திருப்புகழ்க் கதைகள் 274 – முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
எந்தத் திகையினும் – சுவாமி மலை பிரபுட தேவராயன்
அருணகிரி நாதரின் வரலாறு பற்றி சரிவரத் தகவல்கள் பதிவாகவில்லை என்று தணிகைமணிவ.சு. செங்கல்வராயபிள்ளை அவர்கள், அருணகிரிநாதர்வரலாறும்ஆராய்ச்சியும் என்ற தமது நூலில் ஏக்கத்துடன் எடுத்துரைப்பதைப் பார்க்கிறோம். ஆனால் சேதுபதி அரசர் நடத்திய நான்காம் தமிழ்ச் சங்கத் தலைமைப் புலவராய் வீற்றிருந்த மூதறிஞர் ராவ்சாகிப்மு.இராகவையங்கார் அவர்கள் அரிதில் முயன்று சில தகவல்களைத் தமிழ்ச் சங்கத்தின் இதழான செந்தமிழ் என்ற இதழில் எழுதினார். அந்தத் தகவல்களை இங்கு காண்பது பொருத்தம் என்பதால் அதனை மீண்டும் எழுதுகிறேன்.
1) அருணகிரியார் பாரதம் பாடிய வில்லிப்புத்தூரார் காலத்தில் அவரொடு நேர்ந்த வாதில் அவரை வெல்லும் நிமித்தமாக கந்தரந்தாதியைப் பாடினார் என்றும் அதில் ‘திதத்தத்தத்’ எனத் தொடங்கும் தகரவர்க்கப் பாடலுக்கு விளக்கம் கூற முடியாமல் வில்லிப்புத்தூரார் திகைத்தார் என்ற செய்தி அனைவரும் அறிந்த ஒரு செய்தியாகும். எனவே அருணகிரியார் வில்லிப்புத்தூரார் வாழ்ந்த காலமான பொது சகாப்தம் 14ஆம் நூற்றாண்டிற்கும் 15ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்டவர் என்பது தெரிகிறது.
2) அருணகிரி நாதர் திருவண்ணாமலைப் பகுதியை ஆண்ட சிற்றரசன் பிரபுடதேவமாராயன் என்பவரைப் பாடி இருக்கிறார். பாடல் வரி வருமாறு:
உதயதாமமார்பானப்ரபுடதேவமாராயன்
உளமுமாடவாழ்தேவர் – பெருமாளே
எனவே பிரபுடதேவ மாராயர் காலத்தவர் அருணகிரியார் என்பது புலனாகிறது. பிரபுடதேவ மாராயர் என்ற சிற்றரசர் பற்றி I.M.P. N.A. No.208 சாசனம் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர் விஜய நகர கிருஷ்ண தேவராயரின் பிரதிநிதியாக முதற் பிரபுடதேவ ராயர் எனத் தெரிகிறது. இவர் தன் பெயரால் அந்தணர்க்குத் தானம் செய்து, அதாவது பிரபுடதேவராயபுரம் என்ற பெயரில் தானம் செய்த ஊர் அன்று முல்லண்டிரம் என்றும் இன்று அதன் பெயர் தேவிகாபுரம் என வழங்கப் பெறுகிறது என்றும் தெரிகிறது. இது தற்போது திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டத்தில் உள்ளது. இந்தப் பிரபுட தேவராயரின் காலம் கி.பி. 14ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொடங்கி கி.பி.15ஆம் நூற்றாண்டு வரை செல்கிறது. எனவே அருணகிரியாரும் இக்காலத்தைச் சேர்ந்தவரே எனலாம்.
3) அருணகிரியார் தாம் பாடிய திருப்புகழ் ஒன்றில் சோமநாதன் மடம் என்ற ஒன்றைப் புகழ்ந்து இங்கு தினம்தோறும் அருணகிரிநாதர் பூசை நடைபெறுகிறது என்று பாராட்டி இருக்கிறார். பாடல் வரிகள் வருமாறு:
அரிவையொருபாகமானஅருணகிரிநாதர்பூசை
அடைவுதவராதுபேணும் – அறிவாளன்
அமணர்குலகாலனாகும்அரியதவராசராசன்
அவனிபுகழ்சோமநாதன் – மடமேவும்
இந்தச் சோமநாதன் மடம் உள்ள தேவிகாபுரம் ஊருக்கு மிக அருகில் உள்ள புத்தூர் எனப்படுகிறது. இந்த மடத்தை நிறுவிய சோமநாத ஜீயர்க்கு பிரபுடதேவராயர் தானம் செய்த செய்தி M.E.R. 1913 என்ற சாசனத்தால் அறிய வருகிறோம். எனவே அருணகிரியாரின் காலம் பிரபுடதேவராயர், சோமநாத ஜீயர் ஆகியோர் சமகாலத்தவர்கள் எனத் தெரிகிறது. எனவே அருணகிரியார் கி.பி. 14-ஆம் நூற்றாண்டிற்கும் கி.பி.15-ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலமே என்பது உறுதியாகிறது.
4) அருணகிரியாரும் இரட்டைப் புலவர்கள் என்று தமிழ்நாட்டின் புகழ் பெற்ற புலவர்களும் ஒரே காலத்தவர் என்பதும் பேசப்படுகிறது. இரட்டைப் புலவர்களின் காலமும் மேற்கண்ட காலம் என்று அறுதி இட்டிருக்கிறார்கள். அதனாலும் அருணகிரியாரின் காலம் மேற்கூறியதே என்பது உறுதியாகிறது.
எனவே மேற்கூறியவைகளால் அருணகிரியார் காலம் கி.பி.14-ஆம் நூற்றாண்டிற்கும் கி.பி.15-ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலம் என்பதை உறுதியாகக் கூறலாம். இவ்வாறு அருணகிரியாரின் காலம் உறுதியானாலும், அவரது குலம், தாய்-தந்தையின் பெயர், பிறந்த ஊர், இளமை வாழ்வு பற்றிய தகவல்கள் எல்லாம் இன்னும் உறுதியாக அறிய முடியவில்லை என்பது உண்மை.