திருப்புகழ்க் கதைகள் – பகுதி – 334
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
கறுத்த தலை – திருவேங்கடம்
மத்ஸ்யாவதாரம் 1
அருணகிரிநாதர் அருளிச்செய்துள்ள இருநூற்றி நாற்பத்தி ஆறாவது திருப்புகழான “கறுத்த தலை” எனத் தொடங்கும் திருப்புகழ் திருவேங்கடம் தலத்துப் பாடலாகும். இத்திருப்புகழில் அருணகிரியார் “திருவேங்கட முருகா, அடியேன் உனது அடியாருக்குத் தொண்டு செய்து உய்ய அருள்புரிவாயாக” என வேண்டுகிறார். இனி திருப்புகழைக் காணலாம்.
கறுத்ததலை வெளிறு மிகுந்து
மதர்த்த இணை விழிகள் குழிந்து
கதுப்பிலுறு தசைகள் வறண்டு …… செவிதோலாய்க்
கழுத்தடியு மடைய வளைந்து
கனத்தநெடு முதுகு குனிந்து
கதுப்புறுப லடைய விழுந்து …… தடுநீர்சோர்
உறக்கம்வரு மளவி லெலும்பு
குலுக்கிவிடு மிருமல் தொடங்கி
உரத்தகன குரலு நெரிந்து …… தடிகாலாய்
உரத்தநடை தளரு முடம்பு
பழுத்திடுமுன் மிகவும் விரும்பி
உனக்கடிமை படுமவர் தொண்டு …… புரிவேனோ
சிறுத்தசெலு வதனு ளிருந்து
பெருத்ததிரை யுததி கரந்து
செறித்தமறை கொணர நிவந்த …… ஜெயமாலே
செறித்தவளை கடலில் வரம்பு
புதுக்கியிளை யவனோ டறிந்து
செயிர்த்தஅநு மனையு முகந்து …… படையோடி
மறப்புரிசை வளையு மிலங்கை
யரக்கனொரு பதுமுடி சிந்த
வளைத்தசிலை விஜய முகுந்தன் ……மருகோனே
மலர்க்கமல வடிவுள செங்கை
அயிற்குமர குகைவழி வந்த
மலைச்சிகர வடமலை நின்ற …… பெருமாளே.
இத்திருப்புகழின் பொருளாவது – சோகுகன் (சோமகுரு என்றும் பெயர் உண்டு) என்ற அரக்கன், பெரிய அலைகள் வீசுகின்ற கடலில் வேதங்களை மறைத்து வைத்தபோது, மீன் உருவங்கொண்டு, அவ்வேதங்களைக் கொணர்ந்தவரும், வெற்றியுடைய திருமாலும், கடலின்மீது கணை தொடுத்து, அணைகட்டி, இலக்குமணனோடு இருந்து, இராவணனது தன்மையை அறிந்து, சீற்றமடைந்த அநுமனை மகிழ்ந்து, படைகளைச் செலுத்தி, வீரம் பொருந்திய மதில்கள் சூழ்ந்த இலங்கையில் வாழ்ந்த இராவணனுடைய பத்துத் தலைகளும் அற்று விழும்படி, கோதண்டத்தை வளைத்த, சிறந்த வெற்றி படைத்தவரும் ஆகிய நாராயணமூர்த்தியின் திருமகரே;
தாமரை மலர் போன்ற வடிவுள்ள திருக்கரத்தில் வேலையேந்திய குமாரக் கடவுளே; குகை வழியே வந்து, மலையாகிய சிகரத்தையுடைய திருவேங்கட மலைமீது எழுந்தருளியுள்ள பெருமிதம் உடையவரே;
கருமையான தலை மயிர் நரைத்தும், செழித்த இருகண்கள் குழிந்தும், கன்னத்தில் உள்ள சதைகள் வற்றியும், காதுகள் தோலாகித் தொங்கியும், கழுத்தின் அடிப்பகுதி முழுதும் வளைந்தும், நீண்டு வலிமையாயிருந்த முதுகு கூனலாகியும், தாடையில் உள்ள பற்கள் உதிர்ந்தும், உதட்டில் எச்சில் நீர் ஒழுகியும், தூக்கம் வரும்போது, எலும்புகள் அப்படியே குலுங்குமாறு இருமல் வந்தும், உரத்த, வலிய குரல் நடுங்கியும் தடி ஊன்றியும், நடை தடுமாறியும், உடம்பு முதுமைப் பருவத்தை அடையும் முன்னர், தேவரீருடைய திருத்தொண்டர்கட்கு அடியேன் மிக்க அன்புடன் தொண்டு செய்ய மாட்டேனோ? – என்பதாகும்.
இத்திருப்புகழில், அருணகிரிநாதர் சிறுத்தசெலு வதனு ளிருந்து பெருத்ததிரை யுததி கரந்து செறித்தமறை கொணர நிவந்த ஜெயமாலே என்ற வரிகளின் மூலம் திருமாலின் மத்ஸ்யாவதாரப் பெருமையைக் கூறுகிறார்.
நமது “ஸநாதன தர்மத்துக்கு’ ஆதாரமானவை வேதங்களே. நான்மறைகள் இல்லையேல் நமது மதமே இல்லை. காக்கும் கடவுளான திருமால், தர்மத்தை நிலை நாட்டப் பல அவதாரங்கள் எடுத்திருப்பினும், அவற்றுள் வேதங்களைக் காத்த பெருமையினால் பெரிதும் போற்றப்படுவது, மத்ஸ்ய ரூபத்தில் (மீன் உருவம்) எடுத்த அவதாரமே. தசாவதாரங்களில் இதுவே முதன்மையானது.
இந்த மச்ச அவதார நோக்கம் அசுரர்களால் திருடப்பட்ட வேதங்களை காப்பாற்றுவதாகும். ஒரு யுகம் முடிவு அடைய போகும் கால கட்டத்தில் பிரம்மாவுக்கு உறக்கம் ஏற்பட்டது. அவர் கண்களை மூடி வாயை திறந்து தூங்கும் போது அவர் வாயில் இருந்து வேதங்கள் வெளியே வந்து விழுந்தன. அவற்றை அசுரரான சோமகுரு என்பவன் திருடி எடுத்து சென்றுவிட்டான். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பிரம்மா மற்றும் தேவர்கள் இருந்தால் தான் புது யுகத்தை உருவாக்க முடியும் அதில் எல்லா உயிரினங்களை படைக்க முடியும் என்று கூறினார். மத்திய புராணத்தில் இந்த மச்ச அவதாரத்தை பற்றி கூறியுள்ளார்கள்.
விஷ்ணுவின் பக்தரான சத்தியவ்ரதா சந்தியா வந்தனம் செய்யும் போது அந்த கமண்டலத்தில் இருந்து சிறிய மீனாக தோன்றிய பெருமாள் படிப்படியாக ஒரே நாளில் பெரிய மீனாக உருவெடுத்தார். பகவான் தன் மச்ச அவதாரத்தின் மூலம் அசுரன் சோமகுருவை அழித்து வேதங்களை திரும்ப பெற்றார். அவற்றை பிரம்மாவிடம் ஒப்படைத்தார். பிரம்மா தன் படைக்கும் தொழிலால் ஒரு புதிய யுகத்தை உருவாக்கினார்.
இது தொடர்பான மற்றொரு கதையும் உள்ளது. அதனை நாளை காணலாம்.