திருப்புகழ்க் கதைகள் பகுதி – 326
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
தேன்உந்து முக்கனிகள் – சுவாமி மலை
நா அசைய நாடசையும்
மனித உடல் என்பது அற்புதங்கள் நிறைந்ததாகும். மனிதர்களுக்கு வாழ்வில் உணவும், பேச்சும் மிக முக்கியமானவை. இந்த இரண்டிற்குமே முக்கிய தேவை நாக்குதான். நாக்கு மட்டும் இல்லையெனில் நம்மால் பேசவும் இயலாது, உணவின் சுவையை உணரவும் இயலாது. ஏன் நாக்கு இல்லையெனில் மூச்சு விடுவது கூட சிரமம்தான். மனிதர்களுக்கு இவ்வளவு முக்கியமான நாக்கை பற்றி நாம் எவ்வளவு தெரிந்து வைத்துள்ளோம். நாக்கை பற்றி நாம் தெரிந்து வைத்துக்கொள்வது மிகவும் அவசியம் ஏனெனில் பல நோய்களின் அறிகுறிகள் முதலில் நாக்கில்தான் தெரிய ஆரம்பிக்கும். நாக்கில் சிறிய மாற்றம் தெரிந்தாலும் மருத்துவரை உடனடியாக அணுகுவது நல்லது. இங்கே நமக்கு அத்தியாவசியமான நாக்கை பற்றி நமக்கு தெரியாத சில சுவாரஸ்ய தகவல்களை பார்க்கலாம்.
நாக்கு நமது கண்ணிற்கு தெரிவது மட்டுமில்லை. தொண்டையின் இறுதிவரை நாக்கு இருக்கும். ஒரு ஆணின் நாக்கானது 8.5 செமீ அளவு வரை வளரும். பெண்ணின் நாக்கு 7.9 செமீ வரை வளரும். ஆனால் தற்போது உலகின் நீளமான நாக்கிற்கான கின்னஸ் சாதனையாக கருதப்படுவது 10.1 செமீ ஆகும். இந்த அசுர நாக்கிற்கு சொந்தக்காரர் அமெரிக்காவை சேர்ந்த நிக் ஸ்டாபெர்ல். இதழ்களுக்கு வெளியே தெரியும் இவருடைய நாக்கின் நீளம் சாதாரண மனிதர்களை காட்டிலும் மிகவும் நீளமானதாகும்.
சுவை மொட்டுகள் நமது நாக்கில் 2000 முதல் 4000 வரை இருக்கின்றன. இந்த சுவை மொட்டுகளில் உள்ள சுவையை உணரக்கூடிய செல்கள் ஒவ்வொரு வாரமும் அழிந்து மீண்டும் புதிய செல்கள் உருவாகின்றன. இதனைப் படிக்கும்போது “நாக்கு செத்துபோச்சு” எனச் சொல்வது உண்மைதானோ எனத் தோன்றும். மக்கள்தொகையில் நான்கில் ஒரு பங்கினர் சிறப்பாக சுவையை அறியக்கூடியவர்களாக இருக்கிறார்கள் அதாவது இவர்கள் நாக்கில் கிட்டத்தட்ட 10000 சுவைமொட்டுகள் இருக்கும். சிலர் சரிவர சுவையை அறிய இயலாதவர்களாக இருக்கிறார்கள், காரணம் அவர்கள் நாக்கில் சராசரியை விட குறைவான சுவை மொட்டுகளே இருக்கும். பெரும்பாலும் இவர்களால் கசப்பு சுவையை உணர முடியாது.
சுவை மொட்டுகளை வெறும் கண்களால் பார்க்க இயலாது. உங்கள் நாக்கில் நீங்கள் பார்க்கும் பிங்க் மற்றும் வெள்ளை நிற சுரப்பிகள் சுவை மொட்டுக்கள் அல்ல அவரை பாபில் என்று அழைக்கப்படும். இந்த பாபில்களில்தான் சுவையை உணரக்கூடிய சென்சார்கள் இருக்கும். அதன் திசுக்களில் சராசரியாக ஆறு சுவைகளை உணரும் சுவைமொட்டுகள் இருக்கின்றன. இந்த பாபில் திசுக்களில் மூன்று வகை இருக்கிறது, ஃபங்கிபார்ம், சர்கம்வேலட் மற்றும் ஃபோலியேட். இதில் ஃபங்கிபார்ம் தவிர மீதி இரண்டையும் வெறும் கண்களால் பார்க்கலாம். அவை இரண்டும் நாக்கு தொண்டையுடன் இணையும் இடத்திற்கு அருகில் இருக்கும்.
