திருப்புகழ்க் கதைகள் பகுதி – 278
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
ஒருவரையும் ஒருவர் – சுவாமி மலை
அருணகிரிநாதர் அருளிசெய்துள்ள இருநூற்றி ஏழாவது திருப்புகழான “ஒருவரையும் ஒருவர்” எனத் தொடங்கும் திருப்புகழ் சுவாமிமலை தலத்துப் பாடலாகும். இத்திருப்புகழில் அருணகிரியார் “சுவாமிநாதா, மலமாயையால் மயங்குகின்ற அடியேனுடைய மயக்கம் தீர்த்து, உண்மைப் பொருளை உபதேசித்து ஆட்கொள்வாயாக” என வேண்டுகிறார். இனி திருப்புகழைக் காணலாம்.
ஒருவரையு மொருவரறி யாம லுந்திரிந்
திருவினையி னிடர்கலியொ டாடி நொந்துநொந்
துலையிலிடு மெழுகதென வாடி முன்செய்வஞ் – சனையாலே
ஒளிபெறவெ யெழுபுமர பாவை துன்றிடுங்
கயிறுவித மெனமருவி யாடி விண்பறிந்
தொளிருமின லுருவதென வோடி யங்கம்வெந் – திடுவேனைக்
கருதியொரு பரமபொரு ளீது என்றுஎன்
செவியிணையி னருளியுரு வாகி வந்தஎன்
கருவினையொ டருமலமு நீறு கண்டுதண் – டருமாமென்
கருணைபொழி கமலமுக மாறு மிந்துளந்
தொடைமகுட முடியுமொளிர் நூபு ரஞ்சரண்
கலகலென மயிலின்மிசை யேறி வந்துகந் – தெனையாள்வாய்
திரிபுரமு மதனுடலு நீறு கண்டவன்
தருணமழ விடையனட ராஜ னெங்கணுந்
திகழருண கிரிசொருப னாதி யந்தமங் – கறியாத
சிவயநம நமசிவய கார ணன்சுரந்
தமுதமதை யருளியெமை யாளு மெந்தைதன்
திருவுருவின் மகிழெனது தாய்ப யந்திடும் – புதல்வோனே
குருகுகொடி யுடன்மயிலி லேறி மந்தரம்
புவனகிரி சுழலமறை யாயி ரங்களுங்
குமரகுரு வெனவலிய சேட னஞ்சவந் – திடுவோனே
குறமகளி னிடைதுவள பாத செஞ்சிலம்
பொலியவொரு சசிமகளொ டேக லந்துதிண்
குருமலையின் மருவுகுரு நாத வும்பர்தம் – பெருமாளே.
இத்திருப்புகழின் பொருளாவது – திரிபுரத்தையும் மன்மதனுடைய உடலையும் சாம்பலாக எரித்தவரும், மிக்க இளம் பருவமுடைய இடபத்தின் மீது எழுந்தருளி வருபவரும், சித்தாகாசப் பெருவெளியில் ஆனந்தத் தாண்டவம் புரிபவரும், எல்லாவிடத்திலும் நீக்கமற நிறைந்து தன்னருட் ஜோதிப் பிழம்பு வீசுமாறு, மாலும் அயனும் மேலும் கீழும் தேடி அடியையும் முடியையும் அறியாமல் திகைக்கும் வண்ணம் சிவந்த நெருப்பு மலை வடிவாக நின்றவரும், தூல, சூட்சம காரண பஞ்சாட்சரப் பொருளாக விளங்குபவரும், திருவளர் அமிர்தத்தைச் சுரந்து, அடியோர்களுக்கு அருளி ஆட்கொள்ளும் எமது பரமபிதாவாகிய சிவபெருமானுடைய திருமேனியில் ஒரு பாதியைப் பெற்று மகிழ்கின்ற, அடியேனுடைய தாயாராகிய பார்வதி தேவியார் பயந்தருளிய திருக்குமாரரே;
சேவற் கொடியுடன் மரகத வண்ண மயிலின் மீது ஆரோகணித்து, மந்தர மலையும் புவனங்களும் மற்றைய மலைகளும் மயிலினது இறக்கைகளின் காற்றின் வேகத்திற்கு ஆற்றாது சுழலவும், ஆயிரம் வேதங்களும் “குமரகுரு” என்று ஓலமிடவும், வலிமைமிக்க ஆதிசேடன் அச்சமுறவும் பவனி வருகின்றவரே;
வள்ளியம்மையாருடைய மெல்லிய இடை துவளவும், அவருடைய தாமரைத் தாளில் அணிந்துள்ள சிறந்த பொற் சிலம்புகள் ஒலிக்கவும் அவரைக் கலந்து, இந்திராணிக்குத் திருமகள் எனத் திருஅவதரித்த, ஒப்பற்ற தேவகுஞ்சரி அம்மையாரையும் மருவி, வந்தவர் வினை தீர்க்க வல்லதாகிய சுவாமிமலையில் எழுந்தருளியுள்ள ஞானகுரு மூர்த்தியே; தேவர்கட்கெல்லாம் பெருமையின் மிக்கவரே;
அறியாமையாகிய திரையினால், முற்பிறப்பின் உணர்ச்சி இன்மையால், ஒருவரை வருவர் இன்னார் இனியாரென அறிந்து கொள்ள முடியாமல் திரிந்தும், நல்வினை தீவினை என்ற இருவினைகளின் பயனாகவும், இன்ப துன்பங்களினால் ஆடி மிகவும் வருந்தியும், உலையிலிட்ட மெழுகைப்போல் உருகி வாடியும், முற்பிறப்பில் செய்த வஞ்சனையால் பாவைக் கூத்தில் சூத்திரதாரி பல கயிறுகளைக் கொண்டு ஆட்டும் மரப்பாவை போல் (உள்ளே உயிருக்குயிரா யுள்ள இறைவனால் ஆட்டப் பெற்று) ஆடியும், ஆகாயத்தில் ஒரு கணத்தில் ஒளிசெய்து மறையும் மின்னலைப்போல் நிலையற்ற வாழ்நாள் கழிந்தவுடன் உடல் வெந்து அழியப்படுவேன் ஆகிய அடியேனை, தேவரீரது அடியார் குழாத்துள் ஒருவனாகக் கருதி, ஒப்பற்ற பெரிய பொருள் இதுவே என்று அடியேனுடைய இருசெவியிலும் உபதேசித்து, வினைப்பயனால் உடலோடு கூடி வந்துள்ள அடியேனுடைய கொடிய வினையும் அரிய மும்மலங்களும் பொடிபட்டு ஒழியவும், குளிர்ந்ததும் பெருமை பெற்றதும் மேன்மை உடையதும் ஆகிய தேவரீருடைய கருணை பொழிகின்ற ஆறு திருமுகங்களும், கடப்பமலர் மாலையும் இரத்தின மணி முடிகளும் தோன்றவும், ஒளிசெய்கின்ற திருவடிகளில் அணிந்துள்ள நூபுரங்கள் கலகல என்ற ஒலி செய்யவும், மாமயிலின் மீது எழுந்தருளி வந்து, உவப்புடன் அடியேனை ஆட்கொண்டு அருள்வீர்.
இந்தத் திருப்புகழில் அருணகிரியார் பொம்மலாட்டம் பற்றிக் குறிப்பிடுகிறார். அதனை நாளை காணலாம்.