கன்னியரை காப்பவர்கள் – சப்த மாதர்கள்!

அம்பிகை ஆலயம்

மகேஸ்வரி, உடலிலுள்ள கொழுப்புச் சக்திக்குத் தலைவி. இவளுக்கு ஐந்து திருமுகங்கள். நாகப் பாம்புகளை வளையல்களாக அணிந்தவள். வரத, அபய முத்திரைகளுடன்-சூலம், மணி, பரசு, டமருகம், கபாலம், பாசம், அக்கமாலை, அங்குசம் தரித்தவள். இவள் சினங்கொண்டால் வெட்டுக்காயம் ஏற்படும். சுண்டலையும், நீர்மோரையும் இவளுக்கு நிவேதனம் செய்து, ஏழைகளுக்கு அளித்தால் இந்தத் தேவியின் மனம் குளிரும்.

 

நாராயணி, சீழுக்குத் தேவதை. இவள் சினமுற்றால் விஷக்கடிக்கு ஆளாக நேரிடும். அனைத்து உலகங்களையும் பரிபாலனம் செய்ய திருமாலுக்கு உதவியாய் இருப்பவள் நாராயணி. தனது கரங்களில் சங்கு, சக்கரம், அம்பு, வில், கத்தி, கதை ஏந்துபவள். அபய, வரத முத்திரைகளுடன் திகழ்பவள். இந்தத் தேவிக்கு பாயசம் நிவேதனம் செய்து பாலகர்களுக்குக் கொடுத்தால் திருவருள் கிடைக்கும்.
வராகி, எலும்புகளின் அதிதேவதை. இவள் சினமுற்றால் வாதமும், பித்தமும் ஏற்படும். மேக நிறம் கொண்டவள். அபய, வரத முத்திரைகளுடன், உலக்கை, கேடயம், வாள், கலப்பை, சங்கு, சக்கரம் ஆகியவற்றுடன் காட்சி தருபவள். வெள்ளரிக்காயும், முறுக்கும் நிவேதனம் செய்து பக்தர்களுக்கு விநியோகம் செய்தால் நல்ல பலனைத் தருவாள் வராகி.

ருத்திராணி, தசைகளின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும் தேவதை. இவள் இந்திரனின் சக்தி. வெள்ளை யானையை தன் வாகனமாகக் கொண்டவள். இவள் சினம் கொண்டால் அம்மை நோய் பெருகும். பலாக்களை நிவேதனம் செய்து, இந்தத் தேவியின் அருளைப் பெறலாம்.
கெüமாரி, ரத்தத்தின் அதி தேவதை. முருகனின் சக்தி எனப் போற்றப்படுபவள். தேவசேனாவும் – வள்ளியும் கெüமாரியின் உருவங்களே என்பர். ஆறுமுகங்களை உடைய இந்தத் தேவிக்கு அபராதம் செய்தால் பசுக்களுக்கு “கோமாரி’ என்ற வியாதி வரும். எலுமிச்சை சாதம் படைத்து விநியோகம் செய்தால் கௌமாரியின் அருள் கிட்டும்; நோய் தீரும்.

சாமுண்டா தேவி, நரம்பின் தலைவி. பராசக்தியின் உடம்பிலிருந்து தோன்றிய ஆறு தேவிகளால் அரக்கன் மகிஷாசுரனை அடக்க முடியவில்லை. அப்போது சிவபெருமான் தன் நெற்றிக் கண்ணிலிருந்து காளியை தோற்றுவித்தார். அந்த பத்ரகாளி சாமுண்டியாக மாறினாள். இந்த ஆறு தேவிகளுக்கும் தலைமை ஏற்ற காளி என்னும் சாமுண்டா தேவி, மகிஷாசுரனை வதம் செய்தாள். இவள் சினம் கொண்டால் ஊரில் கலகம் விளையும். இறைவிக்கு தயிர் அபிஷேகம் செய்து, அவலில் தயாரித்த தின்பண்டங்களை நிவேதனம் செய்தால் தேவியின் திருவருள் கிட்டும்.

இந்த சப்த மாதர்களுக்கும் பல்வேறு தலங்களில் சந்நிதிகள் உள்ளன. ஆங்காங்கே வடிவங்களும், ஆயுதங்களும் மாறுபாடுகளோடும் காணப்படுகின்றன. கிராம தேவதைகளாகவும் “சப்த மாதர்கள்’ பிரதான இடம் பெறுகின்றனர். இக்கட்டுரையில் நாம் குறிப்பிடுவது “திருச்சிற்றம்பலம்’ என்ற ஊரில் அமைந்துள்ள சப்த மாதர் சந்நிதி பற்றியது.

“அருள்மிகு கன்னிகா பரமேஸ்வரி ஆலயம்’ என்பது ஆலயத்தின் பெயர். கிழக்கு நோக்கி அமைந்துள்ள கோயில். உள்ளே நுழைந்தவுடன் விசாலமான மகா மண்டபம். நடுவே பலிபீடமும் நந்தியும் இருக்க, அடுத்து உள்ள அர்த்த மண்டபத்தின் நுழைவாயிலின் இடதுபுறம் பிள்ளையார் சந்நிதி உள்ளது; வலது புறம் முருகன் திருமேனி காட்சியளிக்கின்றது. அடுத்து உள்ள கருவறை நுழைவாயிலின் இருபுறமும் துவார பாலகர்கள் அருள்பாலிக்கின்றனர். உள்ளே கருவறையில் சப்த மாதர்கள் ஏழு பேரும் வரிசையாக அமர்ந்து தரிசனம் தரும் காட்சி, நம்மைச் சிலிர்க்க வைக்கிறது. தேவகோட்டத்தின் தென்புறம் துர்க்கையம்மன் அருள் பாலிக்கிறாள்.

சுமார் 150 வருடங்களுக்கு முன் இந்த ஊர் விவசாயி, தனது வயலை உழுது கொண்டிருந்தார். அப்போது அவரது ஏர் முனை, எதன் மீதோ மோதித் தயங்கி நின்றது. அவர் உடனே என்ன தடை என்று அறிந்து கொள்ள அந்த இடத்தைத் தோண்டினார். தடை செய்த பொருளைப் பார்த்ததும் அவருக்கு இன்ப அதிர்ச்சி. ஆம்! அவர் தோண்டிய இடத்தில் ஒரு அம்மன் சிலை இருக்கவே அதை வெளியே எடுத்தார். அவர் மனதில் ஓர் அருட் சலனம்! “ஒரு சிலைதானா? இன்னும் வேறு சிலைகள் இருந்தாலும் இருக்கலாமே!’ என்று நினைத்தார். அந்த இடத்தையும், அதைச் சுற்றியும் மேலும் தோண்டத் தொடங்கினர். மொத்தம் ஏழு சிலைகள், வெளித் தோன்றின. அந்தச் சிலைகள், “சப்த மாதர்கள்’ என விவரமறிந்த பெரியோர்கள் கண்டறிந்தனர்.
முதலில் ஓர் கீற்றுக் கொட்டகையில் சப்த மாதர்களின் வழிபாடு துவங்கியது. சில ஆண்டுகளுக்குப் பின், ஓர் ஆலயம் கட்டி தேவியரை பிரதிஷ்டை செய்தனர். அந்த ஆலயமே அருள்மிகு கன்னிகா பரமேஸ்வரி ஆலயம்.

இங்கே சித்ரா பெüர்ணமி தொடங்கி 10 நாட்களுக்கு மிகச் சிறப்பாகத் திருவிழா நடைபெறும். முதல் நாள் காப்புக் கட்டுதல் மற்றும் கொடியேற்றத்துடன் உற்சவம் குதூகலமாய் தொடங்கும். பத்து நாட்களும் உற்சவ அம்மன் வீதியுலா வருவதுண்டு. பத்தாம் நாள் கரகம், காவடி, அலகு காவடி, தீச்சட்டி ஏந்துதல், பால்குடம் சுமந்து வருதல் என பக்தர்கள் கூட்டம் கோயிலில் அலைமோதும். அன்று கருவறை அம்மன்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.

அன்று மாலை பூக்குழி இறங்குதல் என அழைக்கப்படும் தீ மிதி உற்சவம் மிகச் சிறப்பாக அரங்கேறும். பல நூற்றுக்கணக்கான மக்கள் இதில் கலந்து கொள்வார்கள்.

மறுநாள் மஞ்சள் நீராட்டு விழா, ஊஞ்சல் உற்சவம், கொடி இறங்குதல் என விழா நிறைவு பெறும். இதைத் தவிர, மார்கழி மாதம் முழுவதும் திருப்பள்ளி எழுச்சி நடைபெறும். ஆடி வெள்ளிகளில் விளக்கு பூஜைகளும், கார்த்திகை மாத கார்த்திகையில் சொக்கபனை உற்சவமும் நடைபெறுகின்றன. நவராத்திரியின் 10 நாட்களும் இந்த ஆலயம் பக்தர்களின் கூட்டத்தில் நிரம்பி நிற்கும். மாசி மகத்தன்று பக்தர்களும் பக்தைகளும் தீச்சட்டிகளை ஏந்தியும், கரகம் சுமந்தும் வழிபடுவர்.
இங்கு தினசரி இரண்டு கால பூஜை நடைபெறுகிறது. காலை 7 மணி முதல் 9 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் 6 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும். இங்கு அருள்பாலிக்கும் சப்தமாதர்களிடம் வேண்டிக்கொள்ளும் கன்னிப் பெண்களுக்கு விரைந்து திருமணம் நடக்கின்றது. மேலும் அப்பெண்களைக் காத்து அருள்புரிவதும், குழந்தை இல்லாத தம்பதிகளுக்குக் குழந்தை வரம் தருவதும் சப்த மாதர்களின் தனிக் கருணை எனலாம்.

அமைவிடம்:
பந்த நல்லூர் – மணல்மேடு பேருந்துத் தடத்தில், பந்த நல்லூரிலிருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ளது திருச்சிற்றம்பலம் என்ற இந்தத் தலம்.
உண்மையான பக்தியுடன் நாம் இறைவனை வழிபட்டால், நமக்குத் துன்பம் வரும்போது இறைவனே நம்மைத் தேடி வந்து அருள்புரிவார். ஆம்! இந்த உண்மையை உலகுக்கு உணர்த்திய 500 ஆண்டுகளுக்கு மேல் பழமையான அருள்மிகு நடனபுரீஸ்வரர் ஆலயமும் இந்த ஊரில்தான் உள்ளது. போகும் வழியில் இந்த ஆலயத்தை தரிசனம் செய்துவிட்டு கன்னிகா பரமேஸ்வரி கோயிலுக்குச் செல்லலாம். இதனால் தேவியரின் திருவருளும் கிட்டும்! மகாதேவரின் பேரருளும் கிடைக்கப் பெறும்!

செய்திக் கட்டுரை: https://www.dinamani.com/edition/Story.aspx?artid=381988

Leave a Reply