சிறுவர்களுக்கு சில துதிகள்

ஸ்தோத்திரங்கள்

 

மத்தமு மதியமும் வைத்திடும் அரன்மகன்

மற்பொரு திரள்புய மதயானை

மத்தள வயிறனை உத்தமி புதல்வனை

மட்டவிழ் மலர்கொடு பணிவேனே!

 

முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில்

முற்பட வெழுதிய முதல்வோனே

முப்புரம் எரிசெய்த வச்சிவன் உரைரதம்

அச்சது பொடிசெய்த அதிதீரா

அத்துயர் அதுகொடு சுப்பிர மணிபடும்

அப்புன மதனிடை யிபமாகி

அக்குற மகளுடன் அச்சிறு முருகனை

அக்கண மணமருள் பெருமானே!

 

style="text-align: center;">பெரிய புராணம்

உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்

நிலவு லாவிய நீர்மலி வேணியன்

அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான்

மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்.

 

தேவாரம்

தோடுடைய செவியன் விடையேறியோர்

தூவெண் மதி சூடிக்

காடுடைய சுடலைப் பொடிபூசி என்

உள்ளங் கவர் கள்வன்

ஏடுடைய மலரான் முனைநாட்பணிந்து

ஏத்த அருள் செய்த

பீடுடைய பிரமாபுர மேவிய

பெம்மானிவன் அன்றே!

 

அபிராமி அந்தாதி

மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்து சென்னி

குனிதரும் சேவடிக் கோமளமே கொன்றை வார் சடைமேல்

பனிதரும் திங்களும் பாம்பும் பகீரதியும் படைத்த

புனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே!

 

திருமுருகாற்றுப்படை

உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன்

பின்னை ஒருவரையான் பின்செல்லேன் – பன்னிருகைக்

கோலப்பா வானோர் கொடியவினை தீர்த்தருளும்

வேலப்பா செந்திவாழ் வே.

 

அஞ்சு முகந்தோன்றின் ஆறு முகந்தோன்றும்

வெஞ்ச மரில்அஞ்சலென வேல்தோன்றும் – நெஞ்சில்

ஒருகால் நினைக்கில் இருகாலுந் தோன்றும்

முருகாவென்(று) ஓதுவார் முன்.

 

முருகனே செந்தி முதல்வனே மாயோன்

மருகனே ஈசன் மகனே – ஒருகைமுகன்

தம்பியே நின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும்

நம்பியே கைதொழுவேன் நான்.

 

கந்தர் அனுபூதி

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்

மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்

கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.

 

கந்தரலங்காரம்

சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு

வெற்பனைச் செஞ்சுடர்வேல்

வேந்தனைச் செந்தமிழ் நூல்விரித்

தோனை விளங்குவள்ளி

காந்தனைக் கந்தக் கடம்பனைக்

கார்மயில் வாகனனைச்

சாந்துணைப் போது மறவா

தவர்க்கொரு தாழ்வில்லையே!

 

மாலோன் மருகனை மன்றாடி

மைந்தனை வானவர்க்கு

மேலான தேவனை மெய்ஞ்ஞான

தெய்வத்தை மேதினியில்

சேலார் வயற்பொழில் செங்கோ

டனைச்சென்று கண்டுதொழ

நாலா யிரங்கண் படைத்தில

னேயந்த நான்முகனே!

 

Leave a Reply