ஸ்ரீ ராமன் அவதரித்த நாளையே நாம் ஸ்ரீ ராம நவமியாக கொண்டாடுகின்றோம். இந்த ஆண்டு ஸ்ரீ ராம நவமி இன்று அன்று அனுஷ்டிக்கப்படுகிறது. நாம் போற்றி புகழும் விஷ்ணுவின் ஒரு அவதாரமே ஸ்ரீ ராமர் ஆவார். மகாவிஷ்ணுவின் பல அவதாரங்களில் ராமவதாரம் மிக முக்கியமான அவதாரமாகும்.
ஒரு வில், ஒரு சொல், ஒரு இல் என உலகிற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து காட்டியவர் ஸ்ரீராமர். மானுட பிறவியெடுத்த ஸ்ரீ ராமர் ஏகபத்தினி விரதராக வாழ்ந்தார்.
மகாவிஷ்ணு பங்குனி மாதம்,வளர்பிறை சுக்ல பட்சத்தில், நவமி திதியில், புனர்பூச நட்சத்திரத்தில் ஸ்ரீராமராக இவ்வுலகில் அவதரித்தார்.
ஸ்ரீ ராமர் பிறந்த நேரத்தில் ஐந்து கிரகங்களும் மிகவும் உச்சநிலையில் இருந்தது. அதனால் ஜாதக ரீதியாக தோஷம் உள்ளவர்கள் ஸ்ரீராமரை வணங்கி அவருடைய நாமத்தை அனுதினமும் ஜபித்துக் கொண்டே இருந்தால் சகல தோஷங்களும் விலகி வாழ்க்கை சிறப்பாக அமையும் என்பது நம்பிக்கை.
ராமநவமி அன்று அனைத்து ராமர் கோவில்களிலும் ஸ்ரீராமருக்கு பட்டாபிஷேகம் நடைபெறும். ராமர் பட்டாபிஷேக வைபவத்தில் கலந்து கொள்வது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
அவ்வாறு கலந்து கொள்ள முடியாதவர்கள் அவரவர் வீட்டில் பட்டாபிஷேக இராமர் படத்தை வைத்து குங்குமம், சந்தனம் போன்றவைகளால் பொட்டு வைத்து துளசியால் ஆன மாலையை அணிவித்து வழிபட வேண்டும்.
ஸ்ரீ ராம நவமி விரதம் கடைபிடிக்கும் முறை
ராமநவமியன்று அதிகாலையில் குளித்துவிட்டு, வீட்டை தூய்மைப்படுத்தி, பூஜை அறையை சுத்தபடுத்தி விரதம் கடைப்பிடிக்க வேண்டும்.
பூஜை அறையில் ராமர் படத்தை நன்றாக சுத்தம் செய்து குங்குமம், சந்தனம் போன்றவற்றால் பொட்டு வைத்து துளசிமாலை அணிவிக்க வேண்டும்.
பின் பழம், வெற்றிலை, பூ இவைகளை வைத்து ஸ்ரீராம நாமத்தை சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும். சாதம், பாயாசம், பானகம், வடை, நீர்மோர், தேங்காய், பஞ்சாமிர்தம், வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு இவற்றை நைவேத்தியமாக வைக்க வேண்டும். விரதம் இருப்பவர்கள் உணவு உண்ணாமல் ஒருப்பொழுது இருக்க வேண்டும்.
நைவேத்யம் செய்த முடிந்த பின் பானகம்,நீர்மோர்,பஞ்சாமிர்தம் இவற்றை குழந்தைகளுக்குத் தர வேண்டும். ஸ்ரீராமபிரான் விசுவாமித்திர முனிவருடன் இருந்த போதும், காட்டிற்கு வனவாசம் சென்ற போதும் தாகத்திற்கு நீர்மோரும், பானகமும் தான் அருந்தினாரம். அதன் நினைவாகத்தான் அவையிரண்டும் நைவேத்யமாகப் படைக்கப்படுகின்றது.
ராமநவமி விரதம் இருக்கும் போது ஸ்ரீராம ஜெயம் என்று 108 முறை சொல்லி வழிபடுவது சிறப்பு வாய்ந்ததாகும்.
ரா என வாய் திறந்து உச்சரிக்கும்போது நமது பாவங்கள் எல்லாம் வெளியேறிவிடுகின்றன என்றும், ம என உச்சரிக்க நம் உதடுகள் மூடும்போது அந்தப்பாவங்கள் மீண்டும் வராமல் தடுக்கப்படுவதாகவும் ஐதீகம்.
ஸ்ரீ ராமநவமி அன்று சிறிது நேரமாவது இராமயணத்தை படிக்க வேண்டும். அப்படி படிக்க முடியவில்லை என்றால் பிறர் சொல்ல கேட்க வேண்டும்.
காலையில் உணவு ஏதும் சாப்பிடாமல் ஸ்ரீராம நவமி விரதமிருந்து ஸ்ரீராமபிரானை வணங்கி வழிபடுபவர்களுக்கு ஆஞ்சநேயரின் அருள் முழுமையாக கிடைக்கபெரும். குடும்பத்தில் உள்ள வறுமை நீங்கி வாழ்வு வளம் பெரும்.
ஸ்ரீ ராம நவமி அன்று “ஸ்ரீ ராமஜெயம்“ எழுதி ஸ்ரீ ராமரை வழிபட்டால் இராமாயணம் படித்த பலன் கிடைக்கும்.அசுரர்களிடம் இருந்து உலகை காக்கவே மகாவிஷ்ணு ஸ்ரீராமராக அவதாரம் எடுத்தார். ஸ்ரீராம நவமி விழா கோவில்களில் பத்து நாட்களுக்கு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
“நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே ராம வென்ற யிரண் டெழுத்தினால்’
என்னும் பாடல் இரண்டெழுத்து மந்திர மாகிய ராம நாமத்தின் மகிமையை விளக்கு னகிறது.
ஸ்ரீராம நவமியன்று விரதமிருந்து ஸ்ரீராமரை வழிபடுவோர், ஸ்ரீராமர் அருளோடு ஸ்ரீ ஆஞ்சனேயர் அருளையும் பெற்று வாழ்வில் சகல ஐஸ்வர்யங்களையும் பெறுவர் என்பது திண்ணம்.