மனிதன் எந்தக் காரியத்தை எடுத்துக் கொண்டாலும், அது நியாயத்திற்கும் சத்தியத்திற்கும் விரோதமில்லாமல் இருக்க வேண்டும். நல்ல காரியம் செய்யும் சமயத்தில் எத்தனையோ இடையூறுகள் வரும், பலர் நிந்தனை செய்ய வரலாம் அல்லது அவனுக்கு ஐஸ்வர்ய நஷ்டமும், உயிருக்கு ஆபத்தும் கூட வரலாம். ஆனால் எல்லாவற்றையும் விட நியாயமும் சத்தியமும்தான் உயர்ந்தது என்கிற பாவத்தோடு, எடுத்துக்கொண்ட காரியத்தை செய்து முடிக்க வேண்டும்.
கஷ்டங்கள் வரலாம் என்ற காரணத்திற்காக சில மனிதர்கள் எந்த நல்ல காரியத்தையும் ஆரம்பிக்ககூட மாட்டார்கள். மற்ற சிலர் எடுத்த காரியத்தில் கஷ்டங்களைப் பார்த்து நடுவில் அதை கைவிட்டு விடுவார்கள். ஆனால் உத்தமமான மனிதர்கள் எந்த கஷ்டங்கள் வந்தாலும் எடுத்துக் கொண்ட அந்த நற்பணியை முடித்துவிடுவார்கள். பகவத்பாத சங்கரர் தர்மபிரசார காரியத்தை எடுத்துக் கொண்டார். அதில் எத்தனையோ கஷ்டங்கள் வந்தன. அந்த மாதிரி சமயத்தில் மனிதனுக்கு தைரியம் மிகவும் தேவையானது.
பகவத்கீதையில் கிருஷ்ண பரமாத்மா மூன்று வகைப்பட்ட தைரியத்தை பற்றி சொல்கிறார்- ஸாத்விகம், ராஜஸம், தாமஸம். காரியங்களைச் செய்யும் பொழுது ஏற்படக்கூடிய கஷ்டத்தை சகிப்பது தான் ஸாத்விகமான தைரியம். அதுதான் மிகவும் தேவையானது. இந்த தைரியத்துடன் காரியத்தை நிறைவேற்றிய மனிதன் எத்தனையோ மனிதர்களுக்கு உபகாரம் செய்தவனாவான். அவனுடைய பெயர் நீண்டகாலம் நிலைக்கும்.
மகாகவி பாரவி ஒரு இடத்தில் சொல்லியிருக்கிறார்… ஸாஸ்வதமற்ற விலாசத்தை கவனிக்காமல் சாஸ்வதமான கீர்த்தியில் விருப்பம் உள்ளவர்களுக்கு லௌகீகமான சம்பத் என்கிறது ஒரு விஷயமே இல்லை. என்ன கஷ்டங்களிலும் எடுத்துக்கொண்ட நல்ல காரியத்தை செய்து முடித்து, சாஸ்வதமான கீர்த்தியை சம்பாதிக்க வேண்டும்.