திருப்புகழ் கதைகள்: நல்லாரோடு இணங்கியிருத்தல்!

ஆன்மிக கட்டுரைகள்
thiruppugazh stories - Dhinasari Tamil

திருப்புகழ்க் கதைகள் – பகுதி 264
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

மூலமந்திரம் – பழநி
நல்லாரோடு இணங்கியிருத்தல்

தீக்குணங்களை ஒழித்து, நற்குணங்களை உண்டாக்கி நலம் பெறச் செய்யும் தன்மை நல்லோர் இணக்கத்திற்கே உண்டு. நல்லாரோடு நாளும் இணங்குபவர்கட்கு நல்லருளும் பிறவாப் பெற்றியும் தானேயுண்டாகும். இதனை ஔவையார்,

இனியது கேட்கின் தனிநெடு வேலோய்
இனிது இனிது ஏகாந்தம் இனிது
அதனினும் இனிது ஆதியைத் தொழுதல்
அதனினும் இனிது அறிவினர்ச் சேர்தல்
அதனினும் இனிது அறிவுள் ளாரைக்
கனவிலும் நனவிலும் காண்பது தானே.

எனக் கூறுவார். ஆதிசங்கரரும் பஜகோவிந்தம் என்னும் துதியில் நல்லோர் சகவாசம் முக்தி நிலைக்கு இட்டும் செல்லும் என்கிறார்:–

சத்சங்கத்வே நிஸ்ஸங்கத்வம்
நிஸ்ஸங்கத்வே நிர்மோஹத்வம்
நிர்மோஹத்வே நிஸ்ஸலதத்வம்
நிஸ்ஸலதத்வே ஜீவன் முக்தி.

திருவள்ளுவரும் சத்சங்கத்தின் பெருமையை, தொண்டர்தம் கூட்டை, ‘கேள்வி’என்னும் அதிகாரத்தில் சொல்லுவார்:

எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும். (திருக்குறள் 416)

கொஞ்சமாவது நல்லது கேளுங்கள்; அது உங்களுக்குப் பயன்படுகிறபோது நல்ல பெருமையைக் கொண்டுவரும் – என்கிறார். ஔவையார் இன்னும் விளக்கமாக

நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க
நல்லார்சொல் கேட்பதுவும் நன்றே – நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்று.

என்று பாடுவார். இன்னும் விவேகசிந்தாமணியில்

நல்குணம் உடைய வேந்தை நயந்து சேவித்தல் ஒன்று,
பொற்புஉடை மகளிரோடு பொருந்தியே வாழ்தல் ஒன்று,
பற்பலரோடு நன்னூல் பகர்ந்து வாசித்தல் ஒன்று,
சொல்பெறும் இவைகள் மூன்றும் இம்மையில் சொர்க்கம் தானே.

என்று கூறப்பட்டுள்ளது. குருபாத தாசர் அருளியுள்ள குமரேச சதகத்தில் நல்லினம் சேர்தல் பற்றி ஒரு பாடல் பகுதி வருகின்றது.

சந்தன விருட்சத்தை அண்டிநிற் கின்றபல
தருவும்அவ் வாசனை தரும்;
தங்கமக மேருவை அடுத்திடும் காக்கையும்
சாயல்பொன் மயமேதரும்;

பந்தம்மிகு பாலுடன்வ ளாவியத ணீரெலாம்,
பால்போல் நிறங்கொடுக்கும்;
படிகமணி கட்குளே நிற்கின்ற வடமுமப்
படியே குணங்கொடுக்கும்;

அந்தமிகு மரகதக் கல்லைத் தரித்திடில்,
அடுத்ததும் பசுமையாகும்;
ஆனபெரி யோர்களொடு சகவாசம் அதுசெயின்,
அவர்கள் குணம் வருமென்பர்காண்

மந்தர நெடுங்கிரியின் முன்கடல் கடைந்தஅரி
மருக!மெய்ஞ் ஞானமுருகா!
மயிலேறி விளையாடு குகனே!புல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே.

அதாவது – முன்னொரு காலத்தில் மந்தரம் எனும் பெரிய மலையினை மத்தாக நிறுவிக் கடலைக் கடைந்த திருமாலின் திருமருமகனே, உண்மையறிவான முருகக் கடவுளே, மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே, திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே;

சந்தன மரத்தைச் சார்ந்து நிற்கின்ற பலவகையான மரங்களும் சந்தன மணத்தையே பெறும். பொன்மயமான மகா மேரு மலையைச் சேர்ந்த காக்கையும் பொன் நிறத்தைப் பெறும். பாலுடன் சேர்த்து வளாவிய தண்ணீரும் பால் போலவே வெண்ணிறம் கொடுக்கும். படிகமணிகளைக் கோத்த நூலும் படிகம் போலவே நிறம் கொடுக்கும்.
அழகு மிகுந்த மரகதக் கல்லை அணிந்தால் அதனைச் சார்ந்ததும் பசுமை நிறமாகவே இருக்கும். அறிவு மிக்க பெரியோர்களுடன் நட்புக் கொண்டால், அவர்களுடைய குணமே வரும் என்பர் பெரியோர்.

உலகத்துப் பொருள்கள் யாவும் சார்ந்ததன் எண்ணம் ஆகும். அது போலவே, மனிதர்களும் நல்லோரைச் சேர்ந்து இருந்தால் நன்மையை அடைவர் என்பது இதன் கருத்து. ஆன்மா சார்ந்ததன் வண்ணம் ஆகும் தன்மையை உடையது என்பது சித்தாந்தம்.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply