9. சிந்தூரச் செம்பொடி

ஆண்டாள்

 

style="text-align: center;">1ஆம் பத்து 9ஆம் திருமொழி

சிந்தூரச் செம்பொடி

ஆண்டாள் மேகங்களை தூது செல்லும்படி கேட்டுக் கொண்டாள். ஆனால் அவை தூது செல்லவில்லை. நின்ற இடத்திலேயே நின்று மழை பொழியச் செய்தன. அதனால் மழைக் காலத்தில் உண்டாகும் வளமை, பூமியில் மிகுந்தது. அந்த மழையால், திருமாலிருஞ்சோலை மலையில் முல்லைகள், காயா முதலிய மலர்கள், கனிகள், வண்டினங்கள், பூஞ்சுனைகள் முதலானவை உண்டாகி இயற்கை பூத்துச் சிரித்தது. ஆனால், கண்ணனைப் பிரிந்த ஆண்டாளோ துயரத்தால் வாடினாள். பூத்துச் சிரித்திருந்த மலர்கள் எல்லாம் துயரில் வாடிய இவளைப் பார்த்து ஏளனம் செய்தன.

எம்பெருமானின் வரவுக்காக இவள் பூமாலைகள், பொன்மாலைகளைக் கட்டி வைத்திருந்தாள். ஆனால் அவை இப்போது வாடிப்போய் இருக்கின்றன. அந்த மாலைகளுடன்தானும் வாட்டமுற்று, பயனற்றுக் கிடப்பதாகத் தெரிவிக்கிறாள், ஒன்பதாம் திருமொழியான சிந்துரச் செம்பொடிப்போல் பாசுரங்களில்!

இந்த ஒன்பதாம் பதிகம், தெற்குத் திருமலை, திருமாலிருஞ்சோலைமலை அழகருக்காக ஆண்டாள் அமைத்த பதிகம். நூறு தடா வெண்ணெய், நூறு தடா அக்காரஅடிசல் ஆகிய நிவேதனங்களை இந்தப் பதிகத்தினாலேயே சமர்ப்பித்தாள் ஆண்டாள்.

 

587:

சிந்துரச் செம்பொடிப்போல்

திருமாலிருஞ் சோலையெங்கும்,

இந்திர கோபங்களே

எழுந்தும்பரந் திட்டனவால்,

மந்தரம் நாட்டியன்று

மதுரக்கொழுஞ் சாறுகொண்ட

சுந்தரத் தோளுடையான்

சுழலையினின் றுய்துங்கொலோ. (2) 1

 

திருமாலிருஞ்சோலை மலையில், சிவந்த சிந்தூரச் செம்பொடி போல் பட்டுப்பூச்சிகள் வானவில்லின் வண்ண மயமாக எங்கும் பரவியுள்ளன. மந்தர மலையை நடுவில் நாட்டி, பாற்கடலைக் கடைந்து, இனிய அமுதமாகிய திருமகளைக் கரம்பிடித்த அந்த சுந்தரத் தோளுடைய எம்பெருமான் வீசிய வலையில் இருந்து நான் பிழைப்பேனோ?

 

588:

போர்களி றுபொரும்மா

லிருஞ்சோலையம் பூம்புறவில்,

தார்க்கொடி முல்லைகளும்

தவளநகை காட்டுகின்ற,

கார்க்கொள் படாக்கள்நின்று

கழறிச்சிரிக் கத்தரியேன்,

ஆர்க்கிடு கோதோழி.

அவன்தார்ச்செய்த பூசலையே. 2

 

யானைகள் தங்களுக்குள் போரிடும் திருமாலிருஞ்சோலை மலை அடிவாரத்தில், அழகரின் புன்முறுவலைக் காட்டும் முல்லைகளுடன் படாக்கொடிகளும் பூத்துச் சிரிக்கின்றன. அவைகளின் ஏளனப் பேச்சை என்னால் தாங்க முடியவில்லை. அவனின் தோளில் ஏறியிருக்கும் மாலைக்கு ஆசைப்பட்ட நான் படும் துயரை யாரிடம் சென்று கூறுவேன்… தோழி?

 

589:

கருவிளை யொண்மலர்காள்.

காயாமலர் காள்,திருமால்

உருவொளி காட்டுகின்றீர்

எனக்குய்வழக் கொன்றுரையீர்,

திருவிளை யாடுதிண்டோ ள்

திருமாலிருஞ் சோலைநம்பி,

வரிவளை யில்புகுந்து

வந்திபற்றும் வழ்க்குளதே. 3

 

அழகான கருவிளைப் பூக்களே… காயாம்பூக்களே… பெரிய பிராட்டியாருடன் கூடியுள்ள பகவானின் நிறத்தைக் காட்டி, என்னை வருந்தச் செய்கிறீர்களே! நான் உய்வு பெற வகை சொன்னால் ஆகாதோ? திருமகள் விளையாடும் திண்மையான தோள்களை உடைய அழகர் என் வீட்டில் புகுந்து என் வளைகளை பலாத்காரமாகக் கொண்டுபோவது நேர்மையான செயல்தானா?

 

590:

பைம்பொழில் வாழ்குயில்காள்.

மயில்காள்.ஒண் கருவிளைகாள்,

வம்பக் களங்கனிகாள்.

வண்ணப்பூவை நறுமலர்காள்,

ஐம்பெரும் பாதகர்காள்.

அணிமாலிருஞ் சோலைநின்ற,

எம்பெரு மானுடைய

நிறமுங்களுக் கெஞ்செய்வதே ? 4

 

பசுமையான சோலையில் வாழும் குயில்களே… மயில்களே… காக்கணம் பூக்களே. புதிய களாப் பழங்களே… அழகும் மணமும் உள்ள காயாம் பூக்களே.. நீங்கள் ஒன்று சேர்ந்து ஐந்து பெரும் பாதகர்களைப் போலே, என்னை நலிகின்றீர்களே… திருமாலிருஞ்சோலை மலை அழகரின் நிறத்தை ஏன் நீங்கள் ஏறிட்டுக் கொண்டீர்கள்..?

 

591:

துங்க மலர்ப்பொழில்சூழ்

திருமாலிருஞ் சோலைநின்ற,

செங்கட் கருமுகிலின்

திருவுருப் போல்,மலர்மேல்

தொங்கிய வண்டினங்காள்.

தொகுபூஞ்சுனை காள்,சுனையில்

தங்குசெந் தாமரைகாள்.

எனக்கோர்சரண் சாற்றுமினே. 5

 

ஓங்கிய பூஞ்சோலைகள் சூழ்ந்த திருமாலிருஞ்சோலை மலையில் நின்ற, சிவந்த கண்ணுடைய மேகம் போன்ற அழகரின் வடிவத்தை ஒத்துப் பூக்கள் மேல் தொங்கித் தங்கும் வண்டுக் கூட்டங்களே… அருகருகே இருக்கும் சுனைகளே… சுனைகளில் உள்ள தாமரைப்பூக்களே… எனக்குப் புகலிடம் காட்டுங்களேன்.

 

592:

நாறு நறும்பொழில்மா

லிருஞ்சோலை நம்பிக்கு, நான்

நூறு தடாவில்வெண்ணெய்

வாய்நேர்ந்து பராவிவைத்தேன்,

நூறு தடாநிறைந்த

அக்கார வடிசில்சொன்னேன்,

ஏறு திருவுடையான்

இன்றுவந்திவை கொள்ளுங்கொலோ. (2) 6

 

மணம் மிகுந்த திருமாலிருஞ்சோலை மலையில் எழுந்தருளி உள்ள, குணங்கள் அத்தனையும் நிறைந்த அழகருக்கு, அடியேன் நூறு தடாக்களில் வெண்ணெய்யையும் இன்னும் நூறு தடாக்களில் அக்கார அடிசிலையும் மனத்தாலும் வாயாலும் காணிக்கை ஆக்குகிறேன். மார்பினில் திருமகள் ஏறி அமர்ந்திருக்கும் திருமகள்நாதன் இன்று வந்து இவற்றை ஏற்றுக் கொள்வானோ?

