682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">
Thank you for reading this Dhinasari News Article.
Don’t forget to Subscribe!
எங்கெல்லாம் ஸ்ரீ ராமருடைய புகழ் பாடப்படுகின்றதோ அங்கெல்லாம் சிரமேற் கூப்பிய கையுடனும் ஆனந்த பாஷ்பக் கண்ணுடனும் தோன்றுபவர், அரக்கர்களுக்கு யமனைப் போன்றவர், வாயு புத்திரர் , அஞ்சனா தேவியின் மைந்தர், ஜானகி தேவியின் துன்பத்தை துடைத்தவர், வானர தலைவர், அக்ஷய குமரனை மாய்த்தவர், வாயு வேகமும் மனோ வேகமும் படைத்தவர், இந்திரியங்களை வென்றவர், புத்திமான்களிற் சிறந்தவர், ஸ்ரீ ராம தூதர், அனுமன் என்றும், ஆஞ்சனேயர் என்றும் வழங்கப்படும் மாருதி, இவரே வைணவ சம்பிரதாயத்தில் சிறிய திருவடி என்றும் போற்றப்படுகின்றார்.
காகுத்தன் அருள் கொண்டு கதையதனை கையில் கொண்டு கஷ்டங்களை போக்கடிக்கும் கர்ம வீரன் சுந்தரன் அனுமன். பட்டாபிராமன் புகழைப் பாடிப் பாடி காலமெல்லாம் பரந்தாமான் அருளால் பரமபதமளிப்பவன்.
கதை தனைக் கையில் கொண்டு கிங்கிணியை வாலில் கொண்டு ராம் ராம் என்று சொல்லும் ராம பக்தன் அனுமான். இத்துனை சிறப்பும் மகிமையும் வாய்ந்த ஸ்ரீ அனுமர் பல சைவ – வைஷ்ணவ தலங்களிலும் குடியிருந்து அருள் பாலிக்கிறார். அவற்றுள் சில தலங்கள்….
சென்னை சிங்கப்பெருமாள் கோவிலில் எழுந்தருளியிருக்கும் நரசிம்மருக்கு 6 மைல் தூரம் தள்ளி அனுமந்தபுரத்தில் எழுந்தருளியிருக்கும் ஆஞ்சனேயர், அரக்கோணத்திலிருந்து 18 மைல் தூரத்திலுள்ள சோளிங்கபுரத்தில் நரசிம்மருக்கு எதிரே மலைமீது யோக ஆஞ்சனேயராக எழுந்தருளியிருக்கிறார். யோக நரசிம்மர் எழுந்தருளியிருக்கும் மலைக்கு கடிகாசலம் என்று பெயர். ஊருக்கு வெளியே 2 மைல் தூரம் தள்ளி அமைந்திருக்கின்றன இரண்டு குண்றுகளும். யோக நிலையில் தரிசனம் தரும் ஓர் அதிசயத்தை இங்கு நாம் காணலாம். ஆஞ்சனேயர் நான்கு கரங்களுடன் இங்கு அருள்பாலிக்கிறார். ஒரு காலத்தில் இந்தப் பகுதியில் மிகப் பயங்கரங்களை விளைவித்த காலகேய ராக்ஷசர்களை அடக்கப் போரிடும்போது மன்னன் இந்திரதுயும்னனுக்கு உதவியாக ஸ்ரீ மஹாவிஷ்ணு ஆஞ்சனேயரை சங்கு சக்கரங்களுடன் அனுப்பி வைத்தார்.
யோக ஆஞ்சனேயருடைய சந்நிதியில் பேய் பிசாசுகள் விலகிவிடுகின்றன. கார்த்திகை மாதம் ஐந்து ஞாறுகள் சுற்றுவட்டாரத்திலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வந்து குவிகின்றனர். இங்குள்ள தக்கான் குளத்தில் நீராடி பிள்ளை வரம் வேண்டியும் நோய்கள் நீங்கவும் பிரார்தனை செய்து பயன்பெற்றவர்கள் பலர்.
ஈசனை வழிபடும் ஆஞ்சனேயரை காண காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவிலுக்குச் செல்லவேண்டும். சிவலிங்கத்தை வழிபடும் நிலையில் உள்ள இவ்வகை சிற்பத்தை வேறெங்கும் காண்பது அரிது.
ஸ்ரீமுஷ்ணம் சென்றால் ராம கதையைப் பாராயணம் செய்யும் அனுமரை தரிசிக்கலாம். தென்னார்காடு மாவட்டத்தில் சிதம்பரத்திலிருந்து விருத்தாசலம் செல்லும் வழியில் சேத்தியா தோப்பு சென்ற பின்னர் மேற்கே சென்றால் இவ்வூரை அடையலாம். பூவராகவன் கோவிலுக்கு வடமேற்கே உள்ள நந்தவனத்தில் தனி கோவிலில் இக்கோலத்தைக் காணலாம். ஸ்ரீ ராமர் பட்டாபிஷேகக் கோலத்தில் காட்சி தருகிறார். பரதன் வெண்குடை பிடிக்க, சத்ருக்னன் சாமரம் வீசுகிறான். அங்கே அனுமர் ராமாயண பாராயணம் செய்துகொண்டிருக்கிறார். ராமருக்கும் சீதைக்கும் ஒரே ஒரு பாதுகை மட்டுமே காணப்படுகிறது. காரணம், சித்திரக்கூடத்தில் பரதன், ராமரிடமும் சீதையிடமுமிருந்து ஒவ்வொரு பாதுகைகள் பெற்றுச்சென்று நந்திகிராமத்தில் பிரதிஷ்டை செய்து ஆட்சிபுரிந்தானாம்.
குடந்தை எனப்படும் கும்பகோணத்தில் உள்ள ராமசுவாமி கோவிலில் இராமாயண சிற்பங்கள் பிரசித்தமானவை. அங்கே இராவணனுடைய சபையில் கம்பீரமான் தோற்றத்துடன் வாதம் செய்யும் மாருதியை இன்று முழுவதும் பார்த்துக் கொண்டிருக்கலாம்.
சேலம் மாவட்டத்திலுள்ள நாமக்கல்லில் ஆஞ்சனேயர் நின்ற கோலத்தில் மிகப் பெரிய அளவில் காட்சி தருகிறார். சுமார் 40 அடி உயரமானது அச்சிலை. யுத்தத்தில் சக்தி ஆயுதத்தால் தாக்கப்பட்டு விழுந்த லக்ஷ்மணனைக் காப்பாற்ற சஞ்சீவி மலையை எடுத்தவரச் செல்கையில் வழியில் ஓரிடத்தில் அவருக்கு ஒரு சாளக்கிராமம் கிடைத்தது. அதையும் எடுத்துச் செல்லும்போது வழியில் தாகம் எடுக்கவே ஓரிடத்தில் வைத்துவிட்டுப் பக்கத்திலிருந்த தடாகத்தில் நீர் அருந்தினார். பின்னர் புறப்பட்டுச் சென்று சஞ்சீவி மலையை எடுத்துக் கொண்டு வரும்போது சாளக்கிராமம் வைத்த இடத்தை அடைந்தார். அங்கே அதைக் காணவில்லை. அந்த இடத்தில் சிறு குன்று எழும்பியிருந்தது. அதுவே நாமக்கல் மலையாகக் கூறப்படுகிறது. ஆஞ்சனேயர் நீர் அருந்திய தடாகம் கமலாயம் என்று அழைக்கப்படுகிறது. நாமகிரி அம்மனுக்கு எதிரே கம்பீரமாக நின்று இரு கைகளையும் கூப்பிய நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார் ஆஞ்சனேயர்.
திருச்சி – சேலம் பேருந்து வழியில் காட்டுப்புத்தூர் கிளைப் பாதையிலிருந்து 1 மைல் தூரம் தெற்கே உள்ளது திரு நாராயணபுரம். இரணிய சம்ஹாரத்திற்குப் பின்னர் பிரகலாதன் நரசிம்மரை நெருங்கி வணங்கித் தமக்குச் சாந்த சொரூபியாகக் காட்சியளிக்க வேண்டினாராம். அகண்ட காவிரியின் வடகரையில் உள்ள இத்தலத்தில் அவனுக்குக் காட்சி தருவதாக வாக்களித்தாராம் பகவான். இங்கு பிரகலாதன் தவம் இருந்து பகவானை வேதநாராயணப் பொருளாகக் கண்டுகளித்தானாம். அவருடைய தவத்திற்கு அனுமன் – சுக்ரீவன் முதலியோர் உடனிருந்து உதவினராம். துவஜஸ்தம்பத்தின் கீழ்புறம் அடியில் தரிசனம் கொடுக்கும் ஆஞ்சனேயர் மிகவும் அருட்சக்தி உள்ளவர்.
தஞ்சை ஜில்லாவில் பாபநாசம் ரயில் நிலையத்திற்கு வடக்கே இரண்டு மைலில் உள்ள செண்பகாரண்யம் என்ற க்ஷேத்திரம் ஆஞ்சனேயர் ஸ்தலமாகச் சொல்லப்படுகிறது. கஜேந்திரருக்கும் ஆஞ்சனேயருக்கும் பரந்தாமன் பிரத்யக்ஷமாகி தரிசனம் தந்த இடம் இதுவாகும்.
கலைஞர்களின் கற்பனைக்கு அளவென்பது என்றுமே இருந்ததில்லை. அதிலும் இதிகாசத்தில் ஏற்கனவே சர்வ வல்லமையும் படைத்தவராகக் காட்டப்படும் ஒருவரை மேலும் தம் கற்பனையில் மெருகேற்றிப் பார்ப்பதென்றால் சொல்லவா வேண்டும் ! அவ்வாறே திருமாலின் அவதாரங்களுடன் அனுமனையும் இணைத்து ரசித்திருக்குன்றனர் சிற்பக் கலைஞர்கள். தஞ்சை ஜில்லாவில், மயூரம் தரங்கம்பாடி சாலையில் திருக்கடையூரிலிருந்து 3 மைல் தொலைவில் அமைந்துள்ளது ” அனந்தமங்கலம் “என்ற சிறு கிராமம்.
இங்குள்ள ராஜகோபாலன் கோவிலில் உள்ள இந்த விக்கிரகத்தை காண கண்கள் கோடி வேண்டும். இவரை ” தசபுஜ அனுமான் ” என்று அழைக்கிறார்கள். பத்துக் கைகளிலும் அஷ்டதிக்பாலகர்களின் ஆயுதங்களைக் காணலாம். எல்லாத் தேவர்களின் புஜ வலிமைகளும் இந்த விசுவரூபத்தில் அடங்கியிருக்கிறது என்கின்றனர்.
ஸ்ரீராமர் ஆஞ்சனேயரை ஆலிங்கனம் செய்துகொண்டது பற்றி நாம் அறிவோம். ஆனால் இளையபெருமாள் ஆஞ்சனேயரை அணைத்தபடி நிற்கும் அற்புத கோலத்தை திருநெல்வேலி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் என்ற ஊரில் நாம் காணலாம். அங்குள்ள கள்ளப்பிரான் கோயில் முன் மண்டபத்திலே தூன் ஒன்றில் இளையபெருமாள் ஒருபக்கம் ஆஞ்சனேயரையும் மறுபக்கம் அங்கதனையும் அணைத்து நிற்கும் கோலத்தைக் கண்டு மகிழலாம்.
ஸ்ரீ ராம தூத மஹாதீர ருத்ர வீர்ய ஸமுத்பவ
அஞ்ஜநா கர்ப்ப ஸம்பூத வாயுபுத்ர நமோஸ்துதே
அஸாத்ய ஸாதக ஸ்வாமிந் அஸாத்யம் தவகிம் வத
ஸ்ரீ ராம தூத க்ருபாஸிந்தோ மத்கார்யம் ஸாதய ப்ரபோ
அந்யதா சரணம் நாஸ்தி த்வமேவ சரணம் மம
தஸ்மாத் காருண்ய பாவேன ரக்ஷ ரக்ஷ தயாநிதே
அஞ்ஜநா நந்தனம் வீரம் ஜானகி ஸோக நாஸனம்
கபீஸ மக்ஷ ஹந்தாரம் வந்தே லங்கா பயங்கரம்
மநோஜவம் மாருதி துல்ய வேகம்
ஜிதேந்திரியம் புத்திமதாம் வரிஷ்டம்
வாதாத்மஜம் வானரயூத முக்யம்
ஸ்ரீராமதூதம் ஸிரஸா நமாமி