42. கோபமும் தேவை
தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முகம் சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
“மன்யுரஸி மன்யும் மயிதேஹி” -யஜுர் வேதம்.
“நீ கோப ஸ்வரூபன். எங்களுக்கு கோபத்தை அருள்”
‘மன்யு’ என்ற சொல்லுக்கு கோபம், ஞானம் என்று இரு பொருள் உண்டு. வேதங்களில் மன்யு சூக்தங்கள் என்று பிரத்யேகமாக உள்ளன.
“நமஸ்தே ருத்ர மன்யவே” என்ற ருத்ர நமகம் சிவனின் கோபத்தை வணங்குகிறது.
கோபம் தெய்வீக சக்தி. ஒரு ஆயுதத்தை பயன்படுத்துவது போல் குரோதத்தை பயன்படுத்த வேண்டும். சர்ப்பம் தன் ‘மன்யு’ சக்தியை வெளிப்படுத்தி படம் எடுத்தால் அதனை அடிக்க வருபவர் கூட ஓடி விடுவார். உக்கிரமான ‘மன்யு’ சக்தி மனிதனுள் இருக்கும் சாமர்த்தியத்தை வெளிக்கொணரும்.
ஆனால் எந்த ஒரு சக்திக்கும் இரு கோணங்கள் இருக்கும். தர்ம ஸ்வரூபம், அதர்ம ஸ்வரூபம். தர்மத்தோடு கூடிய கோபம் உலகிற்கு நன்மை பயக்கும்.
சூரியன் சர்வ காலத்திலும் பால பானுவைப் போலவோ, மாலை பாஸ்கரனைப் போலவோ பிரகாசித்தால் பலன் இருக்காது. மத்தியான சூரியனாக க்ரீஷ்ம
ஆதித்தியனாகவும் ஒளிவிடவேண்டும். அப்போது அவனிடம் இருக்கும் அதிக சக்தி உலகிற்குத் தெரியும்.
ஒவ்வொரு ஜீவனிலும் பகவான் ‘மன்யு’ சக்தியை வைத்துள்ளார். தேச, கால, வர்த்தமானங்களை கணக்கில் கொண்டு அதனை பயன்படுத்த வேண்டும். தர்ம ரக்ஷணைக்காக அதர்மத்தின் மேல் கோபத்தை அறிவிக்க வேண்டும். அப்போது அடக்கமாக இருப்பது சரியாகாது.
உலகில் அதர்மம் தலை விரித்தாடும் போது ருத்ரனின் ‘மன்யு’ சக்தி தீவிரமான இயற்கை சீற்றங்களாக வெளிப்படுகிறது.
துஷ்ட சிக்ஷணைக்காக இறங்கி வந்த அவதார மூர்த்திகள் கூட கோபத்தை வெளிப்படுத்தினார்கள். “காலாக்னி சத்ருச: க்ரோதே”என்று வால்மீகி ஸ்ரீராமனை வர்ணிக்கிறார். குரோதத்தில் காலாக்னியைப் போன்றவன் என்பது இதன்பொருள். “க்ஷமயா ப்ருத்வீ சம:” – பொறுமையில் பூமிக்கு சமமானவன். இரண்டும் இருக்க வேண்டும். எது, எப்போது, எங்கு, எவ்வாறு, எதற்காக, யார் மீது காட்ட வேண்டும் என்று தெரிவதுதான் உசித குணம்.
சீதையை தூக்கிச் சென்ற ராவணனை மன்னிக்கவில்லை இராமன். கம்சன், துரியோதனன் இவர்கள் மீது கருணை காட்டவில்லை கிருஷ்ணன். அதற்காக இவர்கள் தயை இல்லாதவர்கள் அல்லர். தயையில் கூட இவர்கள் இணை இல்லாதவர்களே! ஜடாயு, சபரி, குசேலர், குப்ஜா போன்ற மிகச் சாமானியர்களைக் கூட அருளிய கிருபாளு இவர்கள்.
நம் தர்மத்தின் மீதும் தேசத்தின் மீதும் தாக்குதல் நடத்த நினைப்பவர்களை கண்டறிந்து கவனமாக அந்தத் திட்டங்களை முறியடிப்பது மானுட தர்மம். மறுத்தாலோ, மறந்தாலோ, உதாசீனப்படுத்தினாலோ, பகைவனுக்கு ஆதரவளித்தாலோ இனி நமக்கு நாமே மீதி இருக்க மாட்டோம்.
ஏன் குரோதத்தை அழிவுக்கு காரணமாக கூறுகிறோம்? அதனை மனிதன் தன் சுபாவமாக்கிக் கொள்ளக் கூடாது. தற்காப்புக்கு பயன்படும் ‘மன்யு’ சக்தியும், துஷ்டர்களை அழிக்கும் குரோத குணமும் விரும்பத்தக்கதே. நம்முடைய உதார குணத்தை கையாலாகாத தனமாக அடுத்தவர் நினைக்கும் வாய்ப்பை அளிக்கக்கூடாது.
குரோத சுபாவத்தோடு பேச்சில் பௌருஷம், செய்கையில் கடினம், பார்வையில் சிடுசிடுப்பு எப்போதும் கொண்டிருப்பவர் மேன்மையடைய முடியாது சுயநலமான குரோதத்தை விட்டுவிடவேண்டும்.
உடலில் நோய்க் கிருமிகள் மீது கருணை காட்டி நோயை முற்ற வைப்பவனை பைத்தியகாரன் என்கிறோம். கோபமும் போராடும் குணமும் சுயநலத்திற்காக அன்றி தேச நலனுக்காக இருக்க வேண்டும்.
உலகிற்கு தீங்கு செய்பவர்களோடு நிரந்தரமாக சாம, தான கொள்கைகளைத் தொடர முடியாது. பேதம், தண்டம் என்றவற்றையும் கையில் எடுக்க வேண்டியதுதான்.
சமையலில் உப்பு போதவில்லை என்று மனைவி மீது காட்டும் ஆத்திரம் தகுந்ததல்ல. ஆனால் ஸ்வதர்மத்தை காப்பதற்காக போராடுவது கர்ம யோகமே என்று பகவத் கீதை கூறுகிறது.
வலிமை நிறைந்தவர் என்று நிரூபிப்பதற்கு பிற நாடுகள் மீது படை எடுப்பதும், போர் அறிவிப்பதும் சரியல்ல. நாமாகவே யாரொருவரையும் துன்புறுத்தக் கூடாது.
குரோதத்தை வெல்வது முக்கியம்தான். ஆனால் அதற்கும் முன்னால் அடுத்தவரின் துஷ்ட நடத்தைக்கு பதிலடி கொடுக்கும் சாமர்த்தியமும் இருக்க வேண்டும். சாமர்த்தியம் மிகுந்தவன் குரோதத்தை வெல்வது யோகம். அசடுக்கு குரோதம் ஏற்படாது. ஏனென்றால் அவனிடம் குரோதத்தை வெளிப்படுத்தும் சாமர்த்தியமோ தகுதியோ இருக்காது.
சமர்த்தன் தனிப்பட்ட ஆவேசத்தில் அன்றி, தற்காப்புக்காகவும் தேச நலனுக்காகவும் கோபத்தை வெளிப்படுத்துவான். மேலும் இந்தியர்கள் தற்காப்புக்காக குரோதத்தைக் காட்டுவரே தவிர, ஆக்கிரமிப்பதற்காக அல்ல.
பாதுகாப்புக்காக வெளிப்படுத்தும் இத்தகைய கோபத்தை இழந்துவிட்டால் நம்மில் யாரும் மீதி இருக்க மாட்டோம்.
குரோதத்தை அடக்கிக் கொண்டு தேவையானபோது வெளிப்படுத்தும் திறமையும், முன்னோக்குப் பார்வையும் இருக்க வேண்டும்.
விஷ்ணு சகஸ்ரநாமத்தில் “க்ரோதம், க்ரோதகர்த்தா, க்ரோத:” அனைத்தும் ஹரியே என்று படிக்கிறோம். அதர்ம நோக்கத்தோடுதர்மத்தின் மீது வெற்றி கொள்ள எண்ணி வருபவரை தண்டிப்பதற்கு குரோத சக்தி தார்மீகர்களுக்குத் தேவை.
மகாவிஷ்ணு நரசிம்மர் போன்ற திவ்ய வடிவங்களில் இந்த ‘மன்யு’ சக்தியை வெளிப்படுத்தினார். அம்பாள் துர்க்கை போன்ற வடிவங்களில் ‘க்ரோத சம்பவா’ என்று தோன்றி உலகைக் காத்தாள்.
இந்த ‘மன்யு’ சக்தியால்தான் பரமேஸ்வரன் ஜீவன்களின் முன் வினைப் பயன்களை துயர வடிவில் அளித்துத் தீர்க்கிறார். சரணடைந்தவர்களுக்கு அருளுகிறார்.
அப்படிப்பட்ட சைதன்யம் நமக்கு அனுக்ரஹமாக மாற வேண்டும் என்று பகவானைப் பிரார்த்திக்க வேண்டும். நமக்கு தற்காப்பு சக்தியாக ‘மன்யு’ வை அருளும்படி வேண்ட வேண்டும்.
தினசரி ஒரு வேத வாக்கியம்: 42. கோபமும் தேவை! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.