நம்ம ஊரு சுற்றுலா: சிறுவாபுரி முருகன் கோயில்!

ஆலய தரிசனம்
– Advertisement –

682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">

siruvapuri murugan temple

6. சிறுவாபுரி முருகன் ஆலயம்

முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

          ஆத்துப்பாக்கம் சரசுவதி கோயிலில் இருந்து மீண்டும் வந்த வழியாகவே சென்னை நோக்கிப் பயணித்தால் சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் வலதுபுறம் திரும்பி மேலும் 2 கிலோமீட்டர் பயணித்தால் சிறுவாபுரி முருகன் கோயில் வரும். சிறிய கோயில். அண்மையில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டிருக்கிறது. சென்னையிலிருந்து ஏராளமான மக்கள் இந்தக் கோயிலுக்கு வருகிறார்கள். வீடு வாங்கும் யோகம் பெற, திருமணப் பேறு பெற, குழந்தை பிறக்க என பல வேண்டுதல்களுடன் மக்கள் வருகின்றனர். கோயிலில் ஏராளமானோர் உணவுப் பிரசாதம் விநோயகம் செய்கின்றனர்.
          இந்த இடத்தில் இராமரின் மகன்களான லவனும் குசனும் வாழ்ந்ததாக கோவிலின் வரலாறு கூறுகிறது. ஒருமுறை இராமன் இவ்விடம் கடந்து செல்லும் போது, ​​இராமன் தந்தை என்பதை அறியாமல் அவனுடனேயே போர் புரிந்துள்ளனர். சிறு பிள்ளைகள் இங்கு போர் தொடுத்ததால் இத்தலம் சிறுவர் போர் புரி என அழைக்கப்பட்டது. இந்த இடம் இப்போது சின்னம்பேடு என்று அழைக்கப்படுகிறது, இது சிறுவர்+அம்பு+ஏடு என்பதிலிருந்து மருவி வந்திருக்கலாம் என இங்குள்ளவர்கள் கூறுகின்றனர்.  ‘ஏடு’ என்ற சொல் அம்பறாத்துணியைக் குறிக்கும்.

          இந்த ஊரில் பல நூறு ஆண்டுகளுக்கு முன் முருகம்மை என்ற பெண் இருந்தாள். அவள் இங்குள்ள முருகப்பெருமானின் தீவிர பக்தையாக இருந்தாள். அவள் எப்பொழுதும் முருகனை வழிபடுவதை விரும்பாத அவள் கணவன் அதை நிறுத்தும்படி எச்சரித்துக்கொண்டிருந்தான். ஒருநாள் அவளது கணவன் கோபத்தில் அந்தப் பெண்ணின் கையை வெட்டிவிட்டான். அப்போதும், முருகப் பெருமானிடம் முருகம்மை கதறி அழுதாள். அவளது பக்தியில் மகிழ்ந்த இறைவன், அவள் கைகளை எந்த காயமும் இல்லாமல் மீண்டும் இணைக்கச் செய்தார்.

          இங்குள்ள முருகப்பெருமான் ஸ்ரீ பாலசுப்ரமணியர் என்று அழைக்கப்படுகிறார், மேலும் பக்தர்களின் விருப்பங்களை நிறைவேற்றும் சக்தி வாய்ந்தவர் என்று கூறப்படுகிறது. இந்த அழகிய கோயிலில் ஸ்ரீ அண்ணாமலையார் (சிவன்) மற்றும் ஸ்ரீ உண்ணாமுலை அம்மன் ஆகியோரும் உள்ளனர். முருகப்பெருமானின் உற்சவ மூர்த்தி, ஸ்ரீ வள்ளியுடன் திருமண கோலத்தில் வள்ளி மணாளராக காட்சியளிக்கிறார். இங்குள்ள முருகப்பெருமான் வீடு வாங்க விரும்புவோருக்கு அருள்பாலிப்பதாக நம்பப்படுகிறது. வீடு வாங்க விரும்பும் பலர் தங்கள் விருப்பத்தை நிறைவேற்ற இங்குள்ள முருகப்பெருமானை தரிசித்து வருகின்றனர்.

          முருகனின் பல்வேறு பெயர்களில் வள்ளிக் கணவன் என்ற பெயரே முதன்மையானது. வள்ளி இங்கு இச்சா சக்தியாக ஜொலிக்கிறாள். இக்கோயிலின் தனிச்சிறப்பு மரகத மயில், அதாவது பச்சைக் கல்லால் செய்யப்பட்ட முருகப்பெருமானின் வாகனமாகும்.

          கருவறைக்கு அருகில் அருணகிரிநாதர் இறைவனை நோக்கி காட்சியளிக்கிறார். அருணகிரிநாதர் இக்கோயிலுக்குச் சென்று பல திருப்புகழ்ப் பாடல்களைப் பாடியுள்ளார். முருகப்பெருமான் மீது அர்ச்சனை திருப்புகழ் ஒன்றையும் இயற்றியுள்ளார். இங்கே மரகத விநாயகர், ஆதி முருகன், நாகர், வெங்கட்ராயர், முனீஸ்வரர் மற்றும் பைரவர் ஆகிய தெய்வங்களின் சன்னதிகளும் உள்ளன.

          கோயிலுக்கு வெளியில் பச்சைக் காய்கறிகள், கீரை, பழங்கள் ஆகியவற்றை வியாபாரிகள் விற்கிறார்கள். செவ்வாய், வெள்ளி, சஷ்டி, கிருத்திகை நாட்களில் கூட்டம் அலைமோதுகிறது. ஞாயிற்று கிழமைகளிலும் கூட்டம் வருகின்றது.

          இந்தக்கோயிலின் தரிசனத்திற்குப் பின்னர் ஞாயிறு கோயிலுக்குப் புறப்பட்டோம்.

Leave a Reply