இலக்கியம் : உடல் மெலிவும், உடல் பொலிவும்!

விழாக்கள் விசேஷங்கள்

திடீரென ஒலிபெருக்கியில் அறிவிப்பு̷ 0;”வடஇந்தியாவின் புகழ்பெற்ற “தாண்டிய’ நடனம் இப்போது’ என்று! சிறார்கள் தங்கள் கைகளிலே கோலாட்டக் குச்சிகளுடன் ஆடத் தயாரானார்கள். பாட்டு þ காதலர்தினம் படத்தில் வரும் “தாண்டிய ஆட்டமும் ஆட தசராக் கூட்டமும் கூட! குஜராத் குமரிகளாட, காதலன் காதýயைத் தேட…’ பாட்டின் பல்லவி இது. இன்னும் முழுப் பாடலுக்கும் நடனம் முழுப் பாடல் வரிகளை ஏதேனும் அலைவரிசைகளில் கேட்டுக் கொள்ளுங்கள். விரகதாபக் காட்சிகளோடு சினிமாவில் வரும் அதே அங்க நெளிவு அசைவுகளோடு! சிறுவர்கள் சும்மா ஆடினால் தேவலாம்! ஆனால் பாடல் முழுதையும் அவர்கள் வாய் முணுமுணுத்தபடியே இருந்தது. இந்தப் பாடலை இப்படி பாடிக் கொண்டே ஆட ஆணும் பெண்ணுமாய் குறைந்தது பத்து முறையாவது ஒத்திகை பார்த்திருப்பார்கள். பருவம் þ விவரம் தெரிந்தும் தெரியவருகிற பருவம்.

பள்ளி நிகழ்ச்சிகளில் இதுபோன்ற சினிமாப் பாடல்கள் தேவைதானா? சிந்திக்க வேண்டியுள்ளது. சில பள்ளிகளில் முற்றிலும் இந்நிகழ்ச்சிகளுக்கு சினிமா சம்பந்தத்தைத் தவிர்த்து விடுவதைக் கண்டிருக்கிறேன். பாராட்டப்பட வேண்டியவர்கள் அவர்கள்.

நடனநிகழ்ச்சி முடிந்து உடனே வெளியில் வந்தபோது கீழாம்பூர் சொன்னார்… “”இது நம் பக்கங்களில் உள்ள கோலாட்டம்போல் இருக்கிறது இல்லையா? கோலாட்டம் என்பது என்ன அருமையான உத்தி. நல்ல சமூகச் செய்தியும் அதில் உள்ளதே!” என்று தம் சிந்தனையைப் படரவிட்டார். கோலாட்ட சிந்தனையோடு, இந்த விரகதாபக் காட்சி வர்ணனைகளுக்கும் நம் பண்டைய சிந்தனைகளுக்கும் எவ்வளவு வித்தியாசம் உள்ளது என்று என் மனம் அசைபோடத் தொடங்கியது.

நவம்பர் முதல்வார முடிவில் கலைமகள் மஞ்சரி இதழ்களின் அதிபரும் பதிப்பாசிரியருமான திரு.ஆர். நாராயணஸ்வாமி அவர்களும் அவர்தம் துணைவியார் திருமதி உமாநாராயணஸ்வாமி அவர்களும் “நெல்லை மாவட்டத்திலுள்ள நவதிருப்பதி கோயில்களைத் தரிசிக்க வேண்டும்’ என்றார்கள். பழகிய இடம் என்பதால் உடன் சென்றிருந்தேன். நவதிருப்பதி தரிசனம் முடித்து அழகிய நம்பிராயர் வீற்றிருக்கும் திருக்குறுங்குடி கோயிலுக்குச் சென்றபோது மாலை ஆறுமணியாகிவிட்டது. தரிசனம் முடித்து வெளியில் வந்தபோது, கோயிலை ஒட்டிய வீதியில் கோலாட்ட வைபவம். ஆச்சரியத்தோடு சற்று ரசித்தோம். இதைப் பற்றிய பேச்சு தொடர்ந்தது.

சிறு வயதுமுதல் எங்கள் ஊரில் இந்தக் கோலாட்டக் காட்சியைக் கண்டிருக்கிறேன். இல்லத்தில் கோலாட்டக் குச்சிகள் வண்ணமயமாய் இப்போதும் நிறைந்திருக்கின்றன. தமிழகம் முழுவதுமே கோலாட்டம் நடைபெறுவதாகக் கேள்வி. ஆனால் நெல்லை ஜில்லாவில்தான் பெரும்பாலும் கண்டிருக்கிறேன். ஊருக்கு நன்மை வேண்டி பெண்கள் மேற்கொள்ளும் கூட்டு முயற்சி இது.

