திருப்புகழ் கதைகள்: ரக்தபீஜன்

ஆன்மிக கட்டுரைகள்
thiruppugazh stories - Dhinasari Tamil

திருப்புகழ்க் கதைகள் 303
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

குமரகுருபர முருக – சுவாமி மலை
ரக்தபீஜன்

     நவராத்திரியின் கடைசி மூன்று நாட்களும் மிக விசேஷமானதாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது. துர்காஷ்டமி, மஹாநவமி, விஜயதசமி என்று போற்றப்படும் இந்த மூன்று நாட்களில் அம்பிகையை ஆத்மார்த்தமாய் பூஜித்து அநேகம்பேர் சொல்வதற்கரிய பலன்களைப் பெற்றுள்ளனர். குறிப்பாக துர்காஷ்டமி என்றும், மஹாஷ்டமி என்றும் வீராஷ்டமி என்றும் நாட்டின் பல பகுதிகளிலும் கொண்டாடப்படுகின்ற நவராத்திரியின் எட்டாம் நாள் அபரிமிதமான சக்தியைப் பெற்ற நாள் என்பது அனுபவ பூர்வமாக பலரும் அறிந்த உண்மை.

     வராஹ புராணத்தில் அக்ஞான ரூபமான மஹிஷன், அம்பிகை எனும் ஞானத்தினால் அழிக்கப்படுவதால் துர்காதேவியானவள் ‘ஞானசக்தி’ என்று போற்றப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. மஹிஷாசுரனோடு யுத்தம் நடந்த காலத்தில் இந்த துர்காஷ்டமி நாளன்று சண்ட முண்டர்களையும், ரக்தபீஜன் என்ற அரக்கனையும் அடியோடு நாசம் செய்வதற்காக துர்காதேவியின் நெற்றியிலிருந்து காளிதேவி தோன்றியதாகச் சொல்வார்கள்.

     கொல்கத்தா போன்ற நகரங்களில் துர்காஷ்டமி நாளன்று மிக விசேஷமாகக் காளி பூஜை செய்யப்படுவதை இன்றும் காண்கிறோம். அன்றைய தினத்தில் துர்காதேவியின் 64 யோகினிகளும், பிராஹ்மி, மாஹேஸ்வரி, மஹாலக்ஷ்மி, வைஷ்ணவி, வாராஹி, நாரசிம்ஹி, இந்திராணி, சாமுண்டா ஆகிய அஷ்ட சக்திகளும் ஒன்றாக இணைந்து செயல்படுவதாக அம்பிகை உபாசகர்கள் கூறுகிறார்கள்.

     ஆதிசக்தி செய்த அசுர வதங்களுள் குறிப்பிடத்தக்கது, ரக்த பீஜனை அழித்தது ஆகும். மஹிஷாசுர வதத்தோடு மட்டுமல்லாமல் சும்ப நிசும்பர்கள் வதத்தோடும் ரக்தபீஜன் கதை தொடர்புபடுத்தப்படுகிறது. தேவியைக் கொல்வதற்கு தனது படைத்தளபதியான ரக்தபீஜனை எத்த களத்திற்குள் அனுப்பினான் நிசும்பனின் அண்ணன் சும்பன்.

rakthabeeja - Dhinasari Tamil

     ரக்தபீஜனின் உடலிலிருந்து பூமியில் விழும் ஒவ்வொரு துளி ரத்தமும் அவனைப் போலவே உருவமும், பலமும் கொண்ட ஓர் அசுரனாக உருப்பெறும் என்பது ரக்தபீஜன் வாங்கிய வரம். (கமலஹாசன் நடத்த தசாவதாரம் திரைப்படம் நினைவுக்கு வருகிறதா?) இப்படிப்பட்ட வரம் பெற்றதால் அவன் மதம் கொண்ட யானையைப் போல் யுத்த களத்திற்குள் நுழைந்தான். கதை ஏந்தி மாத்ரு தேவதையான இந்திரசக்தியுடன் யுத்தம் புரிந்தான். தனது வஜ்ராயுதத்தால் அவனை அடித்தாள் இந்திரசக்தி. அதனால் அவன் உடலிலிருந்து ரத்தம் பெருகியது. அவற்றிலிருந்து அவனை போல் வடிவும், வலிமையும் வாய்ந்த ஆயிரமாயிரம் அசுரர்கள் தோன்றினார்கள்.

     வாராஹி வாளாலும், மகேஸ்வரி திரிசூலத்தாலும், கௌமாரி சக்தி ஆயுதத்தாலும் வைஷ்ணவி சக்ராயுதத்தாலும் ரக்தபீஜனை வதைத்தார்கள். அசுரனின் சரீரத்திலிருந்து ரத்தம் வௌ்ளமாக ஓடியது அதிலிருந்து வெளிவந்த அசுரர்கள் உலகம் முழுக்க வியாபிக்கத் தொடங்கினார்கள். பல்கிப் பெருகிய அசுரர் பலம் கண்ட தேவர்கள் பயந்தனர். தேவியிடம் மீண்டும் சரண் அடைந்தனர்.

     சாமுண்டி கோபத்துடன் தனது புருவங்களை நெறித்தாள். அதிலிருந்து உருவான காளி, ரக்தபீஜனின் உடலில் இருந்து வெளிவந்த ரத்தத்தைக் குடித்தாள். அப்போது மற்ற தேவதைகள் பாணத்தாலும் கத்தியாலும் வஜ்ரத்தாலும் அசுரனை தாக்கினார்கள். பலவிதமான ஆயுதத்தால் தாக்கப்பட்ட அசுரன், ஒரு கட்டத்தில் உடலில் உள்ள ரத்தம் முழுவதும் வெளியேற பூமியில் விழுந்து மடிந்தான். அசுரனின் உதிரத்தைப் பருகிய தேவி, ஜூவாலா முகி திரிபுரசுந்தரி எனும் திருநாமத்துடன் கோயில் கொண்டுள்ள தலம் மைசூரில் உள்ள சாமுண்டி கோயிலாகும்.

     சங்க இலக்கியங்கள் மைசூரை எருமையூர் என அழைத்தன. மைசூரில் சாமுண்டி மலையின் அடிவாரத்தில் அழகிய சூழலில் சாமுண்டி ஆலயம் அமைந்துள்ளது மைசூரு மகாராஜாக்களால் இந்த ஆலயம் கட்டப்பட்டது. தேவி தனது கரங்களில் சங்கு, சக்கரம், பாணம், வஜ்ரம், கோடரி, கதை, கத்தி, கலப்பை, உலக்கை, கேடயம், தோமரம், கயிறு, திரிசூலம் என பலவகை ஆயுதங்கள் தரித்திருந்தாலும் மிக அழகிய ரூபம் கொண்டவள். கருவறையில் மூவுலகிலும் அழகிற் சிறந்த ஜூவாலாமுகி திரிபுரசுந்தரியின் திருவுருவ தரிசனம் கிடைக்கிறது. தனது நாக்கை தொங்க விட்டு நிலையில், அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறாள். மிகவும் ஆற்றல் வாய்ந்த தேவியாகத் திகழும் இவளை வழிபட்டால் பாவம் நீங்கும் புண்ணியம் பெருகும்.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply