திருப்புகழ்க் கதைகள் : பகுதி 327
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
நகைத்து உருக்கி – திருக் கயிலை
அருணகிரிநாதர் அருளிச்செய்துள்ள இருநூற்றி நாற்பத்தி ஒன்றாவது திருப்புகழான “நகைத்து உருக்கி” எனத் தொடங்கும் திருப்புகழ் திருக்கயிலைத் தலத்துப் பாடலாகும். இத்திருப்புகழில் அருணகிரியார் “திருக் கயிலை முருகா, மாதர் மயக்கத்தில் நான் வீழாமல் அருள்புரிவாயாக” என வேண்டுகிறார். இனி திருப்புகழைக் காணலாம்.
நகைத்து வுருக்கி விழித்து மிரட்டி
நடித்து விதத்தி …… லதிமோகம்
நடத்து சமத்தி முகத்தை மினுக்கி
நலத்தி லணைத்து …… மொழியாலுந்
திகைத்த வரத்தி லடுத்த பொருட்கை
திரட்டி யெடுத்து …… வரவேசெய்
திருட்டு முலைப்பெண் மருட்டு வலைக்குள்
தெவிட்டு கலைக்குள் …… விழுவேனோ
பகைத்த அரக்கர் சிரத்தை யறுத்து
படர்ச்சி கறுத்த …… மயிலேறிப்
பணைத்த கரத்த குணத்த மணத்த
பதத்த கனத்த …… தனமாதை
மிகைத்த புனத்தி லிருத்தி யணைத்து
வெளுத்த பொருப்பி …… லுறைநாதா
விரித்த சடைக்கு ளொருத்தி யிருக்க
ம்ருகத்தை யெடுத்தொர் …… பெருமாளே.
இத்திருப்புகழின் பொருளாவது – பகைத்து வந்த சூராதி அவுணர்களின் தலைகளை யறுத்து, நீல நிறம் படர்ந்துள்ள மயிலின் மீது ஏறி, பருத்தும், குணமான நல்ல மணங் கமழப்பெற்றும், பக்குவப்பட்டுப் பெருமை பெற்றும் விளங்கும் தனங்களையுடைய வள்ளிநாயகியை, சிறந்த தினைப்புனத்தில் வைத்துத் தழுவி, மணஞ் செய்து கொண்டு, திருக்கயிலாய மலையில் எழுந்தருளியுள்ள தலைவரே; விரிந்த சடைமுடியில் கங்காதேவி இருக்குமாறு செய்து, மானை ஏந்திய சிவபெருமான் மகிழும் பெருமிதம் உடையவரே; பெண்களின் மருட்சியைத் தரும் ஆசை வலையிலும், காமக் கலைக்குள்ளும் அடியேன் விழக்கடவேனோ?
இத்திருப்புகழில் விரித்த சடைக்கு ளொருத்தி யிருக்க ம்ருகத்தை யெடுத்தொர் பெருமாளே என்ற வரிகளில் அருணகிரியார் கங்கையைத் தலையில் அணிந்த சிவபெருமான் பற்றிப் பேசுகிறார். கங்கா தேவி பர்வதராஜன் – மைனாகுமாரி தம்பதியரின் மகளும், சிவபெருமானின் மனைவியான பார்வதியின் சகோதரியும் ஆவார். பார்வதிதேவி சிவபெருமானை திருமணம் செய்தபின் பகீரதனின் வேண்டுகோளுக்கிணங்க தேவலோகத்தில் இருந்த கங்காதேவி பூமியை வந்தடைய சம்மதித்தார். ஆனால் அவர் வரும் வேகத்தை எவராலும் தாங்க இயலாத காரணத்தினால் சிவபெருமான் தனது ஜடாமுடியில் தாங்கி பூமி தாங்கும் அளவில் நீரை வெளியேற்றினார். இதனால் கங்கா தேவி சிவபெருமானின் மனைவியாகவும் கருதப் படுகின்றார்.
தேவலோகத்தில் கங்காதேவி மந்தாகினி என அறியப்படுகின்றார். பகீரதனின் தவத்திற்கிணங்கி பூலோகத்திற்கு வந்தமையால் கங்காதேவி பாகீரதி என்றும் அழைக்கப்படுகின்றார். இவ்வாறு கங்கை பூலோகத்திற்கு வந்தது ஐந்தாம் மாதத்தின் வளர்பிறை பத்தாம் நாளாகும். இந்நாளை கங்கா தசரா என்ற பெயரில் விழாவாகக் கொண்டாடுகிறார்கள்.
கங்காதேவிக்கு பல பெயர்கள் உள்ளன. அவையாவன: (1) கங்கையம்மன், (2) ஜானவி, (3) பூலோக கங்கை, (4) பாதாள கங்கை, (5) திரிபதாகை, (6) தேவிநதி, (7) மந்தாகினி, (8) வரநதி, (9) உமைசுர நதி, (10) தசமுகை நதி, (11) சிர நதி, (12) தெய்வ நதி, (13) விமலை, (14) பாலகங்கா, (15) நீளகங்கா, (16) காளிகங்கா, (17) பாணகங்கை, (18) போகவதி. கங்கை அம்மன் தலையில் பிறைசூடி, நெற்றிக்கண்ணுடன் காட்சி அளிப்பதோடு வெண்ணிற ஆடை உடுத்தி, வெண் தாமரையில் வீற்றிருக்கும் இவர் நான்கு கைகளையும் கொண்டு தன்னுடைய வாகனமான முதலையில் வீற்றிருக்கின்றாள்.
திருமால் வாமன அவதாரம் எடுத்தபோது வானை அளப்பதற்காகக் காலை மேலே தூக்கியபோது அக்கால் சத்திய லோகம் வரை நீண்டது. அதைக் கண்ட பிரம்மா ஆகாய கங்கையால் விஷ்ணுவின் காலை அபிஷேகம் செய்தார். இதனால் கங்கை திருமாலின் திருவடியில் பிறந்தவர் என்று வைணவ சமயத்தவர்கள் கருதுகின்றனர்.
சிவபெருமானின் நெற்றிக்கண்ணிலிருந்து வெளிபட்ட ஆறு நெருப்புப் பொறிகளை அசுரர்களிடம் இருந்து காப்பாற்றுவதற்காக சூரியதேவன் அதனை எடுத்துச் சென்று கங்கையிடம் ஒப்படைக்க கங்கை அந்த 6 நெருப்புப் பொறிகளை சுமந்து சென்று சரவணப் பொய்கையில் சேர்த்ததால் முருகனைக் கங்கையின் மைந்தன் என்று முருகனை முழுமுதற்கடவுளாக வழிபடும் கௌமார சமயம் கூறுகிறது.