முதல் காதல் கடிதம்

விழாக்கள் விசேஷங்கள்

அவள் தந்தையும் அண்ணன்மாரும் அவளை ஒரு தீய இளவரசனுக்கு மணம் முடிக்க நிச்சயித்தனர். அவளுடைய கருத்தையோ விருப்பத்தையோ கேட்க அந்த அரண்மனையிலும் தலைநகரிலும் எவரும் இல்லை. நகர மக்கள் அவள் அந்தத் தீயவனை மணப்பதை விரும்பவில்லை ஆயினும், அரசனை எதிர்த்து மக்கள் என்ன பேச முடியும்?

இந்த நிலையில் அந்த அரசகுமாரி மனஉறுதியுடன் தானே ஒரு முடிவுக்கு வந்தாள். திருமணத்துக்கு இன்னும் சில நாட்களே இருந்தன. அரண்மனையில் தெய்வ வழிபாடுகள் நடத்த ஒரு வேதியர் வருவதுண்டு. அவள் அந்த வேதியரைத் தனியே அழைத்து, தான் ஓர் இளமன்னனிடம் காதல் கொண்டிருப்பதாகவும், தன் கடிதத்தை அவனிடம் கொண்டு சேர்க்க வேண்டுமென்றும் அவரை வேண்டினாள். “குழந்தாய், உனக்கு உதவுவது என் பெரும் பாக்கியம். இன்றிரவு நீ உன் கடிதத்தை எழுதி வைத்திரு. நாளைக் காலையிலேயே நான் உன் கடிதத்துடன் அந்த நகருக்குப் புறப்படுவேன்” என்றார் வேதியர்.

அரசகுமாரி அன்றிரவில் அனைவரும் தூங்கிய பின்பு, தன் அந்தப்புர அறையில் தனியே அமர்ந்து, கடிதம் எழுதுவது பற்றிச் சிந்தித்தாள். கடிதத்தை எப்படி ஆரம்பிப்பது? மணம் ஆவதற்கு முன்பே “பிராணநாதா’ என்று ஆரம்பிக்கலாமா? அது சரியன்று. பெயரைக் குறிப்பிட்டு எழுதலாமா? சே! அது மரியாதைக் குறைவாகும். அந்த இளமன்னனின் இணையற்ற எழிலும், ஒப்பற்ற நற்குணங்களும் அவள் கண்முன்பு நின்றன. உடனே அவள் கடிதம் வரையலானாள்:

புவன ஸுந்தர!

உங்கள் அழகைக் கண்டு மட்டுமே நான் உங்களை விரும்புவதாக நினைக்க வேண்டாம். உங்களுடைய சிறந்த மேன்மையான குணங்களைப் பல நல்லோர் வாயிலாகக் கேள்வியுற்றிருக்கிறேன். அந்த நற்பண்புகள் என் காதின் வழியே நெஞ்சிற் புகுந்து என் இதய தாபத்தைத் தணித்துள்ளன.

நீங்கள் கண்ணின் ஒளி, கண்ணைப் படைத்தவர்கள் உங்களைக் கண்டதுமே அனைத்துப் பெரு நலன்களையும் பெறுகின்றனர். நாணமற்ற எனதுள்ளம் உங்கள் நினைவிலேயே மகிழ்ந்துள்ளது.

குலம், நல்லொழுக்கம், எழில் வடிவம், கல்வி, வயது, செல்வ நிறைவு ஆகிய அனைத்திலுமே தனக்கு மிகவும் பொருத்தமானவரான உங்களை, நற்குலத்திலுதித்த எந்தத் தீரமுள்ள மங்கைதான் மணம்புரிய வரிக்க மாட்டாள்? நரர்களிற் சிங்கமாகவும், அனைவரின் உள்ளத்தையும் கவரும் அழகராகவுமுள்ள உங்களை நான் என் கணவராக வரிக்கிறேன். உங்களிடம் தன் ஆத்மாவையே அர்ப்பிக்கும் மனைவியாக என்னை ஏற்றருளுங்கள்.

தாமரைக் கண்ணரே! சிங்கத்துக்குரிய பொருளைக் காட்டுக்   குள்ளநரி எடுத்துப் போக விடாதீர்கள். நான் பல நேம நிஷ்டைகளையும் விரதங்களையும் மேற்கொண்டு, அந்தணர்களையும் பெரியோர்களையும் துணைகொண்டு, எம்பெருமானை வழிபட்டிருக்கிறேனென்றால், நீங்கள் வந்து என் கையைப் பற்ற வேண்டும். இந்தக் கரம் வேறு எவருக்கும் உரியதன்று.

விரைவில் நடைபெறவிருக்கும் என் திருமண நாளுக்கு முன்பு, நீங்கள் படைவலிமையுடன் வந்து, பிறர் படையை வென்று, வீரமகளான என்னைக் கரம் பற்ற வேண்டும்.

“அந்தப்புரத்திலுள்ள உன்னை – எவரையும் கொல்லாதபடி – நான் எப்படிக் கரம் பற்ற முடியும்?’ என்று நீங்கள் வினவலாம். அதற்கேற்ற உபாயம் சொல்லுகிறேன்; திருமணத்திற்கு முதல் நாள் மணமகள் தன் தோழிகளுடனும் உறவினருடனும் காவலுடனும், தன் குல தெய்வமான கௌரியை வழிபடுவதற்கு, நகரத்துக்கு வெளியிலுள்ள கோவிலுக்குப் பவனியாக வருவாள். தாங்கள் வந்து என்னை அழைத்துச் செல்வதற்கு அதுவே தகுந்த தருணம்.

சிவபெருமான் முதலிய பெரியோர் எவருடைய திருவடித் தூளியில் மூழ்கித் தங்கள் துயரம் நீங்கித் தங்களைத் தூயவராக்க முனைகிறார்களோ, அத்தகைய உங்களின் பேரருளை நான் பெற விரும்புகிறேன். அம்புயக் கண்ணரே! உங்களை நான் பெறவில்லையென்றால், உயிரை விடுவதைத் தவிர்த்து எனக்கு வேறு வழி இல்லை. நூறு பிறவிகளாயினும், கடுமையான நோன்புகள் நோற்று உங்களையே பெற விரும்புவேன்.

இப்படிக்கு

உங்கள் அன்புக்குரியவள்

(இந்தக் கடித சாராம்சத்தின் சம்ஸ்க்ருத மூல வடிவம், இந்தக் கட்டுரையின் கடைசியில் பின்னிணைப்பாக…)

அரசகுமாரி கடிதத்தை எழுதி முடித்துத் தன் காதலனையே நினைந்த வண்ணம் படுத்துத் தூங்குகிறாள். மறுநாள் விடிகாலையில் கதவைத் தட்டும் ஓசை கேட்டது. அரசகுமாரி கதவைத் திறந்து பார்த்தாள். எதிரே வேதியர் நின்றார். அவள் அவரிடம் தன் கடிதத்தைக் கொடுத்தாள். அவர் உடனே தேரிலேறி, வேகமாக இளமன்னனின் நகரத்துக்குப் புறப்பட்டார். ஐந்தாறு நாளில் அவர் அந்த நகரத்திற்குப் போய்ச் சேர்ந்தார்.

அந்தத் தலைநகரத்துக்குச் சென்று, அவர் அரண்மனையை அணுகினார். எங்கும் பலத்த காவல் இருந்தும், வேதியர்களை உள்ளே போகத் தடுப்பவர் எவருமில்லை. வேதியர் அரண்மனைக்குள் போய், ஐந்தாவது கட்டில், தங்கத் தவிசில் தனியே வீற்றிருந்த இளமன்னனைக் கண்டார். அவன் ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்தான்.

வேதியர் மன்னனைக் கண்டு, தாம் கொண்டு வந்த கடிதத்தை அவனிடம் கொடுத்தார். அதைப் படித்த இளமன்னன் மலர்நகை பூத்தான். “வேதியரே, நீங்கள் இன்று இங்கு இருந்து ஓய்வு கொண்டு, நாளைக்குப் புறப்படுங்கள். அந்த அரசகுமாரியைப் பற்றிக் கேள்வியுற்றிருக்கிறேன். நீங்கள் வந்தபோது அவள் நினைவில்தான் இருந்தேன். எல்லாம் சரியாக நடக்குமென்று அவளிடம் சொல்லுங்கள்” என்றான்.

திருமணத்துக்கு இன்னும் இரண்டே நாட்கள் இருந்தன. பகலைத் துரத்திக் கொண்டு வந்தது இரவு. அரசகுமாரி அந்தப்புரச் சாளரத்திலிருந்து ராஜவீதியை நோக்குகிறாள். வீதியில் பல ரதங்கள் போயின, வந்தன. எதிர்பார்த்த வேதியரைக் காணவில்லை. அவள் மனம் துணுக்குற்றது; “வேதியருக்கு வழியில் ஏதாவது தடை ஏற்பட்டிருக்குமோ? அரண்மனையில் இளமகனைப் பார்க்க முடியாமலிருந்திருக்குமோ? அல்லது என் காதலர் என்னை மறுத்திருப்பாரோ?’ ஒன்றும் தோன்றாமல், சாளரத்தைப் பிடித்தபடி அவள் நின்றிருந்தாள்.

“என்ன பார்க்கிறாய், குழந்தாய்? இதோ நான் வந்துவிட்டேன். அந்த இளமன்னன் தக்க தருணத்தில் வந்து, உன் கையைப் பற்றுவான்” என்ற ஒலி கேட்டது. அரசகுமாரி ஒரு நவரத்தின மாலையை அவருக்கு அளித்தாள்; ஆனால் அவர் அதைப் பெற மறுத்துவிட்டார். “குழந்தாய், அரண்மனையில் எனக்குக் கிடைப்பதே யதேஷ்டம். நீ நல்லபடி மணமாகி வாழ்ந்தால் அதுவே எனக்குப் பரம சந்தோஷம்” என்று கூறிவிட்டு அவர் தம் வீட்டை நோக்கி நடந்தார்.

திருமணத்திற்கு முதல் நாள் விடியற்காலை. அரசகுமாரி எழுந்தாள்; “இன்று நல்ல நாளாக இருக்க வேண்டும்’ என்று தேவியை வேண்டினாள். தோழியர் அவளுக்கு மங்கல நன்னீராட்டி, கதிரவன் போல் ஜொலிக்கும் நகைகளை அணிவித்தனர். வழிபாட்டிற்குரிய மலர்மாலை, அட்சதை, மஞ்சள், வெற்றிலை பாக்கு, குங்குமம், கனி வகைகள் ஆகியவற்றுடன் அரசகுமாரி, கௌரியைப் பூஜிக்கப் புறப்பட்டாள். ஆயுதமேந்திய காவலர் அவளைக் காத்து வந்தனர். தோழிகளும் சுற்றமும் சூழ, அவள் அன்னமாக நடந்தாள்.

கோவில் நெருங்கியதும் அவள் சுற்றுமுற்றும் பார்த்தாள். அவள் கண்ணுக்கு எதுவும் புலப்படவில்லை. “என்ன நேருமோ?’ என்ற திகிலுடன் அவள் கோவிலுக்குள் நுழைந்தாள். தேவியை முழுமனத்துடன் வணங்கி, “அம்மா தாயே! நான் விரும்பும் இளமன்னனை மணக்க எனக்கு அருள் செய்” என்று உருக்கத்துடன் வேண்டினாள்.

வழிபாடு முடிந்ததுமே அவள் கோவிலை விட்டு மெதுவாக வெளியே வந்தாள். பூஜை செய்து வந்த அவள் முகத்தில் ஒரு பேரொளி! தேவர் அனை வரும் தங்கள் ஆற்றல் முழுவதையும் கொண்டு படைத்த தெய்வ பிம்பமாக அவள் விளங்கினாள். மென்முறுவலுடன் அவள் அன்னமாக நடந்தாள். அவள் காதில் குண்டலங்கள் மின்னின. காற்சிலம்புகள் ஒலித்தன. அணிகலன்களுக்கு உயர்ந்த அணிகலனாக அவள் விளங்கினாள். நெஞ்சு துடிக்கக் கவலையுடன் அவள் எதிரே பார்த்தாள்.

ஒரு சித்திரத் தேர் நின்றிருந்தது. அதில் மேக வண்ணனான இளமன்னன் தேர்ப்படியில் அவளுக்காகக் காத்திருந்தான். மின்னலைப் போல அவள் வேகமாக ஓடினாள். மழை முகிலில் மின்னல் கலந்தது. இடியோசையுடன் தேர் புறப்பட்டு ஓடியது.

அங்கே இருந்தவரனைவரும் இந்த அழகுக் காட்சியைத் தம்மை மறந்து பார்த்தனர். காவலர்களின் கையிலிருந்து அவர்களையறியாமல் ஆயுதங்கள் கீழே விழுந்தன. தேர் மறைந்ததுமே யாவரும் சுயநினைவு பெற்றனர். அரசகுமாரி மறைந்த செய்தி நகரெங்கும் பரவியது.

சென்ற தேரைத் துரத்துவதற்கு உடனே மன்னன் படைவீரர்களை அனுப்பினான். வேகமாக ரதங்களிற் சென்ற படைவீரர்கள், மிகத் தொலைவில் அரசகுமாரி தேரில் வருவதைக் கண்டனர். அந்தத் தேரை நிறுத்த, அவர்கள் அம்புகளை எய்தனர். ஆனால் இதென்ன! அவர்கள் எய்த அம்புகள் அவர்களை நோக்கியே திரும்பின. மேலும் அம்பு மழை பொழிந்தது. அவர்களின் ரதங்கள் எரியலாயின; குதிரைகள் படுகாயமடைந்து வீழ்ந்தன. உயிர் தப்பினால் போதுமென்று அவர்கள் திரும்பினர்.

அரசகுமாரியை மணக்கவிருந்த தீய இளவரசன் இந்தச் செய்தி கேட்டு, வானத்தை அண்ணாந்து பார்த்து அவமானம் தாங்காமல் தன் நகரத்துக்குத் திரும்பினான். பிறகு அவன் எவளை மணந்து படுகாயப்படுத்தினானோ, அது ஆண்டவனுக்குத்தான் தெரியும்!

அரசகுமாரியுடன் சென்ற இளமன்னனின் தலைநகரம் திருமண விழாக் கோலம் பூண்டது. பசுமையான கொடிகள் தென்றலில் எங்கும் பறந்தன. முரசங்கள் ஆர்த்தன. நாகசுரங்கள் ஒலித்தன. தேவசபை போன்ற அழகிய மணிமண்டபத்தில், நகர மக்களும் சுற்றமும் அந்தணரும் சூழ, இளமன்னன் அரசகுமாரியின் கையைப் பிடித்து, அக்கினியின் முன்பு, “முதுமை வரையில் நாம் பிரிவின்றி இணைந்திருந்து நல்வாழ்வு வாழ்வோம்” என்று வேத முறைப்படிப் பிரதிக்கினை செய்தான். அவள் கரத்தைப் பிடித்தபடியே தீயை ஏழு முறை வலம் வந்தான். திருமணம் இனிதே நிறைவேறியது.

அந்த அரசகுமாரி அந்த இளமன்னனுடன் நெடுநாள் ஸகல ஸௌபாக்கியத்துடன் இன்பமாக வாழ்ந்தாள்.

இந்த அரசகுமாரி எழுதிய கடிதமே, இன்றும் உலகில் ஒப்பற்ற முதல் காதற்கடிதமாகப் பொலிவுற்றுத் திகழ்கிறது.

– ஆதாரம்: ஸ்ரீமத்பாகவதம், 10, 52, 37-43.

– கா.ஸ்ரீ.ஸ்ரீ

 

ருக்மிணிதேவி, ஓர் அந்தணர் மூலமாக ஸ்ரீகிருஷ்ணருக்கு எழுதிய முதல் காதல் கடிதம் இதுதான்! இந்தக் கடிதத்தில், கிருஷ்ணனையே மணவாளனாக அடைய தான் ஆசை கொண்டிருப்பதையும், எப்போது எப்படி, தன்னை கடத்திச் சென்று, கடிமணம் புரிய வேண்டும் என்று ருக்மிணி வேண்டுகோள் விடுப்பதையும் காணலாம். (அந்த: புராந்தரசரீம் அனிஹத்ய பந்தூ: த்வாமுத்வஹே கதம் இதி ப்ரவதாம் உபாயதம்… பூர்வ இத்யுரஸ்தி மஹதீ குலதேவி யாத்ரா… யஸ்யாம் பஹிர்நவவதூர் கிரிஜாம் உபேயாத்)

இந்தக் கடிதத்தை பாராயணமாகச் சொன்னால், விரைவில் திருமண பாக்கியம் கூடி வரும் என்று ஒரு கதை சொல்லப்படுவது ஒரு புறம் இருக்கட்டும்; ஆனால், இந்தக் கடிதத்தில் உள்ள மொழி அழகை உணர்ந்தால் போதும்..!

பாராயணமாவது ஒண்ணாவது..! எத்தனை முறை வேண்டுமானாலும் சொல்லிப் பார்க்கலாமே என்று தோன்றும்!

ச்ருத்வா குணான் புவனஸுந்தர ச்ருண் வதாம்தே

நிர்விச்ய கர்ண விவரைர் ஹரதோங்க தாபம்

ரூபம் த்ருசாம் த்ருசிமதாம் அகிலார்த்த லாபம்

த்வை அச்யுதா விசதி சித்தமபத்ர பம்மே

 

காத்வா முகுந்த மஹதி குலஸீலரூப

வித்யா வயோ த்ரவிணதாம் அபிராத்ம துல்யம்

தீராபதிம் குலவதீந வ்ருணீத கன்யா

காலே ந்ருஸிம்ஹ நரலோக மனோபிராமம்

 

தன்மே பவான் கலுவ்ருதபதிரங்க ஜாயாம்

ஆத்மார்பிதச்ச பவதோத்ர விபோ விதேஹி

மாவீர பாக மபிமர்சது சைத்யஆராத்

கோமா யுவன் ம்ருகபதேர் பலிமம்புஜாக்ஷ

 

பூர்தேஷ்ட தத்த நியமவ்ரத தேவ விப்ர

குர்வர்சனாதி பிரலம் பகவான் பரேச:

ஆரோதிதோ யதி கதாக்ரஜ ஏத்யபாணிம்

க்ருஹ்னாது மே ந தமகோஷ ஸுதாதயோன்யே

 

ச்வோ பாவினி த்வமஜிதோத் வஹனே விதர்பான்

குப்த: ஸமேத்ய ப்ருதநா பதிபி: பரீத:

நிர்மத்ய சைத்ய மகதேந்த்ர பலம் ப்ரஸஹ்ய

மாம் ராக்ஷஸேன விதினோத்வஹ வீர்ய ஸுல்காம்

 

அந்த: புராந்தரசரீம் அனிஹத்ய பந்தூ:

த்வாமுத் வஹே கதமிதி ப்ரவதாம் யுபாயதம்

பூர்வேத்யுரஸ்தி மஹதீ குலதேவி யாத்ரா

யஸ்யாம் பஹிர் நவவதூர் கிரிஜா முபேயாத்

 

யஸ்யாங்கி பங்கஜ ரஜ: ஸ்நபனம் மஹாந்தோ

வாஞ்சந்த்யுமாபதிரிவாத்ம மதமோபஹத்யை

 

யர் ஹ்யம்புஜாக்ஷ நலபேய பவத் ப்ரஸாதம்

ஜஹ்யாமஸீந்வ்ரத க்ருசான் சத ஜன்மபி: ஸ்யாத்

– சுபம் –

 

Leave a Reply