 

593:

இன்றுவந் தித்தனையும்

அமுதுசெய் திடப்பெறில்,நான்

ஒன்று நூறாயிரமாக்

கொடுத்துப்பின்னும் ஆளும்செய்வன்,

தென்றல் மணங்கமழும்

திருமாலிருஞ் சோலைதன்னுள்

நின்ற பிரான்,அடியேன்

மனத்தேவந்து நேர்படிலே. 7

 

மணம் கலந்து தென்றல் வீசும் திருமாலிருஞ்சோலை மலை அழகன், இன்று வந்து, காணிக்கையாக சமர்ப்பித்த வெண்ணெய்யையும் அக்கார அடிசிலையும் அமுது செய்வானாகில், அடியேன் நெஞ்சில் வசிப்பதாக எண்ணுவேன். மேலும், நூறாயிரம் தடாக்களாக அமுது சமர்ப்பிப்பேன். பின்னும் கைங்கர்யங்கள் பலவும் அவனுக்கு செய்வேன்.

 

594:

காலை யெழுந்திருந்து

கரியகுரு விக்கணங்கள்,

மாலின் வரவுசொல்லி

மருள்பாடுதல் மெய்ம்மைகொலோ,

சோலை மலைப்பெருமான்

துவராபதி யெம்பெருமான்,

ஆலி னிலைப்பெருமான்

அவன் வார்த்தை யுரைக்கின்றதே. 8

 

கறுத்த குருவிக் கூட்டங்கள் காலையில் எழுந்து, திருமாலின் வருகையைக் கூறி, மருள் என்னும் பண்ணைப் பாடும். இவை சோலைமலைப் பெருமான், துவாரகாபுரி நாதன், ஆலிலையில் வளர்ந்தவன் என்று பேசும்.

 

595:

கோங்கல ரும்பொழில்மா-

லிருஞ்சோலயில் கொன்றைகள்மேல்

தூங்குபொன் மாலைகளோ-

டுடனாய்நின்று தூங்குகின்றேன்,

பூங்கொள் திருமுகத்து

மடுத்தூதிய சங்கொலியும்,

சார்ங்கவில் நாணொலியும்

தலைப்பெய்வதெஞ் ஞான்றுகொலோ. 9

 

கோங்கு மரங்கள் பூக்கும் திருமாலிருஞ்சோலை மலையில் கொன்றை மரங்கள் மேல் தொங்கும் அழகிய பொன் நிற மாலைகளுடன் நானும் பயனற்றுக் கிடக்கின்றேன். திருமால் தன் அழகிய, பவள வாயினில் வைத்து ஊதும் சங்கொலியையும் சார்ங்க வில்லின் ஓசையையும் நாம் கேட்கப் பெறுவது என்றைக்கோ?

 

596:

சந்தொடு காரகிலும்

சுமந்துதடங் கள்பொருது,

வந்திழி யும்சிலம்பா-

றுடைமாலிருஞ் சோலைநின்ற,

சுந்தரனை, சுரும்பார்

குழல்கோதை தொகுத்துரைத்த,

செந்தமிழ் பத்தும்வல்லார்

திருமாலடி சேர்வர்களே. (2) 10

 

சந்தனம், அகில் ஆகியவற்றைச் சுமந்து, கரைகளை அழித்தபடி ஓடுகின்ற நூபுர கங்கை என்னும் சிலம்பாறு உள்ள திருமாலிருஞ்சோலை மலை அழகரை, வண்டு தங்கும் பூ அணிந்த கூந்தலுடைய கோதை பாடினாள். இந்தப் பத்துப் பாசுரங்களையும் ஓதுபவர்கள் திருமாலின் அடியினைச் சேர்வார்கள்.

 

Leave a Reply