00.jpg" alt="" width="225" height="300" />
ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறையின்போது இரண்டு ஏகாதசி தினங்கள் வருகின்றன. ஒரு வருடத்துக்கு மொத்தம் 24 ஏகாதசி திதிகள் வரும். இவை ஒவ்வொன்றும் தனித்துவம் வாய்ந்தவை. அதைக் குறிப்பிடும் விதமாகத் தனித்தனி பெயர்களால் அவை அழைக்கப்படுகின்றன.
ஒவ்வொரு விரதமும் ஒவ்வொரு பலனைத் தரவல்லது. 24 ஏகாதசி விரதத்தையும் அனுஷ்டிக்க முடியாதவர்கள், தம் தேவைக்கு ஏற்ப குறிப்பிட்ட ஏகாதசி விரதத்தை வழிபட்டு அதற்குரிய பலன்களைப் பெறலாம். ஆனால், குறிப்பிட்ட ஒரு ஏகாதசி விரதத்தை அனுஷ்டித்தால் ஓர் ஆண்டில் வரும் 24 ஏகாதசி திதிகளிலும் விரதம் இருந்த பலனைப் பெறலாம். அதுதான் ‘நிர்ஜலா ஏகாதசி.’ இந்த ஏகாதசிக்கு ‘பீம ஏகாதசி’ என்ற பெயரும் உண்டு.
‘நிர்ஜலா’ என்றால், ‘தண்ணீர்கூட அருந்தாமல்’ என்று பொருள். இந்த ஏகாதசியின் மகிமையை விளக்கும் புராண சம்பவம் ஒன்று சொல்லப்படுகிறது.
பாண்டவர்கள் அனைவரும் வனவாசத்தில் இருந்த காலம் அது. வனத்தில் வாழ்ந்தாலும் பாண்டவர்களில் பீமன் ஒருவனைத் தவிர மற்ற நால்வரும் ஏகாதசித் திதியன்று தவறாது விரதமிருந்து திருமாலை வழிபட்டு வந்தார்கள். ஒருமுறை அனைவரும் ஏகாதசி விரதத்துக்குத் தயாராகிக்கொண்டிருக்கும்போது வியாச முனிவரைக் காணும் பாக்கியம் அவர்களுக்குக் கிடைத்தது. அப்போது யுதிஷ்டிரன், “குருதேவா… கலியுகத்தில் துன்பங்கள் பல்வேறு வழிகளிலும் துரத்துகின்றன. இந்தத் துன்பங்கள் அனைத்தையும் விரட்டும் எளிய வழியைச் சொல்லுங்கள்” என்று வேண்டினான்.
அதற்கு வியாசர், “தர்மபுத்திரா… துன்பங்கள் அனைத்தையும் நீக்கக்கூடியது ஏகாதசி விரதம் மட்டுமே. ஏகாதசியன்று விரதமிருந்து திருமாலை வழிபடுவதைத் தவிர எளிய மார்க்கம் வேறெதுவும் இல்லை. சாஸ்திரங்களும் புராணங்களும் இதைத்தான் சொல்கின்றன” என்றார்.
அப்போது அவருக்கு அருகில் அமைதியாகவும் சோர்வுடனும் நின்றுகொண்டிருந்தான் பீமன். அவன் சோர்வைக் கண்ட வியாசர், “வாயுபுத்திரா… உன் சோகத்துக்கான காரணத்தை நான் அறியலாமா?” என்று கேட்டார்.
பீமன் வியாசரின் பாதங்களை வணங்கி, “என் சகோதரர்கள், தாய், மனைவி என்று அனைவரும் ஏகாதசி விரதமிருந்து திருமாலை வழிபட்டுப் புண்ணியம் அடைகிறார்கள். ஆனால், என்னால் ஒருவேளைகூட உணவு உண்ணாமல் இருக்க முடியவில்லை. என் வயிற்றுக்குள் ‘வ்ருகா’ எனும் தீ எப்போதும் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டேயிருக்கிறது. அது என் பசியைத் தூண்டிக்கொண்டே இருக்கிறது. தீராப் பசியுடன் எரியும் அந்த நெருப்பு அடங்குவதில்லை. அதனால், வருடத்துக்கு ஒருநாள் மட்டுமே விரதமிருந்து ஒட்டுமொத்தப் பயனையையும் அடையும் வழி ஏதாவது இருந்தால் எனக்குச் சொல்லுங்கள்” என்று வேண்டினான்.
பீமனின் இந்த மாறுபட்ட வேண்டுதலைக் கேட்ட வியாச முனிவர் புன்னகைத்தார்.
“பீமா… வருடத்தில் 24 ஏகாதசிகள் வருகின்றன. அவற்றுள் ‘நிர்ஜலா ஏகாதசி’ ஒன்றை மட்டும் தவறவிடாமல் விரதமிரு. இந்த ஒரு ஏகாதசி விரதமானது ஆண்டுதோறும் வரும் விரதங்கள் அனைத்தையும் அனுஷ்டித்த பலன்களை முழுமையாகத் தரவல்லது. ஆனால், இதை நீ கவனமாகக் கடைப்பிடிக்க வேண்டும். துளிநீர்கூட பருகக்கூடாது. இதை அனுஷ்டிப்பதன் மூலம் உன் வலிமையும் பல மடங்கு பெருகும்” என்று உபதேசித்தார்.
இதைக் கேட்டு மகிழ்ந்த பீமன், வியாசர் உபதேசித்ததைப் போலவே ‘நிர்ஜலா ஏகாதசி’யன்று துளி தண்ணீர்கூட பருகாமல், தனது பசியைக் கட்டுப்படுத்தி விரதமிருந்து அடுத்தநாள் துவாதசியன்று தனது சகோதரர்களுடன் சேர்ந்து உணவு உண்டான். பீமனே அனுஷ்டித்த விரதம் ஆதலால், இந்த விரதம் ‘பீம விரதம்’ என்றும் ‘பீம ஏகாதசி’ என்றும் பெயர் பெற்றது.
‘நிர்ஜலா ஏகாதசி விரதத்தை அனுசரிப்பவர்களுக்குச் சகல பாவங்களும் தீர்ந்து புண்ணிய பலன்கள் பெருகும். நோய்கள் விலகி ஆரோக்கியம் மேம்படும். செல்வ வளம் பெருகும்’ என்கின்றன சாஸ்திரங்கள்.
இத்தகைய சிறப்புகளையுடைய நிர்ஜலா ஏகாதசி இன்று. மற்ற விரத தினங்களைக் கடைப்பிடிக்க முடியாதவர்கள் இன்றையத் தினத்தைத் தவறவிடாமல் பயன்படுத்திக்கொண்டு பகவான் விஷ்ணுவின் பரிபூரண அருளைப் பெறலாம்.