்த தரிசனங்களுக்கு மூல சூத்திரம் இந்த ஏக தத்துவமே. இந்த சூத்திரத்தால் நம் தேசத்தின் தரிசனங்கள் அனைத்தையும் சமன்வயப்படுத்தும் உபநிஷத்துகளை உலகிற்கு அளித்தார்கள் மகரிஷிகள்.

தினசரி ஒரு வேத வாக்கியம்: 76. ஒன்றே தெய்வம்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply