58. பகவானை அடையும் வழிகள்.
தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
“ஸ்ரத்தா பக்திர்த்யான யோகாத் அவேஹி” – கைவல்யோபனிஷத்.
“சிரத்தை, பக்தி, தியானம், யோகம் இவற்றால் பரபிரம்மத்தை அறியலாம்”
சிரத்தை, பக்தி, தியானயோகம்” என்று சிலர் தியான யோகத்தை ஒரே சொல்லாக வியாக்கியானம் செய்துள்ளார்கள். தியானம், யோகம் என்று இரு பதங்களாக பிரித்துப் பார்த்தால் இவை நான்கு ஆகிறது.
“சத்ப்ய:” என்றால் முதலில் சத்புருஷர்கள் மூலம் கடவுளை பற்றி கேட்டறிந்து அவற்றை சிரத்தை பக்தி தியானம் யோகம் இவற்றின் மூலம் அனுபவத்தில் உணர வேண்டும்.
சத் புருஷர்களால் என்றால் சாஸ்திரம் கூறியபடி வாழ்பவர்கள். சாஸ்திரத்தில் கூறியுள்ளதையே நமக்கு போதிப்பவர்கள். சாஸ்திர வாக்கியங்கள் சத்தியம் என்பதை அவர்கள் தம் வாழ்க்கையில் நிரூபித்து வருவார்கள். சத்புருஷர்களிடம் இருந்து உபதேசம் பெற்ற பின் சாஸ்திர வாக்கியங்கள் மீதும் குருநாதர் மீதும் ஆழ்ந்த விசுவாசமும் நம்பிக்கையும் ஏற்பட வேண்டும். அந்த அசையாத விசுவாசத்திற்கு ‘சிரத்தை’ என்று பெயர். அதில் மீண்டும் சந்தேகத்திற்கு இடம் இருக்காது.
‘சாஸ்திரம் கூறியுள்ளது… ஆனால் உண்மையில் அப்படி நடக்குமா?’என்று ஐயப்படக் கூடாது. அது சாஸ்திர வாக்கியம். ஆகவே அதனை நம்பி சாதனை செய்ய வேண்டும்.
சாஸ்திரம் கூறுவதை எடுத்து விளக்குவதால்தான் குரு வாக்கியதற்கு மதிப்பே தவிர சாஸ்திரத்திற்கு எதிராக குரு கூறினால், குரு கூறி விட்டார் என்பதற்காக அதை ஏற்க இயலாது. சாஸ்திரத்தில் கூறியுள்ள பரமாத்மாவிடம் விசுவாசமும், பரமாத்மா தொடர்பான சாதனா மார்க்கங்கள் மீது விசுவாசமும் ‘சிரத்தை’ எனப்படும். அதனால் முதலில் தேவையானது சிரத்தை.
அதன்பின் பக்தி. சிலர் உபநிஷத்துக்களில் பக்தி பற்றி குறிப்பிடவில்லை… அனைத்தும் ஞானமே என்பார்கள். அவ்வாறு கூறுவது வெறும் அஞ்ஞானமே. இப்போது கூறியுள்ளது கூட உபநிஷத்து வாக்கியமே. சிரத்தைக்குப்பின் பக்தி என்று கூறப்பட்டுள்ளது. அதாவது கடவுளைச் சரணடைதல். அது பிரேமையோடு கூடியதாக இருக்க வேண்டும். ‘ஸா பரானுரக்தி ரீஸ்வரே” என்று சாண்டில்ய மகரிஷி விளக்குகிறார். இப்படிப்பட்ட பிரேம பக்தியோடு பகவானை சரணடைய வேண்டும். அதுவே பக்தி எனப்படுகிறது.
இனி அடுத்து தியானம். மனதை அங்குமிங்கும் அலைய விடாமல் நிலையாக ஒரு பொருளின் மீது நிறுத்துதல். ஒரு பொருள் என்றால்… ஒன்றேயான பரமாத்மாவிடம் மனதை நிலைநிறுத்துவதற்கு தியானம் என்று பெயர்.
இந்த மூன்றும் வலிமை பெற்றால்தான் பகவத் அனுபூதி கிடைக்கும். இவை இல்லாமல் வெறும் சாஸ்திர வாக்கியங்களை மனப்பாடம் செய்து கொண்டிருந்தால் அது ஆடம்பர பேச்சில் முடியுமே தவிர அனுபவத்தில் வராது. சிரத்தை, பக்தி, தியானம் இவை இல்லாதவர் வேதாந்த வித்யையைப் புரிந்து கொண்டாலும், கற்பித்தாலும் பயனற்றதே!
அதன் பின் வருவது யோகம். “யோக: கர்மசு கௌசலம்”, “யோக: சித்தவ்ருத்தி நிரோத:” என்ற கீதாசார்யன் வாக்கியத்தையும்,
பதஞ்சலி யோக சூத்திரத்தையும் எடுத்துக்கொண்டால் மனதில் உள்ள எண்ணங்களை நெறிப்படுத்துவது யோகம் என்று அறியலாம்.
அதேபோல் நாம் செயல்களைச் செய்து வந்தாலும் அந்த கர்ம பலன்கள் நம்மை ஒட்த விடாமல் சுகத்திலும் துக்கத்திலும் அசையாத அந்தக்கரணத்தோடு விளங்குவது கூட யோகமே.
இவ்விதம் இந்த நான்கு வழி முறைகளோடு யார் குருநாதர் கூறியபடி சாதனைகளைச் செய்து வருவாரோ அவர் பரமாத்மாவை அனுபவத்தில் பெற முடியும் என்பது உபநிடதம் கூறும் அற்புதமான வாக்கியம்.
யோகம் என்னும்போது யமம் நியமம் ஆசனம் பிராணாயாமம் பிரத்யாகாரம் தாரணை தியானம் சமாதி எனாபதாக பதஞ்சலி கூறும் யோகத்தையும் அறிய வேண்டும். ஏனென்றால் யோக மார்க்கத்தில் நிலை பெறாவிட்டால் மனதிற்கு ஒருமுகத்தன்மை கிட்டாது. சித்தம் சுத்தமாகாது. பிராணாயாமத்தால் புத்திக்கு ஒருமுனைப்பாடு கிடைப்பதால் அந்த யோக மார்க்கம் கூட ஆன்மீக சாதனைக்குத் தேவையே.
சிரத்தை பக்தி தியானம் யோகம் இவற்றை யார் கடைபிடிக்கிறாரோ அவர் பகவானை அடைவார் என்று ஒரு வாக்கியத்தில் கூறிய கைவல்ய உபநிஷதத்தை வணங்குவோம்.
தினசரி ஒரு வேத வாக்கியம்: 58. பகவானை அடையும் வழிகள்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.