கொங்கு பகுதி சக்தி பீடம்: குலங்கள் பல காக்கும் தெய்வம்!

ஆலய தரிசனம்

682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">

ஒரு மரத்தில் எத்தனை கிளைகள் என்றும், அந்தக் கிளைகளில் எத்தனை இலைகள் என்றும் எப்படி எண்ண முடியாதோ அதுபோலத்தான் சமூகத்தில் எத்தனை சாதிகள், அந்த சாதிகளுக்குள் எத்தனை குலங்கள் என்பதையும் எண்ண முடியாது என்பர் ஆன்றோர். ஒரு குலத்துக்கு ஒரு குலதெய்வம் என்பதுதான் உலகில் பொதுவாக உள்ள நியதி.

ஆனால் திருப்பூரை அடுத்த முத்தணம்பாளையத்தில் எழுந்தருளியுள்ள அங்காளம்மனை முதலியார், கவுண்டர், ஆசாரி, அய்யர், அய்யங்கார், தேவர், உடையார், வண்ணார், நாவிதர், போயர், படையாச்சி, சைவப்பிள்ளை என பல சாதியை சேர்ந்த பல்வேறு குலத்தவர்களும் குலதெய்வமாகப் போற்றி வணங்கி வருகிறார்கள்.

அரக்க சக்திகள் மடியவும், இந்திராதி தேவர்கள் உய்யவும் பார்வதிதேவி அங்காளம்மனாக அவதாரமெடுத்து மக்களுக்கு அருள்பாலிக்க வந்தாள். இப்படி வந்த அங்காளம்மன் திருக்கோயில்களுக்கெல்லாம் தலைமைப்பீடம் மேல்மலையனூர் என்பார்கள்.

காசிக்கு வாசி அவினாசி என்று கொங்குமண்டலத்தில் எழுந்தருளியுள்ள அவினாசி லிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு பல்லாயிரக்கணக்கில் பக்தர்கள் வருவதுபோல் மேல்மலையனூருக்கு வாசி இந்த முத்தணம்பாளையம் அங்காள பரமேஸ்வரி என்று, மக்கள் திரளாக வந்து குவிகிறார்கள். மேல்மலையனூரில் சுயம்புவாக உருவாகி வளர்ந்து வரும் புற்று, பக்தர்களுக்குள்ள எப்படிப்பட்ட பிணியையும் நீக்கி அருள்வதுபோல் இங்குள்ள சுயம்புப் புற்றும் தீராத நோயையும் தீர்த்தருளி வருகிறது.

இத்தலம், சுமார் எண்ணூறு வருடங்களுக்கு முன் எழுப்பப்பட்டிருக்கலாம் என்பது செவிவழிச் செய்தி. திருவண்ணாமலையில் அண்ணாமலையாரையும், மலையனூர் வாழ் அங்காளம்மனையும் வழிபட்ட கையோடு ஏராளமான பக்தர்கள் கொங்கு நாட்டிலிருக்கும் இத்தலத்திற்கும் வந்து வழிபட்டுச் செல்கின்றனர்.

முன்னொரு காலத்தில், இப்பகுதி புதர்கள் மண்டிக்கிடக்கும் ஒரு காடாக இருந்ததாகக் கூறப்படுகிறது. அந்தக் காட்டிற்குப் பக்கத்தில் ஒரு கிராமம் இருந்தது. அங்கிருந்து ஆடு, மாடுகள் மேய்ச்சலுக்காக இந்தக் காட்டிற்கு வரும். அப்படி வரும் போது அதில் ஒரு பசு மட்டும் புற்றுருவாய், பாம்புருவாய் எழுந்திருக்கும் கருநாக ரூபிணிக்கு பால் சுரந்து கொடுத்து விட்டுப் போவதை வழக்கமாகக் கொண்டிருந்தது.

இந்நிலையில் ஒரு நாள் பசுவின் மடியில் பால் இல்லாததைப் பசுவின் சொந்தக்காரர் அறிந்து கொண்டார். உடனே கால்நடைகளை மேய்ப்பவனை அழைத்துக் கண்டித்து அனுப்பினார். மேய்ப்பவன் அப்பசுவினை கண்காணித்து வந்தான். அப்போது பசு மேய்ச்சலை முடித்து விட்டு வழக்கம் போல் புற்றில் தன் மடியிலிருந்த பாலை சுரந்து கொடுத்து விட்டு வந்ததை கண்டான். அவனால் அந்த அதிசயத்தை நம்ப முடியவில்லை. உடனே பசுவின் சொந்தக்காரரிடம் ஓடிப்போய் நடந்த விவரத்தைச் சொன்னான்.

