
திருப்புகழ்க் கதைகள் 251
புடவிக்கு அணிதுகில் – பழநி
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
அருணகிரிநாதர் அருளியுள்ள நூற்றியெழுபத்தியாறாவது திருப்புகழ், ‘புடவிக்கு அணிதுகில்’எனத் தொடங்கும் பழநி தலத்துத் திருப்புகழாகும். இத்திருப்புகழ் பழனி மலையில் திருக்கோவில் கொண்டுள்ள முருகப்பெருமானைத் துதி செய்து பாடும் பாடலாகும். இனி திருப்புகழைக் காணலாம்.
புடவிக் கணிதுகி லெனவள ரந்தக்
கடலெட் டையுமற குடிமுநி யெண்கட்
புநிதச் சததள நிலைகொள்ச யம்புச் …… சதுர்வேதன்
புரமட் டெரியெழ விழிகனல் சிந்திக்
கடினத் தொடுசில சிறுநகை கொண்டற்
புதகர்த் தரகர பரசிவ னிந்தத் …… தனிமூவ
ரிடசித் தமுநிறை தெளிவுற வும்பொற்
செவியுட் பிரணவ ரகசிய மன்புற்
றிடவுற் பனமொழி யுரைசெய்கு ழந்தைக் …..குருநாதா
எதிருற் றசுரர்கள் படைகொடு சண்டைக்
கிடம்வைத் திடஅவர் குலமுழு தும்பட்
டிடவுக் கிரமொடு வெகுளிகள் பொங்கக் …… கிரியாவும்
பொடிபட் டுதிரவும் விரிவுறு மண்டச்
சுவர்விட் டதிரவு முகடுகி ழிந்தப்
புறமப் பரவெளி கிடுகிடெ னுஞ்சத் …… தமுமாகப்
பொருதுக் கையிலுள அயில்நிண முண்கக்
குருதிப் புனலெழு கடலினு மிஞ்சப்
புரவிக் கனமயில் நடவிடும் விந்தைக் …… குமரேசா
படியிற் பெருமித தகவுயர் செம்பொற்
கிரியைத் தனிவலம் வரஅர னந்தப்
பலனைக் கரிமுகன் வசமரு ளும்பொற் …… பதனாலே
பரன்வெட் கிடவுள மிகவும்வெ குண்டக்
கனியைத் தரவிலை யெனஅருள் செந்திற்
பழநிச் சிவகிரி தனிலுறை கந்தப் …… பெருமாளே.
இத்திருப்புகழின் பொருளாவது – பூமிக்கு அழகிய ஆடையாகப் பரந்துள்ள அந்த எண்திசையின் கடலை முழுதும் குடித்த அகத்தியர், எட்டுக் கண்களை யுடையவரும், தூய நூறு இதழ்களைக் கொண்ட தாமரையில் வீற்றிருப்பவரும், நான்கு வேதங்களில் வல்லவருமாகிய பிரமதேவர், முப்புரங்கள் அழிந்து தீப்பிடிக்குமாறு நெற்றிக் கண்ணிலிருந்து அனல் சிந்தி வன்மையுடன் சிறிது சிறுநகை புரிந்த அற்புதத் தலைவராகிய பாவத்தைத் தீர்க்கும் பரமசிவ மூர்த்தி என்ற இந்த ஒப்பற்ற மூவர்களின் உள்ளம் நிறைந்து தெளிவு அடைய, அழகிய செவியில் பிரணவ மந்திரத்தின் இரகசியத்தை அன்போடு உரை செய்த குழந்தைக் குருநாதரே;
எதிர்ப்பட்டு அசுரர்கள் படையொடு போருக்கு இடம் வைக்க, அவருடைய குலம் முழுவதும் அழியுமாறும், வேகமாகக் கோபம் பொங்கவும், மலை முழுவதும் தூள்பட்டு உதிரவும், பரந்த அண்டச் சுவர்கள் பிளவு பட்டு அதிர்ச்சியடையவும், அண்டத்தின் உச்சி கிழியவும், அதற்கு அப்பாலுள்ள பெரிய ஆகாயத்தில் கிடுகிடு என்று ஒலியுண்டாகுமாறும், போர் புரிந்து, திருக்கரத்தில் உள்ள வேலாயுதமானது அசுரரது கொழுப்பையுண்ணவும் உதிர நீர் ஏழு சமுத்திரத்திலும் மிகுதியாகப் பெருகி ஓடவும், மயிலாகிய பருத்த புரவியை நடாத்திய அதிசயமுடைய குமரக் கடவுளே;
பூதலத்தில் பெருமையும் தகுதியும் உடைய செம்பொன் மேரு மலையைத் தனியே தேவரீர் வலம் வந்தபொழுது, சிவபெருமான் அந்தப் பழத்தை விநாயகரிடம் தந்த காரணத்தினால், அப்பரமன் நாணுமாறு மனம் மிகவுஞ் சினமுற்று, அப்பழத்தை தரவில்லை என்ற காரணத்தினால், அருள் நிறைந்த திருச்செந்தூரிலும், பழநிச்சிவகிரியிலும் வீற்றிருக்கின்ற கந்தக் கடவுளே; பெருமிதம் உடையவரே – என்பதாகும்.
இத்திருப்புகழில் பழநி திருத்தலத்தில் முருகப் பெருமான் வந்து அமர்ந்த கதையும், அகத்தியமுனிவர் எண் கடலையும் குடித்த கதையும் இடம்பெற்றுள்ளது.