ஆதிசங்கர பகவத் பாதரின் அவதார தினத்தில்..!

ஆன்மிக கட்டுரைகள் கட்டுரைகள்

sankarar kanakadara 87" srcset="https://www.deivatamil.com/wp-content/uploads/2021/05/e0ae86e0aea4e0aebfe0ae9ae0ae99e0af8de0ae95e0aeb0-e0aeaae0ae95e0aeb5e0aea4e0af8d-e0aeaae0aebee0aea4e0aeb0e0aebfe0aea9e0af8d-e0ae85.jpg 696w, https://www.deivatamil.com/wp-content/uploads/2021/05/e0ae86e0aea4e0aebfe0ae9ae0ae99e0af8de0ae95e0aeb0-e0aeaae0ae95e0aeb5e0aea4e0af8d-e0aeaae0aebee0aea4e0aeb0e0aebfe0aea9e0af8d-e0ae85-3.jpg 300w, https://www.deivatamil.com/wp-content/uploads/2021/05/e0ae86e0aea4e0aebfe0ae9ae0ae99e0af8de0ae95e0aeb0-e0aeaae0ae95e0aeb5e0aea4e0af8d-e0aeaae0aebee0aea4e0aeb0e0aebfe0aea9e0af8d-e0ae85-4.jpg 625w" sizes="(max-width: 696px) 100vw, 696px" title="ஆதிசங்கர பகவத் பாதரின் அவதார தினத்தில்..! 1" data-recalc-dims="1">
sankarar kanakadara

கட்டுரை: கே.ஜி.ராமலிங்கம்

இன்று ஆதிசங்கர பகவத் பாதர் அவதரித்த தினம். ஒவ்வொரு கிராமங்களிலும் வெகு விமரிசையாக கொண்டாடுவார்கள், அன்று நடக்கும் விஷேசமான ஒன்று தான் சமஷ்டி உபநயனம். நோய்த் தொற்று காரணமாக சென்ற ஆண்டு மற்றும் இந்த ஆண்டு சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

உலக மக்கள் அனைவரும் இந்த நோய்த் தொற்றிலிருந்து விடுபட்டு ஷேமமாக இருக்க வேண்டி இந்த சங்கர ஜெயந்தி நன்னாளில் ஸ்ரீ ஆதிசங்கரர் பாதம் பணிவோம்….

“ஸ்மிருதி ஸ்மிருதி புராணாணாம் ஆலயம் கருணாலயம், நமாமி பாத சங்கரம் லோக சங்கரம்”

புனரபி ஜனனம் புனரபி மரணம்

மதரீதியான குழப்பங்கள் உச்சத்தில் இருந்த ஒரு காலகட்டத்தில் தான் ஸ்ரீ சங்கரரின் அவதாரம் நிகழ்ந்தது.

தவறான சிந்தாந்தங்களைப் பரப்பி மக்களை திசை திருப்பும் முயற்சிகள் நடைபெற்று வந்த வேளை அது. அதர்மம் தலை தூக்கியது. தர்மம் நிலை குலைந்தது.

ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா வாக்குக் கொடுத்த ‘சம்பவாமி யுகே யுகே’ வுக்கு அவசியமும் அவசரமும் ஏற்பட்டது. அப்போது இந்தப் புண்ணிய பூமியில் சங்கரர் அவதரித்தார்.

முப்பத்திரண்டே வயதுக்குள் பாரத தேசத்தை மும்முறை வலம் வந்து, சீடர்கள் பலரைத் உருவாக்கி, ஷண்மதங்களை ஸ்தாபித்து,
காவிய நூல்கள் பல படைத்து, உபநிடதங்கள், பிரம்ம சூத்திரங்கள், பகவத் கீதைபோன்ற மகா காவியங்களுக்கு பாஷ்யங்கள் எழுதி பல நூற்றாண்டுகள் பல கடந்துவிட்ட பின்னரும் தலைசிறந்த துறவியாக, ஒப்பற்ற ஞான குருவாகப் போற்றப்பட்டு வரும் புண்ணிய புருஷர் ஸ்ரீ சங்கரர்.

ஆர்யாம்பா வயிற்றில் சிசுவாக கேரள தேசத்தில் திருசிவப்பேரூர் என்ற திருச்சூருக்குத் தென்கிழக்கே முப்பத்திரண்டு மைல் தொலைவில் இருக்கிற சிறிய கிராமம் காலடி. இங்கே, திருமணம் முடிந்து வருடங்கள் பல கடந்துவிட்ட பின்னரும் ‘இன்னும் புத்திர பாக்கியம் கிடைக்கவில்லையே’ என்ற குறை சிவகுரு ஆர்யாம்பா தம்பதியை வாட்டியது. இருவரும் சிவபெருமானை பூஜிக்க, கருணை கொண்ட பரமசிவன், சிவகுருவின் கனவில் தோன்றுகிறார். “அந்தணரே… உலகம் முழுவதையும் உண்மையாக உணர்ந்தவனும், எல்லா நற்குணங்களுடன் விளங்குபவனும், ஆனால் நீண்ட ஆயுள் இல்லாதவனாக ஒரு புதல்வன் உமக்கு வேண்டுமா அல்லது இதற்கு மாறாக நீண்ட காலம் நிலைத்திருக்கும் நூறு புதல்வர்கள் வேண்டுமா?” என்று வினவுகிறார்.

“தங்கள் சித்தம் எங்கள் பாக்கியம்..” என்கிறார் சிவகுரு. “சரி.. என்னையே ஒரு புதல்வனாக அருளுகிறேன். ஆனால் பூமியில் அவன் பதினாறு வயது வரையில்தான் வாழ்வான்.. என்று சொல்லிவிட்டு மறைந்து விட்டார் பரமேஸ்வரன்.

ஐஸ்வர்யமான தேஜஸ் ஆர்யாம்பாவின் வயிற்றில் சிசுவாக உருக்கொண்டது. பரம புண்ணியமான அந்த அவதார காலம் ஒரு நந்தன வருஷத்தில் சுத்த பஞ்சமியில் சூரியன் நடு மத்தியான உச்சியிலிருக்கும் வேளையில் ஏற்பட்டது. அன்று சிவபெருமானின் நட்சத்திரமான திருவாதிரை. ஸ்ரீ பார்வதிதேவி, சுப்ரமணியனைப் பெற்றது போல் தங்கமான புதல்வனை ஈன்றெடுத்தாள் ஆர்யாம்பாள்.

இந்த பூவுலகில் தர்மத்தை நிலை நிறுத்த திருவுருக் கொண்டார் சங்கரர். குருகுலவாச காலத்தில் குருவுக்கு சேவகம் புரிந்து கொண்டு, சிரத்தையாக வீடு வீடாகச் சென்று பிட்க்ஷை எடுத்து வந்தார் சங்கரர்.

அப்படி செல்லும்போது ஒருநாள் ஓர் ஏழை அந்தணர் வீட்டுக்குச் சென்றார். அந்தச் சமயத்தில் அந்தணர் வீட்டில் இருக்க வில்லை. தேவையான உணவுப் பொருள்களைத் தேடி வெளியே சென்றிருந்தார். பிக்ஷை இடுவதற்கு வீட்டில் எத்தகைய உணவும் இல்லை. அந்தணரின் மனைவி தேடிய போது ஒரே ஒரு நெல்லிக்கனி மட்டும் கிடைத்தது. அதுவும் சற்றே அழுகியிருந்தது. எடுத்து வந்தாள்.

sankarar 6
sankarar 6

“மன்னிக்க வேண்டும். என்னிடம் இப்போது இருப்பது இந்த நெல்லிக்கனி மட்டும்தான்…” என்று உடைந்த குரலில் கூறிக்கொண்டே பாலசங்கரரின் பிட்க்ஷைப் பாத்திரத்தில் அதை பக்தியுடன் இட்டாள் அந்தணரின் மனைவி. அவள் கண்களில் தாரை தாரையாக நீர். கருணை உள்ளம் படைத்த சங்கரர், அவளுடைய பக்தி சிரத்தையை உணர்ந்தார்.

பொருளில் தரித்திரமாயிருந்தாலும் அவளுடைய விசாலமான மனசும், அதில் பொங்கிய அன்பும் புரிந்தது. அந்தக் குடும்பத்தின் வறுமையைப் போக்கி சுபிட்சத்தை அருள செல்வம் தரும் திருமகளான திருமகளைத் துதித்தார். ஒரு ஸ்தோத்திரம் பாடினார்

பகவான் சங்கராரின் வாக்கிலிருந்து வந்த முதல் ஸ்துதி இது. அதுதான் ‘கனக தாரா ஸ்தவம்.’

தந்தை சிவகுரு காலமாகிவிட்டதும் தாய் ஆர்யாம்பாவுக்கு ஆதரவாக கொஞ்சம் நாட்கள் அவருடனே இருந்து வந்தார் சங்கரர். வயோதிக அம்மாவுக்கு வேண்டிய பணிவிடைகள் செய்து வந்தார்.

தாயன்பும் பகவத்பாதரும்

ஒரு நாள் ஆர்யாம்பா உடல் நலம் குன்றி மிகவும் சோர்ந்திருந்தாள். ஆற்றில் குளிக்க சென்று, திரும்பிவரும் வழியில் மயக்கமுற்று விழுந்து விட்டாள். ஓடோடி வந்த சங்கரர் அன்னையை கைத்தாங்கலாக வீட்டுக்கு அழைத்து வந்தார். “அம்மா.. ஏன் திடீர் மயக்கம்? உடம்புக்கு என்னவாயிற்று?”

“சங்கரா… நம் காலடிக்கு சற்று தொலைவில்தான் ஆல்வாய்ப்புழை ஓடிக் கொண்டிருக்கிறது. முன்னே மாதிரி தினமும் அங்கே போய் ஸ்நானம் செய்ய முடிவதில்லை…” என்று வருத்தம் கலந்த குரலில் சொன்னாள் ஆர்யாம்பா.

பிரார்த்தனை செய்தார் சங்கரர். கடவுள் அவதாரம் தான் என்றாலும் பக்தராகவே வாழ்ந்த அவதாரம் இது. முன்பு ஏழை குடும்பத்துக்காக மகாலட்சுமியிடம் வேண்டியதும் இந்த வகையில் தானே…

“அம்மா உடம்பு குணமடைந்து நதிக்குப் போய் ஸ்நானம் செய்ய வேண்டும் என்ற பிரார்த்தித்தால் அவள் ஒருத்திக்கு மட்டுமே நன்மை செய்ததாகிவிடும். அதற்கு பதில், எங்கேயோ ஜனநடமாட்டம் இல்லாத காட்டு வழியே போய்க் கொண்டிருக்கும் புண்ணிய நதியை இந்தக் கிராமத்தின் வழியாகப் போகும் படி பிரார்த்தனை செய்தால் எல்லா மக்களுக்கும் பயனுள்ளதாக அமையுமே…” என்று நினைத்தார் சங்கரர். அவர் வேண்டுதல் பலித்தது. அற்புதம் நிகழ்ந்தது. பூர்ணா என்ற பெயருடைய அந்த நதி கிராமத்துக்குள் புகுந்து ஆர்யாம்பாவின் வீட்டு அருகிலேயே ஓடத் தொடங்கியது.

அவதார காரணம்

தனது அவதாரத்தின் காரண காரியங்கள் சங்கரரின் அடி மனத்தில் சுழன்று கொண்டே இருந்தது. அம்மாவை விட்டு, வீடு வாசலைத் துறந்து, துறவறம் மேற்கொள்ளத் தீர்மானித்தார். ஒரு நாள் பூர்ணா நதியில் குளிக்க இறங்கினார். அப்போது அவருடைய ஒரு காலை ஒரு முதலை கவ்விக்கொண்டது. கவ்வி, ஆழத்துக்கு இழுக்கவும் தொடங்கியது.

மாத்ரு பஞ்சகம்

உடன் வந்த அவரது அம்மாவால் அவரைக் காப்பாற்ற இயலவில்லை. தாயின் அனுமதி பெற்று, துறவறத்துக்கான தீட்சை மந்திரத்தை வேகமாகச் சொல்லத் தொடங்கினார்.
முதலை அவரை விடுவித்தது. உடனடியாகத் தன் பந்தம் துறந்து சந்நியாச ஆஸ்ரமம் பெற்றுக் கொண்டார் சங்கரர். “சங்கரா… என்னைத் தனியா விட்டுட்டா நீ போகப்போறே? என் கடைசிக் காலத்தில்கூட உன்னைப் பார்க்காமல் தான் என் உயிர் பிரியணுமா?” என்று கண்களில் நீர் மல்க, விம்மலுக்கிடையே கேட்டார் தாய். “கவலைப்படாதே அம்மா. பகலிலோ இரவிலோ எந்த நேரமானாலும் நீ என்னை நினைத்த மாத்திரத்திலேயே என்னுடைய கடமைகள் அனைத்தையும் விட்டு விட்டு நான் ஓடோடி வந்துவிடுவேன்…ஒருவேளை நீ உயிர் இழக்க நேர்ந்தால் என் கையினாலேயே உனக்கு ஈமக் கிரியைகள் செய்வேன்…” என்று உறுதியளித்தார் சங்கரர்.

sankara 8
sankara 8

அதன் படியே வெகு தூரத்திலிருந்தும் தன் தாயின் மீது படரும் மரணத்தின் நிழலை முன்னறிந்து சென்றார். இறந்த தாய்க்கு மகன் செய்ய வேண்டிய அத்தனை கடமைகளையும் செய்து முடித்தார்.

பந்தங்களில் மிக உயர்ந்தது தாய் எனும் பந்தம். அதனை எவராலும் உதற இயலாது. இதற்கு விதிவிலக்கு என்பதே கிடையாது. உலக பற்றை துறந்த பரமேஸ்வலனின் ஸ்வரூபமான ஆதிசங்கரரையும் அது விட்டு வைக்கவில்லை. தன் தாயின் தகனத்தை முடித்த மஹான் அப்பொழுதான்தான் தன் தாயிற்கு அவர்களின் மரணத்தறுவாயில் தான் ஆற்ற வேண்டிய கடமைகளில் ஒன்றை கூட செய்யவில்லை என்பதை உணர்கிறார்.

அந்த வேதனையின் வடிகாலாக கங்கையென பிரவாகிக்கிறது மாத்ருகா பஞ்சகம் எனும் ஐந்து ஸ்லோகங்கள். இவற்றால் தான் செய்ய தவறிய செயல்களை சுட்டிக்காட்டி தாயின் மன்னிப்பை கோருகிறார். இந்த ஸ்லோகங்களால் ஓர் தாய் தன் கர்பகாலத்திலும், பிரசவிக்கும் தருணத்திலும், அதற்கு பின்பு குழந்தையை ஆளாக்கும் நேரத்திலும் ஏற்கும் துன்பங்களை அழகாக விளக்கி, அவற்றிற்கு தான் பிரதியுபகாரமாக எதுவும் செய்யவில்லை என்று கூறி அதனை மன்னித்து தன்னை ரக்ஷிக்குமாறு வேண்டுகிறார். அவரின் பாதங்களை சரணடைகிறார்.

அந்த ஐந்து ஸ்லோகங்களை இப்பகுதியில் காண்போம். அதனை என் சிற்றறிவிற்கு எட்டியவரை விளக்கம் அளித்துள்ளேன். இவை ஐந்தும் ஐம்பெரும் சாகரங்கள். இவற்றின் ஆழம் காண இயலாது. அடியேன் இதனை மிக மிக மேலோட்டமாக விளக்கியுள்ளேன். தவறுகளை மன்னித்தருளுமாறு வேண்டுகிறேன்…

பந்தங்களில் மிக உயர்ந்தது தாய் எனும் பந்தம். அதனை எவராலும் உதற இயலாது. இதற்கு விதிவிலக்கு என்பதே கிடையாது. உலக பற்றை துறந்த பரமேஸ்வரனின் ஸ்வரூபமான ஆதிசங்கரரையும் அது விட்டுவைக்கவில்லை. தன் தாயின் தகனத்தை முடித்த மஹான் அப்பொழுதான்தான் தன் தாயிற்கு அவர்களின் மரணத் தருவாயில் தான் ஆற்ற வேண்டிய கடமைகளில் ஒன்றை கூட செய்யவில்லை என்பதை உணர்கிறார். அந்த வேதனையின் வடிகாலாக கங்கையென பிரவாகிக்கிறது மாத்ருகா பஞ்சகம் எனும் ஐந்து ஸ்லோகங்கள்.

இவற்றால் தான் செய்ய தவறிய செயல்களை சுட்டிக்காட்டி தாயிடம் மன்னிப்பை கோருகிறார்.

இந்த ஸ்லோகங்களால் ஓர் தாய் தன் கர்பகாலத்திலும், பிரசவிக்கும் தருணத்திலும், அதற்கு பின்பு குழந்தையை ஆளாக்கும் நேரத்திலும் ஏற்கும் துன்பங்களை அழகாக விளக்கி, அவற்றிற்கு தான் பிரதியுபகாரமாக எதுவும் செய்யவில்லை என்று கூறி அதனை மன்னித்து தன்னை ரக்ஷிக்குமாறு வேண்டுகிறார். அவரின் பாதங்களை சரணடைகிறார்.

அந்த ஐந்து ஸ்லோகங்களை இப்பகுதியில் காண்போம். இவை ஐந்தும் ஐம்பெரும் சாகரங்கள். இவற்றின் ஆழம் காண இயலாது.

1. ஆஸ்தாம் தாவதியம் ப்ரஸ¨திஸமயே துர்வாரசூலவ்யதா
நைருச்யம் தநுசோஷணம் மலமயீ சய்யாச ஸாம்வத்ஸரீ |
ஏகஸ்யாபிந கர்பபாரபரண க்லேசஸ்ய யஸ்ய க்ஷம :
தாதும் நிஷ்க்ருதிமுந்நதோsபி தநய தஸ்யை ஜநன்யை நம:||

தாயே, நான் கருவாக உங்கள் கர்பத்தில் இருந்த சமயம் எத்தனை வேதனை அடைந்தீர்கள். மசக்கையால் வாந்தி எடுத்து சிரமபட்டீர்கள். சிசு ஆரோக்கியமாக வளர காஷாயத்தையும், மருந்துகளையும் முகம் சுளிக்காமல் உட்கொண்டீர்கள். சுவையான உணவை உண்ண இயலாது நாவை அடக்கி, வாயை அடக்கி, ருசி பாராமல் பத்திய உணவை ஏற்றீர்கள். தூங்கவும் இயலாது, விழித்திருக்கவும் இயலாது சிரமப்பட்டீர்கள். பிரசவ நேரத்தில் தாங்கொணா வேதனையில் அரற்றினீர்கள். சிசுவாக நான் தங்கள் அருகே விஸர்ஜனம் செய்ய, தாங்களோ முகம் சுணங்காமல் என்னை அள்ளியெடுத்து சுத்தம் செய்தீர்கள். நான் வளர வளர என் நலனுக்காக தாங்கள் பல தியாகங்களை செய்தீர்கள். இவை யாவற்றிற்கும் என்னால் ஒரு பிரதியுபகாரம் செய்ய இயலாது. அந்த பரமேஸ்வரனே மகனாக பிறந்தாலும் செய்ய முடியாது. தங்கள் திருவடிகளில் என் சிரசை வைத்து நமஸ்காரம் செய்வதேயன்றி வேறொன்றும் செய்யும் வகையறியேன். இதனை ஏற்று என்னை ரக்ஷிக்க வேண்டும்.

2.குருகுலமுபஸ்ருத்ய ஸ்வப்ன காலே து த்ருஷ்ட்வா
யதிஸமுசித வேஷம் ப்ராருதோ மாம் த்வமுச்சை 😐
குருகுலமத ஸர்வம் ப்ராருதத்தே ஸமக்ஷம்
ஸபதி சரணயோஸ்தே மாதரஸ்து ப்ரணாம :||

அன்னையே, நான் குருகுலத்தில் இருந்த சமயம் ஓர் நாள் விடியற்காலையில் நான் துறவறம் ஏற்றதாக கனவு கண்டு அங்கு வந்தீர்கள். அவ்வமயம் நான் குருசேவை நிமித்தமாக வெளியே சென்றிருக்க என்னை காணாமல் தவித்தீர்கள். நான் தங்கள் அனுமதியின்றி துறவறம் ஏற்று சென்றுவிட்டேனோ என்ற பயத்தில் அழுதீர்கள். தாங்கள் அழுவதை கண்டு குருகுலமே அழுதது. நான் வந்தவுடன் என்னை கண்டு சமாதானம் அடைந்தீர்கள். அந்த தாய்பாசத்திற்கு ஈடாக எதை தர இயலும். எந்த ஒரு செயலாலும் அதை ஈடு செய்ய முடியாது. அதற்காக தங்கள் பாதார விந்தங்களுக்கு என் நமஸ்காரத்தை சமர்ப்பிக்கிறேன். அன்போடு அதனை ஏற்று என்னை காத்தருளவேண்டும் என கூறுகிறார்.

3.ந தத்தம் மாதஸ்தே மரணஸமயே தோய மபிவா
ஸ்வதாவா நோதேயா மரணதிவஸே ச்ராத்தவிதிநா |
ந ஜப்தோ மாதஸ்தே மரணஸமயே தாரகமநு:
அகாலே ஸம்ப்ராப்தே மயிகுரு தயாம் மாதரதுலாம் ||

தாயே, நான் மூன்று தவறுகள் செய்துள்ளேன். முதலாவதாக, தங்கள் மரணத்தருவாயில், தங்களின் உலர்ந்த தொண்டைக்கு கங்கா ஜலமோ, துளசி தீர்த்தமோ தரவில்லை. ஓர் சத்புத்ரன் தன் தாயையோ, தந்தையையோ, மரணத்தருவாயில் தன் மடியில் ஏந்தி, வாயில் கங்கா ஜலத்தையோ, துளசி தீர்த்தத்தையோ தரவேண்டும். நான் காசியில் பிரவாகிக்கும் கங்கை கரையில் இருந்தேன். ஆயின் தங்களுக்கு ஒரு வாய் கங்கா ஜலம் தந்தேனில்லை. இரண்டாவதாக, நான் பிரம்மசாரியாகவோ, கிரஹஸ்தனாகவோ இருந்தால் தங்களுக்கு உரிய திதியில், ஸ்வதா எனும் ஹவிஸையோ, பிண்டப்பிரதானமோ செய்யமுடியும். என் இந்த சந்நியாசத்தால் அதையும் செய்ய இயலாது. மூன்றாவதாக, தங்களுக்கு கர்ண மந்திரமான தாரக மந்திரமாகிய ராம நாமாவை கூறவில்லை. காசி க்ஷேத்திரத்தில் பலர் முக்தியடைய அனவரதமும் ராமநாம ஜபம் செய்ய இயன்ற என்ளால் தங்களுக்கு கர்ணமந்திரத்தை கூறவில்லை. இந்த மூன்று தவறுகள் புரிந்த என்னை தாங்கள் கருணை கூர்ந்து மன்னித்து என் இறுதி காலத்தில் ரக்ஷிக்க வேண்டும் என வேண்டுகிறார். இந்த தவறுகளுக்காக நான் தங்கள் பாத கமலங்களில் சிரசை வைத்து நமஸ்கரிக்கிறேன். ஏற்று கொள்ள வேண்டும் என்று கூறுகிறார்.