நமது நாக்கில் நான்கு சுவை மண்டலங்கள் இருப்பதாக கேள்விப்பட்டிருப்போம். அவை இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு மற்றும் கசப்பு சுவை மண்டலங்கள். ஆனால் இது உண்மையல்ல. ஐந்தாவதாக ஒரு சுவை உள்ளது அதுதான் காரச்சுவை. இந்த ஐந்து சுவைகளுமே நாக்கின் முழுவதும் உணரப்படும். நாக்கின் மையப்பகுதியை காட்டிலும் பக்கவாட்டு பகுதிகள் அதிக உணர்ச்சி வாய்ந்தவை, நாக்கின் பின்புறமானது கசப்பு சுவைகளை பெரிதும் உணரும்.
நாக்குதான் உடலின் மிக வலிமையான தசை என்ற பொய்யான கருத்து நிலவி வருகிறது. உண்மையில் சொல்லப்போனால் நாக்கு என்பது ஒரு தசை மட்டுமல்ல, அது எட்டு தசைகள் இணைந்த தொகுப்பாகும். இந்த தசைகளுக்கு இடையே உள்ள பிணைப்புதான் நாக்கை நெகிழ்வுத்தன்மையுடன் வைத்திருக்கிறது. இது திசுக்களின் கூட்டிணைவு எனப்படுகிறது. மனித உடலிலேயே சுயமாக செயல்பட கூடிய தசை நாக்குதான். நாக்கிற்கு இருக்கும் ஆற்றலானது உடலில் உள்ள வேறு எந்த தசைக்கும் இல்லை, உங்களால் இடைவேளையின்றி பேசவோ, சாப்பிடவோ இயலும். நாக்கிற்கு சோர்வென்ற சொல்லே கிடையாது.
சுவை மொட்டுகள்தான் நம்மை சிறந்த மனிதர்களாக மாற்றுகிறது. ஆரம்பத்தில் சுவை மொட்டுகள் உணவின் சுவையை அறிய உதவியது, பொதுவாக கசப்பு மற்றும் உவர்ப்பு சுவை விஷம் மற்றும் கெட்டுப்போன உணவுகளுடையதாக இருக்கும். நமது நாக்கின் பின்புறம் இந்த சுவைகளை உணரும்போது உடனடியாக நமக்கு எச்சரிக்கை மணி அடிக்கும், நாமும் அதனை விழுங்காமல் துப்பிவிடுவோம்.
நமது ஆரோக்கியத்தின் அடையாளமாக விளங்குவது நாக்குதான். ஆரோக்கியமான நாக்கு என்பது பிங்க் நிறத்தில் இருக்கும். அடர் சிவப்பு நிற நாக்கு போலிக் அமிலம் அல்லது பி12 குறைபாடு, ஸ்கார்லெட் காய்ச்சல் போன்றவற்றின் அறிகுறிகளாக இருக்கலாம். நாக்கின் மேற்புறத்தில் வெள்ளையாய் இருப்பது லுகோபிலக்கியாவின் அறிகுறியாக இருக்கலாம். லூகோலிலக்கியா என்பது புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவதால் நாக்கிலும் வாயின் உட்புறப்பகுதிகளிலும் படியும் ஒரு படலம். கருப்பு நிறம் பாக்டீரிய தொற்றை குறிக்கும். வலிமிகுந்த கொப்புளங்கள் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். நாம் மருத்துவமனைக்குச் செல்லும்போது டாகடர்கள் நாக்கை நீட்டச் சொல்லிப் பார்ப்பது ஏன் தெரிகிறதா?
மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்புலன் களும் மனிதனை ஆள்கின்றன. இதனை “ஐம்புல வேடரால் ஆட்பட்டேன்” என்று பெரியோர்கள் கூறியிருப்பதந் மூலம் உணரலாம். ஐம்புலன்களின் ஆளுகையில், அதன் வசத்தில் இருக்கும்பொழுது, மனிதன் முன்னேறுவ தில்லை. ஐம்புலன்களை ஆளுகின்ற பெற்றியினை மனிதன் பெற்றுவிட்டால். அவன் ஏவலுக்கு ஐந்து புலன்களும் நின்று பணி செய்கின்றன. உலகை உருவாக்கிய உத்தமர்கள், உலகைத் திருத்திய உத்தமர்கள் பலர் ஐம்புலன்களின் வழியே தாம் செல்லாமல், தம் வழியில் ஐம்புலன்களை ஆட்டிப்படைத்தவர்கள் ஆவார்கள். இந்த ஐம்புலங்களில் மிக முக்கியமானதான நாவினை, கருணாநிதியான ஆண்டவரின் புகழ்பாட மட்டுமே பயன்படுத்தவேண்டும்.