e0af8d-e0aeaee0aebee0aea9e0af8d.jpg" style="display: block; margin: 1em auto">
திருப்புகழ்க் கதைகள் 122
– முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியன் –
மான்போல் கண்பார்வை – திருச்செந்தூர்
அருணகிரிநாதர் அருளியுள்ள தொண்ணூறாவது திருப்புகழ் ‘மான்போல் கண்’ எனத் தொடங்கும் திருச்செந்தூர் தலத்துத் திருப்புகழாகும். “திருமால் மருகரே! சிவகுமாரரே! செந்திற் கந்தவேளே! பொதுமகளிரது உறவு அகல அருள் புரிவீர்” என அருணகிரிநாதர் முருகப் பெருமானை இப்பாடலில் வேண்டுகிறார். இனி திருப்புகழைக் காணலாம்.
மான்போற்கண் பார்வை பெற்றிடு
மூஞ்சாற்பண் பாடு மக்களை
வாய்ந்தாற்பொன் கோடு செப்பெனு …… முலைமாதர்
வாங்காத்திண் டாடு சித்திர
நீங்காச்சங் கேத முக்கிய
வாஞ்சாற்செஞ் சாறு மெய்த்திடு …… மொழியாலே
ஏன்காற்பங் காக நற்புறு
பூங்காற்கொங் காரு மெத்தையில்
ஏய்ந்தாற்பொன் சாரு பொற்பண …… முதல்நீதா
ஈந்தாற்கன் றோர மிப்பென
ஆன்பாற்றென் போல செப்பிடும்
ஈண்டாச்சம் போக மட்டிக …… ளுறவாமோ
கான்பாற்சந் தாடு பொற்கிரி
தூம்பாற்பைந் தோளி கட்கடை
காண்பாற்றுஞ் சாமல் நத்திடும் …… அசுரேசன்
காம்பேய்ப்பந் தாட விக்ரம
வான்றோய்க்கெம் பீர விற்கணை
காண்டேர்க்கொண் டேவு மச்சுதன் …… மருகோனே
தீம்பாற்கும் பாகு சர்க்கரை
காம்பாற்செந் தேற லொத்துரை
தீர்ந்தார்க்கங் காளி பெற்றருள் …… புதல்வோனே
தீண்பார்க்குன் போத முற்றுற
மாண்டார்க்கொண் டோது முக்கிய
தேன்போற்செந் தூரில் மொய்த்தருள் …… பெருமாளே.
இத்திருப்புகழின் பொருளாவது – கானகத்திலே இருந்தவரும், சந்தனம் பூசிய தனங்களும், மூங்கில் போன்ற பசிய தோள்களும் உடையவருமான சீதா பிராட்டியாருடைய கடைக்கண் பார்வையின் பொருட்டு காம வெறிப் பிடித்து இரவு பகலாகத் தூங்காதிருந்த இராவணனுடைய தலைகளைப் பேய்கள் பந்துபோல் எறிந்து ஆடுமாறு, வீரமும், விண்ணில் தோய்கின்ற கெம்பீரமும், உடைய வில்லினின்று கணையை அழகிய தேரிலிருந்து ஏவிய ஸ்ரீராமபிரானுடைய திருமருகரே!
இனிய பால், பாகு, சர்க்கரை, மூங்கிலில் இருந்து வழிகின்ற தேன் இவைகள் போன்றவரும், உரைகட்கு, எட்டாதவரும் ஆகிய சிவமூர்த்திக்கும் உமாதேவிக்கும் புதல்வரே! திண்ணிய நிலத்தில் உமது மெய்யுணர்வு முழுவதும் பெற்று மேம்பட்டவர்களைக் கொண்டு ஓதப்பெறுகின்ற சிறந்தவரே! வண்டுகள் போல் அடியார்கள் நிறைந்துள்ள திருச்செந்தூரில் உறைகின்ற பெருமிதம் உடையவரே! பொதுமகளிரது உறவு அகல அருள் புரிவீர்.
இப்பாடலில் சுவாமிகள் முதற்பகுதி நான்கு அடிகளிலும் விலைமகளிருடைய சாகசங்களைக்கூறி, மக்கள் அந்த ஆசை நெறியில் செல்வது பிழை என்று அறிவுறுத்துகின்றனர். பின்னர்,
கான்பாற்சந் தாடு பொற்கிரி
தூம்பாற்பைந் தோளி கட்கடை
காண்பாற்றுஞ் சாமல் நத்திடும் …… அசுரேசன்
காம்பேய்ப்பந் தாட விக்ரம
வான்றோய்க்கெம் பீர விற்கணை
காண்டேர்க்கொண் டேவு மச்சுதன் …… மருகோனே
என்ற வரிகளில், இராமபிரான் போரில் இராவணன் தலைகளைக் கொய்தவிதத்தைக் கூறுகிறார். அதாவது – அசோகவனத்தில் சிறை வைத்திருந்த சீதாபிராட்டியின் கடைக்கண் பார்வை தன்மீது விழுமோ என்று ஆசைப் பட்டு, மோக வெறியால் தூக்கத்தைத் துறந்து ஏக்கமுற்றுக் கிடந்தான் இராவணனின் தலைகளை பேய்கள் பந்தாட, (காம் பேய் பந்தாட என்பதில் ‘கம்’ என்ற சொல் தலையைக் குறிக்கும். கம் என்பது காம் என நீண்டது.) அழகிய இந்திரனுடைய தேரின்மீது ஸ்ரீராமர் ஆரோகணித்து இராவண வதம் புரிந்தார் – என்று அருணகிரியார் பாடுகிறார்.
திருப்புகழ் கதைகள்: மான் போல் பார்வை! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.