அவன் சொன்னது உண்மை தானா என பசுவின் சொந்தக்காரர் யோசித்தார். `சரி…சரி… நீ போ…நாளை வந்து நான் பார்க்கிறேன்!’ என்று அவனிடம் சொல்லி அனுப்பினார். திருவண்ணாமலைக்கும், மலையனூருக்கும் சென்று வரும் பக்தர்களில் புற்றுக்கு பால் சுரந்து கொடுத்த பசுவின் சொந்தக்காரரும் ஒருவர்.

அன்றிரவு அவரது கனவில் அம்மன் காட்சியளித்து, “புதர்கள் மண்டிக்-கிடக்கும் காட்டில் புற்றுருவாய் நான் எழுந்தருளியிருக்கிறேன். மலையனூர் சென்று பக்தர்கள் ரொம்பவும் சிரமப்பட்டு வருகின்றனர். இனி அதற்கு அவசியம் இல்லை. என்னை தரிசிப்பதென்றால் இங்கு வந்து என்னை தரிசித்து விட்டுச் செல்லலாம்” என அருளியுள்ளார்.

மறுநாள், பசுவின் மடியில் நாகம் பால் அருந்திய தெய்வீக காட்சியையும் கனவில் அம்மன் தோன்றிய நிகழ்வையும் கண்டவர், மலையனூர் சென்று வரும் பக்தர்கள் மேல் இரக்கம் கொண்டு அம்மனே இங்கு எழுந்தருளியிருப்பதை நினைத்து உள்ளம் பூரித்தார்.

அம்மன் புற்றுருவாய் எழுந்தருளியிருக்கும் புதர் மண்டிக் கிடக்கும் அந்த இடத்தை வாங்கி அங்காளம்மனுக்கு ஓர் ஆலயம் கட்டினார், அந்த பக்தர்.
இங்கேயும் ஓர் மலையனூர் உருவாயிற்று. அதன்பின்னர் பிற்கால பாண்டியர்களான வீரபாண்டியன் (கி.பி 1265-1285), சுந்தரபாண்டியன் (கி.பி 1285-1300) காலங்களில் கோயில் விரிவுபடுத்திக்கட்டப்பட்டதாக வரலாற்றுச்செய்திகள் உள்ளன.

இக்கோயில் கருவறையை பழமையை மாற்றி புதுமையாக மாற்றியமைக்க அம்மன் உத்தரவு தரவில்லையாம். இப்போது பார்த்தாலும் கருவறையின் கற்சுவர்களில் பல நூறு ஆண்டுகளுக்கு முந்தைய மீன்சின்னங்களையும், பாலகனை முதலை உண்ட தோற்றச்சிற்-பங்களையும் பார்க்க முடிகிறது.

இக்கோயிலுக்குச் செல்லும் வழியான திருப்பூர் நல்லூரில் பரமசிவன் கோயில் ஒன்று உள்ளது. அம்மன் ஆலயம் எழுந்த போதே இக்கோயிலும் உருப்பெற்றது. இந்தப் பரமசிவன் வீற்றிருக்கும் இக்கோயிலையும் பக்தர்கள் தரிசித்து விட்டுச் செல்கின்றனர். ஆக இங்கேயும் ஓர் திருவண்ணாமலை விளங்கிக் கொண்டிருப்பது இன்னொரு அதிசயம்!

பக்தர்களுக்கு அருள்பாலிக்க திருவண்ணாமலையாரும், மலையனூர் வாழ் அங்காளம்மனும் இங்கே எழுந்தருளியிருக்கிறார்கள். கொங்கு நாட்டில் உள்ள சக்தி பீடங்களில் முதன்மையானதாக விளங்குகிறது இத்தலம்!

முத்தணம்பாளையம்

ஒன்பது சக்தி பீடங்களில் ஏழாவது பீடமாகவும் அவதாரத்தலமாகவும் சிறப்பு பெற்றது இத்திருத்தலம். இத்தலத்தினுடைய திருப்பெயர் சிறப்பிற்குரிய ஒன்றாகக் கருதப்படுகிறது. முத்தணம்பாளையம் என்றும் தரள(ம்) நகர் என்றும் இத்தலம் அழைக்கப்படுகின்றது. “முத்தணம்” என்றால் மூன்று தனங்கள்” என்று பொருள்படும்.

அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று செல்வங்களை உடையது தான் இந்த முத்தணம்பாளையம். தரளம் என்றால் முத்து என்று பொருள். அங்காளம்மன் மாரியம்மனாக அவதாரம் எடுத்த போது தான் முத்து என்ற திருப்பெயர் அவளுக்கு சூட்டப்பட்டது. இத்திருப்பெயரே காலப்போக்கில் முத்தணம்பாளையம் என்றாயிற்று. இத்தலத்திற்கு வந்தவர்கள் நோய், நொடிகள் நீங்கி பூரண குணமாகிச் சென்றிருக்-கிறார்கள். கஷ்டங்கள், குறைகள் நீங்கி, மனநிறைவு பெற்றும், அருட்பெருஞ்செல்வங்கள் அடைந்திருக்கிறார்கள். இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். அந்த அளவிற்கு அற்புதங்கள் இத்தலத்தில் நடந்திருக்கின்றன.

சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ள அம்மனை, திருமணத் தடை உள்ளவர்களும், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்களும், குடும்பத்தில் பிரச்னை உள்ளவர்களும், செல்வ வளம் விரும்புவோரும், தீராத நோய் உள்ளவர்களும், சர்ப்பம் மற்றும் பிற தோஷம் உள்ளவர்களும் மனதார வழிபட்டு வந்தால் வேண்டியது கிடைக்கும் என்பது நம்பிக்கை. அம்மனை குல தெய்வமாக வழிபடுபவர்கள் தங்களது முதல் குழந்தைக்கு முத்தம்மாள், முத்துசாமி என்று பெயர் சூட்டி அழைக்கிறார்கள்.

அம்மனின் அருளால் குழந்தை பாக்கியம் பெற்றவர்கள் தலைக்கட்டு பொங்கல் வைத்து, முடி காணிக்கை செலுத்தி, காது குத்தி தங்களது நன்றிக் கடனை செலுத்துகிறார்கள். அங்காளம்மனுக்கு மற்றொரு திருப்பெயர் காலராத்திரி என்பார்கள்.

மஹாசிவராத்திரி

சிவராத்திரி அன்று அனைத்து அங்காளம்மன் கோயிலிலும் நடக்கும் மயானக்கொள்ளை பூஜை இங்கும் உண்டு. ஆனால் அது வித்தியாசமானது. கோயிலுக்கு அருகே உள்ள சுடுகாட்டுக்கு அருகில் ஒரு பிரமாண்ட அம்மன் மண்ணுருவம் படுத்த வாக்கில் செய்து அதற்கு கோர அலங்காரங்கள் செய்து பூஜை புனஸ்காரங்கள் செய்கிறார்கள்.

அந்த விழாவுக்கு ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட இதர மாநிலங்களி-லிருந்தும் பக்தர்கள் வருகிறார்களாம். இருபது முப்பது ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் இந்தத் திருவிழா நடப்பதற்குப் பத்துப்பதினைந்து நாட்களுக்கு முன்பு ஊருக்குள் பெரியவர்கள் யாராவது வழக்கமாக இறந்து விடுவது வாடிக்கையாக இருந்துள்ளது.

இறந்தவர்கள் தலையை வெட்டி எடுத்து மயானத்தில் செய்து வைக்கப்பட்ட உருவத்துடன் பிணைத்து பூஜைகள் செய்வார்களாம். அதெல்லாம் இப்போது வழக்கொழிந்து விட்டது. அம்மனின் தீர்த்தம், மஞ்சள் காப்பு, விபூதி, குங்குமம் ஆகியவை பிணி பீடைகளை விலக்கும் சக்தி வாய்ந்தது. அம்மனின் குங்குமம் மஞ்சள் காப்பினை சுமங்கலிப் பெண்டிர் தங்கள் திருமாங்கல்யத்தில் அணிந்து கொள்ளும் வழக்கம் உள்ளது!

Leave a Reply