நிவேதனம் என்றால்?

ஆன்மிக கட்டுரைகள்

கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன்
ஆசிரியர், கலைமகள்

நிவேதனம் என்ற சமஸ்கிருத சொல்லை தினசரி பயன்படுத்தி வருகிறோம். இதற்கு என்ன அர்த்தம் என்பதை ஆராய்ந்து பார்த்தேன்.

அர்ப்பணிப்பு, ஒப்புவிக்கை, கடவுளுக்குப் படைக்கும் அமுது என்று இதற்கு தமிழில் அர்த்தம் கொள்ளலாம். பொதுவாக நாம் (மனிதர்கள்) உணவை உட்கொள்ளும்போது “சாப்பிடுகிறோம்” என்று சொல்வோம். ஆனால் இறைவனுக்குப் படைக்கப்படும் உணவை அவர் உட்கொள்வதை(பாவனையாக) “நிவேதனம்” என்ற அர்த்தத்தில் அழைக்கின்றனர்.

கோவில்களில் பலவிதமான உணவுப் பொருட்கள் இறைவனுக்குப் படைக்கப்பட்டு (நிவேதனம் செய்யப்பட்டு) மெய் அன்பர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகின்றன. ஆலயங்களில் இறைவனுக்கு படைக்கும் உணவை கல்வெட்டுக்கள் “அமுது” என்று குறிக்கின்றன.

அமுது செய்வித்தல் என்ற தொடரை பெரிய புராணத்தில் சேக்கிழார் கையாளுகிறார். சிறுத்தொண்டர் புராணத்தில் அமுது படையல் விழா இருப்பதை சிவனடியார்கள் உணர்வார்கள்!!

“தளிகை” என்ற சொல்லை வைணவர்கள் பயன்படுத்துகிறார்கள். இறைவனுக்கு உணவு தயாரிக்கப்படும் இடமான மடைப்பள்ளியில் (மடை என்பதற்கு தேக்கி வைக்கும் இடம் என்று பொருள் உண்டு. மடை என்பது அருந்தும் உணவாக இருப்பதை சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகள் விவரிக்கிறார்) இருந்து நிவேதனத்தை எடுத்துச் செல்லும் போது வாசிக்கும் இசை “தளிகை மல்லாரி” என்று அழைக்கப்படுகிறது!

தமிழகத்தில் உள்ள பல கோவில்களில் கல்வெட்டுகளில் நிவேதனம் பற்றிய குறிப்புகள் பல இருக்கின்றன. இரண்டு குறிப்புகளை மட்டும் இங்கே தருகிறேன்.

திருமுக்கூடல் (வேகநதி பாலாறு செய்யாறு ஆகியவை கூடும் இடம்)ஆழ்வாரான பெருமாளுக்கு சிறுகாலைச் சந்தி நிவேனத்திற்கான செலவுகள், இரவில் பால்பாயசம் அளிப்பதற்கு, ஸ்ரீ ராகவச் சக்ரவர்த்திக்கு (ராமபிரானுக்கு) மதியத்தில் அளிக்கும் நிவேதனத்திற்கு, ஆழ்வாருக்கு சந்தனக்காப்பு அணிவிப்பதற்கு, சன்னதிகளில் விளக்கேற்றுவதற்கு ஆகும் செலவுகள் ஆகியவை விரிவாக அளிக்கப்பட்டுள்ளன.

அழகிய மணவாளருக்கு ஐப்பசித் திருநாளில் அளிக்கும் நிவேதனம், கார்த்திகைத் திருநாளுக்கும் மாசித் திருநாளுக்கும் செய்யப்படும் நிவேதனம், வீரசோழன் நந்தவனத்தில் நடைபெறும் பாரிவேட்டையின் போது அளிக்கப்படும் நிவேதனம், ஜயந்தாஷ்டமி (ஜன்மாஷ்டமி)யின் போது வெண்ணெய்க் கூட்டாழ்வாருக்கு (கிருஷ்ணருக்கு) அளிக்கப்படும் நிவேதனம் ஆகியவற்றின் விவரங்கள் தேவையான நெல், பருப்பு, நெய், சர்க்கரை, பழம் உட்பட பொருட்களின் அளவோடு குறிக்கப்பட்டுள்ளன. இக்கோவில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாலாஜாபாத் பக்கத்தில் அமைந்துள்ளது.

முதலாம் ராஜராஜ சோழன் ஈடுபாடு கொண்ட தஞ்சை பெரிய கோயிலில் பரிவார தேவதைகளில் ஒன்றாக கணபதியும்(பிள்ளையார்) சேர்க்கப்பட்டிருக்கிறார்.

‘பரிவார ஆலயத்துப் பிள்ளையார் கணவதியார்’ என கல்வெட்டு இவரைக் குறிக்கிறது. இவருக்கு வாழைப்பழம் படையலாகப் படைக்கப்பட்டதும் கல்வெட்டு மூலம் தெரியவருகிறது.

தஞ்சை பெரிய கோவில் பிள்ளையாருக்கு நாள்தோறும் 150 வாழைப்பழங்கள் நிவேதனம் செய்ய அரசன் 360 காசுகளை ஒதுக்கியுள்ளார் என்பதையும் அறிய முடிகிறது. இப்படி பல கல்வெட்டுகளில் நிவேதனம் என்ற சொல் இடம் பெற்றுள்ளது.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply