கர்மானுஷ்டானமும் பக்தி யோகமும்!

கட்டுரைகள்

?”பத்தினியிடமும் பிள்ளையிடமும் மற்றவற்றிடமும் நாம் வைக்கிற பிரியத்துக்கெல்லாம் உண்மையில் நம்மிடமே உள்ள பிரியம்தான் காரணம். நம் உள்ள நிறைவுக்காகத்தான் மற்றவரிடம் பிரியம் காட்டுகிறோம்’ என்று யாக்ஞவல்கிய உபநிஷத் உபதேசம் கூறுகிறது. அப்படிப் பார்த்தால், பர உபகாரம் என்பதை சுயநலம் என்றே எடுத்துக் கொள்ளலாமா?

– நேரடியாக நமக்கே நல்லது செய்து கொள்ளவேண்டும் என்று, பணத்தையும், இந்திரிய சுகங்களையும் தேடிப் போனால், இந்த உள் நிறைவு உண்டாக மாட்டேன் என்கிறது. மாறாக சுயகாரியங்கள் நிம்மதியின்மையிலும் துக்கத்திலுமே கொண்டு விடுகின்றன.

கண்ணாடியில் நமது முகத்தைப் பார்க்கிறோம். அதன் நெற்றியில் பொட்டில்லை என்று தெரிகிறது. உடனே கண்ணாடிக்குச் சாந்து இட்டால் என்ன ஆகும்? கண்ணாடி கறுப்பாகும். பிம்பத்துக்குப் பொட்டு வைப்பது என்றால், பிம்பத்தின் மூலமான மனிதனுக்குத்தான் பொட்டு வைத்துக் கொள்ளவேண்டும்.

“எனக்கு’ என்று நினைத்துச் செய்யும் காரியங்கள் உண்மையில் நம் மனசுக்குக் கரிப்பொட்டு வைப்பதாகவே & நமக்கு நாமே கரியைப் பூசிக் கொள்வதாகவே & முடிகிறது. மனசு என்கிற மாயக் கண்ணாடியில் பிரதிபலிக்கிற பரமாத்ம பிம்பத்தையே “நான்’ என்று நினைக்கிறோம். அந்தப் பிம்பத்துக்கு அழகு செய்வது என்றால் உண்மையில் பரமாத்மாவுக்கு அழகு செய்ய வேண்டும்.

பரமாத்ம ஸ்வரூபமான லோகத்துக்கெல்லாம் செய்கிற சேவை இதனால்தான் நிறைவைத் தருகிறது. இதே மாதிரிதான் அந்தப் பரமாத்வையே பூஜிப்பதும், தனக்கு என்று வைத்துக் கொள்கிற கரிப்பொட்டு, இப்போதுதான் அலங்கார திலகமாகிறது.

? மக்கள் தொண்டு மகேசன் தொண்டு என்பதும் சரிதானே!

– ஜீவராசிகளுக்குச் செய்கிற உபகாரத்தால் சகல பிராணிகளுக்கும் மாதா பிதாவாக இருக்கப்பட்ட பரமேஸ்வரனுக்கே பூஜை பண்ணியதாக ஆகிறது. இதைத்தான் திருமூலர் திருமந்திரத்திலும் சொல்லியிருக்கிறது.

நடமாடக் கோயில் நம்பர்க் கொன் றீயின்

படமாடக் கோயில் பகவர்க் கீதாமே̷ 0;

இதற்கு அர்த்தம், “மக்களுக்குச் செய்கிற உதவி சாட்சாத் ஈசுவர ப்ரீதியாகச் செய்கிற பூஜையே ஆகும்” என்பது.

? பரோபகார சிந்தை உள்ளவன், தன்னுடைய கர்ம மார்க்கமான பரோபகார மார்க்கத்தில் வெற்றியடைய வழி என்ன?

– நம்மைப் போலவே சேவை செய்ய விருப்பம் உள்ளவர்களை எல்லாம் சேர்த்துக் கொண்டு, எல்லோரும் ஒரே சங்கமாக, ஒரே அபிப்ராயமாக இருந்துகொண்டு சேவை செய்வது சிலாக்கியம். அப்படிப் பலர் கூடிச் செய்யும்போது, நிறையப் பணி செய்ய முடியும். சத்தியத்தாலும் நியமத்தாலும் இப்படிப்பட்ட சங்கங்கள் உடையாமல் காக்க வேண்டும். பரோபகாரம் செய்பவர்களுக்கு ஊக்கமும், தைரியமும் அத்தியாவசியம். மான அவமானத்தைப் பொருட்படுத்தாத குணம் வேண்டும்.

கிருஷ்ண பரமாத்மா இப்படித்தான் வெளியிலே விளையாடுவதாகத் தெரிந்தாலும் உள்ளே அத்தனையும் பரோபகார சேவைதான் செய்தான். எத்தனை பேருடைய, எத்தனை எத்தனை கஷ்டங்களை விளையாட்டாகவே போக்கடித்தான்? குன்றைத் தூக்கிப் பிடித்தது விளையாட்டு மாதிரி இருக்கும். ஆனால் கோபர்களைக் காப்பதற்கே அவ்வளவு பெரிய மலையை பாலகிருஷ்ணன் தூக்கினான். சின்னக் குழந்தை விஷம் கக்கும் காளிங்கனின் படத்திலே நர்த்தனம் செய்தது, வெளியிலே பார்த்தால் விளையாட்டு; உண்மையில் அதுவும் ஜனங்களைக் காத்து அவர்களுக்கு நீர் நிலையை மீட்டுத் தருவதற்காக செய்த சேவைதான். இப்படித்தான் எத்தனையோ விளையாட்டுக்கள் செய்தான். அத்தனையும் சேவை.

லௌகீக சேவை மட்டும் இல்லை; ஞான சேவையும் நிறையச் செய்தான். அர்ஜுனன், உத்தவர் போன்றவர்களுக்கு மகா உபதேசங்கள் செய்தான். சேவை, ஞானம், விளையாட்டு எல்லாம் அவனிடம் ஒன்றாக இருந்தன. துளிக்கூடப் பற்றுதல் இன்றியே இத்தனையும் செய்தான். சிரித்துக் கொண்டே சாந்தமாக இவ்வளவையும் செய்தான். அதனாலேயே அநாயாசமாகச் செய்ய முடிந்தது. நம்மிலும் சேவை செய்கிறவர்களுக்கெல்லாம் இந்தச் சிரிப்பும் சாந்தமும் எப்போதும் இருக்கவேண்டும்& தைரியம், ஊக்கம் இவற்றோடு!

– கருத்தாக்கம்: செங்கோட்டை ஸ்ரீராம்

Leave a Reply