திருப்புகழ்க் கதைகள் பகுதி 280
முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியன்
ஒருவரையும் ஒருவர் – சுவாமி மலை – பொம்மலாட்டம் 2
பொம்மலாட்டத்துக்குப் பயன்படும் பொம்மைகளை கல்யாண முருங்கை மரத்தில் இருந்துதான் உருவாக்குகிறார்கள். அந்த மரத்தின் கட்டைகளை நீரில் ஊற வைத்து பின் உலர வைத்து தலை, கால், கை என பொம்மையின் உருவங்களை தனித்தனியாக வெட்டிச் செதுக்குவார்கள். பின் மீண்டும் நன்றாக உலர வைத்து உறுப்புகளை இணைப்பார்கள். இணைக்கப்படும் உறுப்புகள் தனித்தனியாக இயங்கும் வண்ணம் இருக்கும்.
இந்த பொம்மைகள் 45 செ.மீட்டர் முதல் 90 சென்டி மீட்டர் வரை உயரமுடையதாக இருக்கும். பொம்மையின் உறுப்புகளுக்கு ஏற்பவும், பாத்திரங்களின் தன்மைக்கேற்பவும் பொம்மைகளுக்கு வண்ணம் தீட்டுவார்கள். ஆரம்பகாலங்களில் எல்லாப் பொம்மைகளுக்கும் மஞ்சள் வண்ணம் மட்டுமே தீட்டப்பட்டது.
தற்போதய காலகட்டத்தில் கற்பனைக்கும் பொம்மைகளின் வசீகரத்துக்கும் ஏற்ப பல வண்ணங்கள் தீட்டப்படுகின்றன. மரபுரீதியான கதா பாத்திரங்களுக்கு அதற்கேற்ற மரபுரீதியான உடைகளும், சமூகக் கதைகளில் பாத்திரமாக்கப்படும் பொம்மைகளுக்கு நவீன உடைகளும் அணிவிக்கப்படும்.
பொம்மையை இயக்குவதில் சில வகைகள் உண்டு. பொம்மையின் உறுப்புகளில் கயிறுகளைப் பிணைத்து, ஒரு குச்சியில் கட்டி, அந்தக் குச்சியை அசைத்து இயக்குவது ஒரு வகை. பொம்மையின் உறுப்புகளில் கயிறுக்குப் பதில் கம்பிகளைப் பிணைத்து, அவற்றை ஒரு வளையத்தில் இணைத்து பொம்மையை இயக்கும் கலைஞர் தனது தலையில் அதை மாட்டிக்கொண்டு இயக்குவது இன்னொரு வகை.
பொம்மையை இயக்குபவர் திரைக்குப் பின்னே இருப்பார். அவர் பார்வையாளர்களின் கண்களுக்குத் தெரிய மாட்டார். மேலும் கீழும் ஆட்டுதல், பக்கவாட்டில் ஆட்டுதல் என இருவகைகளில் பொம்மைகள் இயக்கப்படும். உயிர் அற்ற பொம்மைகள் உயிர் பெற்றுத் திரைக்கு முன்னே ஆடிப்பாடி, பேசும். பார்வையாளர்கள் சோர்ந்துவிடாதபடிக்கு ஆட்டத்தின் இடையே சில குழுக்கள் பபூன்களை களமிறக்கி காமெடி செய்வதும் உண்டு.
இக்ககலையில் இரண்டு பாணிகள் பின்பற்றப் படுகின்றன. 1. கும்பகோணம் கலை பாணி. 2. சேலம் கலைபாணி. கும்பகோணம் கலைபாணியைப் பயன்படுத்துபவர்கள் கர்நாடக இசையை ஒட்டிப் பாடல்களைப் பாடுவார்கள். சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகப் போக்கை கையாளும் இவர்கள் பொம்மைகளில் கம்பிகளை பிணைத்துக் கொள்கிறார்கள்.