4.முக்தாமணி ஸ்த்வம் நயனம் மமேதி
ராஜேதி ஜீவேதி சிரம் ஸுதத்வம் |
இத்யுக்தவத்யா ஸ்தவ வாசி மாத:
ததாம்யஹம் தண்டடுலமேஷ சுஷ்கம் ||

தாயே, என்னை, முத்தே, மணியே கண்ணே என பலவாறு கொஞ்சி மகிழ்ந்தீர்கள். நல்ல பழக்கங்களை தங்கள் அமுத மொழிகளால் புகட்டினீர்கள். பலவிதமாக பாராட்டி ஆனந்தம் அடைந்தீர்கள். அத்தகைய அன்பான தங்களுக்கு என்னால் கொடுக்க முடிந்தது இந்த காய்ந்த வாய்க்கரிசி மட்டுமே. இதனை ஏற்று என்னை ஆசீர்வதிக்க வேண்டும் என கதறுகிறார்.

5.அம்பேதி தாதேதி சிவேதி தஸமின்
ப்ரஸ¨திகாலே யதவோச உச்சை 😐
க்ருஷ்ணேதி கோவிந்த ஹரே முகுந்தே –
த்யஹோ ஜநந்யை ரசிதோsயமஞ்ஜலி :||

தாயே, தாங்கள் பிரசவ வலியால் துடிக்கும் பொழுது கோவிந்தா கோபாலா என அரற்றினீர்கள். அந்த துன்பங்களுக்கு ஈடாக என்னால் ஒன்றும் செய்ய இயலாத நிலையில் தங்கள் திருவடித்தாமரைகளுக்கு என் சிரசை தங்கள் பாதங்களில் தண்டனிட்டு அஞ்சலி செய்கிறேன். கருணாசாகரமான தாங்கள் அதனை ஏற்று என் தவறுகளை க்ஷமித்து அருள வேண்டும் என பிரார்த்திக்கிறார்.

இந்த ஐந்து ஸ்லோகங்களால் சங்கரர் தாயன்பின் மகோன்னத்தை விளக்குகிறார். பகவத்பாதர் போன்ற மஹானே தாயன்பிற்கு தன்னால் ஈடு செய்ய இயலாது என்று கூறினால் பாமரர்களான நம்மால் என்ன செய்ய இயலும். நாம் செய்ய கூடியதெல்லாம் நம் பெற்றோர்களின் கண்கலங்காமல் அவர்களை பேணி காப்பது ஒன்றே. பெற்றோரை பேணி காப்பதால் வாழ்வில் ஏற்றம் பெறலாம்.

மனிஷா பஞ்சகம்

சீடர்கள் பின் தொடர, கங்கையை நோக்கி சங்கரர் சென்று கொண்டிருக்க, சற்றுத் தொலைவில் அக்காலத்தில் தீண்டத்தகாதவராக கருதப்பட்ட ஒருவர் வந்து கொண்டிருந்தார். அவருக்குப் பரிவாரங்களாக நான்கு வேட்டை நாய்கள். தனக்குமிக அருகில் அவர் வந்து விட்டதை உணர்ந்தார் சங்கரர், “விலகிப்போ.. விலகிப் போ..” என்றார்.

அவர் நின்றார். “எதைவிட்டு எது விலகிப் போக வேண்டும் என்று கூறுகிறாய்? பூத உடலை விட்டு நான் விலக வேண்டுமா அல்லது ஆத்மாவை விட்டு விலக வேண்டுமா? பூத உடல் என்றால் அது அர்த்தமற்றது. காரணம், ஊன் உடல்கள் எல்லாமே ரத்தம், சீழ், எலும்பு, சதை போன்ற பொருள்களால் ஆனவைதான்.

அப்படியிருக்க எதற்காக ஒரு உடலைவிட்டு இன்னொரு உடல் விலகி செல்ல வேண்டும்? ஆன்மாவை விட்டு விலக வேண்டும் என்றால் அது இல்லாத செயல். எல்லாமாகவும், எங்கும் இருக்கும் ஆத்மா எதை விட்டு விலகி வேறு எங்கே செல்ல இயலும்?”

அவர் தொடர்ந்தார்.

“இந்த நதியில் பிரதிபலிக்கும் சூரியனுக்கும் சேரிக்குட்டையில் பிரதிபலிக்கும் சூரியனுக்கும் வேற்றுமை கிடையாதே! ஒரு தங்கக் கிண்ணத்துக்கு நடுவிலுள்ள ஆகாயத்துக்கும், ஒரு மண் குடத்துக்குள் இருக்கும் ஆகாயத்துக்கும் வேற்றுமை உண்டா என்ன?” என்று பேசிக்கொண்டே போகவும், ஞானப் பூர்வமான இந்த வார்த்தைகைளை அந்த எளிய மனிதர் கூறியதைக் கேட்ட சங்கரர்,

“தாங்கள் இத்தனை விஷய ஞானம் மிக்கவரா! இப்படிப்பட்ட ஞானியாக இருக்கும் எவரையும் குருவாக போற்றுபவன் நான். தங்களை ஆச்சாரிய ஸ்தானத்தில் வைத்து நமஸ்கரிக்கிறேன்..” என்று அந்த மனிதரை நமஸ்கரித்த சங்கரர், அப்போது பாடிய ஐந்து சுலோங்கள்தான் தான் மனீஷா பஞ்சகம்.