தீபாவளி தினத்தன்று அருகில் இருக்கும் வயல்காட்டிýருந்து மண் எடுத்து வருவார்கள். அதில் ஒரு பகுதியை குயவர் மூலம் பசுவாகவும் கன்றாகவும் பொம்மை செய்து வண்ணமிடுவர். இன்னொரு பகுதியில் முளைப்பாரி (பாýகை) எனப்படும் தானியம் தூவி முளைகட்ட வைத்து விடுவர்.

தொடர்ந்து பத்து தினங்கள் முளைப்பாரியும் பசுவும் பிள்ளையும் வீதியின் நடுவில் ஓர் வீட்டின் வாயிýல் வைக்கப்படும். பெண் குழந்தைகள் பாடல்களைப் பாடியவாறு, தங்கள் கைகளில் உள்ள கோலாட்டக் குச்சிகளை தாளத்திற்கேற்பத் தட்டியபடி அவற்றைச் சுற்றிச் சுற்றி வருவார்கள். “பசுவா, பசுவய்யா’ போன்ற கோலாட்டப் பாடல்களே பிரத்யேகமாகப் பாடப்படும். சில இடங்களில் பஜனைப் பாடல்கள், கும்மிப்பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்களும் பாடப்படுவதுண்டு.

ஊரின் ஒவ்வொரு தெருவிலும் தங்கள் தங்கள் தெருக் குழந்தைகளை ஒன்றிணைத்து இதைப் பெண்கள் நடத்துகிறார்கள். தீபாவளி முடிந்த பத்தாவது தினத்தில், (சில இடங்களில் எட்டாவது தினத்தில்) சுமங்கýப் பெண்கள் எண்ணெய் தேய்த்து நீராட எண்ணெய் சிகைக்காய்ப்பொடி கொடுத்து, அன்று மதியம் அனைவருக்கும் விருந்து படைத்து மாலை பெண்களும் கோலாட்டத்தில் கலந்துகொள்கிறார்கள். பிறகு புதுப்புடவை எடுத்து, இன்னும் தேவையான சில பொருட்களுடன் ஆற்றங்கரையோர அம்மன் சிலைக்குப் படைத்து, அவற்றை ஏழைப் பெண் ஒருவருக்குக் கொடுத்துவிடுகிறார்கள். ஒவ்வொரு இல்லத்திலிருந்தும் வரும் பலவகை அன்னம் அங்கே ஒன்றுகலந்து எல்லோருக்கும் பரிமாறப்படுகிறது … இது ஆடி பதினெட்டாம் பெருக்கு உற்சவத்தை நினைவூட்டும். பிறகு பசுவும் பிள்ளையும் முளைப்பாரியும் ஒரு சிறுவன் பின்னே செல்ல எடுத்துச் செல்லப்பட்டு, வயல்காட்டில் கரைக்கப்படுகிறது. அந்தச் சிறுவனுக்கு அன்று புதுவேஷ்டி துண்டுகளோடு பரிசுப் பொருட்களும் உண்டு. இவர்கள் மனம் திருப்தியடைந்து போனால், சகல தேவதைகளும் மனம் மகிழ்வுற்று, கிராமத்திற்கு நன்மை செய்வார்கள் என்ற நம்பிக்கை. இது மழைப் பொழிவுக்கும், வளமைக்கும், ஊர்ப் பொது நன்மைக்கும் செய்யும் ஒரு விழா என்றுகூடக் கொள்ளலாம். குறிப்பாக, ஊர் நன்மைக்கு பெண்கள் தலையெடுத்துச் செய்யும் முக்கிய நிகழ்வு இது என்பதோடு, தங்கள் கலைத்திறனையும் வெளிப்படுத்தும்விதமாய் அமைந்து விடுகிறது கோலாட்ட வைபவம்.

இதில் பொதிந்துள்ள சமூகப் பார்வை சமுதாயத்தின் ஏழை திருப்தியுற்றால் தேவதைகளும் திருப்தியுறுகிறார்கள்; அதற்கு மற்றவர்கள் ஒன்றிணைந்து உதவி செய்ய வேண்டும் என்பதே!

இப்படி கோலாட்டத்திற்கென்று தனித்துவம் சில இருக்கிறது. நாம் வடநாட்டு பாணியோடு அதை சேர்த்து ஏதோ போல் நகர்ப்புறக் குழந்தைகளுக்குக் கொடுத்து விடுகிறோம். அதில் களியாட்டமும் விரகதாபமும் ஓங்கிவிடுவது வெளித் தெரிகிறது. காதலனைப் பிரிந்து தாபத்தால் மெலிந்துபோன காதலியையும், காதல் நிலையையும் காட்டும் பாடல்கள் நமக்குப் புதிதல்ல; ஆனால் வெளிப்படையாகக் கொடுக்கும் வார்த்தைகள் இளஉள்ளங்களில் தைத்து முடமாக்கி விடுகிறதே!

வள்ளுவர் காட்டாத “பிரிவாற்றாமையா?’ “உறுப்பு நலன் அழிதல்’ என்று ஓர் அதிகாரத்தையே படைத்துள்ளாரே! கைவளைகள் இசைபாடும் கரங்களுக்கும் உடல்மெலிந்தால் தோன்றும் நிலைக்கும்தான் எத்தனை எத்தனை கவிதைகள்…

“துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை

இறை இறவா நின்ற வளை’ (குறள்: 1157)

தலைவன் அவளை விட்டுப் பிரிந்ததால் ஏற்பட்ட பிரிவுத்துயரில் அவள் கை மெலிந்து, அணிந்திருந்த வளையல்கள் கழன்றுவிழுந்தன. இது இவளது பிரிவாற்றாமையைப் பலர் அறியப் பறைசாற்றுவதுபோல் உள்ளது என்கிற காட்சியைக் காட்டுகிறார் வள்ளுவர்.

இன்னும் நம் சங்ககால அக இலக்கியங்களில் பொருள்வயிற் பிரிந்த தலைவனின் நினைவால் வாடும் தலைவியைப் பற்றிய பாடல்கள் நிறையவே உண்டு. அற்றிýருந்து மாறுபட்ட ஒரு சிந்தனை இது…

“”யாமி நயாமீதி தவே வததி புரஸ்தாத் க்ஷணேந தந்வங்க்யா;

களிதாநி புரோவலயாநி அபராணி புநஸ் ததைவ தளிநாநி…….”

பிரிவுத் துயரை சகித்துக் கொள்ள மாட்டாத உத்தம நாயகியின் சுபாவத்தைத் தெரிவிக்கும் சம்ஸ்க்ருத கவி இது.

தலைவியை விட்டுவிட்டு, பொருள் தேடுதல் பொருட்டு வேறு நகரத்துக்குச் செல்ல எண்ணிய தலைவன், “யாமி’ (செல்கிறேன்) என்றான். வெளியூருக்குச் செல்கிறேன்’ என்கிற அந்த வார்த்தையைக் கேட்ட மாத்திரத்திலேயே, அவள் கைகளில் அணிந்திருந்த வளைகள் கழலத் தொடங்கின. பாதிவளைகள் கழன்று விழுந்துவிட்டன. வெளியூர் செல்கிறேன் என்று அவன் வாய்வார்த்தையைக் கேட்டதற்கே, அவள் உடல் அப்படி இளைத்துப் போயினள் என்பது புலப்படுத்தப் படுகிறது. உடல்மெலிந்தால் வளை கழலுமல்லவா? இதைக் கண்ட தலைவன், இவள் நம் பிரிவைத் தாங்கமாட்டாள் என்று உணர்ந்தபடியே, “நயாமி’ என்றான். இந்த வார்த்தைக்கு இருவேறு பொருள் கொள்வர் பெரியோர். “ந-யாமி’ என்று இரு பதங்களாக்கிப் பொருள் கொண்டால், “போவதில்லை’ அதாவது, “உன்னை விட்டுவிட்டு நான் போகப் போவதில்லை’ என்ற பொருளைத் தரும். “நயாமி’ என்ற ஒரு பதமாக்கிப் பொருள் கண்டால், “உன்னோடு செல்கிறேன்…’ அதாவது, “ஒருகால் நான் போவதாயிருந்தால் உன்னை விட்டுவிட்டுத் தனியே போகமாட்டேன்; உன்னையும் உடனழைத்துப் போவேன்’ என்று பொருள்படும். இதன் காரணத்தாலேயே, கவி இங்கே, “ந-கச்சாமி’ (போகப்போவதில்லை) என்கிற சொல்லைப் போடாமல் “ந யாமி’ என்ற பதத்தைக் கையாள்கிறார்.

இந்த வார்த்தையை தலைவனின் திருவாயிலிருந்து கேட்ட நொடிப் பொழுதில் அவள் கைகளில் இருந்த மீதமுள்ள வளையல்கள் “படீல் படீல்’ என வெடித்துத் தெறித்தன. என்றால், மனதிற்குக் குதூகலம் தரும் “நயாமி’ என்ற வார்த்தையைக் கேட்ட அம்மாத்திரமே அவள்உடல் மகிழ்ச்சியால் பூரித்துப் போனது. உடல் பருத்துப் பூரித்ததால் கைவளைகள் அந்த நெருக்கம் தாளாமல் வெடித்துச் சிதறின… இப்படியொரு வித்தியாசமான சிந்தனையைக் கவி தருகிறார். திவ்யப் பிரபந்தங்களில் “என் அங்கம் மெலிய வளை கழல…’ என்றும், “என்னுடைய கழல்வளையைத் தாமும் கழல் வளையே யாக்கினரே’ என்றும் (நாச்சியார் திருமொழி) உடல் மெலிதல் குறிப்பு வருகிறது. ஆனால் உடல் பூரித்துப் போனமை பேசப்பட்டுள்ளதா… தெரியவில்லை…

பராசர பட்டர் தம்முடைய குணரத்ந கோசத்தில் இதே போன்றதொரு காட்சியைக் காட்டுகிறார்.

ச்ரியஸ்ரீ: ஸ்ரீரங்கேசய தவச ஹ்ருத்யம் பகவதீம்

ச்ரியம் த்வத்தோப்யுச்சைர் வயமிஹ பணாம: ச்ருணுதராம்

த்ருசௌதே பூயாஸ்தாம் ஸுகதரளதாரே ச்ரவணத:

புநர் ஹர்ஷோத் கர்ஷாத் ஸ்புடது புஜயோ: கஞ்சுகசதம் //

(குணரத்ன கோசம் – 9)

(ச்ரியஸ்ரீ: ஸ்ரீரங்கேசய) திருவிற்கும் திருவே; ஸ்ரீரங்கநாதனே… என்று பட்டர் விளிக்கிறார். அழைத்த குரலுக்கு அரங்கன் செவிமடுத்து, என்ன சொல்லப் போகிறாரோ என்ற ஆவýல் கேட்க ஆயத்தமாகிறார். அப்போது பட்டர் சொல்லுகிறார்… “அடியேன் பாடப் போகிறேன்…’ அரங்கனோ, பட்டர் தம்மைத்தான் பாடப் போகிறார் என்று ஆவலோடு நோக்க, பட்டரோ “”இல்லை இல்லை; உன்னைப் பாடவில்லை; அகல கில்லேன் இறையுமென்று அலர்மேல் மங்கை உறை மார்பனான உன் இதயத்தில் வாசம் செய்யும் பிராட்டியைப் பாடப் போகின்றேன்; உனைப் பாடுதலைக் கேட்பதைக் காட்டிலும், உன் திருவைப் பாடுதலைக் காதால் கேட்பது உனக்கு அதிக மகிழ்ச்சியைத் தருமே! எனவே இதயத்துள் உறை பிராட்டியைப் பாடப் போகின்றேன். என் வாயிலிருந்து வார்த்தைகள் இடைவிடாது வந்து கொண்டேயிருக்கும் (பணாம:) நீ வெறுமனே கேட்காது, உன்னிப்பாக ஈர்ப்போடு ஆச்சர்யமாகக் கேட்க வேண்டும் (ச்ருணுதராம்)….

“”பிராட்டியின் பெருமைகளைக் காதால் கேட்கின்ற போது உன் கண்கள் ஆச்சர்யத்தால் விரிய வேண்டும்… (த்ருசௌதே பூயாஸ்தாம்) “நீண்ட அப்பெரியவாய கண்கள் எனைப் பேதைமை செய்தனவே’ என்று ஆழ்வார் பாடியதைப் போன்ற உன் அகல விரிந்த கண்கள் உன் காதுகள் வரை நீண்டு பரந்து விரிய வேண்டும். (ஸுகதரள தாரே ச்ரவணத:)

“”புநர் ஹர்ஷோத் கர்ஷாத் ஸ்புடது புஜயோ: கஞ்சுக சதம் – மேலும் உன் நெஞ்சு பெருமிதத்தால் விம்மிப் புடைக்க வேண்டும். அப்படி புஜங்கள் பெருத்துப் புடைக்கும்போது உன் மார்பில் அணிந்துள்ள கவசம் படீல் படீல் என விண்டு தெறிக்க வேண்டும். இப்படி நூறு முறை உன் கவசத்தை நீ மாற்ற வேண்டும்…”

இங்கே திருவரங்கத் தலைவி அரங்கநாயகியின் புகழ்மாலையைக் கேட்ட மாத்திரத்தில் அரங்கத் தலைவனின் நெஞ்சு பெருமிதத்தில் விம்மிப் புடைத்து கவசம் தெறித்து விழுகிறது – உடல் பூரிப்பைத் தந்துவிடுகிறது அரங்கனுக்கு… ஏன்? நமக்கும்தான்! இப்படிப்பட்ட கவிதை நயத்தையும் காட்சி எழிலையும் வாழ்க்கை நுட்பத்தையும் பராசர பட்டர் காட்டியிருக்கிறாரே!

(மஞ்சரி டைஜஸ்ட் இதழில் ஆசிரியராக இருந்தபோது, உங்களோடு ஒரு வார்த்தை என்ற கடைசிப் பக்கக் கட்டுரைகளில் இடம்பெற்ற அடியேன் எழுதிய ஒரு கட்டுரை..)

Leave a Reply