சேலம் கலைபாணியைப் பயன்படுத்துபவர்கள் ஆர்மோனியத்தைத் தவிர்த்து முகவீணையைப் பயன்படுத்துகிறார்கள். இவர்கள் கயிறுகளில் பொம்மைகளைப் பிணைத்துக் கொள்கிறார்கள் நூல் பொம்மை, கோள் பொம்மை, நிழற் பொம்மை, கைபொம்மை, விரல் பொம்மை என்றும் தோற்றத்தின் படி இருகோண, முக்கோண படிவத்தில் நிர்மாணிக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் பொம்மலாட்டம் என்றழைக்கப்படும் இக்கலை, ஆந்திராவில் கொய்யா பொம்மலாட்டா எனவும், கர்நாடகத்தில் சூத்ரதா கொம்பேயாட்டா எனவும் ஒரிஸ்ஸாவில் கோபலீலா எனவும் மேற்க்குவங்கத்தில் சுத்தோர் புதூல் எனவும் அசாமில் புத்லா நாச் எனவும் ராஜஸ்தானில் கட்புத்லி எனவும் மகாராஷ்டிரத்தில் காலாசூத்ரி பஹுல்யா எனவும் அழைக்கப் படுகின்றது. ஆங்கிலத்தில் பொம்மலாட்டத்தை மேரியோனெட்டு (marionette) என்பர்.
நிழற் பொம்மலாட்டம் அல்லது நிழல் நாடகம் என்ற பழங்காலத்துக் கதைகூறல் முறையும் உள்ளது. இவற்றில், தட்டையானவையும், உறுப்புக்கள் தனித்தனியாக அசையக் கூடிய வகையில் மூட்டுக்களால் இணைக்கப்பட்டவையுமான உருவங்களைப் (நிழற் பொம்மைகள்) பயன்படுத்துகின்றனர். இவற்றின் மூலம், மனிதர்களும் பிற முப்பரிமாண உருவங்களும் அசைவது போன்ற தோற்றத்தை உருவாக்குகின்றனர்.
தட்டையான பலகைகளில் அல்லது அட்டைகளில் வெட்டியெடுக்கப்பட்ட உருவங்களான நிழற் பொம்மைகள் ஒளிமுதலுக்கும் (விளக்கு), ஒளிகசியும் திரையொன்றுக்கும் இடையே வைக்கப்படும். சில பொம்மைகள் ஒளிகசியவிடும் அல்லது ஒளியைப் பிரதிபலிக்கும் நிறப் பொருட்களையும் பிற வேலைப்பாடுகளையும் கொண்டிருப்பது உண்டு. நிழற் பொம்மலாட்டத்தைப் பார்ப்பவர்கள் திரைக்கு மறுபக்கத்தில் இருப்பர். பொம்மைகளையும், ஒளிமுதலையும் அசைப்பதன் மூலம் பல வகையான விளைவுகளைப் பெறமுடியும். திறமையான பொம்மலாட்டக்காரர் ஒருவரால் பொம்மைகளின் நிழல்களைப் பார்ப்பவர்களுக்கு அவை நடத்தல், ஆடுதல், போரிடுதல், தலையசைத்தல், சிரித்தல் போன்ற செயல்களைச் செய்வது போலக் காட்டமுடியும்.
நிழற் பொம்மலாட்டம் பல பண்பாடுகளில் மக்களால் மிகவும் விரும்பப்படுவனவாக உள்ளன. தற்காலத்தில் இருபதுக்கு மேற்பட்ட நாடுகளில் நிழற் பொம்மலாட்டக் குழுக்கள் இருப்பதாகத் தெரிகிறது. இந்தோனீசியா, சீனா, இந்தியா, கிரீசு, நேபாளம், துருக்கி போன்ற நாடுகளிலும் மேலும் பல நாடுகளிலும் நிழற் பொம்மலாட்டம், சிறுவரும், பெரியவர்களும் விரும்பிப் பார்க்கும் ஒன்றாக உள்ளது.