பஜ கோவிந்தம்

சங்கரர் காசியில் இருந்தபோது ஒருநாள் தன் சீடர்கள் பதினான்கு பேருடன் வீதி வழியே சென்று கொண்டிருந்தார். அப்போது முதியவர் ஒருவர் வடமொழி இலக்கணச் சூத்திரங்களையும் அதன் விதிகளையும் மனப்பாடம் செய்து ஒப்புவித்துக் கொண்டே சென்று கொண்டிருந்தார். வறட்டு இலக்கணத் தேர்ச்சிக்காக கஷ்டப்பட்டுப் பிரயத்தனம் செய்துகொண்டிருந்த அந்த முதியவர் மீது சங்கரருக்குக் கருணை பிறந்தது.

“அரிதான மனிதப் பிறவியும் அறிவும் நமக்கும் பிற புலன் பொறிகளும் பெற்றுள்ள நீங்கள் ஏன் இப்படி பயனற்ற செயலில் வாழ்நாளைக் கழித்து வீணடித்துக் கொண்டிருக்கிறீர்கள்?

நீங்கள் இப்படி இலக்கணத்தை வைத்துக் கொண்டு கஷ்டப்படுவதற்குப் பதிலாக, இறைவனான கோவிந்தனிடத்தில் பக்தி, தியானம் செய்வதிலும், அவன் திருநாமங்களைப் பஜனை செய்வதிலும், உங்கள் நேரத்தைச் செலவழித்தால் எளிதில் பிறவிப்பயன் பெற்றுவிடலாமே!” என்று அறிவுரை கூறினார் சங்கரர். அதைத் தொடர்ந்து சங்கரர் இயற்றியதுதான் புகழ்மிக்க பஜகோவிந்தம்

மாத்வீய சங்கர விஜயம் எனும் நூலில், கோவிந்த பகவத் பாதரின் குறிப்புகள் உள்ளன. ஆதிசங்கரர், காலடியை நீங்கி, நர்மதை ஆற்றை அடைந்த போது, கோவிந்த பகவத் பாதர், நர்மதை ஆற்றாங்கரையில் சமாதி நிலையில் இருந்தார். அந்நேரத்தில், நர்மதை ஆற்றில் எதிர்பாராது பெருக்கெடுத்த வெள்ளத்தை தடுக்க, தன் கமண்டலத்தைக் கொண்டு தடுத்து, சமாதி நிலையில் இருந்த கோவிந்த பகவத் பாதரின் உயிரைக் காத்தார்.

ஆதிசங்கரரை நோக்கி நீ யார் எனக் கேட்டார். அதற்கு சங்கரர் அத்வைத தத்துவத்தில் செய்யுள் நடையில் சில சுலோகங்களில் நான் யார் என்பதை விளக்கியதை கேட்ட கோவிந்த பகவத் பாதர், சங்கரரை தன் சீடராக ஏற்றுக் கொண்டார்.

கோவிந்த பகவத் பாதரின் ஆணைப்படி, சங்கரர், உபநிடதம், பிரம்ம சூத்திரம் மற்றும் பகவத் கீதை ஆகிய இந்து சமயத்தின் மூன்று அடிப்படை நூல்களுக்கு பாஷ்யம் எழுதி, அத்வைத வேதாந்தத்தை இந்தியா முழுவதும் தானும், தனது சீடர்கள் மூலமும் பரப்பினார்.

கோவிந்த பகவத் பாதரின் நினைவைப் போற்றும் வகையில், ஆதிசங்கரர் தான் எழுதிய பஜ கோவிந்தம் எனும் நூலில், குரு தோத்திரத்தில் கோவிந்த பகவத் பாதரின் பெருமைகளை விளக்கியுள்ளார்.

நர்மதை 54 சக்தி பீடங்களில் மூன்று பீடத்தை தன்னகத்தே கொண்டுள்ளது. இது உற்பத்தி ஆகும் இடம் தான் முக்கிய பீடம்.

தமது திக் விஜயத்தின்போது சங்கரர் வாதப்போர் புரிந்து வெற்றிவாகைச் சூடிய சந்தர்ப்பங்கள் எண்ணில் அடங்காதவை. இவரிடம் வாதம் புரிந்து தோல்வியுற்ற அபிநவகுப்தர் மனமுடைந்து போய் பகையுணர்வு அதிகமாகி அபிசார யாகம் என்ற யாகமொன்றை நடத்தி சங்கரரின் உடலில் பாதிப்பு ஏற்படுத்தினார்.

