இன்று ரத சப்தமி 28.01.2023
மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இந்த உலகில் பாவம் செய்து கொண்டிருக்கிறான். பாவத்தை நம்முடைய கண்கள், காதுகள், கைகள், கால்கள், திமிறிய தோள்கள், வாய், மெய் என்று அனைத்தும் சேர்ந்து தான் இந்த பாவத்தில் பங்காற்றுகிறது. இவைகளால் செய்த பாவங்கள் மொத்தமாக தொலைத்து கட்ட, நமக்கு கிடைத்த அற்புதமான ஒரு நாள் ரத சப்தமி! இந்த ரதசப்தமி வரலாறு என்ன? அன்றைய தினம் எருக்கன் இலையை என்ன செய்ய வேண்டும்?
அறியாமல் செய்த பாவத்திற்கான தண்டனையை இந்த ஜென்மத்திலேயே பல கஷ்டங்களை அனுபவித்து தீர்த்துக் கொண்டிருப்போம். இப்படிப்பட்ட பாவங்களில் இருந்து எளிதாக விடுபடுவதற்கு சூரிய பகவானை வழிபடுவது முறையாகும். ஏழு குதிரைகளைப் பூட்டிய ரதத்தில் சூரிய பகவான் பயணம் செய்கிறார். ரதசப்தமி நாளில் சூரியனுக்கு அதீத சக்தி இருக்கும். குருசேத்திர போரில் பீஷ்மர் உயிர் பிரியும் தருவாயில் அம்பு படுக்கையில் படுத்து கொண்டிருந்தார். அவரை சுற்றி கௌரவர்களும், பாண்டவர்களும், கிருஷ்ணரும் நின்று கொண்டிருந்தார்கள். நினைத்த நேரத்தில் உயிர் பிரியும் வரம் அவரிடம் இருந்தும், உயிர் பிரியாமல் இருந்தது. இதற்கு காரணம் தெரியாமல் பீஷ்மர் விழித்துக் கொண்டிருந்தார்.
அந்த சமயத்தில் அங்கு வந்த வியாசரிடம், தன் உயிர் பிரியாததற்கு என்ன காரணம்? என்று பீஷ்மர் கேட்கிறார். இதற்கு வியாசர், நீர் செய்த பாவத்திற்கான தண்டனையை தான் அனுபவித்துக் கொண்டிருக்கிறீர் என்று கூறினார். நான் செய்த பாவம் என்ன? என்று கேட்டார். மனம், மொழி, மெய் போன்றவற்றால் நாம் செய்யக்கூடிய பாவம் மட்டும் பாவமாவதில்லை, மற்றவர்கள் பாவம் செய்யும் பொழுது அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதும் ஒரு வகையில் பாவம் தான். அதற்கான தண்டனையை யாராக இருந்தாலும் இறுதி கட்டத்தில் அனுபவித்து தான் ஆக வேண்டும் என்று கூறினார். இப்போது பீஷ்மருக்கு எல்லாமே விளங்கிற்று!
அன்று பாஞ்சாலியின் துகில் துச்சாதனனால் பறிக்கப்பட்ட பொழுது அவையில் இருந்த அத்தனை பேரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அதில் பீஷ்மரும் ஒருவர்! அவளின் கூக்குரல் எவருடைய செவிகளிலும் எட்டவில்லை. பீஷ்மர் அதை தட்டி கேட்டிருக்கலாம், அதற்குரிய வலிமை அவரிடம் இருந்தது. எனினும் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த காரணத்தினால் அவருடைய கண்கள், காதுகள், கை, கால்கள், மூளை, தோள் என்று அனைத்தும் பயன்படாமல், திமிரி எழாமல், நியாயம் கேட்காமல் இருந்த காரணத்தினால் அவருக்கு பாவம் உண்டாகியது.
தன் பாவத்தை உணர்ந்த பீஷ்மருக்கு அப்பொழுதே அதற்கான விடுதலையும் கிடைத்தாயிற்று. எனவே தன் உயிர் பிரிய என்ன பரிகாரம் செய்வது? என்று வியாசரிடம் பீஷ்மர் கேட்கிறார். அதற்கு வியாசர் சூரியனுக்கு உகந்த இந்த எருக்கன் இலைகளால் தங்களை அலங்கரிக்கிறேன். இது உங்களுடைய உடல் சூட்டை தணித்து உயிர் பிரிய செய்யும் என்று பரிகாரம் கூறுகிறார். இதனால் ஏழு எருக்கன் இலைகளை கொண்டு வந்து பீஷ்மரின் கண்கள், காதுகள், கால்கள், தலை என்று வைத்து ஏகாதசி அன்று அவருடைய உயிர் பிரிகிறது.
உயிர் பிரிந்த பின்பு அவருக்கு சிரார்த்தம் செய்ய சந்ததிகள் இல்லை, ஆனால் ஒரு சுத்த பிரம்மச்சாரி, துறவி போன்றவர்களுக்கு பிதுர்கடன் என்கிற ஒன்று தேவை இல்லை என்கிறார் கிருஷ்ணர். இருப்பினும் மற்றவர்களின் திருப்திக்காக இனி ஒவ்வொரு ரத சப்தமி அன்றும் எருக்கன் இலைகளால் குளிப்பவர்களுக்கு அவர்கள் செய்த பாவங்கள் நீங்குவது மட்டுமல்லாமல், பீஷ்மருக்கு நீர் கடன் செலுத்திய புண்ணியமும் கிடைக்கும் என்று வரம் கொடுத்தார். அதனால் தான் இன்றளவிலும் ரத சப்தமி அன்று எருக்கன் இலைகளை கொண்டு குளியல் போடுகிறோம்.