8. விண்ணீல மேலாப்பு

ஆண்டாள்

 

1ஆம் பத்து 8ஆம் திருமொழி

விண்ணீல மேலாப்பு

எட்டாம் பதிகம், திருவேங்கடவனுக்காக ஆண்டாள் விட்ட தூது பற்றிச் சொல்கிறது.

கண்ணன் கை பாஞ்சஜன்யத்தை அடுத்து, அவள் கண்களுக்குப் பட்டவை மேகங்கள். திருமலை திருப்பதியில் அந்தத் திருக்கோயில் முகடு தொட்டுத் தழுவி வரும் மேகங்கள், வேங்கடவனின் திருமேனியில் உரசும் பேறு பெற்றன. மேகத்திடம் அந்த அனுபவத்தைச் சொல்லும்படி கேட்கின்றாள் ஆண்டாள். அவ்வாறு, தனது நிலையைச் சொல்லி அந்தத் திருவேங்கடமுடையானுக்குத் தூது விட்டாள். ஓஎனக்குக் கதியாக உள்ள வேங்கடவன், தன்னை ஒரு காப்பானாகவே கருதவில்லையோ! இவன் ஒரு பெண்பிள்ளையைத் தவிக்க விட்டு வதைத்தான் என்ற பேச்சு எழுந்தால், உலகோர் மதிக்க மாட்டார்களே!  என்று இந்த எட்டாம் திருமொழியான விண் நீல மேலாப்பு விரித்தால் போல் பாசுரங்களில் மேகவிடு தூது பேசுகிறாள் ஆண்டாள்.

 

577:

விண்ணீல மேலாப்பு

விரித்தாற்போல் மேகங்காள்,

தெண்ணீர்பாய் வேங்கடத்தென்

திருமாலும் போந்தானே,

கண்ணீர்கள் முலைக்குவட்டில்

துளிசோரச் சோர்வேனை,

பெண்ணீர்மை யீடழிக்கும்

இதுதமக்கோர் பெருமையே? (2) 1

 

வானத்திலே நீல நிற விதானத்தை விரித்ததுபோல் விளங்குகின்ற மேகங்களே! தெளிந்த அருவி நீர் கொட்டும் திருவேங்கட மாமலைத் திருமால் உங்களுடன் வந்தானோ? பிரிவுத் துயரால் என் மார்பகத்தின் முனையில் கண்ணீர் சொட்டும்படி வருந்தி அழுகின்ற என் பெண்மையின் உயர்வினை அழிக்கின்றானே! அவனின் இந்தச் செயல் பெருமானாகிய அவனுக்கு பெருமை தரக் கூடிய ஒன்றா?!

 

578:

மாமுத்த நிதிசொரியும்

மாமுகில்காள், வேங்கடத்துச்

சாமத்தின் நிறங்கொண்ட

தாடாளன் வார்த்தையென்னே,

காமத்தீ யுள்புகுந்து

கதுவப்பட்டு இடைக்கங்குல்,

ஏமத்தோர் தென்றலுக்கிங்-

கிலக்காய்நா னிருப்பேனே. 2

 

உயர்ந்த முத்துகளையும் பொன்னையும் சொரிகின்ற உயர்ந்த மேகங்களே! நீல நிறம் உடைய திருவேங்கடமுடையான் என்னும் மேன்மை பொருந்தியவன், எனக்கென்று ஏதாவது செய்தி விடுத்திருக்கின்றானா? விரகதாபம் என்னும் தீ என்னுள் புகுந்து கவ்வியதால், நட்ட நடு இரவு யாமத்தில் வீசும் தென்றல் காற்றின் கொடுமைக்கு நான் இலக்காகி விட்டேன். அதனால் நலிந்து இங்கேயே நான் இருப்பேனோ?!

 

579:

 

ஒளிவண்ணம் வளைசிந்தை

உறக்கத்தோ டிவையெல்லாம்,

எளிமையா லிட்டென்னை

ஈடழியப் போயினவால்,

குளிரருவி வேங்கடத்தென்

கோவிந்தன் குணம்பாடி,

அளியத்த மேகங்காள்.

ஆவிகாத் திருப்பேனே. 3

 

அருள் புரியும் மேகங்களே! பிரிவுத் துயரால் என் ஒளி, நிறம், என் கை வளையல்கள், என் சிந்தனை, உறக்கம் இவை யாவும் போய்விட்டன. உதவி ஏதுமற்ற கையறுநிலையில் கதறும் என் எளிமையால், நான் குலைந்து போக, அவை எல்லாம் என்னை விட்டு நீங்கின. குளிர்ந்த நீர் நிரம்ப அருவியாகக் கொட்டும் திருமலையில் உள்ள என் கோவிந்தனின் கல்யாண குணங்களைப் பாட, அதுவே தாரக மந்திரமாகி, நான் என் உயிரைக் காத்திருக்க வழிகோலுமா?

 

580:

மின்னாகத் தெழுகின்ற

மேகங்காள், வேங்கடத்துத்

தன்னாகத் திருமங்கை

தங்கியசீர் மார்வற்கு,

என்னாகத் திளங்கொங்கை

விரும்பித்தாம் நாடோ றும்,

பொன்னாகம் புல்குதற்கென்

புரிவுடைமை செப்புமினே. 4

 

உங்கள் உடம்புகளில் மின்னலைத் தோற்றுவிக்கச் செய்யும் மேகங்களே! அந்த எம்பெருமான் என்னை விரும்பி, நாள்தோறும் உடம்போடு என் மார்பு தழுவுவதற்கு எனக்கு ஆசை உள்ளது. திருமகளான மங்கையைத் தம் மார்பிலே கொண்டுள்ள அந்தத் திருவேங்கடமுடையானிடம் சென்று இதைச் சொல்லுங்கள்.

 

581:

வான்கொண்டு கிளர்ந்தெழுந்த

மாமுகில்காள், வேங்கடத்துத்

தேன்கொண்ட மலர்ச்சிதறத்

திரண்டேறிப் பொழிவீர்காள்,

ஊன்கொண்ட வள்ளுகிரால்

இரணியனை யுடலிடந்தான்,

தான்கொண்ட சரிவளைகள்

தருமாகில் சாற்றுமினே. 5

 

திருமலையில் தேன் மலர்கள் சிதறும்படியாக, கூட்டம் கூட்டமாக வானில் ஏறி மழை பொழிந்து, வானையே விழுங்குவது போல் கிளர்ந்தெழும் மேகங்களே! தசையுடன் கூடிய கூர்மையான நகங்களால் இரணியனை உடலைக் கீறி எறிந்த எம்பெருமான், என்னிடம் இருந்து பறித்த என் கை வளையல்களை என்னிடம் திரும்பத் தருவான் என்றால், என் அவல நிலையை அவனிடம் எடுத்துச் சொல்லுங்கள்.

 

582:

சலங்கொண்டு கிளர்ந்தெழுந்த

தண்முகில்காள், மாவலியை

நிலங்கொண்டான் வேங்கடத்தே

நிரந்தேறிப் பொழிவீர்காள்,

உலங்குண்ட விளங்கனிபோல்

உள்மெலியப் புகுந்து,என்னை

நலங்கொண்ட நாரணற்கென்

நடலைநோய் செப்புமினே. 6

 

நீரை மொண்டு கொண்டு மேலே கிளர்ந்தெழுந்த குளிர்ச்சி பொருந்திய மேகக்கூட்டங்களே! மகாபலிச் சக்ரவர்த்தியிடம் சென்று மண் கேட்டு, நிலவுலகைத் தனதாக்கிக் கொண்ட திரிவிக்ரமன் திகழும் இந்தத் திருவேங்கட மலையின் மீது ஏறிச் சென்று பரந்து மழை பொழிவிப்பவர்களே! உலங்கு என்னும் வகையைச் சேர்ந்த பூச்சிகள் புகுந்து உண்ட விளாம்பழத்தின் உள்ளே ஒன்றுமேயில்லாமல் வெறும் ஓடு மட்டுமே இருப்பதுபோல், என்னுள்ளே புகுந்த பிரிவுத்துயர் என்னும் இந்த வியாதி என் நலன்களை எல்லாம் உண்டது. எனது இந்தத் துன்பத்தை அவனிடம் சென்று தெரிவியுங்கள்.

 

583:

சங்கமா கடல்கடைந்தான்

தண்முகில்காள், வேங்கடத்துச்

செங்கண்மால் சேவடிக்கீழ்

அடிவீழ்ச்சி விண்ணப்பம்,

கொங்கைமேல் குங்குமத்தின்

குழம்பழியப் புகுந்து,ஒருநாள்

தங்குமே லென்னாவி

தங்குமென் றுரையீரே. (2) 7

 

சங்குகள் உள்ள பெரும் கடலைக் கடைந்தனின் திருவேங்கட மலையில் பரவும் குளிர்ச்சியான மேகங்களே! சிவந்த கண்களுடைய திருமாலின் அடிக்கீழ் செய்யும் விண்ணப்பத்தை அவனிடம் சென்று கூறுங்கள். அவன் அடியேனை ஒரு நாளாகிலும் அணைத்து, என் மார்பில் பூசப்பட்ட குங்குமக் குழம்பு அழியுமாறு செய்தால் என் உயிரும் நிலைத்திருக்கும் என்று கூறுங்கள்.

 

584:

கார்காலத் தெழுகின்ற

கார்முகில்காள், வேங்கடத்துப்

போர்காலத் தெழுந்தருளிப்

பொருதவனார் பேர்சொல்லி,

நீர்காலத் தெருக்கிலம்

பழவிலைபோல் வீழ்வேனை,

வார்காலத் தொருநாள்தம்

வாசகம்தந் தருளாரே. 8

 

மழைக்காலத்தில் திருவேங்கட மலையில் எழுந்த கருமேகங்களே! அடியார்களுக்காகப் போர் செய்து வெற்றி வாகை சூடும் அந்தத் திருவேங்கடவனின் திருநாமங்களை நான் பலபடியாகச் சொல்லி, மழைக்காலத்தில் பழுத்து விழும் எருக்கம்பூவைப் போலத் தளர்ந்து விழுகின்றேன். பிரிவினால் நீளும் இந்தக் காலத்தில் அவன் ஒருநாளாவது என்னுடன் பேச மாட்டானா?

 

585:

மதயானை போலெழுந்த

மாமுகில்காள், வேங்கடத்தைப்

பதியாக வாழ்வீர்காள்.

பாம்பணையான் வார்த்தையென்னே,

கதியென்றும் தானாவான்

கருதாது,ஓர் பெண்கொடியை

வதைசெய்தான். என்னும்சொல்

வையகத்தார் மதியாரே. (2) 9

 

திருவேங்கடத்தையே வழிப்பிடமாகக் கொண்டு மதயானையைப் போலக் கிளர்ந்து எழுகின்ற மேகங்களே! ஆதிசேஷனை படுக்கையாகக் கொண்டவனின் பேச்சுத்தான் என்னவோ? எனக்கு கதியாக உள்ள அவன், தன்னை காப்பவன் என்றே கருதவில்லையோ? இவன் ஒரு பெண் கொடியை வதைத்தான் என்னும் பேச்சை இந்த உலகோர்கள் மதிக்க மாட்டார்களோ?!

 

586:

நாகத்தி னணையானை

நன்னுதலாள் நயந்துரைசெய்,

மேகத்தை வேங்கடக்கோன்

விடுதூதில் விண்ணப்பம்,

போகத்தில் வழுவாத

புதுவையர்கோன் கோதைதமிழ்,

ஆகத்து வைத்துரைப்பார்

அவரடியா ராகுவரே. (2) 10:

 

பக்தியில் தவறாத புதுவையரோன் பெரியாழ்வாரின் மகளாக அழகிய முகம் உடைய ஆண்டாள், ஆதிசேஷனை படுக்கையாகக் கொண்ட திருவேங்கடமுடையானை ஆசைப்பட்டு மேகத்தைத் தூது விட்டாள். இந்தப் பாசுரங்களை மனத்தில் கொண்டு ஓதுபவர்கள் திருமாலுக்கு அடிமை ஆவார்கள்.

 

Leave a Reply