வைத்தியர்களால் கூட நிவர்த்தி செய்யமுடியாத கொடிய நோய் அவரைத் தாக்குகிறது. அவர் அனுபவிக்கும் வேதனையை சீடர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

“வியாதி, முன் ஜன்ம வினையின் பயன்.. அதை அனுபவித்துதான் தீர வேண்டும். இந்த ஜன்மத்தில் அனுபவிக்காவிடில் அடுத்த ஜன்மத்தில் இது தொடரும். பாவத்தின் பயனான வியாதி அந்தப் பாவம் நசித்தால்தான் நீங்கும்… இதற்கு வைத்தியம் செய்ய நான் தயாராக இல்லை..” என்றார் சங்கரர்.

சீடர்கள் சமாதானம் ஆகவில்லை. வற்புறுத்துகிறார்கள். வைத்தியர்கள் எல்லா திசைகளிலிருந்தும் வரவழைக்கப் படுகிறார்கள். பலனளிக்கவில்லை. நோய் தீவிரம் அடைந்தது. கனவில் சிவபெருமானின் அறிவுறுத்தலின்படி திருச்செந்தூர் சென்றார் சங்கரர்.

அங்கே பாம்பு ஒன்று தன் உடலை நெளித்து நெளித்துச்சென்று முருகப்பெருமானின் பாதங்களில் பூஜை செய்வதைக் கண்டார். புஜங்கம் என்றால் பாம்பு. இதையே அடிப்படையாகக்கொண்டு அந்த செந்திலாதிபனின் ஸ்தலத்தில் – “மயூராதி ரூடம் மகாவாக்ய கூடம், மனோஹாரி தேகம் மகச்சித்த கேஹம், மஹி தேவபாலம் மஹாவேத பாலம், மஹாதேவ பாலம் பஜே லோக பாலம்” ‘சுப்ரமணிய புஜங்கம்’ என்ற தலைப்பில் 33 பாடல்களைப் பாடி அருளினார்.

சங்கரருக்கு முப்பத்திரண்டு வயது பூர்த்தி யானது. வியாசரின் விருப்பப்படி கூட்டிக் கொண்ட பதினாறு வருஷமும் தீர்ந்துவிட்டது. தொடர்ந்து வந்த வைகாசியோடு சரீர யாத்திரையை முடித்து அகண்ட சைதன்யமாகிவிடத் தீர்மானித்தார் சங்கரர்.

முடிவாக ஒரு உபதேசத்தை அனுக்கிரகிக்கும்படி சீடர்களெல்லாம் அவரிடம் பிரார்த்தனை செய்துக் கொண்டார்கள். அதுதான் ‘ஸோபாந பஞ்சகம்.’

‘வேதோ நித்யம் அதீயதாம்…’ என்று ஆரம்பித்து, அடியிலிருந்து நுனிவரை செய்ய வேண்டிய அத்தனை சாதனா கிரமத்தையும் படிப்படியாக ஐந்தே ஸ்லோகங்களில் உபதேசித்தார் சங்கரர்.
கண்ணாடியின் உள்ளே பிரதிபிம்பம் தெரிகிறது. திலகமில்லாமல் அது பாழ் நெற்றியாகத் தெரிகிறது. திலகம் வைக்க வேண்டும் என்று தோன்றும் போது, கண்ணாடிக்குப் பொட்டு வைப்ப தில்லை? அப்படி வைத்தால் கண்ணாடிதான் அழுக்காகும்.

அதனால் பிரதிபிம்பத்துக்கு மூலமான மனிதருக்கு பொட்டு வைப்பார்கள். அப்படி, இந்த ஜீவலோகம் முழுவதும், ஏக சைதன்யம் மாயக் கண்ணாடியில் காட்டுகிற தினுசு தினுசான பிரதிபிம்பங்கள்தாம். நீயும் அப்படித்தான்.உனக்கு எதாவது நல்லது பண்ணிக்கொள்ள வேண்டுமென்றால் அது பொட்டு இட்டு அலங்காரம் பண்ணிக்கொள்வது மாதிரிதான். நேரே உனக்கே , அதாவது மாயையில் பிரதிபலித்து உண்டான உன் தேக, இந்திரியங்களுக்கே நீ நல்லது என்று ஒன்றை பண்ணிக் கொண்டால் அது கண்ணாடியில் கறுப்புப்பூசி அழுக்கு பண்ணும் காரியம்தான்.

ஹர ஹர சங்கர சிவ சிவ சங்கர
ஹர ஹர சங்கர சிவ சிவ சங்கர

ஆதிசங்கர பகவத் பாதரின் அவதார தினத்தில்..! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply